சனி, 8 பிப்ரவரி, 2014

திருக்குறளைப் போற்றும் அய்யா சகாயம்!


திருக்குறளைப் போற்றும் அய்யா சகாயம்!

அய்யா சகாயம் குறித்து ஒவ்வொரு முறையும் வாசிக்கும் தகவல்கள், அவர் குறித்த பேச்சுக்கள் எல்லாம் உண்மையில் மிகுந்த மகிழ்வைத் தருகிறது.தமிழ் நாட்டு மாவட்ட ஆட்சியர்களில் பெரும்பான்மை அய்யா சகாயம் போல இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அய்யா சகாயம் போல நூறு சதவிகிதல் இல்லாவிட்டால் கூட ஒரு ஐம்பது விழுக்காடு அய்யா சகாயத்தின் குண நலன்கள் உள்ள ஆட்சியாளர்கள் இருந்தால் தமிழ்நாட்டில் விவசாயம், நெசவு தொழில் மற்றும் அனைத்து சிறு தொழில்களும் செழிக்கும். நமக்கு உணவளிக்கும் விவசாயிகளும்,உடை அளிக்கும் நெசவாளர்களும் மகிழ் வேண்டும் என்றால் கட்டாயம் அதற்கு சகாயம்கள் தான் சரியான நபர்களாக இருக்க முடியும்.

தமிழ் படிச்சு என்ன செய்யப் போறீங்க? தமிழ் உணர்வால் என்ன செய்து விடப் போறீங்க? தமிழ் தமிழ் என்று ஏன் எப்போதும் கூச்சல்?இப்படியான கேள்விகளை அடிக்கடி கேட்க முடியும்.

இன்னும் பலருடைய பேச்சுக்களில்,உரைகளில் எல்லாம் உதாரணத்துக்கு அவர்கள் அழைப்பது ஆங்கில அறிஞர் அவர் இப்படி சொல்லி இருக்கிறார், பிரெஞ்சு அறிஞர் இவர் இப்படி சொல்லி இருக்கிறார் என்றே உதார் உதாரணங்களை எல்லாம் மக்கள் மத்தியில் சொல்லுவார்கள். அறிஞர்கள் எந்த மொழியில் இருந்தாலும் போற்றப் பட வேண்டியவர்களே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நம்ம பயலுக அப்படியான உதார் உதாரணங்களை அவ்வப்போது சொல்வதற்கு ஒரு காரணம் தான் அப்படியான உலக அறிஞர்களின் புத்தகங்களை மட்டுமே வாசிப்பது போல ஒரு பாவனையும்,விளம்பரமும் என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.உலக அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படியுங்கள் நல்லது தான், ஆனால் தமிழில் எவருமே அப்படியான கருத்துக்களை இதுவரைசொல்லவில்லை என்று மட்டும் கண்ணை மூடிக் கொண்டு கனவு காணாதீர்கள். ஒருவேளை நீங்கள் அப்படியானவற்றை படிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.எல்லோரையும் அப்படி சொல்லவில்லை! ஆனால் இப்படியும் ஒரு பெரும்பான்மை கூட்டம் இருக்கிறது!

உலக அறிஞர்கள் சொன்ன பல விடயங்களை ஒன்றே முக்கால் அடியில் மிகத் தெளிவாக சொல்லி விட்டு போய் இருக்கிறார் அய்யன் திருவள்ளுவன்! எதைப் பற்றி உங்களுக்கு விளக்கம் வேண்டும், தெளிவு வேண்டும்? பெரும்பான்மயான பல விடயங்களுக்கு விளக்கம் தருகிறது திருக்குறள். ஆனால் அதைப் படித்துப் பார்க்கத் தான் நம்மவர்களுக்கு நேரம் இல்லை! அல்லது அதன் மீதான மரியாதை தெரியவில்லை.

நாளை யாரோ ஒரு வெளிநாட்டு அறிஞன், தன்னுடைய பேச்சில் திருக்குறளை குறிப்பிட்டால், வள்ளுவரை சிலாகித்து பேசினால், அப்புறம் நம்ம ஊரில் இருந்து கொண்டு வள்ளுவனை கண்டு கொள்ளாமல், உலக அறிஞர்களை பற்றி மட்டுமே பேசும் அம்புட்டு பயலும் திருக்குறளை படிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்.யார் கண்டா?

ஆனால் சிறு குழந்தைகளுக்கு திருக்குறளை, அதன் விளக்கத்தை எப்படி சொல்லி கொடுக்கலாம் என்று சிந்தித்து கோ ஆப் டெக்ஸ் படுக்கை விரிப்புகளிலும்,தலையணை உரைகளிலும் திருக்குறளை பதிக்க சொல்லி வியாபாரத்தில் புதிய உத்திகளை புகுத்தும் அய்யா சகாயத்துக்கு எப்படி நன்றி சொல்லுவது?

இது வெறும் வியாபார உத்தி அல்ல. வெறும் வியாபார உத்தியாக மட்டுமே இருக்கும் என்றால்,படுக்கை விரிப்புகளில் அழகான இயற்கை காட்சிகள், பிரபலங்களின் புகைப்படங்கள்,ஆங்கிலப் பொன்மொழிகள் (காரணம் பொன் மொழிகளைக் கூட ஆங்கிலத்தில் தான் பிள்ளைகள் படிக்க வேண்டும் அது தான் பெருமை என்ற மோகம் உள்ள காலம் இது) என்று சிந்தித்து இருக்கலாம்.ஆனால் வியாபாரம் ஒரு புறம் இருந்தாலும் கூட, நம் குழந்தைகள் திருக்குறளை படிக்க வேண்டும் என்ற உயரிய சமூக சிந்தையும், அதைப் போலவே திருக்குறளை நாம் பெருமைப் படுத்தா விட்டால் எவன் பெருமைப் படுத்துவான் என்ற அவரது எண்ணமும்,உண்மையில் அய்யா சகாயத்தின் மீதான மதிப்பை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே செல்லுகிறது!

ஒருவேளை வெறும் திருக்குறளை மட்டும் படுக்கை விரிப்புகளில் எழுதி இருந்தால் நம்மவர்கள் புறக்கணித்திருக்க கூடும். மாறாக மக்கள் விரும்பும் வகையில் திருக்குறள் வாசகத்தோடு,மக்கள் ரசனைக்கு ஏற்ப அதற்கு பொருத்தமான நல்ல காட்சிப் படுத்தலையும் சேர்த்தே தந்திருக்கிறார்!

சரி! அய்யா சகாயம் அவர்கள் எப்படியான நபர் என்றால் ஒரு செவ்வியில் அவரே சொல்லியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.மதுரையில் இருந்து சென்னைக்கு பணி மாற்றம். குடும்பத்தை மதுரையில் விட்டு விட்டு நான் மட்டுமே சென்னைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறேன். மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி இருந்த வீட்டில் தங்கி இருந்தேன். முதல் நாள் காலையில் குளித்து விட்டு வெளியே வரும் போது போது தான் கவனிக்கிறேன்.
குளியலறையின் வெளியே போடப்பட்டு இருக்கும் கால் விரிப்பில், வெல்கம் என்ற ஆங்கில வரவேற்பு வாசகம் எழுதி இருந்தது. எனக்கு ஒரே சிரிப்பு!அதென்னடா! நம்ம வெள்ளைக்கார துரையா என்ன? நம்மை ஏன் ஆங்கிலத்தில் வரவேற்க வேண்டும்?உடனே உதவியாளரை அழைத்தேன். இங்கே விரிக்கப்பட்டு இருக்கும் அத்தனை கால் விரிப்புகளையும் உடனே மாற்றி விட்டு, தமிழில் நல்வரவு என்று எழுதப்பட்ட விரிப்புகள் வேண்டும் என்று சொன்னேன் என்றார்.இது தான் சகாயம். அவரது மொழிப்பற்றுக்கு இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு!

நம் குழந்தைகளுக்கு கட்டாயம் திருக்குறளை சொல்லிக் கொடுப்போம்!முதலில் அதைப் படிக்கட்டும் அவர்கள்.!


படுக்கை விரிப்பில் உள்ள குரள், மிகச் சிறந்த திருக்குறள்! சிறு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.இது அனைத்து சிறிய,பெரிய குழந்தைகளுக்கும் பொருத்தமான குறள்:)

வாழ்த்துக்கள் அய்யா சகாயம்!
வாழ்க தமிழ்!


அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக