வியாழன், 6 பிப்ரவரி, 2014

நாமக்கல் கறிக்கோழிகள்!


நாமக்கல் கறிக்கோழிகள்!

விகடனில் வந்திருக்கும் நாமக்கல் பள்ளிகள் குறித்த பாரதி தம்பியின் கட்டுரை மிக அருமை!எல்லோரும் வாசிக்க வேண்டியதும் கூட. 

நாமக்கல் பள்ளிகளில் நடைபெறும் கொடூரங்களை,வியாபார உத்திகளை எல்லாம் மிக நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிறார்!அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு நிகழும் மனப்பிறழ்வுகள்,தற்கொலைகள்,சுதந்திரமாக சிந்திக்கும் மனப்போக்கு இல்லாமை போன்ற கொடூரங்களை எல்லாம்,தமிழ்நாட்டு பெற்றோர்கள் கட்டாயம் படியுங்கள்!

காரணம் இந்த தற்கொலைகளுக்கு, கொடூரங்களுக்கு காரணமாக, பெற்றோர்களின் பேராசைகளையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது!

சரி படிப்பறிவு இல்லாத தாய் தகப்பன்மார்கள் தான்,எதை விற்றாவது தன் குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும், பொறியாளராக்க வேண்டும் இதை விட்டால் உலகில் சிறந்த படிப்பே இல்லை என்று கற்பனை செய்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,

ஆனால் மெத்தப் படித்த மேதாவிகள், அரசின் உயர் பதவிகளில் இருக்கும் புண்ணிய பெற்றோர்களும் இதையே தான் செய்கிறார்கள்,அல்லது இந்த கொடூரங்களை செய்யும் பெரும்பான்மை பெற்றோர்கள் மெத்தப் படித்தவர்கள் தான் என்பது வேடிக்கை!

பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் கட்டாயம் மருத்துவராகவோ,
பொறியாளராகவோ தான் ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.அந்த பாடங்களைப் படித்தால் மட்டும் தான் உலகில் வாழ முடியும் என்று எந்த நிபந்தனையும் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன படிப்பை விரும்புகிறார்கள் என்பதற்கேற்ப அவர்களை சுதந்திரமாக முடிவுகளை எடுக்க வைக்க பழக வேண்டும்.குறைந்த பட்சம் படித்த பெற்றோர்களாவது இதை செய்ய வேண்டும்.

நான் மருத்துவருக்கு படிக்க நினைத்தேன், என்னால் முடியவில்லை ஆதலால் நீ எப்படியாவது மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என்றோ, அல்லது உங்கள் உறவினர்களில் எவருடைய பிள்ளைகளாவது மருத்துவம் படித்திருந்தால், நீயும் அவர்களைப் போல கட்டாயம் மருத்துவராக வேண்டும் அது தான் எங்களுக்கு கவுரவம் என்பது போல,உங்கள் ஆசைகளை,வறட்டு கவுரவங்களை எல்லாம் உங்கள் குழந்தைகள் மீது திணித்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காதீர்கள்.நாளை ஒருவேளை நீங்கள் திணித்த உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் நிறைவேற்ற முடியாமல் போகும் போது அந்த அதீத வருத்தத்தில் அவர்கள் மாண்டு போகும் சூழல் வந்தால் நீங்களும் உட்கார்ந்து அழுது எதை சாதிக்க போகிறீர்கள்?

பெரிய மருத்துவராகவும், பொறியாளராகவும் அவர்கள் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் உங்கள் பிள்ளைகளாக அவர்கள் நீடூடி வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்!

என்னென்னவோ படிப்புகள் வந்தாச்சு!

வாழ்கையை மிக அழகாக வாழ, சக மனிதனுக்கு எந்த கெடுதலும் செய்யாத,
பிரச்சினைகளையும், சிக்கலான சூழல்களையும் எதிர் கொண்டு, எப்படி எதிர் நீச்சல் போடுவது என்பதை மட்டும் உங்கள் அனுபவத்தில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். 

தன்னம்பிக்கை மனிதர்களாக, எந்த சவால்களையும் துணிவுடன் எதிர் நோக்கும் தைரியசாலிகளாக, நல்லவர்களாக, ஒழுக்கமானவர்களாக,நாலு பேருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக,தவறுகளை தவறுகளாக ஏற்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக,சமூக அக்கறை கொண்ட மனிதர்களாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.
அது தான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து! பெற்றோர்கள் இதை சரியாக செய்துவிட்டால்,இந்த காசு பணம்,மற்ற வசதி வாய்ப்புகளை எல்லாம் உங்கள் குழந்தைகள் அவர்களாகவே சம்பாதித்து கொள்வார்கள். அது குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டியதே இல்லை.பணம் சம்பாதிப்பது ஒரு பெரிய சிக்கலே அல்ல.

கறிக்கோழிகளுக்கும்,நாமக்கல் பள்ளிகளுக்குமான பாரதி தம்பியின் ஒப்பீடு அருமை.

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக