புதன், 19 பிப்ரவரி, 2014

முதல்வரின் ரெட்டை வேடங்களையும் மறந்து விடாதீர்கள்!


முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், அவரது ரெட்டை வேடங்களையும் மறந்து விடாதீர்கள்!

முதலில் சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஏழு பேரின் விடுதலைக்காக மனமார்ந்த நன்றிகள்!

அதே வேளையில், இங்க தமிழ்நாட்டுல,அம்புட்டு பயலும்(அ)டிமைகள் திமுக கரை வேட்டி கட்ட ஆரம்பிச்சுடுவாங்க போலேயே!காரணம் முகநூலில் எந்த பக்கம் திரும்புனாலும் ,அதிமுக, அடிமைகளை விட ரொம்ப அதிகமா பேசுறீங்களப்பா! ஜெயலலிதாவின் காலில் சரணாகதி ஆகிடுவீங்க போலேயே!

அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான்!, நாற்பதும் நமதே! ஜெயலலிதாவை அம்மா என்று அன்பாய் அழைக்கத் தோன்றுகிறது! இன்னும் என்னென்னவோ பித்து பிடித்தது போல பேசுகிறார்களே!....ச்..சீ... வெக்கமா இல்லையா!

அய்யா சதாசிவம் அவர்கள் தலைமையிலான நீதியரசர்கள் குழு இந்த வழக்கில், தூக்கு தண்டனையை ரத்து என்ற மாபெரும் பணியை செய்து இருக்கிறார்கள்.இருபத்து மூன்று வருட போராட்டம், என்னென்னவோ தியாகங்கள், உயரிழப்புகள், கண்ணீர்கள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், என்று அம்மையார் அற்புதம் அம்மாள் மற்றும் தமிழ் நாட்டின் பெரும்பாலான இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் என்று இந்த வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள் பட்டியல் பெரிது. இந்த வழக்கில் மாநில அரசு என்ன செய்யலாம்,என்ற அடுத்த பாதையையும் நேற்றே தெளிவாக சொல்லி உள்ளார் அய்யா சதாசிவம். அந்த அடிப்படையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதாக அறிவித்து இருப்பது உண்மையில் பாராட்டுக்குரிய முடிவு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மத்திய அரசு மூன்று நாளுக்குள் இதற்கான பதிலைத் தரவேண்டும் என்ற கெடுவும் வைத்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.அதற்காக ஜெயலலிதாவுக்கு தமிழர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்லலாம். பாராட்டலாம். தப்பே இல்லை. ஆனால் அதற்கான எல்லை என்று ஒன்று இருக்கிறது!

(அ)டிமைகள் திமுகவின் அடிமைகள் போல மாண்புமிகு அம்மா, இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மா என்ற அளவுக்கு தமிழர்கள் தரம் தாழ வேண்டியதில்லை! ஒருவேளை இந்த மாசம் தேர்தல் வைத்தால், ஜெயலலிதாவை நாற்பது தொகுதிகளிலும் ஜெயிக்க வைக்க இந்த ஒற்றைக் காரணம் போதும் என்று தமிழர்கள் பேசினால், அவர்கள் நிலைமை ஐயோ! தமிழனுக்கு பெரிய சாபக்கேடு எதுவென்றால் மறதி தான்! அது அவனது மிகப்பெரிய பலவீனம்!

இன்றைய சூழலை விட்டு விட்டு, இந்த வழக்கின் பல்வேறு கால கட்டங்கள், இடையில் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் அனைத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.ஜெயலலிதா திடீரேனே எதோ அதீத நல்லவராகி விட்டதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டால் ஐயோ பாவம்! வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தனக்கு வரப்போகும் அரசியல் லாப நட்ட கணக்குகள் எதையும் பார்க்காமல்,இதை செய்யும் அளவுக்கு ஜெயலலிதா ஒன்றும் வெள்ளந்தியான ஆள் இல்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா அட்டூழியத்தின் அளவுகோல் என்ன,தமிழர் விரோதத்தில் அவரது கோர முகம் என்ன என்பதை எவரும் எளிதில் மறக்க முடியாத அளவில் சமீபத்திய உதாரணம் ஒன்றை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு நடந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு சம்பவம். இது எதோ பத்து பதினைந்து வருடம் ஆன சம்பவம் ஒன்றும் அல்ல. கடந்த ஆண்டு என்று சொல்வதை விடசில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு.அந்த முற்றத்தை இடித்து, காவல்துறை அடக்கு முறையைப் பயன்படுத்தி, அய்யா நெடுமாறன் அவர்களை கைது செய்து, என்னவெல்லாம் பாடு படுத்தினார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இதோ இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில்,மக்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று சொன்ன ஜெயலலிதா, சங்கரன் கோயில் இடைத்தேர்தலுக்கு பிறகு தன்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டினார். அணு உலை எதிர்ப்பாளர்கள், கோட்டையில் சென்று அவரை சந்தித்து பேசி, எல்லாவற்றையும் தெளிவாக பேசிய பிறகு கட்டாயம் என்னால் இயன்றவரை உங்களுக்கு நன்மை செய்வேன் என்று சொன்னவர், கடைசியில் அந்த மக்களுக்கு தந்த பரிசு காவல்துறை தடியடியும், ஒரு சிலரின் மரணமும்,கைதும், சித்ரவதைகளும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீது வழக்கும், அதிலும் சிலர் மீது கடுமையான தேச துரோக வழக்குகளும், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் மீது மட்டுமே நூற்றுக்கும் அதிகமான வழக்கும் பதியப்பட்டு இன்று வரை அந்த மக்களை கண்டு கொள்ளாத ஒரு ஆணவம் மிக்க முதலமைச்சராக இருந்து வருகிறார். இடிந்தகரை ஊருக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேருந்தை நிறுத்தினார். என்ன பாவம் செய்தார்கள் அந்த மக்கள்? பாசி விற்ற ஒரு முதியவரின் மீது தேச துரோக வழக்கு.இதை விட கேவலமான அரசு இருக்க முடியுமா? மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போராடும் மக்களை சந்திக்க நேரமில்லை. அவர்கள் குரலை கேட்க ஆர்வமில்லை. மக்கள் நலன் மீதான லட்சணம் இது தான்!

சரி அந்த மக்களை அடித்து, துன்புறுத்தி, களேபரம் செய்து, வழக்கும் பதிவு செய்தாகி விட்டது. போராட்டக்குழுவினர் சார்பில், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை மாநில அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆணை பெற்று வந்து மாதங்கள் பல ஆயிற்று. ஆனால் ஜெயலலிதா என்ன செய்கிறார்? இன்று வரை உச்ச நீதிமன்ற ஆணையை கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதா நீதிமன்றங்களை மதிக்கும் லட்சணம் நமக்கு தெரியாததா என்ன? ஜெயலலிதாவின் இன்னொரு பிரபலமான பெயர் " வாய்தா ராணி" என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவோமா என்ன?

நம்ம ரொம்ப பெரிய வீராப்பா கேள்வி எல்லாம் கேப்போம். காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை கர்நாடக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நடப்பதே வேறு. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிறது என்று வீர வசனம் எல்லாம் பேசும் ஜெயலலிதா, தன் சொந்த மாநில மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொன்ன உச்ச நீதி மன்ற ஆணையை மட்டும் குப்பையில் தூக்கி போடுவாராம்..இது சாத்தான் வேதம் ஓதும் என்று சொல்வார்களே அது போலல்லவா இருக்கிறது.

ஆக ஜெயலலிதாவின் அராஜகங்களை, ஆட்சி விரோதங்களை. வரைமுறையற்ற மது விற்பனையினால் இந்த சமூகத்தையே சீரழிக்கும் போக்கை, சட்டத்தை மதிக்காத அகங்காரத்தை, அவரது அளவுக்கு அதிகமான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை, ஆயிரத்து நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை, எதோ கருணாநிதி தன் சொந்தப் பணத்தில் கட்டியது போலவும், இவர் எதோ அந்த கருணாநிதி வீட்டுக்குள் காலடி வைக்க மாட்டேன் என்று செய்த அட்டூழியங்களும், ஆசியாவின் புகழ்பெற்ற சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவ மனையாக்கியே தீருவேன் என்று சொல்லி அடம்பிடித்து வழக்கு போட்டு, ஒரு மன நோயாளியைப் போல நடந்து கொண்டதை, சமச்சீர் கல்வியை ஒழிப்பேன் என்று கேவலமாக நடந்து கொண்ட முறையை, அண்ணா நூலக விடயத்தில் மட்டுமா அட்டூழியம் செய்தார்? அண்ணா பல்கலைக் கழகத்தின் பெரும்பகுதியை பிடுங்கி, தலைமை செயலகத்தை அங்கு தான் கட்டுவேன் என்று கல்வியாளர்கள் பலரின் எதிர்ப்பையும் தாண்டி, ஆணவமாக அங்கு அடிக்கல் நாட்டியது, எத்தனையோ கலவரங்கள்,பரமக்குடி போன்று காவல்துறை நடத்திய ஜாதிய படுகொலைகள்,ஜெயலலிதாவின் பினாமி என்று சொல்லப்படும் மணல் கொள்ளை வைகுண்டராஜன் போன்ற சமூக விரோதிகளோடு நட்பு,இப்படி எந்த விடயத்திலும் மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது!

என் அகங்காரத்துக்கு பின்னால் தான்,ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் என்றே இன்றுவரை நடக்கும் அவரது செயல்பாடுகளை எல்லாம் எழுதினால் பக்கங்கள் போதாது.

ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டங்களையும், கஷ்டங்களையும் புறம் தள்ளிவிட்டு , ஜெயலலிதா தான் இந்த விடுதலைக்கு ஒட்டு மொத்த காரணம் என்பது போல கோஷங்கள் கிளம்பும்:)

இந்த ஏழுபேரின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப் போன்றே ஜெயலலிதாவுக்கு நானும் நன்றி சொல்கிறேன்.ஆனால் அதற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டுமொத்தமாக அரசியல் சரணாகதி அடைந்து விடாதீர்கள்:) ரொம்ப புகழ்வதாக சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா செல்லும் வாகனத்தின் சக்கரத்தை தொட்டுக் கும்பிடும் பன்னீர் செல்வம் போல ரொம்ப குனிஞ்சுடாதீங்க மக்ளே:)
பார்த்து நிதானம்:)

தேர்தல் நேரத்தில் நமது வாக்கு என்பது ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு நடந்து கொண்ட முறையை சரியாக அலசி, ஆராய்ந்து பார்த்து, மிகை எதுவென்று உணர்ந்து அறிவுப் பூர்வமாக வாக்களியுங்கள். மீண்டும் உணர்ச்சி வயப்பட்டு அம்மா வாழ்க, ஆட்டுக் குட்டி வாழ்க என்று கோஷம் போட்டு திரியாதீர்கள்!

உன்ன பெத்தவ மட்டும் தான் அம்மா..மத்ததெல்லாம் சும்மா:)

-ஆன்டனி வளன்

2 கருத்துகள்:

  1. Thambi,
    You will learn realities and practicalities in the coming years!

    பதிலளிநீக்கு
  2. பார்வையை விசாலமாக்கு...
    வேறு கோணத்தில் பார்...
    கூடி நின்று கும்மி அடிக்காதே...
    தனிமையில்.. யோசி...
    சரிதானா என்று விசாரி...
    நாலு புத்தங்களைப் படி...
    நாலு பேரிடம் யோசனை கேள்...
    ஊரோடு எப்பொழுதும் ஒத்துப்..
    போக வேண்டிய அவசியம் இல்லை...
    மாற்றம் என்பது மிகவும் அவசியம்..
    ஆனால் அவசரமான மாற்றங்கள்..
    ஆபத்தில் முடியலாம்...

    பதிலளிநீக்கு