செவ்வாய், 23 ஜூன், 2015

கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள்


சாலை விபத்துகள் நடக்க,நம்மூரில் உள்ள மிக மோசமான சாலைகள் தான் முக்கிய காரணமே தவிர, தலைக்கவசம் எல்லாம் ரொம்ப சாதாரண காரணம் தான் என்று பலர் வியாக்கியானம் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டு சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஒரு போதும் மாறப் போவதில்லை.அதற்காக அப்படியே சாலையின் குழியில் விழுந்து செத்துப் போகப் போறீங்களா?
ஐயோ பாவம் தலைக்கவசம் மட்டும் அணிந்திருந்தால் அந்த பையன் கட்டாயம் பிழைத்து இருப்பான்,தலையில் மட்டும் தான் அடி,உடம்புல வேற எந்த ஒரு சிராய்ப்பு கூட இல்லை என்று நாம் கேள்விப்பட்ட, நேரடியாக பார்த்த எத்தனையோ நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் சாலை விபத்து மரணங்கள் பல உண்டு.
போலீஸ்காரர்கள் சம்பாதிக்க தான் இந்த திட்டம் என்று வெட்டிப் பேச்சு பேசாமல்,உங்க உசிரு உங்களுக்கு முக்கியம்னா தலைக்கவசம் அணியுங்கள். வெட்டி விவாதங்கள் வேலைக்கு ஆகாது.நல்லத சொன்னா கேட்டுக்கோங்கடே!
அடிக்கிற நம்மூரு வெயிலுக்கு இந்த தலைக்கவசம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. வேர்வையில் தலை முடி கொட்டிப் போகும் என்று நீங்கள் வருந்தினால், ஒருவேளை தலைக்கவசம் இல்லாவிட்டால் உங்கள் முடி மட்டும் அல்ல, மண்டையும் சேர்த்தே சிதறிப் போகும் வாய்ப்பு இருக்கு பரவா இல்லையா?
விபத்து எப்போ நடக்கும்,எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..நம்ம தப்பா , எதிராளி தப்பா என்றெல்லாம் பேசி பயன் இல்லை.இன்னும் சொல்லப் போனால், நியாயம் பேச நம்ம உசிரோட இருப்போமா என்பதே தெரியாது. நொடிப் பொழுது தான். அதற்குள் எல்லாம் முடிஞ்சு போகும்..போனது போனது தான்..
தலைக்கவசம் என்பது அரசாங்கம் சொல்லாமலே, சட்டம் போடாமலே நாமாக முன் வந்து செய்ய வேண்டிய விடயம்.காரணம் உன் உசிரு உனக்கு தான் முக்கியம்.சாலை விபத்தில் செத்துப் போனா அரசாங்கத்துக்கு மக்கள் தொகையில் ஒன்று குறைவு அவ்வளவு தான். அதிகம் கவலைப்பட உங்க ஊட்டுக்காரங்க தான் இருப்பாங்க. ஊர்க்காரன்,உலகத்துக்காரன் இல்ல.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார்த்தீர்களா, அண்டார்டிகாவைப் பார்த்தீர்களா என்று உதாரணத்துக்கு எடுக்கும் மேதாவிகள், ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.வெள்ளைக்காரன் சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கே தலைக்கவசம் இல்லாமல் ஓட்டமாட்டான்.
-ஆன்டனி வளன்

அனைத்துக்கும் தடை சரி தானா?


அனைத்துக்கும் தடை என்று போய்க் கொண்டே இருந்தால் இங்கே சாப்பிட எதுவும் கிடைக்காது! பரவா இல்லையா?
மாகியில் கலப்படம் அல்லது உடலுக்கு கெடுதலான ரசாயனம் என்று தடை பண்ணிட்டீங்க(அதற்குள் எவ்வளவு அரசியல் என்பது யார் கண்டார்) சரி தான்.
உணவுகளில் இருக்கும் தவறான விடயங்களை,சரியான நேரங்களில் கண்டு பிடிப்பதையும்,அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் விட்டு விட்டு, தடை என்று இப்படியே தடை பண்ணிட்டு போனால், நமக்கு சாப்பிட என்ன தான் மிஞ்சும்?
விளைய வைக்கும் நெல்லுக்கு மருந்து மற்றும் ரசாயன உரங்கள். சாப்பிடும் காய் கறிகள், பழங்கள் அனைத்தும் மருந்துகளாலும், ரசாயன உரங்களாலும், கார்பைடுகளாலும் கையாளப்பட்டே நமக்கு வந்து சேருகின்றன.தடை பண்ணலாமா?
தர்பூசணி போன்ற பல பழங்களுக்கு நிறத்திற்காக நேரடியாக ஊசி மருந்துகள் என்று பல புகார்கள்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கடுகு, மிளகு, பருப்பு வகைகளும் கலப்படமே.மசாலா மற்றும் மஞ்சள் தூள் என்று அனைத்து தூள்களும் அப்படியே.
நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி மற்றும் இறைச்சிகள் ஊசி மருந்துகளாலே வளர்க்கப்படுகின்றன.
கடல் உணவுகளை சாப்பிடலாமா என்றால்,தொழிற்சாலை கழிவுகள் முதற்கொண்டு,அணு உலை கதிர்வீச்சு,மற்றும் தடை செய்யப்பட்ட பல பொருட்களை கரைக்கும் இடமாக தான் கடல் இருக்கிறது. மீன்களில் நச்சு?
பாலில் கலப்படம் மட்டுமா? அதிக பால் கறக்க வேண்டும் என்பதற்காகவே மாடுகளுக்கு பல வித ஊசிகள், மருந்துகள் என்று செயற்கையான பல வைத்தியங்கள்.மாடுகள் சாப்பிடும் செடிகள், கொடிகள் அனைத்துக்கும் ஏற்கனவே பூச்சுக் கொல்லி மருந்துகள் அடிச்சாச்சு.
நாம் குடிக்கும் குடிநீர் சுத்தமானதா? வெளியே உணவகங்களில் நாம் உண்ணும் உணவுகள் தரமானதா?
எந்த கலப்படமும் இல்லை என்று உறுதியாகக் கூற இயலுமா? பல வியாதிகளை உருவாக்கும், நிறமூட்டிகள் மற்றும் மணமூட்டிகளை பயன்படுத்தாமல் இருக்கிறார்களா? உணவகங்களின் சமையலறைகள் சுத்தமாக இருக்கின்றனவா?பார்த்தால் சாப்பிடவே முடியாது என்கிறார்கள்.
ஆக எல்லாவற்றுக்கும் தடை என்றால் இங்கே என்ன தான் மிஞ்சும்?
குளிர்பானங்கள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, மாகி போன்ற துரித உணவுகள் உடலுக்கு கெடுதி.எங்க பாட்டி கால சமையல் முறை தான் சிறந்தது,அது போலவே நாமும் மாறுவோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால் அது நடைமுறை சாத்தியமா?
காலங்கள் வெவ்வேறு.பாட்டி காலம் என்பது கூட்டு குடும்ப காலம். அதெல்லாம் மலையேறி போயாச்சு.இன்றோ கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் சூழல், இரண்டு மூன்று குழந்தைகள், உதவிக்கு எவரும் இல்லாத பெரு நகரத்து சூழல்,இங்கே பாட்டி சமையல் எல்லாம் சாத்தியமா?
வெளிநாடுகளிலும் அனைத்து குளிர்பானங்களைப் பயன் படுத்து கிறார்கள். வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே உண்கிறார்கள்.துரித உணவகங்கள் ஏராளம் அங்கு உண்டு.வார இறுதியில் வணிக வளாகங்களுக்கு சென்று பார்த்தால், அவர்கள் வாங்கும் பொருட்கள் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தான்.
எந்திரமயமான உலக சூழலில், உதவிக்கு எவரும் இல்லாத தனிக் குடும்ப வாழ்வியல் முறைகளில், இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலில்,நேரமின்மை சிக்கல்களில் துரித உணவுகளை தடை செய்வது சரியா? சாத்தியமா?
என்னங்க பொறுப்பில்லாமல் பேசுறீங்க? துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் தான் அனைத்து உடல் உபாதைகளும் என்றால்,வெள்ளைக்காரன் அம்புட்டு பயலும் அம்பது வயசுக்குள்ள போய் சேரணும். ஆனால் வெளிநாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கிச் செல்லும் எண்பது வயது தாத்தா பாட்டிமார் களை அதிகம் பார்த்ததுண்டு.
மாகி இல்லாவிட்டால் மோடி என்ற பெயரில் ஏதாவது நூடுல்ஸ் வரலாம், அதானி என்ற பெயரில் நூடுல்ஸ் வரலாம் என்பது தான் எதார்த்தம். அவ்வளவு தான்.
சரி என்ன தான் தீர்வு?
நம் உணவுக் கட்டுப்பாட்டு துறை,இங்குள்ள உணவுப் பொருட்களின் தரத்தை சரி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குறைந்தால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்குமானால் கடுமையான அபராதம்( வெளி நாடுகளைப் போல)விதிக்க வேண்டும். எதற்கும் ஒத்து வரவில்லையென்றால் வேண்டுமானால் கடைசியாக மூடுவிழா நடத்தலாம்.
வெளிநாடுகளில் உணவுக் கட்டுப்பாட்டு துறை மிக மிக சரியாக செயல்படுகின்றன.உணவு விடயத்தில் மிகக் கவனமாக இருக்கும் உலக பல நாடுகள்,உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் உணவில்/ குளிர்பானங்களில் இருக்குமென்றால், குளிர்பானங்களை அந்தந்த நாடுகளில் அனுமதிக்குமா? கட்டாயம் இல்லை.அப்படியானால் நாம் விளங்கிக் கொள்வது அங்குள்ள குளிர்பானத்தின் தரம் வேறு. இங்குள்ள தரம் வேறு.
உணவின் தரத்துக்கு அவர்கள் வைத்திருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அபராதங்கள் கடுமையானவை.ஆகவே அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது.
நாமும் கூட விதிகளையும்,கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் கடுமையாக்காமல்,உணவில் கூட அரசியல் லாப நட்டங்களை மட்டுமே கணக்குப் பார்ப்பதால் தான் இங்கே சிக்கல்கள்.
வெளிநாடுகளில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுத்துறை,அங்குள்ள உணவகங்களை அடிக்கடி ஆய்வு செய்யும் பல நிகழ்வுகளை நான் நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். அப்படியான அடிக்கடி நிகழ்வுகளை நம்மூரில் நீங்கள் பார்த்ததுண்டா? அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நீங்கள் கேள்விப்பட்டு இருக்க சின்னதா ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். அவ்வளவு தான்.
கோக் குளிர்பானம் கழிவறைகள் கழுவத் தான் என்று பலர் பகிர்கிறார்கள். மேற்கத்தியர்களும் கழிவறை கழுவும் கோக்கைத் தான் எவ்வித புரிதலும் இன்று குடிக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?
பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் நேரம் நெருக்கடியான வாழ்க்கை சூழலில் துரித உணவகங்கள் மற்றும் உணவுகள் தவிர்க்க முடியாதவை.பாட்டி சமையல் முறைகளுக்கு வாய்ப்பே இல்லை. ஆகவே தீர்வு எதுவாக இருக்க முடியும் என்றால், கூடுமானவரை தரத்தை சரி செய்வது தான்.
அட நாங்க சொல்வது போல பாட்டி சமையல் முறைகளை காது கொடுத்து கேட்காவிட்டால்,துரித உணவுகளை சாப்பிட்டு வியாதிகளை இலவசமாய் வாங்கிக் கொண்டு,மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்பது சரியான பதிலாக இருக்க முடியாது.
அனைத்தும் தரமாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கான அரிசியை நாம் தான் விளைய வைக்க வேண்டும், நமக்கான காய்கறிகளை நம் வீட்டு தோட்டத்தில் தான் விளைய வைக்க வேண்டும், நம் வீட்டு கிணற்றில் தான் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கான இறைச்சிக்கான கோழிகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.நமக்கான பால் தேவைக்கு நாம் தான் மாடு வளர்க்க வேண்டும். நமக்கான தானியங்களை நாம் தான் விளைய வைக்க வேண்டும்.
அது சாத்தியம் இல்லாத இல்லாத பட்சத்தில், வெளியே இருந்து நாம் வாங்கும் உணவு பொருட்கள் ஓரளவுக்கு தரமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றால்,அதற்கு காரணம் நம் உணவுக் கட்டுப் பாட்டு துறை அல்லது அரசு மீதான மிகக் சிறிய நம்பிக்கை தான்.ஆக சரி செய்ய வேண்டிய முக்கிய இடம் இந்த தரக்கட்டுப்பாட்டு துறை தான்.
கட்டாயம் குளிர்பானங்களுக்கும்,பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், துரித உணவுகளுக்கும்ஆதரவான பதிவோ, அல்லது பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் தான் சரியான தீர்வோ என்பதல்ல பதிவின் நோக்கம்.உணவுத் தர கட்டுப்பாட்டு துறை சரியாக செயல்பட வேண்டும். மட்டுமல்ல தற்போதைய சூழலில் இது தான் எதார்த்தம், சாத்தியம் என்பதற்காக எழுதப்பட்ட பதிவு. மாற்றுக் கருத்துகள் தாராளமாய் வரவேற்கப்படுகின்றன.
**நாம் எதிர்க்கும் அணு உலை போன்ற மற்ற விடயங்களோடு இந்த பதிவை ஒப்பிடுவது சரியாக இருக்க முடியாது.**
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

அப்துல் கலாமே சொல்லிட்டாரு!


தேனீ நியூட்ரினோ திட்டம் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்று என்று அப்துல் கலாமே சொல்லிட்டாரு.அப்போ சரியாத் தான் இருக்கும்:)
ஏற்கனவே கூடங்குளம் அணு உலை தான் உலகத்தரம், அங்கே எல்லாம் சரியா இருக்கு என்று நேரடி ஆய்வு செய்த அப்துல் கலாம் சொல்லியே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஆனால் எல்லாம் சரியா இருக்கு என்று அப்துல் கலாம் சொல்லிய பிறகு,கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே நடந்த விபத்துக்களும், பழுதுகளும் தினசரி பத்திரிக்கை செய்திகள்.
இன்னும் பதினைந்து நாளில் அணு மின்சாரம் வந்து விடும் என்று சொல்லி சொல்லி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான பதினைந்து நாட்கள் வந்தாயிற்று. ஆனால் அணு மின்சாரம் வந்தபாடில்லை.அணு உலை தயாரானதாய் எந்த தகவலும் இல்லை.
அணு விஞ்ஞானிகள் என்று சொல்லும் அம்புட்டு பயலும் வாயைத் திறந்தாலே பொய் பொய்யாத் தான் பேசுறான்.
இதுல வேற அணு உலையால், அணுக் கதிர்வீச்சால் ஒருபோதும் கான்சர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தலையில் அடிச்சு சத்தியம் செய்த அடையார் புற்றுநோய் மையத்தின் சாந்தா அம்மையாரின் பொக்கிஷமான பேட்டியை தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளி பரப்பிய காட்சிகளை எல்லாம் சிந்தித்து பார்த்தால்,படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் ஐயோன்னு போவான் என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இப்படி எதையாவது நியாயமா கேட்டா,நீ என்ன அப்துல் கலாமை விட பெரிய புடுங்கியா என்ற தேசபக்தி கேள்விகள் முன் வந்து நிற்கும். அட அப்துல் கலாமே சொல்லிட்டாரு, ஆண்டிபட்டியாரே சொல்லிட்டாரு கட்டாயம் நம்பித் தான் ஆகவேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போச்சு ஆபீசர்ஸ்.
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று கேலியாக சொல்வதைப் போல,விஞ்ஞானியா இருக்குறவன், பார்ப்பதற்கு ஞானி மாதிரி தெரியுறவன் எல்லாம் கட்டாயம் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புவோமாக!
அட என்னய்யா வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? சரிங்க பொய் சொல்ல மட்டார்ர்ர்ரர்ர்ர்ர் இது போதுமா:)

-ஆன்டனி வளன்

யோகா கிறிஸ்தவத்துக்கு முரணானது.விழிப்புணர்வு பதிவு 2


**எரேமியா 10: 2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்***
யோகாவை கிறிஸ்தவர்கள் செய்யலாமா என்ற நம்முடைய முந்தைய பதிவில், யோகாவுக்கும் இந்து மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்று ஒரு சாராரும்,அட இது வெறும் உடற்பயிற்சி தானே இதில் மதத்தை கலக்கலாமா என்றும், சிலர் திரும்ப திரும்ப பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருந்தார்கள்.
நகைச்சுவை என்னன்னா, சில கிறிஸ்தவ பெயர் அடையாளங்களைக் கொண்டவர்களும் கூட,வரிந்து கட்டிக் கொண்டு இந்து மதத்திற்கும், யோகாவிற்கும் சம்மந்தம் இல்லை என்று நம்மோடு வாதிட்டார்கள்.
திரும்ப திரும்ப இது வெறும் உடற்பயிற்சி என்றே பலர் சொன்னாலும் கூட,உண்மையில் அது இந்து மதத்தின் முக்கியமான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதையும்,இந்து மதத்தில் கடவுளை அடையும் ஒரு வழியாகவும், யோகாவுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் கட்டாயம் நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது என்பதையும்,யோகா குறித்து நாம் பல தளங்களில் வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து என்ன சொல்கின்றன என்பதும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது..
யோகா குறித்து, ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் இங்கே பதிகிறேன்.முழுக் கட்டுரையும் படிக்க வேண்டுமானால் அவரது தளத்தில் படித்துக் கொள்ளலாம்.
அவரது கட்டுரைக்கு ஆதாரமாக இந்து மதம், ரிக் வேதம் ,சுவாமி விவேகானந்தர் எழுதிய ராஜயோகா இன்னும் பல புத்தகங்களை ஆதாரமாக சொல்லி இருக்கிறார்.சந்தேகம் இருப்பவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
*****ஸ்ரீதர் சுப்ரமணியன்:
யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.
பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.
யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.*******
ஒருவேளை ஸ்ரீதர் சொல்வது போல பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து எதுவும் பேசவில்லை என்றோ,அல்லது யோகா கடவுளை அடைவதற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்று சொல்லவே இல்லை என்றும்,நீங்கள் வாதிட விரும்பினால், ஸ்ரீதர் சுப்பிரமணியம் அவர்களது வலைப்பூவில் வாதிடுங்கள்.
யோகா நல்லதா,கெட்டதா என்பதல்ல என் வாதம்.
என்னுடைய பதிவின் நோக்கமே பிற மதங்கள் செய்யும்/பின்பற்றும் ஆன்மீகப் பயிற்சியை,கிறிஸ்தவர்கள், பின்பற்றலாமா, கூடாதா என்பதே!
வேதாகமத்தின் படி கட்டாயம் இந்த பயிற்சியை செய்யக் கூடாது என்பதே நமது தீர்க்கமான முடிவு.
தேவன் கொடுத்த அற்புதமான உடலை, உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கடமை.ஆனால் அதே வேளையில் கிறிஸ்தவர்களின் ஆன்மீகப் பயிற்சிக்கு,கல்வாரி சிலுவையை மிஞ்சியது எதுவும் இல்லை.
உன் ஆயுசு நாட்கள் கர்த்தர் கரத்தில் இருக்கிறது.அன்றாடம் அரை மணி நேரமாவது கல்வாரி சிலுவையின் தியாகத்தை,வேதத்தை வாசித்து தியானிப்பதை விட,பெரிய ஆன்மீகப் பயிற்சி எதுவும் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுமா என்ன?
**உடற்பயிற்சி வேறு, ஆன்மீகப் பயிற்சி என்பது வேறு**
இந்த எல்லாக் கடவுளும் ஒண்ணு தான், இயேசுநாதர் தான் கடவுள் என்று எங்கே சொன்னார், இயேசுநாதர் ஒரு போராளி போன்ற வாதங்களைக் கொண்டு,கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் நம்மிடம் வாதிட வராதீர்கள்.
**கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்

கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா? விழிப்புணர்வு பதிவு 1



யோகா நல்லது தானே! அது ஒரு உடற்பயிற்சி தானே! அதை செய்வதில் என்ன தவறு? மக்களுக்கு எவ்வகையிலாவது நன்மை பயக்குமாயின்,மன நிம்மதி தருமாயின் அந்த உடற்பயிற்சியை எல்லோரும் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?மதங்களை இதில் இணைக்கலாமா என்றெல்லாம் மேலோட்டமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். யோகா என்பது இந்து மதத்தின் மிக தீர்க்கமான தியான முறை.அதில் சொல்லப்படும் ஆசனங்கள் ஒவ்வொன்றும் இந்து மத கடவுள்களை வழிபடும் வழிமுறைகளே என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.சூரிய நமஸ்காரம் தொடங்கி...
யோகா உருவான கதையை வாழும் கலை ரவிஷங்கரின் இணைய தளத்தில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
யோகாவின் குருவாகிய பதஞ்சலி என்னும் ஆதிசேஷன் யார் என்றால்,ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பு தான் ஆதிசேஷன் என்கிறார்கள். ஆக யோகா உருவான கதையில் இருந்தே அது கிறிஸ்தவத்துக்கு முரணானது என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
சுமார் கி.மு. 150 இல் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம், நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு.
ஆனால் பின்னாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.
மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும்,அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து.
ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.
எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு, வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என்கிறார்கள் சிலர்.அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.
அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது.
இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.
சில நட்சத்திர கிறிஸ்தவ ஊழியர்களும், சில அருட்தந்தையர் களும்,சில பாதிரியார்களும்,கொஞ்சம் கிறிஸ்தவர்களும் கூட யோகாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாமே?
அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, புத்தகங்களில் தேடி உண்மை எது என்பதைக் கண்டுபிடிக்க ஆர்வமில்லை. கால்டுவெல்லும், ரேனியஸும், ஏமி கார்மைக்கேலும், வில்லியம் கேரியும் வற்புறுத்தாததை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற உணர்வுகூட இல்லை. சிலர் விழிப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?
எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதை வேதத்தை ஆதாரமாகக் கொண்டே கிறிஸ்தவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
எரேமியா 10-ஐ முழுமையாக வாசிக்கலாம்.
எரேமியா 10:2 இப்படியாக சொல்கிறது. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்.
கிறிஸ்தவர்களே! இந்த யோகா மாய்மாலங்களில் விழுந்து விடாதீர்கள். மிகவும் எச்சரிக்கை.
**நன்றி டாக்டர் பேதுரு மற்றும் சகோதரர் பெஞ்சமின் தாமஸ்.
**கிறிஸ்தவ நண்பகளுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்