திங்கள், 10 பிப்ரவரி, 2014

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!


இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!

எவர் மதம் மாறினாலும் அவர் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்!மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள். படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்களை மட்டுமே இவர்களால் மதமாற்றம் செய்ய முடியும்.இப்படி ஒரே குற்றசாட்டை மட்டுமே,எப்போதும் சொல்லும் நபர்களிடம் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் மதம் மாறி இருக்கிறாரே! அவருக்கு அறிவு இல்லையா அல்லது பணத்துக்கு சிக்கலா? ஏழையா ? என்று கேட்டால் பதில் கிடையாது. இன்னும் எத்தனையோ அரசியல் பிரபலங்கள்,அரசு அதிகாரிகள்,
ஆட்சியாளர்கள்,சினிமா பிரபலங்கள் தங்கள் மத அடையாளங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அமைதியாக மதம் மாறி இருக்கிறார்கள். பெயர்களை சொல்ல நான் விரும்பவில்லை.

மதம் மாறுதல் என்றால் கிறித்துவத்துக்கு மட்டுமே மாறுவதா என்றால் கட்டாயம் இல்லை. இங்கே இந்துக்களாய் இருந்து பௌத்தத்துக்கு மாறியவர்கள் உண்டு. கிறித்துவர்களாய் இருந்து, இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. இறைமறுப்பாளர்களாய் இருந்து பின்பு இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் வேறு மதங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உண்டு.

இப்படி இங்கே அவரவருக்கு பிடித்த மதங்களுக்கு மாறுவது என்பது தனி நபர்களின் விருப்பம். யாரய்யா கிறித்துவத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் இங்கே சமீபத்திய பிரபலம் ஜோ.டி.க்ரூஸ் மாறி இருக்கிறார். எங்கள் ஊர் பக்கங்களில் பலர் இப்படி இந்துக்களாக மாறி இருக்கிறார்கள்.

சரி இதையெல்லாம் விட, பிரபல இந்து சாமியார்கள் நடத்தும் மத வழிபாடுகளில் எண்ணற்ற வெள்ளைக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆசிரமங்களில் தங்கி இருக்கிறார்கள்.இப்படி எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.
இந்துக்களில் இருந்து வேற்று மதங்களுக்கு மாறக் கூடாது,அப்படி மாறினால் பல இடங்களில் பல தண்டனைகள், இடைஞ்சல்களை எல்லாம் கொடுக்கும் நபர்கள்,அடிப்படையில் கிறித்துவர்களான வெள்ளைக்காரர்கள்,இந்து மதத்துக்கு மாறக் கூடாது என்று சொல்ல இயலுமா?

அப்பாவிகள் தான் மதம் மாறுகிறார்களே ஒழிய அறிவாளிகள் இல்லை என்று சொல்லும் போது யார் அறிவாளிகள்? அறிவாளிகளுக்கு அளவுகோல் என்ன? அறிவாளிகள் என்றால் மெத்தப் படித்தவர்களா? அல்லது மூன்று நான்கு பட்டம் வாங்கியவர்களா?

அதைப் போலவே பணக்காரன் எல்லாம் மதம் மாற மாட்டான் என்றால் யார் இந்த உலகில் பணக்காரன்? என்னைப் பொறுத்த வரையில் மூன்று வேளை உணவும்,,உடுத்த நல்ல உடையும், தங்குவதற்கு ஒரு வீடும் இருப்பவன் பணக்காரன் எனலாம். இன்னும் சிலருக்கு, கார் இருந்தால் தான் பணக்காரன் என்பார்கள், சிலருக்கு கார் என்பதை விட , என்ன வகையான விலை மதிப்புள்ள கார் இருந்தால் மட்டுமே அவர்கள் பணக்காரன் எனலாம், இன்னும் சிலருக்கு பல வீடுகள், சொத்துக்கள் இருந்தால் மட்டுமே பணக்காரன் எனலாம். ஆக படித்தவன், பணக்காரன் என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது.

பிரபலங்கள் மதம் மாறினால், இவர்கள் எல்லாம் விதி விலக்கு என்று சொல்லும் நபர்கள், கிராமங்களில் உள்ள ஏழைகள், பட்டப் படிப்பு பெறாதவர்கள் எல்லாம் மதம் மாறினால் அறிவில்லாதவர்கள், பணத்துக்காக மாறுகிறார்கள் என்கிறார்கள். இதென்னய்யா நியாயம்? ஏழைகளின் ஏழ்மையை,அவர்களின் கல்வியறிவை  இப்படியா கொச்சைப் படுத்துவது?. எல்லோரும் அவரவர் அறிவுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கிறார்கள். இதுல யார் அறிவாளி, யார் பணக்காரன் என்று யார் வரையறுப்பது?

இப்படி அறிவாளிகளை,பணக்காரர்களை எல்லாம் இவர்கள் வரையறை செய்தாலும் கூட, மெத்தப் படித்த பட்டதாரிகள் எண்ணற்ற பேர் மதம் மாறி இருக்கிறார்கள்.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை நாத்திக மேடைகளில் செலவு செய்த, பெரியார் மீதுள்ள பற்றால் அவரது கருத்துக்களில் உள்ள ஈர்ப்பால், தன் பெயரையே மாற்றிக் கொண்ட அய்யா பெரியார் தாசன் பௌத்தத்தை ஏற்றார். இறுதி நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நன்கு படித்தவர்.முனைவர் பட்டம் பெற்ற நபர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிவர். உளவியலில் பட்டம் பெற்றவர். அறிவில்லாத நபரா? ஏழையா?ஏமாளியா இருப்பாரோ:)

எவராவது பணம் கொடுத்து மதம் மாற்றினால் கட்டாயம் அது தவறு. அதே வேளையில் மதம் மாறும் எல்லோருமே பணத்துக்காக மதம் மாற்றப் படுகிறார்கள் என்ற ஒற்றை வாதம் முற்றிலும் தவறு!

இசைஞானி இளையராஜா இந்து மதத்தை ஏற்றவர். பக்தி மார்க்கத்தில்,இறை வழிபாடுகளில் தீவிரமாக இருப்பவர். எத்தனையோ இந்து பக்தி பாடல்களை தந்தவர்.திருவாசகத்துக்கு இசை அமைத்தவர்.இன்று அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை இவரும் வெறும் பணத்துக்காக தான் மதம் மாறி இருப்பாரோ:) ரொம்ப ஏழையோ! என்ன சொல்வார்கள்?

அன்பார்ந்த நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மதம் மாறுவது தனி நபர் விருப்பங்கள். அதற்கு அளவுகோல் வேண்டியதில்லை. அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க வேண்டியதும் இல்லை. விமர்சனங்களும் தேவையில்லை.

பிறப்பால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர் என்றாலும் கூட, இன்றைக்கு தங்கள் மத நம்பிக்கைகளை விட்டு விட்டு, இறை மறுப்பாளர்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் ஏராளமான இளைஞர்களை இணையத்தில் பார்க்க முடிகிறது! இப்படியான இளைஞர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இறை மறுப்பாளர்களாக இருப்பது அவர்களின் உரிமை என்பது போலவே,யாரை கடவுளாக ஏற்பது என்பதும் தனி மனிதர்களின் உரிமை.

இந்து மதத்தில் இருந்து கிறித்துவம் அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். மதம் மாறியதற்காக அவர்களுக்கு இழைக்கபப்டும் அரசியல் அநீதியை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தலித்துக்கள்,இந்துக்களாக இருந்தால் பட்டியல் இனத்தில்(SC) சேர்க்கப் படுவதும், அவர்களே கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால், பட்டியல் சாதிப்பிரிவு மறுக்கப்பட்டு, நேரடியாக பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு(BC) மாற்றப்படுவதும் ஒரு மாபெரும் அநீதி!இது காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.இது எப்படி என்பது மட்டும் இன்று வரை விளங்கவில்லை.

ஆனால் இந்த அநீதிகளையும் மீறி,தலித்துக்கள் மற்ற மதங்களை ஏற்காமல் இல்லை.அப்படிப் பார்த்தால் என்னைப் பொறுத்த வரையில் மதம் மாறுவதால் ஏகப்பட்ட பொருளாதார இழப்பு தான் அவர்களுக்கு!

ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால், நன்றாக படிக்கும் ஒரு தலித் மாணவன் கிறித்துவனாக இருந்தால்,அவனுக்கு கிடைக்க வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்காமல் போகலாம். காரணம் பட்டியல் சாதிக்கு பதில் அவன் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு திணிக்கப் படுகிறான். அவன் கட்டாயம் மருத்துவம் படிக்க விரும்பினால்,இன்றைக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவ இடத்தின் விலை நாற்பது ,ஐம்பது லட்சத்துக்கு மிகாமல்! இந்த ஐம்பது லட்ச நட்டத்தை,அவனது இலட்சியத்தை யார் ஈடு செய்வது?

மதம் மாறுவதால் ஏற்படும் இந்த சாதிய பாகுபாட்டு அநீதி என்பது கல்வியைப் பொறுத்த வரையில்,அரசு பணிகளைப் பொறுத்த வரையில் தலித்துக்களுக்கு ஒரு மாபெரும் இழப்பு என்றே சொல்ல இயலும்!

பட்டப்படிப்பு படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை,படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.அவரவர் அறிவுக்கு ஏற்ப எடுக்கும் தனி நபர் சார்ந்த முடிவுகளில்,

உரிமைகளில் தலையிட நமக்கு உரிமை இல்லை.

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக