வியாழன், 6 பிப்ரவரி, 2014

மொழிப்பற்றும்,இனப்பற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் தானா?


மொழிப்பற்றும்,இனப்பற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் தானா?

கடந்த வாரம் நாம் எழுதிய ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்வு குறித்த பதிவு அதிகமான நபர்களால் கவனிக்கப்பட்டது. சிலரால் பாராட்டப் பட்டது. பலரால் விரும்பவும், பகிரவும் பட்டது. இன்னொரு முக்கியமான விடயம்,முகநூல் நட்பு வட்டத்தில் இல்லாத பலர் கூட, நம் பக்கத்துக்கு வந்து அந்த பதிவை விரும்பி இருந்தார்கள்.பகிர்ந்து இருந்தார்கள். நம் வலைப்பூவிலும் கூட,அந்த பதிவு பெரும்பாலான மக்களால் பார்க்கப் பட்டு இருக்கிறது!சின்ன மகிழ்ச்சி தான்! என்ன காரணம் தெரியுமா? நம் மன நிலையில் பலர் இருக்கிறார்களே என்பதால்!

அந்த பதிவுக்கான கவனிப்பு அல்லது விரும்பப் பட்டதற்கான காரணமாய் பல இருந்தாலும் கூட பெரும்பான்மை மக்களுக்கு திவாகர் என்ற ஒரு தமிழன் அந்த போட்டியில் வென்றான் என்பது தான் முதன்மை காரணம்.திவாகரின் திறமைக்கு குறைவே இல்லை. அதையும் தாண்டி அவரது குடும்ப சூழல் பலர் அறிந்திருக்க கூடும். அது மட்டுமல்ல, இறுதிப் போட்டியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர் அல்ல.இப்படி பல காரணங்கள்.

அதையும் தாண்டி பாடிய மலையாளி பெண்கள் இருவருக்கும் பரிசு கிடைக்க கூடாது என்ற கருத்தையும் பரவலாக காண முடிந்தது. அதற்கும் பல காரணங்கள் உண்டு. பொதுவாகவே சூப்பர் சிங்கர் நிகழ்வுக்கு வரும் நடுவர்களில் பெரும்பான்மை மலையாளிகள்.அவர்களுக்குள் இருக்கும் ஒரு வித நுட்பமான பிராந்திய அரசியல் மட்டுமல்ல இந்த பெண்கள் ஏற்கனவே கேரளாவில் பாடி பரிசு பெற்றவர்கள் தானே என்று பல காரணங்கள் இந்த வெறுப்பை கொண்டு வந்திருக்கலாம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லோருடைய மனதிலும் ஒரு தமிழன் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது மட்டும் உண்மை என்பதை நம் பதிவுக்கு இருந்த ஆதரவை வைத்துஉணர்ந்து கொள்ள முடிந்தது.இந்த உணர்வு பாராட்டத் தக்கது தான்.மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் என்னுடைய கேள்வி மிக எளிது!

ஒரு கேளிக்கை நிகழ்வில் இருக்கும் தமிழன் என்கிற உணர்வு,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் மட்டைப் பந்து போட்டியில் சிங்களன் தோற்க வேண்டும் என்ற உணர்வு(இந்தியன் என்ற பொது உணர்வைத் தாண்டிய தமிழன் உணர்வு)பிற மாநிலங்களில்,தமிழ் திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் அல்லது தடை என்றால் ஏற்படும் உண்மையான தமிழ் உணர்வும் இன உணர்வும் எங்கே வர வேண்டும் அல்லது வந்திருக்கக் வேண்டும்?

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நம் தமிழ் உணர்வு வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழன் என்கிற உணர்வும் ஆவேசமும் வர வேண்டும்.

காவிரி நதி நீர் சிக்கலில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

ஈழத் தமிழர் சிக்கலில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பதில் தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

மரபணு பயிர் மாற்ற எதிர்ப்புக்கு தமிழன் என்கிற உணர்வு வர வேண்டும்.

இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகளின் போராட்டங்களிலும் வர வேண்டும் தமிழன் என்கிற உணர்வு!

அன்றாட மீனவர் படுகொலையில் வர வேண்டும் தமிழன் என்கிற உணர்வு.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் காட்ட வேண்டும் நம் இன உணர்வை!

மீத்தேன் எடுப்பதை,தடுக்கும் போராட்டங்களில் காட்ட வேண்டும் நம் தமிழ் உணர்வை!

மூவர் தூக்கை தடுத்து நிறுத்தும் போராட்டங்களில் காட்ட வேண்டும் நம் தமிழ் உணர்வை!

தமிழன் என்ற உணர்வு,எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் எது முக்கியம் என்ற தர வரிசைப் பட்டியல் ஒன்று இருக்கும் அல்லவா! அப்படிப் பார்த்தால் நம் இன உணர்வும் மொழி உணர்வும் தமிழர்களின் உண்மையான போராட்டங்களில் தான் அதீதமாக வெளிப்பட வேண்டும்!

ஆனால் வேடிக்கை என்னவென்றால்,இது குறித்து என்னென்ன பதிவுகள் யாரெல்லாம் எழுதினாலும், என்னென்ன தகவல்களை தேடித் தேடி எழுதினாலும் கேளிக்கை சார்ந்த பதிவுகளுக்கு வரும் ஆதரவில் பத்து இருபது விழுக்காடு கூட இந்த மாதிரி பதிவுகளுக்கு வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அப்படியான பதிவுகளை கவனிக்கவே மறுக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை.சினிமா குறித்தும், மட்டைப் பந்து குறித்தும் , சினிமா நடிகன் குறித்தும் எழுதினால் அமோக ஆதரவு! எதை படிக்க வேண்டும், எதை ஆதரிக்க வேண்டும் என்பது அவரவர் சுய விருப்பம் சார்ந்தது தான். மறுப்பே இல்லை. ஆனால் எது சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்பதை சொல்வதும் நம் உரிமை.

