சனி, 1 பிப்ரவரி, 2014

"ஏர்டெல் சூப்பர் சிங்கர்" தலைப்பை வென்ற தமிழன் திவாகர்!


"ஏர்டெல் சூப்பர் சிங்கர்" தலைப்பை வென்ற தமிழனுக்கு,ஒரு சக தமிழனாக மனமார்ந்த வாழ்த்துக்க்கள்!

தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் தேடல் என்று,எங்கு பார்த்தாலும் விளம்பரம்.ஆனால் பாடும் குரல்களில் பெரும்பான்மை வேற்று மொழிக்காரர்களே ஆளுகை செலுத்துகிறார்கள் என்ற வருத்தம் எப்போதும் நமக்கு உண்டு.இதெல்லாம் மற்ற மாநிலங்களில் சாத்தியமா என்று எண்ணிப் பார்த்தால்,கட்டாயம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது!

காரணம் மற்ற மாநிலங்களிலும்,இது போன்று பல போட்டி பாடல் நிகழ்வுகள் நீண்ட நெடிய காலமாக நடந்து வருகின்றன. ஆனால் அவை எவற்றிலும் தமிழர்கள் பங்கு பெறுவது இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் கூட,அதையும் மீறி பங்கு பெற்றாலும் கூட,அவ்வளவு சீக்கிரம் வெற்றி பெற விடுவார்களா என்பது சந்தேகமே!

யார் ஏற்றாலும்,ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இது போன்ற நிகழ்சிகளில் ஒரு வித பிராந்திய அரசியல் அல்லது எதோ ஒரு வகை அரசியல் உள்ளே ஒளிந்து இருப்பதை மறுக்க இயலாது!

ஒருவேளை தமிழ்நாட்டில் இது போன்ற இசை நிகழ்சிகளில்,தமிழர்கள் மட்டுமே பங்கெடுப்பதாக இருந்தாலும் கூட, அங்கே வேறு ஒரு விதமான அரசியல் இருக்கும்,இருந்தது என்பது நான் சொல்லாமலேயே பலர் அறிந்திருக்க கூடும்! நான் இங்கே என்ன அரசியலை சொல்ல வருகிறேன் என்பது பலருக்கு புரிந்திருக்கும்!

இன்னொன்றும் சொல்ல வேண்டும். ஏற்கனவே பிற மாநிலங்களில் இது போன்ற,இதே அளவுக்கு பிரபலமான இசை நிகழ்வுகளில் பங்கு பெற்று,பரிசும், தலைப்பும் பெற்ற பாடகர்களை,இது போன்ற நிகழ்வுகளில் இனியாவது பாட தடை செய்யுங்கள்.காரணம் பல புதிய குரல்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் தட்டிப் பறிக்கிறார்கள். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்வில் பங்கு கொண்ட பார்வதியும், சோனியாவும் ஏற்கனவே கேரளாவில் பாடி பரிசு பெற்றவர்கள். மூன்று படுக்கை அறை கொண்ட வீட்டை பரிசாக பெற்று இருக்கிறார்கள். மீண்டும் எதற்கு இங்கு வந்து பாடி, பலரது வாய்ப்பை தட்டிப் பறிக்க வேண்டும்?

இந்த நிகழ்வில் பலர் நன்றாக பாடி இருந்தாலும் கூட, தம்பி திவாகர் இன்றைய இறுதி மேடையில் பாடிய இரண்டு பாடல்களின் தேர்வும் மிக அருமை! இதற்கு முந்தைய பல நிகழ்வுகளில்,நடுவர்களுக்கு ஏற்ப பாட வேண்டி இருந்தது! ஆனால் இன்றைய நடுவர்களோ வெகுஜன மக்கள்.

ஆக இது போன்ற வெகு ஜன மக்கள் அரங்குகளில்,சங்கீதத்தின் அத்தனை அம்சங்களும் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட,மக்களுக்கு ஏற்ற ஜன ரஞ்சகமான,
எல்லோரும் ரசிக்கவும்,ஏற்கவும் தக்க பாடலை தேர்வு செய்து பாடுவது என்பது வெற்றியில் மாபெரும் பங்கு வகிக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது.இது தான் முந்தைய ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதி சுற்றுகளிலும் நடந்தது என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்தமுறை நடந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்வில்,சாய் சரண் தேர்வு செய்த "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலும், சங்கமம் படத்தில் வரும் "ஆளால கண்டா ஆடலுக்கு தகப்பா"பாடலும்,அவரது வெற்றியில் பெரும் பங்கு வகித்தது என்பதை எவரும் மறுக்க இயலாது! காரணம் மக்களின் மனம் அறிந்து பாடுவதென்பது, வெற்றிக்கு பாதி வழி வரை அழைத்து செல்லும்!

இன்று தம்பி திவாகர் பாடிய "அந்த அரபிக் கடலோரம்" பாடல் அருமை. துள்ளல் இசையோடு,ரெஹ்மானின் அருமையான குரலிலும்,இசையிலும் வந்த பாடல். திவாகர் குரலுக்கு மிகப் பொருத்தமான தேர்வும் கூட!

அடுத்து அவர் தேர்வு செய்த பாடல் தான் மறக்க முடியாத பாடல் ஆம்..."நீயே உனக்கு என்று நிகரானவன்" பாடல்.

"பலே பாண்டியா" படத்தில் அய்யா எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இருவரின் இசையில், டி.எம்.சௌந்தரராஜன் குரலில் வெளி வந்த மிக அருமையான பாடல்.

திரையில் சிவாஜி அவர்களுக்கும்,எம்.ஆர்,ராதாவுக்கும் நடக்கும் போட்டி பாட்டு என்றே சொல்லலாம்.

பாடலில் வரும் இருவரின் குரலையும் சேர்த்தே , திவாகர் பாடியது மிக அருமை! அவரைப் பொறுத்தவரையில் புது முயற்சியும் கூட!

காரணம் திவாகர் முறையாக சங்கீதம் கற்காதவர். பல்வேறு இசை சங்கதிகள் எல்லாம் தனக்கு தெரியாது என்றாலும் கூட,அதீத முயற்சி எடுத்து இந்த பாடலை அவர் பாடி இருப்பதாக சொன்னதை,நிரூபித்தும் காட்டி இருக்கிறார்! நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலை மிக அருமையாக பாடியதற்காக,உடனடியாக மேடையிலேயே ஜானகி அம்மாவின் ஆசிரையும் அன்பையும் பெற்றுக் கொண்டார்!கூடவே இசை ரசிகர்களின் ஆரவாரமான கைத்தட்டலும்,
விசில் சத்தமும் காதைப் பிளந்தன.

மிகுந்த மகிழ்ச்சி! தம்பி திவாகர் இந்த சூப்பர் சிங்கர் தலைப்பை வென்றதில்! அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு! எல்லாவற்றுக்கும் மேலாக,ஒரு தமிழன் இந்த போட்டியில் வென்றான் என்பது கூடுதல் மகிழ்ச்சி!

தம்பி திவாகர் இசைத்துறையில், திரை இசைப் பாடல்களில் பல சாதனைகளை செய்வார் என்ற நம்பிக்கை உண்டு!

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தம்பி திவாகர்!

*சம்மந்தம் இல்லாமல் திராவிட தமிழ்தேசிய அரசியலை இங்கே நுழைக்காதீர்கள்:)*

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

2 கருத்துகள்:

  1. விஜய் டி. வி. நிர்வாகம் இந்த கருத்தை ஆழமாக சிந்தித்து வரும் நாட்களில் நேர்மையுடன் செயல்படும் என நம்புவோமாக...

    தெள்ளத்தெளிவாக தமிழனின் எண்ண ஓட்டத்தை நாடி பிடித்து பார்த்து எழுதப்பட்ட சத்திய வார்த்தைகள். இதை மறுப்பவன் தமிழனாக இருக்க நியாய மில்லை...வாழ்த்துக்கள் அன்றனி வளன்....

    பதிலளிநீக்கு