ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

கத்தியை வைத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,துரோகிகளைத் தான்!


கத்தியை வைத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,துரோகிகளைத் தான்! 

கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா மொபைல் என்றும் அதன் முதலாளி சுபாஸ்கரனின் பின்புலம் என்ன என்பதும் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

காரணம் லைக்கா மொபைல் சேவை தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் பலவற்றுக்கு செல்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும். மிகக் குறைந்த விலையில் உலக நாடுகள் பலவற்றுக்கும் அலைபேசி சேவையை அளிக்கும் நிறுவனம் தான் இந்த லைக்கா மொபைல்.கூடவே இதன் உரிமையாளர் இவர் ஈழத் தமிழர் என்று பெருமையாக சிலர் சொல்லிக் கொள்வதும் உண்டு.

இந்த தகவல்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.தவறில்லை. ஆனால் இனப்படுகொலையை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்று உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்தியாவிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் ஈழத் தமிழன் என்று சொல்லிக் கொண்டு பிரித்தானியாவில் வசிக்கும் இந்த லைக்கா மொபைல் நிறுவனமோ/நிறுவனரோ , கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன் வெல்த் மாநாட்டுக்கு முழுமையான நிதி உதவி செய்ததோடு, மிகப்பெரிய விளம்பரதாரராக இருந்தது என்பதை எவரும் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள்.

அதெப்படி ஈழத் தமிழன் வாழ்க்கையை சிதைத்த ராஜபக்சே குடும்பத்துக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு ஈழத் தமிழன் ஆதரவாக இருக்க முடியும்? அப்படியானால் அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான் என்பதைக் கூட உங்களால் யூகிக்க முடியாதா?

இலங்கையில் ராஜபக்சே குடும்பம் நடத்தாத தொழில்கள் இல்லை. ஹோட்டல் தொழில், தொலைத் தொடர்பு தொழில், விமான சேவை, பல்வேறு சேவைத் தொழில்கள், சுற்றுலா சார்ந்த பல தொழில்கள் என்று ராஜபக்சே நடத்தும் அத்தனை தொழிலுக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இவை அனைத்திலும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.எப்படி ஒரு கொலைகாரனோடு ஈழத் தமிழன் பங்குதாரராக இருக்க இயலும்? ஏன் கருணா அமைச்சராக இல்லையா? அவன் ஈழத் தமிழன் இல்லையா?இலங்கையில் உள்ள பெரும்பாலான தொழில்களில் லைக்கா மொபைல் முன் நிற்கிறது. கொன்றவனோடு தொழில் முனை பங்குதாரராக இருப்பவன் என்பவன் இழவு வீட்டில் கிடைத்ததை சுருட்டும் மனநிலை கொண்டவனை விட மிகவும் கேவலமானவன். ஆனால் அவன் தொழிலதிபராம்.

இங்கே ஈழத் தமிழனா அல்லது வேறு தமிழனா என்பது பிரச்சினை இல்லை. ஈழத் தமிழனிலும் எண்ணற்ற துரோகிகளை பார்த்த வரலாறும் நாம் அறியாதது அல்ல. அதுவும் ஈழப் போரில் உள்ள துரோகிகள் பட்டியலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இப்படிப் பட்ட ஒரு கேவலமான மனிதன் தான் முருகதாஸ் இயக்கம் விஜய் நடிக்கும் கத்திப் படத்தை தயாரிக்கிறான். ஈழம் ஈழம் என்று மேடைகளில் உணர்வுப் பூர்வமாக பேசும் இயக்குனர் முருகதாசின் அயோக்கியத்தனத்தை அறிந்து கொள்ள இதை விட வேறென்ன வேண்டும்? ஏழாம் அறிவில் ஈழப் போரின் மீதான கவலையை, கோபத்தை ஒரு பாடலில் சொன்ன போது, பரவா இல்லையே இந்த பய நல்ல பயலா இருக்கானே என்று எண்ணத் தோன்றியது. அப்படி பல மேடைகளில் ஈழம் குறித்து பேசிய போது சினிமா உலகிலும் உண்மையான உணர்வோடு உள்ள மக்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி கொண்டேன்.

ஆனால் இந்த கத்தி திரைப்படத்தை தயாரிக்க ஆரம்பித்த போதே, லைக்கா மொபைல், ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமான உறவுகளைக் கொண்ட குடும்பம் என்பது தெரிந்தும், அது குறித்து பல விவாதங்கள் நடந்த போதும் கூட, எதையும் கண்டு கொள்ளாமல், எனக்கு வியாபாரம் தான் முக்கியம், மற்றவை எல்லாம் அடுத்து தான் என்று நடந்து கொண்டு,சினிமா வேலை அனைத்தையும் முடித்த பிறகு இன்றைக்கு பல அரசியல் தலைவர்களை சந்தித்து என் படம் எப்படியாவது வெளி வர வேண்டும் என்று கெஞ்சுவது வெட்கமாக இல்லையா? அசிங்கமாக அருவருப்பாக இல்லையா?

சினிமாவில் இருக்கும் பல பயலுக தங்கள் வியாபாரத்துக்காக ஈழத் தமிழர் பிரச்சினையை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு உணர்வு பூர்வமாக பேசுவது போல நடித்து மேடைகளில் அசிங்கம் செய்வது அருவருக்கத் தக்கது.

இல்லப்பா லைக்கா மொபைல் பற்றிய பின்புலம் முருகதாசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா என்று சப்பையான விளக்க வியாக்கியானம் பேச ஒரு கூட்டம் கிளம்பி இருக்கும். இனி இந்தா நடிகர் சங்கள், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் எல்லாம், லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும், ராஜபக்சேவுக்கு சம்மந்தமே இல்லை. லைக்கா மொபைல் சுபாஸ்கரன் அக்மார்க் தமிழன் மட்டுமல்ல உணர்வுள்ள ஈழத் தமிழன் என்று வெண்ணை வெட்டி நியாயம் பேச ஒரு வெண்ணை வெட்டி கூட்டம் கோடம்பாக்கத்துல இருந்து கெளம்பி இருக்கணுமே!

ஈழத் தமிழனிலும் பல அயோக்கியனுங்களை நேரடியாக பார்த்திருக்கறேன்! ஏன் கருணா,டக்ளஸ், குமரன் பத்மநாபன்கள் போதாதா, துரோகத்தின் ஒரு பானை சோற்றுக்கு பதமா!

அதானே நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது? சினிமா தயாரிக்க, ஈழத் தமிழனின் உதிரம் குடித்த துரோகிகளின் காசு கசக்கவா போகுது!

நல்லா வருவீங்கடா!

நமக்கு என்ன கோபம் என்றால் ஈழத் தமிழனின் துன்பம் என்று ஓவரா உணர்வுப் பூர்வமா மேடைகளில் நடித்து விட்டு, அடுத்த பக்கமா வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இந்த கூத்தாடிப் பயலுக அட்டூழியத்தை நம்மால் சீரணிக்க முடியல! ஏற்கனவே ரொம்ப ஓவரா சவுண்டு விட்டு விட்டு அதை வைத்தே ஈழத் தமிழனின் பணத்தில் வாழும் சில கோடம்பாக்கத்து கோமான்கள் வைகுண்டராஜனிடம் அடியாள் வேலை பார்க்க போய் விட்டார்கள். அடுத்து இந்தா கத்தியாம்!

கத்தியை எடுத்து முதலில் சொருக வேண்டியது எதிரிகளை அல்ல,உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளைத் தான்!

-ஆன்டனி வளன்