பாடல் போட்டியில்,மலையாளி நடுவர்கள் சிலர் செய்யும் நுண்ம அரசியல் நம் கண்களுக்கு நேரடியாக தெரிந்து விடுகிறது. ஆனால் இந்திய அரசின் உயர் பதவிகளில் இருந்து கொண்டும்,இந்திய அயலுறவு உயர் அதிகாரிகளாக இருந்து கொண்டும்,சிங்களனுக்கு ஆதரவு தெரிவித்த,விடுதலைப் புலிகளை அழிக்க பெரிதும் உதவிய சிவ சங்கர் மேனன்கள்,
நம்பியார்கள் செய்யும் நுண்ம அரசியல் நம் கண்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.முல்லைப் பெரியாற்று சிக்கலில் மலையாளிகள் செய்யும் அரசியல் நம் கண்ணுக்கு தெரியாமல் போய் விடுக்கிறது.கன்னியாகுமரி, நாகர்கோயில் ரயில்களை கேரளா கோட்டத்தில் இருந்து பிரித்து அதை மதுரையுடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையில் அதைத் திட்டமிட்டே தடுக்கும் மலையாளிகள் அரசியல் நமக்கு புரிவதில்லை.அணு உலைகளை கேரளாவில் கட்டக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் மலையாளிகளுக்கு, கூடங்குளம் மின்சாரம் மட்டும் பங்கு வேண்டும் என்பதில் இருக்கும் மலையாளி அரசியல் நமக்கு புரிவதில்லை.உண்மையான தமிழன் என்கிற உணர்வு இப்படியான தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் இருக்க வேண்டும்.

ஆனால் பாவம்,நமது இன உணர்வை வெளிப்படுத்தும் இடம் கேளிக்கை நிகழ்வுகளாக மட்டுமே எப்போதும் இருப்பது தான் துரதிர்ஷ்டம். கூடங்குளம் அணு உலைப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் குறித்து எத்தனையோ பதிவுகள் வருகின்றன். ஆனால் அவையெல்லாம் பெரும்பாலானவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன.கேளிக்கை நிகழ்வுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட அப்படியான முக்கிய பதிவுகளுக்கு இருப்பதில்லை.

இடிந்தகரையை சுற்றி, ஐம்பது நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்களில் எத்தனை பேர், எத்தனை படித்த இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை நேரடியாக போய் பார்த்து இருக்கிறோம்? இடிந்தகரைக்கு ஒருமுறையாவது நேரில் சென்றவர்கள் எத்தனை பேர்?இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அன்றாடம் மக்கள் அந்த போராட்டத்தை பார்க்க வருகிறார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்களில் எத்தனை பேர் அந்த போராட்டத்தை நேரடியாக சென்று பார்த்து இருக்கிறோம்? மக்களுக்காக போராடும் அண்ணன் உதயகுமாரும், மற்ற போராட்ட உறுப்பினர்களும் யார் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்?

யாருக்காக இந்த மக்கள் போராடுகிறார்கள்இடிந்தகரைக்காக மட்டுமா? ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களுக்காகவும் சேர்த்து தான் அவர்கள் போராடுகிறார்கள்.படித்த அத்தனை இளைஞர்களும்,போய் பார்க்க வேண்டிய இடம் இடிந்தகரை. கடலோர மாவட்டங்களில் உள்ள படித்தவர்கள், இளைஞர்கள் போய் சந்திக்க வேண்டிய நபர்கள் அண்ணன். உதயகுமாரும், அணு உலை எதிர்ப்பு போராட்ட உறுப்பினர்களும்!

என் கோபம் நம் பதிவுகளை எத்தனை பேர் விரும்பி இருக்கிறார்கள்,எத்தனை பேர் பகிர்ந்து இருக்கிறார்கள் என்ற கணக்கு சார்ந்தது அல்ல.நம் பதிவுகள் அதிமான மக்களால் விரும்பப் படுவதாலோ அல்லது பகிரப்படுவதாலோ நமக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.ஒரே ஒரு சிறிய அங்கீகாரத்தை தவிர.இது நம் பதிவுகளுக்கு மட்டும் அல்ல. பரவலாக பலரது பதிவுகளிலும் கவனித்த விடயம் தான்!எந்த பதிவு மக்களால் அதிகம் விரும்பப் படுகிறது என்று பார்த்த போது,"ஊறுகாய்" போன்ற கேளிக்கை சார்ந்த பதிவுகளுக்கு இருக்கும் ஆதரவில் பத்து விழுக்காடு கூட,முக்கிய "சாப்பாடு" என்ற மக்கள் நலன் சார்ந்த, தமிழின போராட்டம் சார்ந்த பதிவுகளுக்கு இருப்பதில்லை என்பது தான் மிகவும் வருத்தம்!

பதிவுகள் மற்றவர்களின் விருப்பங்களுக்காக அல்லது மற்றவர்கள் விரும்ப வேண்டுமே என்று ஒருபோதும் எழுதப்படுவதில்லை.சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு,அவை எப்போதும் நம் விருப்பம் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பு மட்டுமே!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக