கேஜ்ரிவாலின் போராட்டம் நியாயமானதா?
எங்கு பார்த்தாலும் இந்த கேள்வி தான் இப்போது பிரதானமாக விவாதிக்கப்படுகிறது!
அதெப்படி ஒரு மாநில முதல்வர்,ஆளும்கட்சிக்காரர் ஒரு அரசை எதிர்த்து போராட்டம்
செய்யலாம்? இதெல்லாம் காமெடியா இல்லையா? இப்படி ஒரு சாரார்!
கேஜ்ரிவால் தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு சரியான
நிர்வாகம் செய்யத் தெரியவில்லை.அதனால் தான் இது போன்று போராட்டங்களை நடத்தி
பிரபலம் ஆகத் துடிக்கிறார். இது யோக்கிய சிகாமணி(??)கிரண்பேடி கூட்டம்J
கிரண்பேடி யோக்கியத்துக்கு ஒரு உதாரணம்.ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது, விமானத்தின்
சாதாரண வகுப்பில் பயணம் செய்து விட்டு, விழா ஏற்பாடு செய்தவரிடம்,முதல் வகுப்பு
கட்டணம் வசூலித்த அளவுக்கு ரொம்ப யோக்கியம்J
கேஜ்ரிவாலுக்கு தொலைக்காட்சி மற்றும் ஊடக மோகம் அதிகம். அதனால் தான் இது போன்ற
தேவையற்ற செயல்களை செய்து, டெல்லியில் உள்ள சாமானிய மக்களுக்கு இடைஞ்சல்களை
ஏற்படுத்துகிறார். சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை இவரது போராட்டத்தால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. இது சமூக அக்கறை(??)கொண்ட இன்னொரு கூட்டம்J
கேஜ்ரிவால் போராட்டத்தால் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளும்,ராணுவ
பயிற்சிகளும் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளாகி இருக்கிறது. தேசத்தின் மீதும், குடியரசு
தினத்தின் மீதும் மரியாதை இல்லாத மனிதர்கள் தான்,கேஜ்ரிவால் போன்று பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்வார்கள்.இது தேசப்பற்றாளர்கள்(??)கூட்டம்J
இப்படியாக இன்னும் பல கூட்டங்கள்,கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு
இருக்கிறார்கள்.இதுல பெரிய காமெடி என்னன்னா,மேலே சொன்ன எல்லா கூட்டத்துலயும்
மோ(ச)டியின் ஆட்களும்,ஈழ கொலைகாரர்களும்(சோனியா கூட்டம்) இருக்கிறார்கள்.
எங்கெல்லாம் கேஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறுகள் அல்லது தேவையற்ற விமர்சனங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் கட்டாயம் மோ(ச)டி ஆட்களின் குரல்
ஓங்கி ஒலிக்கிறது!என்னா ஒரு நகைச்சுவை!
அது ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் சொல்வது போன்று கேஜ்ரிவாலின் போராட்டம்
என்பது வெறும் நாடக போராட்டமா? அல்லது தான் எப்படியாவது பிரபலம் ஆகி விட்டால் போதும்
என்பதற்காக நடத்தும் கீழ்த் தர அரசியல் உத்தியா?
அல்லது எப்போதும் ஊடகத்தை தன் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக
மோ(ச)டி பல் துலக்கினார்,மோ(ச)டி கழிவறைக்கு சென்றார்,மோ(ச)டி தண்ணீர்
குடித்தார், மோ(ச)டி உணவருந்தினார் என்று, மோ(ச)டி பெயரை ஊடகங்கள் தொடர்ந்து
உச்சரிக்க வேண்டும் என்பதற்காக,மோ(ச)டியைப் போல, ஊடகங்களுக்கு பணத்தை வாரி வாரி இறைப்பவரா
கேஜ்ரிவால் என்றால்,கட்டாயம் அப்படி இல்லை என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர்ந்து
கொள்வார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, எங்கு திரும்பினாலும் மோ(ச)டி குறித்த செய்திகள்
தான்.அவை உண்மை செய்திகளா என்றால்,பெரும்பான்மை செய்திகள் கட்டுக் கதைகள்,புனைவுகள்.
மோ(ச)டி குறித்த செய்தி உண்மையா பொய்யா என்பதை கூட சிந்திக்க மக்களுக்கு நேரம்
இல்லை.
உத்தரகாண்டில் பத்தாயிரம் பேரை மோ(ச)டி காப்பாற்றினார் என்ற செய்தியை
காட்டுத்தீயைப் போல பரப்பினார்கள்,மோ(ச)டியின் பக்தர்கள். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு சக்திமான் போல ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டார். மோ(ச)டியின் கேடித்தனம்
குறித்து எதிர் கேள்விகள் கேட்டவர்களோடு, மோ(ச)டியின் பக்தர்கள் மல்லுக்கட்டி
கொண்டிருந்தார்கள்.பிறகு நிலைமை ரொம்ப மோசமாகி,ஒரு சில ஊடகங்கள் இது மோசடித்தனம் தான்
என்று உறுதி செய்த பிறகு,பாரதிய ஜனதா கட்சி போனால் போகிறதென்று, மோ(ச)டி
பத்தாயிரம் பேரை காப்பாற்றினார் என்று நாங்கள் சொல்லவே இல்லை என்று ஒப்புக்
கொண்டது.
இது போன்ற பொய் செய்திகளை ஊடகங்களில் உலாவ விட்டு,கேஜ்ரிவால் எதுவும் பித்தலாட்டம்
செய்கிறாரா? இல்லவே இல்லை.
மூன்று மாதத்துக்கு முன்பு வரை எங்கு திரும்பினாலும் மோ(ச)டி நல்லவர் என்றும்,
அவரை விட்டால் இந்தியாவை காக்க வேறு ஒருவர் இல்லை என்பதைப் போல புழுகியவர்களுக்கு,ஆப்படிக்க
வந்து சேர்ந்தான் ஆப் கட்சியின் கேஜ்ரிவால்.
சும்மா சொல்லக் கூடாது.அடிக்கிற ஆப்புல காங்கிரசை விட, மோ(ச)டிவாலாக்கள் தான்
அதிகம் அரண்டு போய் கிடக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை! காரணம் இந்த
சூடான அரசியல் களேபர கதையில்,எதிர்பாராத திருப்பம் இது!
எதோ சுண்டைக்காய் பயல்..நம்மள என்ன செய்து விடுவான் என்று போன மாதம் வரை
எகத்தாளமாய் பார்த்தவர்கள் பலரின் வயிற்றில் புளியை கரைக்க வைத்திருக்கிறான் ஆப்
கட்சி கேஜ்ரிவால்.கட்சி பேரு இந்தியில் இருந்தாலும், நெஜமாவே ஆப்பு (வைக்கும்) கட்சி
என்பது மிகப் பொருத்தமான பெயராகத் தான் இருக்கிறதுJ
டெல்லியில் கடந்த ஆண்டு நிர்பயா என்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூர மரணம்
என்பது இந்த தேசத்தின் பல பகுதிகளில் கடுமையான போராட்டங்களையும்,
விழிப்புணர்வையும் சந்திக்க வைத்தது! தொடர் போராட்டங்கள். சமூக ஆர்வலர்கள் பலர் கடுமையாக அந்த கோர சம்பவத்தை குறித்து எழுதினார்கள்.
விழிப்புணர்வையும் சந்திக்க வைத்தது! தொடர் போராட்டங்கள். சமூக ஆர்வலர்கள் பலர் கடுமையாக அந்த கோர சம்பவத்தை குறித்து எழுதினார்கள்.
ஆனால் இன்று அதே காரணத்தை காட்டி,பெண்கள் பாதுகாப்பு கருதி கேஜ்ரிவால்
போராட்டம் என்றவுடன்,பல சமூக ஆர்வலர்கள் அதிலும் குறிப்பாக இடதுசாரி, வலதுசாரி,
நடுசாரிJ என்ற கொள்கை கொண்ட
பல எழுத்தாளர்கள்,நட்ட நடு சென்டரில் நின்று கொண்டு, கேஜ்ரிவால் ஒரு சமூக விரோதி
என்பது போல எழுதுகிறார்கள்.
இடதுசாரி, வலதுசாரி, நடுசாரி ஆட்களின் கொள்கைகளும், கூத்துக்களும்,நேற்று கூட மாநிலங்களவை
உறுப்பினர் பதவிக்காக,கொடநாட்டில் ஜெயலலிதாவின் காலை நக்கிக் கொண்டிருப்பதில்
இருந்தே நன்றாக தெளிவாகிறது!
ஆக இந்த இடது,வலது,நடு சாரிகளின்,ஒருசார்பு எழுத்துக்களை புறம் தள்ளி விட
வேண்டும்.உண்மையில் சொல்லப்போனால் டெல்லியில் ஆப் கட்சியின் வெற்றி என்பது,இந்த
இடது சாரி,வலது சாரிகளுக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். எப்போது என்றால் உருப்படியான
மக்கள் போராட்டங்களை அவர்கள் செய்திருந்தால்! ஆனால் இந்த ...சாரிகள் எல்லாம் எங்கோ தூங்க
போய் விட்டதால் தான்,இன்று அந்த வாய்ப்பு ஆப்புக்கு வந்து சேர்ந்து இருக்கிறது
என்பதையாவது உணர்ந்து கொள்வார்களாJ வலது இடது நட்ட நடு சாரிகள்!
சரி அந்த நிர்பயா பாலியல் கொடுரம் மட்டும் தானா என்றால் இல்லை. கடந்த வாரம் கூட டென்மார்க்
நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.ஆக இது ஒரு தொடர்கதையாக
இருந்து வருகிறது. ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்கு உலை வைத்த பல காரணங்களில்,நிர்பயாவின்
பாலியல் படுகொலையும் ஒரு முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க இயலாது.
ஒரு தேசத்தின் தலை நகரம், கிட்டத்தட்ட ஒரு தறுதலை நகரமாக,பாதுகாப்பற்ற நகரமாக,
தொடர் படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும் நடைபெறும் நகரமாக இருப்பதற்கு,இந்த தேசத்தின் மக்கள் தான் வெட்கப்பட
வேண்டும். அப்படியானால் டெல்லியைத் தவிர நாட்டின் வேறெந்த பகுதிகளிலும் பாலியல்
படுகொலைகள் நடந்தால் பிரச்சினை இல்லையா என்றால்,எங்கு நடந்தாலும் இது மிகப் பெரிய
பிரச்சினை தான்.
ஆனால் பிரதமர் முதல் அனைத்து மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற
உறுப்பினர்கள், உலகின் பல நாட்டு தூதரகங்கள் என்று அனைத்தும் டெல்லியில்
இருக்கிறது.பரப்பளவில்/அரசியல் அளவீட்டில் மிக சிறிய மாநிலம்(எழுபது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே).
ஆக டெல்லிக்கு இத்தனை
முக்கியத்துவங்கள் இருந்த போதிலும், இந்த அளவுக்கு கடுமையான குற்றங்கள் தொடர்ந்து
நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.காவல் துறை பெரிதாக எதையும் செய்யவில்லை. குற்றங்கள்
தடுக்கப்படவில்லை.ஊழலும்,லஞ்சமும் மலிந்து கிடக்கிறது.
காவல் துறையின் அராஜகப் போக்கு, தவறுகளை கண்டு கொள்ளாத அளவுக்கு, டெல்லி காவல்துறையின்
எகத்தாளம்,இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் என்ன என்றால், காவல்துறையை கட்டுப்
படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.டெல்லி மாநிலத்தின்( யூனியன் பிரதேசம்) சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கையில்
இருக்கிறது. ஆக காவல்துறையின் நியாயமான தவறுகளை சுட்டிக்காட்டினால் கூட, மத்திய
உள்துறை அமைச்சருக்கு தான் நான் கட்டுப் படுவேனே ஒழிய, டெல்லி முதலமைச்சருக்கு நான்
கட்டுப்பட வேண்டியதில்லை, என்று எகத்தாளம் பேசுகிறது டெல்லி காவல்துறை.
அப்படியானால் டெல்லியில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எப்படி ஒரு
மாநில முதல்வர் பொறுப்பாக முடியும்?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கேஜ்ரிவால் சொன்னது தான். தான் முதலமைச்சர் ஆனால்
சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மாநிலத்துக்கு கொண்டு வருவேன்.அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார். அதைத் தானே செய்கிறார்!ஒரு மாநில அரசு,தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசின் ஏதாவது ஒரு
துறைக்கு எதிராக போராடினால்,அது கேலிக் கூத்து.காரணம் ஆட்சியே தனக்கு கீழ்
இருக்கும் போது,எதற்காக போராட வேண்டும் என்ற கேள்வி வரும்.
ஆனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மத்திய அரசிடம் இருப்பதை தன்னிடம் ஒப்படைக்க
வேண்டும் என்று யாரை எதிர்த்து போராடுவது?மத்திய அரசை எதிர்த்து தானே போராட
வேண்டும்! இதில் என்ன கேலிக் கூத்து இருக்க முடியும்? சட்டம் ஒழுங்கை மத்திய அரசு
வைத்துக் கொண்டால்,மாநில சுயாட்சி என்பதன் அர்த்தம் என்ன?
இங்கே கோரிக்கைகளுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டு முதல்வர்களைப் பொறுத்தவரையில்,என்ன பிரச்சினை என்றாலும் மத்திய
அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு முடிந்து விடுகிறது அவர்களது கடமை.
அவர்களுக்கு ஆயிரம் கவலைகள்.சொத்து குவிப்பு வழக்கு, சசிகலா குடும்ப சிக்கல்,கருணாநிதி
குடும்ப சண்டை, லைக்கற்றை ஊழல் இப்படி அவர்களுக்கு அன்றாட சிந்திக்க ஆயிரம்
பிரச்சினைகள்.இதுல மக்கள் பிரச்சினை மட்டும் தான் அவர்களுக்கு கவலையா என்ன?
மீனவர் படுகொலையா, காவிரி பிரச்சினையா, முல்லை பெரியாரா, கூடங்குளமா எதுவாக
இருந்தாலும்,கடமைக்காக கடிதம் எழுதுவதோடு தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அதுவே தங்கள் தனிப்பட்ட அரசியல் லாபங்கள், பதவிகள் என்றால் டெல்லிக்கு
எத்தனை முறை வேண்டுமானாலும் சளைக்காமல் ஓடுவார்கள் இந்த யோக்கிய சிகாமணிகள்!மணிக்கணக்காக,நாள்
கணக்காக காத்துக் கிடப்பார்கள்.
தொடர்ந்து நடைபெறும் மீனவர் படுகொலைகளுக்காக ,தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
எத்தனை முறை பாரத பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்கள்?கண்டித்து
இருக்கிறார்கள்?போராடி இருக்கிறார்கள்? சாமானிய மக்களின் உயிர் பிரச்சினைகளுக்கு கவலைப்
பட கூட இங்கே எந்த முதல்வர்களும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர்கள் பிரதமருக்கு
எழுதும் கடிதங்கள் கூட தீர்வுக்காக அல்ல.மாறாக தேர்தல் வாக்குகளுக்ககான அரசியல் நாடகங்கள்
தான்.
ஈழப்படுகொலையை கண்டித்து அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை
கடற்கரையில் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம்(??) இருந்தார்.சகல வசதிகளோடு மனைவியும்,துணைவியும்
அருகில் அமர்ந்திருக்க ஒரு நாடகத்தை நடத்தி முடித்தார்.அப்படி ஏதாவது உலக மகா செயல்கள் எதுவும் செய்தாரா கேஜ்ரிவால்? இல்லை.டெல்லியில்
இன்று கடுமையான குளிர் நிலவுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அப்படி இருந்தும் சாலையோரத்தில்
படுத்துக் கொண்டு,எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்,போராடுவதென்பது நாடகம்
என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்,அப்படிப்பட்ட கடுமையான நாடகத்தை கூட,இங்கே இதுவரை
எவரும் செய்ய முன் வரவில்லையே! என்ன செய்யலாம்?
ஊடக புகழ் கிடைக்கிறது என்றால், மற்றவர்களும் இது போன்று முயன்று பாருங்களேன்.
மீனவர் பிரச்சினைகளுக்காக மத்திய அரசை கண்டித்து ஒரு போராட்டம் நடந்துங்களேன். கொடநாட்டில்
ஓய்வு எடுக்கவே நேரம் பத்த மாட்டேங்குது நமக்கு!
கேஜ்ரிவால் போராட்டங்களால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று
கவலையுறும் மகான்களை பார்த்து கேட்கிறேன்.நிர்பயாவுக்கு நிகழ்ந்ததைப் போல,மூன்று
மாதத்துக்கு ஒருமுறை,பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்கிறது. அப்படி நிகழும் போதெல்லாம்,ஒவ்வொரு
முறையும் பத்து நாட்கள் தேசம் முழுவதும் போராட்டங்கள் நடந்தால்,சாமானிய மக்கள்
பாதிக்கப்பட மாட்டார்களா?
ஏன் போராட வேண்டும்? யாருக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன? திடீரென்று ஒரு
குண்டுவெடிப்பு டெல்லியில் நடந்தால் அனைத்தும் பாதிக்கப்படாதா?தொடர்ந்து நடைபெறும்
அசம்பாவிதங்களும்,பாலியல் வன்கொடுமைகளும்,வலுவாக குறைய வேண்டும் என்றால்,ஒரு
நிரந்தர தீர்வை நோக்கி நகர்ந்தாக வேண்டும்.
மாநில அரசின் கட்டுப் பாட்டில் காவல்துறை வந்தாக வேண்டும். ஆக நீண்ட கால
தீர்வை நோக்கி நகரும் போது, சில சங்கடங்கள் ஏற்படத் தான் செய்யும். சில அறுவை
சிகிச்சைகள்,கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் முடிவு சுபமாக இருக்கும்
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடி என்பார்கள்.
அப்படியான நிரந்தர தீர்வுகளுக்கு சிலவற்றை சகிக்க பழகுங்கள்.
மக்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவன் தான் மக்களுக்காக போராடுவான். முதல்வர்
ஆனோமா, நம்ம குடும்பத்துக்கு எதையாவது சம்பாதித்தோமா, சொகுசான வாழ்க்கை
வாழ்ந்தோமா,இந்த அரசியல் கழிசடைகளின் ஜோதியில் நாமும் ஐக்கியம் ஆனோமா என்ற மன நிலை
உள்ளவர்கள்,சொகுசு வாழ்வு வாழ்ந்து விட்டு,எதையும் கண்டு கொள்ளாமல் வந்த வரைக்கும்
லாபம் என்று கடந்து சென்று விட இயலும்.ஆனால் அப்படி அல்லாமல்,முதல்வர் என்பவரும் சாதாரண மனிதரே என்ற வகையில்,கேஜ்ரிவாலும்
மக்களோடு மக்களாக தான் வாழ வேண்டும்,மக்கள் பிரச்சினைகளை நேரடியாக கேட்க வேண்டும்,
எளிமையான தீர்வுகளை கால தாமதம் இன்றி தர வேண்டும் என்று நெருங்கி வரும் போது குறைந்த
பட்சம் அதை பாராட்ட பழக வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக இருக்க வேண்டும்.
இல்லை இல்லை. முதல்வர் என்றால்,சாமானிய மக்கள் யாரும் நெருங்க முடியாத படி,உச்சாணியில்
தான் இருக்க வேண்டும், மக்களை எல்லாம் அடிக்கடி சந்திக்க கூடாது,மக்களுக்காக,மக்கள்
நலனுக்காக போராடக் கூடாது.கடிதம் எழுதுவதோடு அமைதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள்
எதிர் பார்ப்பீர்கள் என்றால்,உங்களை என்ன சொல்லுவது?
பால்தாக்கரே மரணத்தின் போது மும்பை நகரமே ஸ்தம்பித்து போனது, அதைப் போன்றே
தேசத்தின் தலைவர்களின் மரணங்கள் நிகழும் போது,பல நகரங்கள் ஸ்தம்பிக்கின்றன.மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்படுகிறது.இங்கே ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில்,எதிர்மறையான தீர்ப்புகள் வந்தால்,தமிழ்நாடு
என்ன பாடுபடும் என்று சற்று பொறுத்து இருந்து பாருங்கள். மாநிலமே ஸ்தம்பிக்கும்.ஆனால்
எவரும் எதிர் கேள்வி கேட்க முடியாது!
சமீபத்தில் சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் படு கொலை செய்யப்பட்ட போது, குமரி
மாவட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது,பேருந்துகள் உடைக்கப்பட்டன. வெகு ஜன மக்கள் வலுவாக
பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அதற்காக மக்கள் என்ன செய்தார்கள்?கை கட்டி வாய் மூடி
நின்றார்கள். அராஜகம் நிகழ்ந்தால் நாமெல்லாம் அமைதியாக மட்டுமே இருப்போம்!
கேஜ்ரிவால் தன் மாநிலத்தின் பாதுகாப்புக்காக,அற வழியில் போராடினால், ஐயோ
டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பாழாகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்க கிளம்பி
விடுவோம்!
இன்னொரு சாரார், உலக நாட்டு தூதரகங்கள், நாடாளுமன்றம் மற்றும் இந்தியாவின்
முக்கிய தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருப்பதால், பாதுகாப்பை மாநில அரசுக்கு
வழங்க கூடாது என்று புது வியாக்கியானம் ஒன்றைத் தருகிறார்கள்.
என் கேள்வி எளிது. அப்படியானால் மாநில காவல்துறை எதற்கும் லாயக்கில்லை என்று
சொல்ல வருகிறீர்களா? ஏன் சென்னையிலும் தான் பிற நாட்டு தூதரகங்கள் இருக்கின்றன.
அதைப் போலவே வேறு சில மாநிலங்களிலும் இருக்கின்றன. அன்றாடம் குண்டு வெடிப்பும்,
பாதுகாப்புக்கு இடையூருமா நிகழ்கிறது?மாநில அரசின் காவல்துறையை இதை விட கேவலமாக எவரும்
குறை கூற முடியாது!மாநில அரசின் காவல் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சரியாக இருந்தால்,
எல்லாம் சரியாக இருக்கும்.அதனால் மாநில காவல் துறையைப் பற்றி ரொம்ப கவலைப் பட
வேண்டாம்.
என்னமோ டெல்லி காவல்துறை,மத்திய அரசின் கட்டுப் பாட்டில், இருப்பதால் அதீத
பாதுகாப்போடு இருப்பது போல ஒரு காமெடி வேற! இன்னொன்று இதுவரை இப்படித்(மத்திய அரசின்
கட்டுப்பாட்டில்) தானே இருந்தது டெல்லி காவல்துறை. ஏன் திடீரென்று இதற்காக போராடுகிறார் என்கிறார்கள். இதுவரை இப்படி
இருந்தது என்பதற்காக,காலம்பூராவும் அப்படியே தான் இருக்க வேண்டுமா என்ன? மாநில உரிமைகளை
கேட்டுபெறக் கூடாதா? என்ன தான்யா பிரச்சினை உங்களுக்கு? பாராளுமன்றத்தில் தான் அதற்கான
மசோதா கொண்டு வர வேண்டும்,இப்படி எல்லாம் போராட கூடாது என்கிறார்கள்.என்னா ஒரு அறிவாளித்தனம்.இதெல்லாம்
தெரியாமலா கேஜ்ரிவால் இருக்கிறார்? அட போங்கப்பு நீங்களும் உங்க விமர்சனங்களும்!
அடுத்து எங்கு பார்த்தாலும் கேஜ்ரிவால் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை
என்று கடுமையான விமர்சனங்கள். ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன்
இருக்கிறார்? ஏன் மின்சார கட்டணத்தை குறைத்தார்?ஏன் தண்ணீரை இலவசமாக வழங்கினார்?அரசுக்கு
எவ்வளவு நட்டம் தெரியுமா என்றெல்லாம் மிக(??) கடுமையான கேள்விகளை முன்
வைக்கிறார்கள்.
ரொம்ப பெரிய காமெடி என்னவென்றால், எதோ கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்து ஆண்டுகள்
சில ஆயிற்று என்பது போலவும், ஷீலா தீட்ஷிதுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக
செயல்படுகிறார் என்பது போலவும்,இவர்கள் பேசுவது அனைத்தும் நகைச்சுவை!
கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்து மூன்றே மூன்று வாரங்கள் தான் ஆகின்றன.அதற்குள் அதை
செய்யவில்லையா இதை செய்யவில்லையா அப்பபா! என்னா ஒரு கடுப்பு !
அவருடைய சமீபத்திய சி.என்.என் ஐ.பி.என் பேட்டியை இவர்கள் பார்க்கவில்லை போலும்.ஷீலா
தீட்சித்துக்கு எதிரான மற்றும் காமன்வெல்த் ஊழல் அனைத்தையும் ஏற்கனவே கையில்
எடுத்தாயிற்று. அதிகாரப் பூர்வ நடவடிக்கைகளை இன்னும் சில தினங்களில் எடுக்க
இருக்கிறேன்.
நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், சில மாதங்களோ வருடங்களோ அல்ல. இன்னும் சில தினங்களுக்குள்
நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்று தெளிவாக சொல்கிறார்.அப்படி நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் உங்களுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கி
கொள்ளுமே என்றால்,அதெல்லாம் எனக்கு தெரியாமலா இருக்கிறது! கட்டாயம் ஏண்டா ஆப்புக்கு
நாம் ஆதரவு கொடுத்தோம் என்று,காங்கிரஸ் வருந்தப் போகும் நாட்களை நீங்கள் சீக்கிரம்
பார்ப்பீர்கள் என்று தெளிவாக சொல்கிறார். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்?
