சனி, 29 மார்ச், 2014

ஈழ விடுதலையை தொடர்ந்து கொச்சைப்படுத்தும்,இந்திய மற்றும் தமிழ் சினிமா!


இனம் திரைப்படம்,ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக, இணையம் எங்கும் கடும் கோபக்கணைகளை பார்க்க முடிகிறது. படத்தை இயக்கியவர் சந்தோஷ் சிவன் என்னும் மலையாளி.படத்தை தயாரித்தவர் லிங்குசாமி என்னும் தமிழன்.சந்தோஷ் சிவன் இந்த படத்தை ஓரளவுக்கு நியாயமாக எடுப்பார்,காரணம் அவர் இதற்கு முன் அவர் எடுத்த சில படங்கள் நன்றாக இருந்திருக்கின்றன,விருதுகள் வாங்கி இருக்கின்றன என்று தான் எண்ணி இருந்தேன்.ஆனால் இணையங்களில் வரும் விமர்சனங் களால்,அது தவறு என்று புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த கலைஞர்கள் சரியான மற்றும் நியாயமான மனிதர்களாக இருக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை.

எல்லா மனிதர்களுக்குள்ளும், ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு அரசியல் சந்தோஷ் சிவனுக்குள்ளும் ஒளிந்து இருக்கிறது! வெளிப்படையாக சொல்வதென்றால், மலையாளிகள், தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்களது நியாமான பிரச்சினைகள் பற்றியோ,சரியான புரிதலோடு படம் எடுக்க வாய்ப்பு உண்டா?அல்லது கன்னடர்கள் தமிழர்களைப் பற்றி உயர்வாகவோ, அல்லது உண்மையாகவோ பதிவு செய்வார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமே!

ஏற்கனவே அந்த சந்தேகத்தை,ஜான் ஆப்ரகாம் என்ற மலையாளி,மெட்ராஸ் கபே என்ற படத்தை எடுத்து, தன் தமிழர் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தினான். சிங்களன் கொடுத்த பணத்தை வைத்து படம் எடுத்து, தமிழர்களின் இன விடுதலை சார்ந்த பிரச்சினையை கொச்சைப்படுத்த முயன்றான்.

சோகன் ராய் என்ற மலையாளி, டாம் 999 என்ற படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்சினையை, தன் நய வஞ்சகத்தை பயன்படுத்தி, மலையாளிகள் நியாயவான்கள் போல காட்ட முனைந்து மூக்குடைபட்டான்.

ராவண தேசம் என்ற படத்தை எடுத்தவர அஜய் நுத்தகி ஆந்திராவை சேர்ந்தவர். படத்தில் நிறைகள் பல உண்டு என்று பலரால் சொல்லப் பட்டாலும் கூட, தவறான புரிதல்களோடு எடுக்கப் பட்ட காட்சிகளை யும் மறுப்பதற்கில்லை என்று ஆதங்கப்பட்டார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

இதோ அடுத்து இனம் என்ற படத்தில் விடுதலைப் புலிகளையும், முப்பதாண்டு கால போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவது போன்று பல காட்சிகள் இருப்பதாகவும்,புலிகள் சிறு குழந்தைகளை வற்புறுத்தி தான் ஆயுதம் ஏந்த வைத்தார்கள், அவர்களுக்கு போர் மீது அலாதி பிரியம் என்பது போல, இந்த சினிமா இருப்பதாக அதைப் பார்த்தவர்கள் பதிகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் ஒரு சுவராஸ்யம் என்னவென்றால் படத்தை தயாரித்தவர் லிங்குசாமி. ஒரு படத்தை தயாரிப்பவருக்கு,அதுவும் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவருக்கு இந்த சூட்சுமங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டா? படத்தின் நோக்கம் என்ன, படைப்பாளியின் நோக்கம் என்ன, காட்சிகளின் அர்த்தம் என்ன என்பது தெரியாத அளவுக்கு லிங்குசாமி சின்ன பாப்பாவா என்ன?

மெட்ராஸ் கபே,டாம் 999, போன்ற படங்களை தமிழ்நாட்டில் தடை செய்தது போலவே, இந்த இனம் திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று இங்கே போராட்டம் நடத்தினால்,

ஈழத்துக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர் களும் போராட்டக்காரர்கள் பக்கம் நிற்பார்களா? அல்லது லிங்குசாமி என்ற திரைப்பட வியாபாரி பக்கம் நிற்பார்களா? கூடவே லிங்குசாமி பச்சைத் தமிழன் மஞ்சள் தமிழன் என்று சொல்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.அப்படி உண்மைக்கு புறம்பாக,லிங்குசாமி என்னும் நியாயம் இல்லாத வியாபாரிக்கு, இயக்குனர் களும் தயாரிப்பாளர்களும் வக்கலாத்து வாங்குவீர்கள் என்றால் உங்கள் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. இதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றால் மலையாளிகள் எடுத்த டாம்999,மெட்ராஸ் கபே படத்தையும் அனுமதிப்பதில்,என்ன தவறு என்ற கேள்வி இயல்பாகவே எழத்தானே செய்யும்.நியாயம் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்!இல்லை என்றால், தமிழன் என்ன அயோக்கியத்தனம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமா?

அது மட்டும் அல்ல. இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஈழ விடுதலையை மலையாளி கொசைப்படுதுகிறான், தெலுங்கர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பேசிக் கொண்டே இருப்பது? உணர்வுள்ள தமிழ் இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து, ஈழப் போரின் சரியான உண்மைகளை சொல்லி படம் எடுக்கலாமே! திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் என்றால் குறும்படமாகவோ அல்லது குறுந்தட்டு வடிவிலோ எடுத்துத் தாருங்கள். உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எங்கள் கடமை.அப்படி ஒரு படம் எடுக்க நீங்கள் தயார் என்றால், தமிழர்கள் அனைவரும் அதற்கான செலவை ஏற்க தயாராக இருக்கிறோம்.

இது குறித்து,ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவையும் சேர்த்தே இங்கே பதிவிடுகிறேன்.

முந்தைய பதிவு இதோ!

ராவண தேசம் படம் நன்றாக இருக்கிறதென்றும், சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், புலிகளின் பேராண்மை குறித்தும் பேசும் அதே வேளையில், பிரபாகரன் குறித்தும், இந்தியா செய்த உதவியை அவர்கள் மறுத்தார்கள் என்றும்,ஒரு சில விமர்சனங்களையும் சேர்த்தே இந்த படம் வைத்திருக்கிறது என்றும்,விமர்சகர்கள் பலர் சொல்கிறார்கள்.

படத்தை இயக்கிய அஜய் நுத்தகி தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நபர்.ஈழ விடயத்தை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள்.எல்லோருடைய பார்வைகளும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.ஈழத்தின் முழு அவலத்தையும், நியாயத்தோடும் உண்மையோடும் சொல்ல வேண்டும் என்று எண்ணும் அதே வேளையில், சினிமா என்ற வணிகத்தையும் சேர்த்தே நாம் கணக்கிட்டாக வேண்டி இருக்கிறது.நிறை குறைகள் இரண்டும் இல்லாமல் சினிமா இல்லை.

ஒரு பெரும் வணிக ஊடக சூழலில் இருந்து கொண்டு, வேறொரு மொழியை தன் தாய் மொழியாகக் கொண்ட அஜய் என்ற இயக்குனருக்கு,ஈழ மக்களின் அவலம் குறித்த ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்காக முதல் பாராட்டு!

ஒட்டுமொத்த சிங்களவனுக்கு ஆதரவாக,ராஜபக்சே கும்பலின் பேராதரவோடு மெட்ராஸ் கபே போன்ற சினிமாக்களை எடுத்து,ஒட்டு மொத்த இந்திய மக்களின் மனதிலும் விடுதலைப் புலிகளைத் தவறானவர்களாகவே காட்ட வேண்டும் என்று முழு வீச்சில் செயல் பட்ட ஜான் ஆபிரகாம் போன்ற அயோக்கியர்களுக்கு மத்தியில்,ஈழ மக்களின் நியாயத்தை பேசியதற்காக அஜய்க்கு இரண்டாவது பாராட்டு!

இந்தியாவில் வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பல இயக்குனர்கள் ஈழத்தின் அவலத்தையும், புலிகளைக் குறித்தும் சினிமா எடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கும். ஒரே விடயத்தை அவரவர் புரிதலுக்கேற்ப சொல்லும் போது, சில நேரங்களில் உண்மைகள் மறைந்து போகலாம்.அது திட்டமிட்டோ அல்லது புரிதலில் ஏற்பட்ட தவறுதலாகவோ கூட இருக்கலாம்.

இங்கே நம் தமிழ்நாட்டில் நல்ல திறமையான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஈழ போராட்டத்தையும், அங்கு நடந்த அவலத்தையும், விடுதலைப் புலிகள் மற்றும் வெகு ஜன போராட்டங்கள் பற்றியும் நன்கு புரிந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்ட பலர் இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஈழம் பற்றிய ஒரு முழுமையான,அதே நேரத்தில் உண்மைகளை வலுவாகச் சொல்லும் ஒரு திரைப்படத்தை எடுக்க கூடாது?

தனித்தனியாகப் பார்த்தால் உணர்வுள்ள பல இயக்குனர்கள் வெற்றி இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்படி ஒரு படம் எடுத்தால் கட்டாயம் பலர் அந்த படத்தை பார்க்கவும், மேடை போட்டு முழுங்கும் பலரது பேச்சை கேட்க விரும்பாதவர்கள் கூட திரைப்படம் என்றால் பார்த்தும் தெரிந்து கொள்வார்ககள்.இதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். நம்மாலான அணைத்து முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டி இருக்கிறது!

அடுத்த கேள்வி எங்கு வரும் என்றால், இந்த படத்தை யார் தயாரிப்பது?பலர் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஊதியம் எல்லாம் அதிகம் ஆகும்,செலவு நிறைய வரும் என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தனிப்பட்ட விதமாக யாரும் தயாரித்து நஷ்டப்பட்டு போக வேண்டாம்.முள்ளி வாய்க்கால் முற்றம் கட்டுவதற்கு மக்களிடம் தான் பணம் வாங்கி கட்டி இருக்க வேண்டும்,தனிப்பட்ட நபர்களின் பணத்தால் அந்த வரலாற்று சின்னம் கட்டப்பட்டு இருக்க கூடாது என்று வருத்தப்பட்ட உணர்வுள்ள பல இளைஞர்கள், சிறு சிறு அமைப்புகள் மற்றும் வெகு ஜன மக்கள் இருக்கிறார்கள். எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. ஆனால் அப்படி ஒரு வலுவான படத்தை நம் தரப்பில் எடுக்க வேண்டும்.

அப்படி ஒரு பிரமாண்டமான படம் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று, இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து சொன்னால், தொகை முழுவதும் சேர்ந்த பிறகே கூட நீங்கள் படத்தை ஆரம்பிக்கலாம்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த தொகையை பிரித்து தர தயாராக இருக்கிறோம்.தற்போதைய சூழலில் இப்படியான ஆவணங்கள் கட்டாயம் நமக்கு தேவை.

அப்படி ஒரு வலுவான படத்தை வெளியிடுவதில் வரும் அரசு தரப்பு சிக்கல்கள் குறித்து இயக்குனர்கள் உங்களுக்கு வேறு எவரும் சொல்ல வேண்டியதில்லை.படத்தை வெளிக் கொண்டுவருவதற்காக, செய்யப்படும் சிறு சிறு சமரசங்கள் ஏற்கும்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி!

ஈழத்தை பற்றி அவன் அப்படிப் படம் எடுத்துவிட்டான், இவன் தப்பாக படம் எடுத்து விட்டான் என்று நாம் பலருக்கு எதிராக விமர்சிப்பதற்கும்,போராடிக் கொண்டே இருப்பதற்கும் பதிலாக(அது ஒரு பக்கம் வேண்டும்)வலுவான ஒரு நியாயமான,உண்மையான படத்தை ஈழ விடுதலையில் ஒன்று பட்டு நிற்கும் உணர்வுள்ள இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்தால் மகிழ்ச்சி!

ஏற்கனவே உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி போன்ற திரைப்படங்களை எடுத்த அய்யா புகழேந்தி தங்கராசுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்பதல்ல.வெளிப்படையாய் பலருக்கும் தெரிந்த,ஒரு சில உதாரணங்கள் மட்டுமே!

** சீமான் அப்படியாக்கும், அமீர் இப்படியாக்கும், ராம் கதை தெரியாதா போன்ற விமர்சனங்கள் இங்கு வேண்டாம்**

சிந்தியுங்கள்!

-ஆன்டனி வளன்

ஞாயிறு, 16 மார்ச், 2014

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,(ம)ற்றுமொரு திமுக வேட்பாளர்கள் அனைவரும் கூட தோற்றுப் போகட்டும்,கவலை இல்லை. ஆனால் விருதுநகரில் மட்டும்,வைகோ என்ற நல்ல மனிதன் ஒருபோதும் தோற்கக் கூடாது.அப்படி ஒருமுறை அவர் தோற்றுப் போனால் அந்த தோல்வி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கான தோல்வி.

நாடாளுமன்ற தேர்தலில் (ம)ற்றுமொரு திமுக வின் தோல்வி என்பது, அவர்களின் தவறான கொள்கை முடிவுகளுக்காக, தவறான கூட்டணி முடிவுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் எப்போதும் நிற்க வேண்டிய,திராவிட இயக்க வழி வந்தவர்கள் அதிலிருந்து முற்றிலும் முரண்பட்டு,சந்தர்ப்பவாதமாக ஒரு இனப்படு கொலைக்காரனுடன் கரம் கோர்க்கும் தவறான கொள்கை முடிவுக்காக,மதவாத கூட்டணிக்காக, அந்த கட்சி இந்த தேர்தலில் சம்மட்டி அடி வாங்க வேண்டும், படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் விருதுநகர் தொகுதியில் வைகோ என்ற தனி மனிதன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.அந்த மனிதனின் கொள்கை முடிவுகளில், அரசியல் கூட்டணி முடிவுகளில் ஏராளமான குறைகள் இருந்தாலும், உலகில் தமிழினத்துக்கு ஒரு சிக்கல் என்றால்,அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஓங்கி ஒலிக்கும் முதல் குரலாக இருப்பது அய்யா வைகோவின் குரல் தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.

வைகோவின் பொன் விழா காணும் ஐம்பது ஆண்டு பொது வாழ்வில், ஊழல் என்ற சொல்லின் சுவடே கிடையாது.முப்பது ஆண்டு கால ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவன்.அதற்காக எண்ணற்ற துயரங்களையும்,இழப்புகளையும் தன வாழ்வில் சந்தித்த போதிலும் கூட, தான் கொண்ட கொள்கையில் ஒரு போதும் பின் வாங்காத லட்சிய மனிதன், மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கு இன்று வரை நம்பிக்கையாய் இருக்கும் பச்சைத் தமிழன்.

அணு உலை எதிர்ப்பு போராட்டம், ஸ்டேர்லைட் போராட்டம், கெயில் போராட்டம், மூவர் விடுதலை,விவசாயிகள் போராட்டம், ஈழத் தமிழர் போராட்டம் என்று அன்றாடம் அந்த மனிதன் நிற்காத போராட்ட களங்களே இல்லை.

எனவே (ம)ற்றுமொரு திமுக என்ற கட்சியின் தவறான கொள்கை மற்றும் கூட்டணி தவறுகளை எல்லாம் தாண்டி,ஒரு உண்மையான களப் போராளியான வைகோ விருதுநகர் மண்ணில் வெற்றி பெற வேண்டும். தமிழர்கள் நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில்,விருதுநகரில் மாணிக் தாகூர் என்ற காங்கிரஸ்காரனிடம் தோற்றுப் போகும் அளவுக்கா வைகோவுக்கு தகுதி இல்லாமல் போய் விட்டது?

மாணிக் தாகூர் என்ற கூமுட்டையனிடம் எல்லாம் வைகோ தோற்றுப் போனது அநியாயம். ஜீரணிக்க முடியாத கொடூரம். எந்த ஒரு பொது விடயமோ, வரலாறோ,மக்கள் பிரச்சினைகள் குறித்த சிந்தனையோ இல்லாத ஒரு கூமுட்டையன் தான் இந்த மாணிக் தாகூர். பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில்,இந்த மாணிக் தாகூரைப் பார்த்த போது, ஐயோ விருதுநகரில் இவனிடமா தோற்றுப் போகும் அளவுக்கு அய்யா வைகோவின் நிலை வந்தது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

மீண்டும் ஒருமுறை விருதுநகர் மண்ணில் வைகோ தோற்றால் அது தமிழ்நாட்டு மக்கள் அந்த போராளிக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

நல்ல அரசியல்வாதிகளை அங்கீகரிக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் அங்கீகரிக்காமல் போவீர்கள் என்றால்,அது இந்த இனத்தின் நன்றி கெட்டத்தனம் மட்டும் அல்ல,நல்லவர்களை தோற்கடிக்க வைப்பது இந்த இனத்தின் சாபக்கேடும் கூட.

காங்கிரஸ் தோற்கலாம்,(ம)ற்றுமொரு திமுக தோற்கலாம்.ஆனால் காமராஜரும்,வைகோவும் ஒரு போதும் தோற்கக் கூடாது.

விருதுநகர் மண்ணில் எந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தினாலும், வைகோவை விட சிறந்த வேறு எந்த வேட்பாளனும் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்க மாட்டான் என்பதை சத்தியமாய் சொல்வேன்.

விருதுநகரில் கட்சி நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி,நல்லவர்களின் ஆதரவு வைகோவுக்கு மட்டுமே இருக்க வேண்டும்! அப்படி இருப்பது தான் நியாயம்!இந்திய நாடாளுமன்றத்தில்,மீண்டும் அந்த மனிதனின் குரல் தமிழர் நலனுக்காக ஒலிக்க வேண்டும்!

உடனே தூத்துக்குடியில் ஜோயலுக்கும்,காஞ்சிபுரத்தில் மல்லை சத்யாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மற்றுமொரு திமுகவினர் கேட்பார்கள்:) ஆனால் யோக்கியன் யாரென்று மக்களுக்கு தெரியாதா என்ன?

வைகோவுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு:)மாறாக ஒட்டு மொத்த (ம)ற்றுமொரு திமுகவுக்கும் அல்ல!

(ம)ற்றுமொரு திமுக வின் மீதான என் விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன!

வாழ்த்துக்கள் அய்யா வைகோ! நீங்கள் வெற்றி பெற வேண்டும்! பெறுவீர்கள்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

எதிர்த்து நில் எதிரியே இல்லை!


எதிர்த்து நில் எதிரியே இல்லை!

எதிர்த்து நில், எதிரியே இல்லை!
நம்பிக்கை கொள், தடைகளே இல்லை!
நிமிடம் ஏன்? நொடிகளே போதும்!
நினைப்பதே வெற்றிதானே! எழுந்து வா!

தன்னால் வருவதை ஏற்றுக்கொள்!
உன் கால் பதிவுகள் அழியாது!
வான்வெளி வரை தொட்டுச் செல்!
உன் பரம்பரை முடிவேது!

விழித்தவன் தூங்கக்கூடாது!
எழுந்தபின் விழுதல் ஆகாது!
வாராத பொழுது, வருகிற பொழுது வாரிக்கொள்!
தாராத ஒன்றை தருகிற நேரம்!
வா பறந்து மண் மேல் இருந்து!
விண் போல் உயர்ந்து!

எதிர்த்து நில் ...

ஒன்றே உறவென எண்ணிக்கொள்!
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்!
அன்பால் இணைத்தது விலகாது!
அதுவே நிலை, அதை ஒப்புக்கொள்!
நினைத்ததை நடத்தி முன்னேறு!
நிலைக்கட்டும் நமது வரலாறு!

ஏதான போதும், விடிகிற பொழுது மாறுமோ!
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்!
ஆனந்தம் தான் ஆரம்பம்!
இது நிரந்தரம்தான்!

எதிர்த்து நில் எதிரியே இல்லை!

நம்முடைய நாடாளுமன்ற தேர்தல் சூழலுக்கும்,அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு வேட்பாளர்களுக்கும் மிகவும் பொருத்தமான வரிகள்!

நன்றி பாடலாசிரியர் திரு.கங்கை அமரன்.
திரைப்படம்: பிரியாணி

https://www.youtube.com/watch?v=DXa48TgRYiE