செவ்வாய், 29 ஜூலை, 2014

கடவுளைத் தேடுவதன் நோக்கம் என்ன?




நல்லது எது வேண்டுமானாலும் நம்பிக்கையோடு நீ கடவுளிடம் கேள், அவர் உனக்குத் தருவார் என்று சின்னஞ்சிறு வயதில்,ஆலயத்துக்கு அழைத்துப் போகையில் பெற்றோர் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆம்.ஒரு குறிப்பிட்ட வயதுவரை, நாமும் கூட நமக்கான தொடர் தேவைகளையும்,
ஏற்கனவே நம் வேண்டுதல்களுக்கு கிடைத்த பலன்களுக்கான நன்றிகளையும் மட்டுமே இறைவனுக்கு சொல்லிக் கொண்டு வந்தோம்.

காலம் செல்ல செல்ல மெதுவாக பல புதிய கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுவதைப் போலவே, நமக்குள்ளும் எழ ஆரம்பித்தது.அதாவது எதற்காக இந்த கடவுள்? கடவுள் என்பவன்,நம்முடைய வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டும் தானா?

நம்முடைய நெருக்கடியான கால கட்டங்களில்,சூழல்களில் நமக்கு உதவிட மட்டும் தானா? நம்முடைய பொருளாதார தேவைகளை சந்திக்கத் தானா? மனம் ஒடிந்து போகும் நேரங்களில்,நம்மை தேற்றுவதற்கும் நம்பிக்கை தருவதற்கும் தானா? இவை எல்லாவற்றுக்காகத் தான் நாம் இறைவனைத் தேடுகிறோமா?இதைத் தாண்டி இறைத்தேடல் என்பதன் நோக்கமோ, தேவையோ வேறு எதுவும் இல்லையா?

உலகத்தில் இறைவனை நம்புபவர்கள் மட்டும் தான் அன்றாட வாழ்வியல் ஆசிர்வாதங்களை,பொருளாதார வசதிகளை,பட்டம் பதவிகளை பெறுகிறார்களா?இறை மறுப்பாளர்கள் எவரும் இந்த உலகத்தில் ஆசிர்வதிக்கப்படவில்லையா?


உண்மையான பக்தியோடு,இறைவனை நாடும் மனிதர்களை விட, கல்வி, வசதி வாய்ப்பு, உயர்ந்த பதவிகள், பெரும் பணக்காரர்களாக இறை மறுப்பாளர்கள் எவரும் இல்லையா?என்றால் கட்டாயம் இருக்கிறார்கள்.அப்படியானால் கல்வி,பட்டம்,பதவி, வசதிவாய்ப்புகளோடு,உயர் பதவிகளில் இறை மறுப்பாளர்கள் இருக்கிறார்கள் எனில் கடவுள் இல்லையா? இப்படி பலப் பல கேள்விகள் எல்லோருக்கும் எழுவது உண்டு.

உலகின் மிகப்பெரும் விஞ்ஞானிகள், அறிவாளிகள், மருத்துவர்கள்,அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், மிகப் பெரும் பதவிகள் மற்றும் அதிகாரங்களில் இருப்பவர்கள்,நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர்கள், பல மதங்களை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும் அல்லது இறை மறுப்பாளர்களாக கூட இருக்கலாம்.இவர்கள் அனைவரும் பல கடவுள்களை வணங்குகிறார்கள் என்றால்,இவர்கள் வணங்கும் கடவுள்களில் எந்த மதத்தின் கடவுள் பெரியவர்? அல்லது உயர் பதவிகளை வகிக்கும் இறைமறுப்பாளர்கள் சொல்வது போல கடவுள் இல்லை என்பது தான் சரியா?

இப்படியான அறிவார்ந்த கேள்விகள் எல்லாதரப்பு மக்கள் மத்தியிலும் இருக்கிறது.நவீன காலத்தில் இறை மறுப்பாளன் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆக இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதன் அளவுகோலே, இன்றைய வாழ்வியல் அல்லது பொருளாதார மற்றும் அறிவார்ந்த சூழலைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.வசதியான,புத்திசாலி ஆத்திகன் ஒருவன் கடவுள் இருக்கிறான் என்று நம்புவதைப் போலவே, வசதியான புத்திசாலி நாத்தீகன் கடவுள் இல்லை என்று ஏற்கிறான். ஆக பொருளாதார வசதிகளையும்,தேவைகளையும் வைத்தே கடவுள் இருக்கிறானா இல்லையா என்று விவாதிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தைத் தாண்டி அடுத்த கட்டம் போனால் வியாதி, துன்பம், நெருக்கமான உறவுகளின் மரணம்,போர்க் கொடூரங்கள், இனப்படுகொலைகள் போன்ற கொடூர மரணங்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற சிக்கலான நேரங்களில் நம் மனதில் ஏற்படும் சாதக பாதகங்களை/அதிர்வலைகளை வைத்து இறைவன் இருக்கிறான், இல்லை என்று பலர் ஏற்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்.

அட என்னய்யா இந்த கஷ்டமான நேரத்தில் கூட என்னைக் காப்பாற்றாத கடவுள் எனக்குத் தேவையே இல்லை என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் மன இயல்புகளுக்கு ஏற்ப இந்த நிலை மாறும். இதை தவறு என்று எளிதாக சொல்லி விட முடியாது. அந்த அளவுக்கு விரக்தி. காரணம் இழந்து போன மனிதனின்/பொருளின் மீதான அதீத அன்பாக இருக்கலாம்.இப்படி இறைவனை ஏற்கவும் மறுக்கவும் ஏராளமான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதனுக்கும் இன்ப,துன்பங்கள் பொதுவானவை.இறைவனை ஏற்றுக் கொண்ட ஆத்திகனுக்கும்,இறைவனை ஏற்காத நாத்தீகனுக்கும் இது பொருந்தும்.இன்ப துன்பங்களுக்கான அளவுகோல் ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் மாறலாமே ஒழிய இன்பம் துன்பம் பொதுவானவை.

அதாவது பிறப்பும் இறப்பும் எல்லா மனிதனுக்கும் பொதுவானதைப் போலவே இன்பமும், துன்பமும் பொதுவானவை. அப்படியானால் கடவுளின் தேவை எதற்கு? பழி பாவம் தண்டனை என்று கடவுளுக்கு பயந்து பயந்து வாழ்வதை விட, இந்த உலக வாழ்க்கையை நாங்கள் விரும்புவது போலவே மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டுப் போகலாமே!இப்படியான கேள்விகள் பலருக்கும் உண்டு.

சமீபத்திய சினிமா ஒன்றில் கூட வரும் வசனம் இப்படியாக இருக்கிறது. நல்லவனாக இருந்தால் மரணத்துக்குப் பிறகு தான் நீ சொர்க்கத்தைப் பார்க்கலாம். ஆனால் கெட்டவனாக இருந்தால் இந்த உலகத்திலேயே நீ சொர்கத்தைக் காணலாம்!
எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்:)

ஆண்டவனே எனக்கு அதைத் தா, ஆண்டவனே எனது அடுத்த தேவை இது, இதை நீ முடித்து தா என்று நாள் தோறும் கோரிக்கை/ விண்ணப்பம் வைக்கும் மன நிலையோ அல்லது அதற்கான இறைத் தேடலாகவோ நமக்கு இல்லை. இந்த மனநிலையில் இருந்து வெளிவந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.அதாவது படிப்பு தா, பணம் தா, வீடு தா, பெரிய கார் தா, பெரிய பங்களா தா, பெரிய பதவிகள் தா இப்படி தா தா என்று கேட்கும் மன நிலையில் இருந்து வெளிவந்தாயிற்று.பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தா தா என்று கேட்பதை விட்டு விட்டு, அன்றாடம் அவன் என்னை நடத்தும் அற்புதமான வழிகளுக்காக நன்றி மட்டுமே சொல்லும் முறைமையை கற்றுக் கொண்டாயிற்று.

எல்லா மனிதர்களைப் போலவும் இன்பம், கடுமையான துன்பம், துயரம், பொருளாதார சிக்கல்கள், ஏமாற்றங்கள், மரணங்கள் என்று எல்லாவற்றையும் கடந்து கொண்டு தான் வருகிறேன். அப்படியான வெகு சில தருணங்களில்,இன்னுமா நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று ஒரு சிலர் நேரடியாகக் கேட்டதுண்டு. அறிவுரை சொன்னதுண்டு.

அப்படியானவர்களிடம் எவ்வித வாக்குவாதங்களையும் செய்து, அவர்களை சங்கடப்படுத்த விரும்பியதில்லை.காரணம் இறைவனின் தேடலுக்கான எனக்கான தேவை வேறு. அனுபவப் பாடம் படித்தவன்,வேறு எவன் சொன்னாலும் நம்ப மாட்டான். அப்படிப்பட்ட அனுபவப் பாடங்கள் நமக்கு ஏராளம்.

பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அதாவது ஆதாம் பெற்றெடுத்த குமாரர்களில் காயின்,ஆபேல் என்று இருவர். காயின் தன் சொந்த சகோதரனான ஆபேலைக் கொன்று போடுகிறான்.ஆண்டவர் காயீனைப் பார்த்து உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்கிறார். எனக்கு தெரியாது ஆண்டவரே என்கிறான் காயின்.உன் சொந்த சகோதரனைக் கொன்ற 
இரத்தப்பழிக்காக, பூமியில் நீயும் உன் சந்ததியும் சபிக்கப் பட்டவர்களாய் இருப்பீர்கள் என்று சாபம் கொடுக்கிறார்.ஐயோ ஆண்டவரே சபிக்கப்பட்ட என்னை, இந்த உலகம் கொன்று போடுமே என்று காயீன் ஆண்டவரைப் பார்த்துக் கேட்க, உன்னை எவனும் கொன்று போட மாட்டான், காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று ஆண்டவர் அவனுக்கு வாக்குக் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் காயீனால் கொன்றுபோடப்பட்ட ஆபேலுக்கு பதிலாக, ஆண்டவர் ஆதாமுக்கு இன்னொரு மகனை கொடுக்கிறார். அவனுக்கு சேத் என்று பெயரிடுகிறார்.

வேதாகமத்தில் காயீனுடைய வம்ச வரலாறும் இருக்கிறது. சேத்தின் வம்ச வரலாறும் இருக்கிறது.ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தை தொடர்ந்து வாசித்தால் கடவுளால் சபிக்கப்பட்ட காயீன் வம்சத்தில் வந்த அவனுடைய பிள்ளைகள் மிகப் பெரிய ஞானிகள்,அறிவியலாளர்கள்,பொறியாளர்கள்,கட்டடக்கலை வல்லுனர்கள்,இசை ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் என்று பலர் உருவாகிறார்கள்.

அப்படியே இன்னொரு பக்கம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட சேத்தின் வம்ச வரலாற்றைப் பார்த்தால்,காயீன் வம்சத்தைப் போன்ற பெரிய ஞானிகள்,
தொழிலதிபர்கள்,பொறியாளர்கள், இசை ஜாம்பவான்கள்,வசதியானவர்கள் போன்ற வரலாறு இல்லை.ஆனால் சேத்தின் வம்சம் இறைவனோடு நெருங்கி இருந்தார்கள் என்றும்,அந்த வம்சத்தில் வந்த ஏனோக்கு, நோவா போன்றோர் கடவுளுக்கு பிரியமான மனிதர்களாக இருந்தார்கள் என்றும் அந்த வம்ச வரலாறு சொல்கிறது.அப்படியானால் கடவுளால் சபிக்கப்பட்ட ஒரு வம்சம் அறிவில் சிறந்தும்,வசதியுடனும் ஆதாம் காலத்திலேயே வாழ்ந்து இருக்கிறது.

இப்படியாக இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்,அதாவது அவன் கடவுளை ஏற்பவன், ஏற்காதவன் என்பவற்றுக்கு அப்பாற்ப்ட்டு இறைவன் பல வகையான திறமைகளை, ஞானத்தை கொடுத்து இருக்கிறார்.எப்படி மழை என்பது நல்லவன் கெட்டவன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ,
அதைப் போலவே இந்த உலகத்தின் ஆசிர்வாதங்களும் ஆத்திகன் நாத்தீகன் என்று எவ்வித பாகுபாடும் இன்றி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை.

பெரிய ஞானவான்களாக, அதி புத்திசாலிகளாக, மாபெரும் பணக்காகர்களாக, மிகப் பெரிய அதிகாரத்தில் சிறந்தவர்களாக வந்த காயீனின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சமா அல்லது இவை எதுவுமே இல்லாமல், கடவுளுக்கு பிரியமாய் அவரோடு நடந்த சேத்தின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சமா? எது ஆசிர்வாதம் என்ற கேள்வி ஒவ்வொருவரையும் பொறுத்தது.நம்மைப் பொறுத்தவை சேத்தின் வம்சம் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சம்.

அப்படியானால் இந்த உலகத்தில் வாழ தேவையான ஆசிர்வாதங்களை நீங்கள் விரும்பவில்லையா? அல்லது அவை ஆசிர்வாதமே இல்லை என்று ஒதுக்கி விட முடியுமா? இதற்கான பதில் இந்த பதிவில் இருக்கிறது.

சரி. இறைவனைத் தேடுவதற்கான நம் நோக்கம் தான் என்ன?

இந்த உலகத்தின் பொருளாதார, வாழ்வியல் தேவைகளை எல்லாம் தாண்டி, இவ்வுலக வாழ்வுக்கு பின் அல்லது மரணத்துக்கு பின்னான ஒரு மறு வாழ்வு இருக்கிறது. இந்த உடலில் இருந்து உயிர்/ஆத்மா பிரிந்த பின்பு இந்த உடல் மண்ணுக்கு போகும். அப்படியானால் ஆன்மா? அந்த ஆன்மாவுக்கு மறு உலக வாழ்வு ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தான் இறைத்தேடலுக்கான நமது தேவை.அந்த மறு உலக வாழ்வுக்கு அடிப்படை, இந்த உலக வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொண்டோம், நியாயம், நீதி, உண்மை இப்படிப்பட்ட ஓராயிரம் விடயங்கள் இருக்கின்றன. கடவுளுக்கு உண்மையாக, அவர் விரும்பியபடி நாம் வாழ்ந்தோமா என்று நியாயத் தீர்ப்பு நாளில்,இறைவனிடம் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற அடிப்படை நம்பிக்கை தான் இறைத் தேடலுக்கான நமது தேவை.

ஆதாம் காலத்திலேயே சபிக்கப்பட்ட ஒரு சந்ததி, உலகத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும்,ஆசிர்வாதங்களையும் பெற்றது எனும் போது,கடவுளைத் தேடினால் தான் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கும், அற்புதங்களும், அடையாளங்களும் நமக்கு கிடைக்கும் என்று மட்டுமே எண்ணிக் கொண்டு,நம் சுய நல நோக்கங்களுக்காக,வாழ்வியல் தேவைகளுக்காக மட்டுமே கடவுளைத் தேடி நாம் ஓடுவதே தவறு.

அப்படி ஓடினாலும் கூட,நம் தேவைகள் சந்திக்கப்படாத என்றாவது ஒரு நாளில் கடவுள் இல்லை என்றும், என் தேவையை பூர்த்தி செய்யாத கடவுள் எனக்கு எதற்கு என்றும் எண்ணத் தோன்றும். இந்த தேவைகளுக்கு அப்பாற்பட்டு நம் தேடலுக்கான தேவை இருக்கும் என்றால் ஏமாற்றங்கள் இல்லை.

காரணம் மனிதனின் ஆசைகள் அப்படி!இன்றைக்கு வேலை வேண்டும் என்று கேட்பவன், நாளைக்கு வீடு,ஒரு வீடு ஆசை முடிந்தால் இன்னொரு வீடு, சொகுசு பங்களா, அடுத்து சொகுசு கார் என்று நம் தேவைகளும் ஆசைகளும் அன்றாடம் பெருகிக் கொண்டே தான் போகுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை. கூடவே அவனை விட,இவனை விட நான் வசதியானவனாக வேண்டும் என்ற போட்டி பொறாமைகள்.இந்த போட்டியும் பொறாமையும் வந்து விட்டால் சாகும் வரை நிம்மதி இருக்காது.

நம் தேவைகளையும் ஆசைகளையும் அளவுக்கு அதிகமாக பெருக்கிக் கொண்டு,ஆண்டவனே நீ அதை தா இதை தா என்று சாகும் வரை நாம் ஓடிக் கொண்டே இருக்கும் சூழலில்,ஆன்மீகத் தேடலுக்கான நேரமும், சிந்தனையும் ஒருபோதும் நமக்கு வராது!

அளவுக்கு அதிகமாக தேவைகளை பெருக்கிக் கொள்ளாமல், இந்த வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து கொண்டு,இயல்பான வாழ்வில் அன்றாடம் இறைவனோடு இணைந்து வாழ்வதை விட மேலான மகிழ்ச்சி எதுவும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை காயீனின் வம்ச வழி வந்த ஞானிகளை விட, தொழிலதிபர்களை விட,புத்திசாலிகளை விட,இவை எதுவும் இன்றி இறைவனோடு நடந்த சேத்தின் வம்சமே ஆசிர்வதிக்கப்பட்ட வம்சம்!

இந்த உலகத்தில் கஷ்டப்படும் மனிதர்கள் எல்லாம் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது மிக வசதியான புத்திசாலிகள் எல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றோ உறுதியாக சொல்லி விட இயலாது.வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் யோபு என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. ஆபிரஹாம், மோசே,தாவீது என்ற கடவுளுக்கு மிகவும் பிரியமான மனிதர்களின் நீண்ட பட்டியலில், யோபுவும் ஒருவர்.

அதனால் தான் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல(யோபுவைப் போல) பூமியில் ஒருவனும் இல்லை என்று கடவுளே அவனைக் குறித்து சாட்சி சொல்லும் அளவுக்கு உத்தமன்.

ஆனால் கடவுள் அப்படி சாட்சி கொடுக்கும் போது,சாத்தான் வந்து ஆண்டவரிடம் சொல்கிறான். சும்மாவா ஆண்டவரே யோபு உம்மை நேசிக்கிறான். நீர் அவனை அளவுக்கு அதிகமாக ஆசிர்வதித்து இருக்கிறீர். அதனால் தான் அவன் ஆண்டவரே ஆண்டவரே என்று உமக்கு துதி பாடுகிறான் என்று ஏளனம் செய்கிறான். ஆண்டவர் சாத்தானிடம் சவாலாக சொல்கிறார். அவனது உயிரை மட்டும் எடுக்காமல் நீ அவனை எப்படி வேண்டுமானாலும் சோதித்துப் பார். ஆனாலும் அவன் என்னை விட்டு விலகிப் போக மாட்டான் என்று ஆண்டவர் சொல்ல,சாத்தான் சவாலோடு கிளம்பிப் போய் யோபுவின் குடும்பத்தை சின்னா பின்னம் ஆக்குகிறான். அவனது குழந்தைகள் இறந்து போகிறார்கள். தொழில் எல்லாம் நஷ்டம். அவனும் வியாதியாலும், குஷ்டரோகத்தாலும் பாதிக்கப்பட்டு கடும் துன்பத்துக்கு ஆளாகிறான். உயிர் போனால் கூட நலம் எனும் அளவுக்கு கொடூரம்.

அந்த நேரத்தில் யோபுவின் மனைவி யோபுவைப் பார்த்து சொல்கிறார். என்னய்யா ஆண்டவர் ஆண்டவர் என்று சொல்கிறீர். அந்த ஆண்டவர் இல்லை என்று சொல்லும் அய்யா. அப்படி ஒரு ஆண்டவர் இருந்தால் உமக்கெதுக்கு இந்த துன்பம். கடவுளை அவமதித்து விட்டுப் போம் என்று சொல்லும் போது கூட,அட போடி பயித்தியக்காரி! எல்லா வசதி வாய்ப்புகளும், பிள்ளை செல்வங்களும், சொத்து பத்துக்களும் இருந்த போது கடவுளே கடவுளே என்று சொன்னோம். இவை அனைத்தும் இல்லை என்றவுடன் கடவுள் இல்லை என்றாகி விடுமா?நன்றி கெட்டவளே! என் தாயின் வயிற்றில் இருந்து நான் நிர்வாணியாக தான் இந்த பூமிக்கு வந்தேன். மீண்டும் நிர்வாணியாகவே இந்த மண்ணுக்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார். அவருடைய நாமத்துக்கு மகிமை உண்டாகட்டும் என்று சொல்கிறான்.

அந்த அளவுக்கு உலகத்தின் நன்மை தீமைகளுக்கு அப்பாற்ப்பட்டு தேவனோடு கூடிய நெருங்கிய சிநேகம்.இறுதியில் யோபுவின் முன் நிலையை விட அதிகமாய் தேவன் அவனை ஆசிர்வதித்தார் என்பது வேறு.வேதாகமத்தில் மிகவும் பிடித்த ஒரு மனிதன் இந்த யோபு.ஆனால் நம்மைப் பொறுத்தவரையோ, நமக்கு கொடுத்துக் கொண்டே இருந்தால் கடவுள் உண்டு. இல்லை என்றால் கடவுள் இல்லை அல்லது கடவுள் இருக்கிறானா என்ற சந்தேகம்!

அப்படியானால் என்னுடைய அன்றாடத் தேவைகளுக்காக இறைவனை நான் தேட வேண்டியதில்லையா? அன்றாடம் அவரிடம் முறையிட வேண்டியதில்லையா என்றால்,முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும் என்ற வாக்கியமே நமக்கு நினைவுக்கு வருகிறது.

அதையும் மீறி மிகவும் துயரமான நேரங்களில்,மனித சுபாவத்தில் ஆண்டவரே என்று கதறி முறையிடும் போது, தன் மகன் அப்பம் கேட்டால் எந்த தகப்பனாவது கல்லைக் கொடுப்பானா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா, ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்ற வாக்கியமும், இன்னும் அநேக வாக்குத்தத்தங்களும் நம் மனதில் வந்து போகிறது. வெறும் உபதேசத்துக்காக அல்ல! அனுபவப் பாடங்கள்!

இறைவனைத் தேடி ஓடுவதன் நோக்கம், இந்த உலகத்தின் ஆசிர்வாதங்கள் என்று சொல்லப் படுபவைகளுக்காக அல்ல! நித்திய மறுவாழ்வு என்ற நம்பிக்கையினால் மட்டுமே!கடவுளே அதைத் தாரும், கடவுளே இதைத் தாரும் என்று சாகும் வரை கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக அல்ல கடவுள் என்ற புரிதல் வேண்டும்!

ஆம் எப்படி கடவுள் ஒரு அன்பான தகப்பன் போலவோ,அப்படியே அவர் இந்த உலகத்தை நியாயம் தீர்க்கும் நீதியுள்ள நியாயாதிபதியும் கூட!

***நியாயத் தீர்ப்பு நாள், நித்திய மறுவாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட கிறித்துவர்களுக்கான பதிவு மட்டுமே! **

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்