மூன்று வாரத்தில் அந்த ஆட்சி குறித்து நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் நியாயம்
தானா என்பதை,மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! மனசாட்சியா அப்டின்னா?:)
ஒரு ஆட்சி என்றால்,அதுவும் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு
ஒரு ஆறு மாத கால அவகாசம் கொடுத்துப் பாருங்கள்.அதன் பிறகு விமர்சியுங்கள்.அது தான்
சரியாக இருக்கும்.
நீங்கள் அளிக்கும் இலவச தண்ணீர், சாமனிய மக்களுக்கு பயன் தரவில்லை. மேல் தட்டு
மக்கள் தான் அதனால் பயன் பெறுகிறார்கள். காரணம் சாதாரண மக்களின் வீடுகளில்,தண்ணீருக்கான
மீட்டரே இல்லை என்று பத்திரிக்கையாளர் கேட்கிறார்..இருபதாயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம் என்றீர்கள்.ஆனால் இப்போதோ இருபதாயிரம்
லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தினால்,மொத்த தண்ணீருக்கும் சேர்த்தே கட்டணம்
என்கிறீர்கள். இதெப்படி சரியாகும் என்று கேள்வி.
தண்ணீரை விரயம் ஆக்க கூடாது. இருபதாயிரம் லிட்டர் என்பது ஒரு குடும்பத்துக்கு
போதுமானது.இலவசமாக தானே தருகிறார்கள் என்று மக்கள் அதை வீணாக்காமல், முறையாக பயன்
படுத்த வேண்டிய அக்கறை அப்போது தான் வரும் என்கிறார்.மட்டுமல்ல சாதாரண மக்கள் தண்ணீருக்கு மீட்டர் வைத்திருக்கவில்லை என்கிறீர்கள்.இனி
அவர்களும் கட்டாயம் மீட்டர் பொருத்துவார்கள். எல்லாவற்றையும் ஒரு கணக்குக்குள்,வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்றால்,அதை செய்தாக வேண்டும்.எனவே போக போக இவை
ஒரு ஒழுங்கு முறைக்குள் தானாகவே வந்து விடும் என்று மிக தெளிவாக சொல்கிறார்.
ஆனால் இதில் குறை சொல்ல கிளம்பி இருக்கும் நம்மாட்கள் என்ன சொல்வார்கள்
தெரியுமா? மக்கள் இந்த இலவச தண்ணீரில் என்னென்ன கோல்மால்கள் செய்ய வாய்ப்பு
இருக்கிறது என்பதை பற்றி மட்டுமே விவாதிப்பார்கள். இலவச தண்ணீர் திட்டத்தை மறக்கடிக்க
மட்டுமே முயற்சி செய்வார்கள்!
மின்சார கட்டணத்தை குறைத்தீர்கள், இதெல்லாம் தேவையா?அரசுக்கு இதனால் எவ்வளவு
இழப்பு, மக்கள் வரிப்பணம் இப்படி வீணாக்கப் படுவதாக பேட்டியாளர் சொன்னதும்,மின்சாரத்துக்கு
இருநூறு கோடி மானியம் வழங்குவதை இப்படி குறை பட்டுக் கொள்கிறீர்கள்.ஆனால் ஆட்சியாளர்களின்
பாதுகாப்புக்காக,அவர்களின் தேவையற்ற வசதி வாய்ப்புகளுக்காக பல நூறு கோடிகள்
வீணாவதை யார் கணக்கில் வைப்பது?
மட்டுமல்ல,இந்த மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் தான்
விநியோகிக்கின்றன. முந்தைய ஆட்சியாளர்கள் தனியார் நிறுவனங்களோடு சில தனிப்பட்ட உடன்படிக்கைகளை
மேற்கொண்டு, மின் கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி வைத்திருக்கிறார்கள்.அந்த தனியார்
நிறுவனங்களை எல்லாம் முறையாக ஆய்வு செய்து,அவர்களின் ஆவணங்களை எல்லாம் சரி பார்க்க
சொல்லி உத்தரவிட்டு இருக்கிறேன். தனியார் மின் நிறுவனங்களின் முறையற்ற
செயல்பாடுகள் கட்டாயம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்.தனியார் மின் நிறுவனங்கள்
செய்யும் அட்டூழியங்களை நாம் சொல்ல வேண்டியதில்லை.
சரி! இதில் யாரெல்லாம் முன்னணியில் வருவார்கள் என்றால் டாட்டா அம்பானி
குழுமங்கள் தான் அம்பலப்படும்!
டாட்டா, அம்பானிகளின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்புகள், முறைகேடுகள் அதனால்
அரசுக்கு ஏற்படும் நட்டங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் அரசும்,இந்த தேசத்தின் அறிவாளிகளும்,டெல்லியின்
சாமானிய மக்களுக்கு,மின் கட்டணத்தை பாதியாக குறைத்தால்,கோபம் கொப்பளிக்க கேள்வி
கேட்க கிளம்பி விடுகிறார்கள்.என்னா ஒரு தேசப்பற்று!
உங்களுக்கு என்ன தான் உயரடுக்கு பாதுகாப்பு வேண்டாம்,சொகுசு வாகனங்கள்
வேண்டாம் என்று சொன்னாலும்,டெல்லி அரசும், உத்திரபிரதேச அரசும் உங்களின் பாதுகாப்புக்காக
கணிசமான காவல்துறையினரை பயன்படுத்துவதாகவும்,அதற்கான செலவு அதிகம் என்றும்
சொல்கிறார்களே!நீங்கள் நாடகம் நடத்துவதாக அவர்கள் குறை சொல்கிறார்களே அது உண்மையா
என்று கேள்வி!
நீங்கள் வேண்டுமானால் என்னோடு என்னுடைய காரில் வாருங்கள். நான் அப்படி கணிசமான
பாதுகாப்பை பயன்படுத்துகிறேனா இல்லையா என்பதை நீங்களே நேரடியாக தெரிந்து
கொள்ளுங்களேன் என்கிறார். இந்த மாதிரி அவதூறுகளில் உண்மை இருக்கும் என்று நீங்கள் கூடவா நம்புகிறீர்கள்
என்று எதிர் கேள்வி வைக்க, பேட்டியாளர் மௌனமாகிறார்.
கூடவே நான் அரசு வழங்கும் அதீத வசதிகள் கொண்ட வீடு வேண்டாம்,மாறாக அளவில்
சின்ன ஒரு வீடு போதும் என்றால், அதையும் நாடகம் என்கிறார்கள்,பெரிய வீட்டுக்கு
போனாலும், ஆடம்பரம் என்கிறார்கள். என்ன செய்யலாம்? என்று நக்கலாக கேள்வி
கேட்கிறார் கேஜ்ரிவால்.பேட்டியாளருக்கு பதில் சொல்ல இயலவில்லை!
என்னைப் பொறுத்த வரையில் அவரது பல செயல்பாடுகள் பாராட்டத் தக்கதாகவே
இருக்கிறது.கேஜ்ரிவாலுக்கு ஒரு சபாஷ் கூட சொல்லத் தோன்றுகிறது!
மாற்றம் மாற்றம் என்று சொல்லிக் கொண்டே,எதையாவது எதிர்பார்த்து,ஏமார்ந்து
காத்திருக்காமல்,பழைய உழுத்துப் போன சில அரசியல் கட்சிகளை தூக்கி வைத்துக் கொண்டு
அழாமல்,இது தான் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று பாராட்டுவோம்!
பாராட்ட இயலவில்லையா?கொஞ்சம் அமைதியாக இருங்கள்.விமர்சனங்களை ஒரு ஆறு மாதம் கழித்து
வையுங்கள்! அப்போது விவாதிக்கலாம்!இல்லையா! அதுவரை மோ(ச)டி மோ(ச)டி என்று சொல்லிக் கொண்டே இருங்கள்!
குறிப்பு:
குறைந்த பட்சம் மாற்றத்தை/மாற்று
அரசியலை விரும்பும் மக்கள், ஆப் கட்சியை
ஏற்கிறோமா,இல்லையா என்பது வேறு!ஆனால் அவர்களின் நல்ல அரசியல் செயல்பாடுகளை,கட்டாயம் ஏற்கவும்,பாராட்டவும் பழக வேண்டும்!
நன்றி வணக்கம்!
ஆன்டனி வளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக