என்ன
செய்யலாம் அணு உலை எதிர்ப்பு போராளி கெபிஸ்டனுக்காக?
கடந்த மூன்று
ஆண்டுகளாக இடிந்தகரையில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் முன்னணியில் நிற்கும்
களப்போராளிகளில் ஒருவர்.மிக எளிமையான அதே நேரத்தில் மிகவும் உறுதியான மன நிலை
கொண்ட போராளி. கடந்த ஒன்றரை ஆண்டு நேரடி பழக்கம். அலைபேசியில் பேசும் ஒவ்வொரு
தருணங்களிலும் மிகுந்த வாஞ்சையோடு பேசும் ஒரு உற்ற சகோதரன்.கடந்த முறை போராட்ட
களத்துக்கு சென்ற போது தான்,நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிட்டியது.ஆனால் ஒரு
நீண்ட கால நண்பனைப் போல அத்தனை அன்பு!
இந்த அணு
உலைப் போராட்டம் இன்றைக்கு உலகத் தளங்களில் எல்லாம் வெளிவருவதற்கு மிகப்பெரிய
அளவில் எந்த ஊடகங்களும் நமக்கு துணை நிற்கவில்லை. பல்வேறு ஊடகங்கள் நமக்கு எதிராக
தான் இன்று வரை நிற்கின்றன. ஆனால் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் ஒவ்வொரு அங்க
அசைவுகளையும்(**காவல்துறையின் பல்வேறு அடக்குமுறைகள் உட்பட) உலக தளங்களுக்கு, தன்
பல்வேறு புகைப்படங்களால் கொண்டு சென்ற நண்பர் கெபிஸ்டன். ஒவ்வொரு நாளும் பந்தலில்
போய் அமர்ந்து,போராட்டத்தில் பங்கெடுத்து,போராட்ட களங்களுக்கு வரும் நபர்களுக்கு
தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை
புகைப்படங்களாக, காணொளிகளாக தந்த பெருமைக்குரிய நபர்.
கூடங்குளம்
அணு உலை நிகழ்வுகளை எந்த செய்தி தாள்களிலும் படித்து தெரிந்து கொள்ள
வேண்டியதில்லை.கெபிஸ்டனின் பதிவுகள் போதுமானது.அந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய
ஊடகவியலாளராக கடந்த மூன்று ஆண்டுகள் களத்தில் நிற்கிறார்.
சிங்கள அரசை
கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்துக்காக,தன் இருபத்து ஐந்து ஆண்டு கால நெருங்கிய
நண்பனான ராஜபச்கேவால் படுகொலை செய்யப்பட்ட புகழ்பெற்ற சிங்கள பத்திரிக்கையாளன்
லசந்த விக்ரமதுங்க தன்னுடைய கடைசி கடித்ததில் இப்படியாக எழுதி வைத்தான்.
யார்
உண்மையான மிக சிறந்த ஊடகவியலாளன் ?
தான் நேரடியாக
பார்த்த விடயங்களை,தான் உணரும் விடயங்களை எவ்வித புனைவுகளும் இன்றி,எவருடைய
அச்சுறுத்தலுக்கும்/பயத்துக்கும் அப்பார்ப்பட்டு உண்மையாய் அப்படியே பதிவு செய்பவன்
தான் உண்மையான ஊடகவியலாளன் என்று எழுதி வைத்தான். அனைத்து பத்திரிக்கையாளர்களும்/ஊடகவியலாளர்களும்
இவர் சொல்வது போல இருந்து விட்டால் எத்தனை நலமாக இருக்கும்!(கற்பனை தான்).
ஆக ஊடகவியலாளன்
என்றால் கட்டாயம் பெரிய பெரிய கட்டுரைகள் எழுத வேண்டியதில்லை.
ஒற்றைப்
புகைப்படம் போதும்,கண் முன் நடக்கும் அநியாயங்களை,நாம் சொலல் விரும்பும் செய்திகளை
உலகுக்கு சொல்ல.புகைப்படங்களின் வலிமை குறித்து சொல்ல வேண்டுமானால், வியட்நாம்
போரை முடிவுக்கு கொண்டுவந்தது ஒற்றைப் புகைப்படம் என்பார்கள். அது தான் அதன் வலிமை!பல நேரங்களில் மிகப்பெரிய கட்டுரைகள்,
விவாதங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒற்றைப் புகைப்படம் செய்து விட்டு
போகும்.
அந்த
வகையில் இடிந்தகரை செய்திகளை மிக அருமையாக உலகின் பார்வைக்கு கொண்டு வந்த மாபெரும்
ஊடகவியலாளன் கெபிஸ்டன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நேற்றைய
செய்தியை கேள்விப்பட்டவுடன் மிகுந்த கவலை எனக்கு.ஏன் தெரியுமா?
அணு உலை
போராட்டத்தை குறித்து என்னென்ன எழுதினாலும், என்னென்ன விவாதித்தாலும்,
களப்
போராளிகளைப் போல மக்களோடு மக்களாக நின்று போராட இயலவில்லையே என்ற இயலாமை எப்போதும்
நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும்! ஆயிரம் எழுதலாம், பேசலாம் ஆனால் சொந்த மண்ணில்
மக்களோடு மக்களாக நின்று போராடுவது சாதாரணமான விடயம் அல்ல.
அணு உலை
எதிர்ப்பு போராளிகள் ஒவ்வொருவரையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறேன். என்ன காரணம்
தெரியுமா? தனக்கான குடும்பம், வாழ்க்கை, மகிழ்ச்சி என்று சுய நல விரும்பிகளாக
எங்கு பார்த்தாலும் திரியும் பெரும்பான்மை மனிதர்களுக்கு மத்தியில், அதீத கல்வி,
ஓரளவுக்கு வசதியான குடும்பம், வாழ்க்கை தேவைகளுக்காக எவரிடமும் போய் நிற்க வேண்டிய
அவசியம் இல்லாமை, நல்லதொரு வேலை என எல்லாம் இருந்தும், அவை எல்லாவற்றையும் ஒதுக்கி
வைத்து விட்டு, இந்த மண்ணுக்காக, மக்களுக்காக
களத்தில் போராட துணிவதென்பது,அதுவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே களத்தில்
நிற்பதென்பது உண்மையிலேயே எல்லோராலும் இயலாத ஒன்று. அந்த அர்ப்பணிப்பு பலருக்கு
வாய்க்காது! பலர் விரும்ப மாட்டார்கள்!
இன்னொன்றையும்
சொல்லியாக வேண்டும். இங்கே நிற்கும் களப் போராளிகளைப் பார்த்து பல நேரம் பெருமிதம்
கொள்ளும் அதே வேளையில்,அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும் அவர்களின் குடும்பங்கள்,
மனைவி குழந்தைகளை எல்லாம் நினைத்து நெஞ்சம் பூரித்து போகிறது.காரணம் அவர்களின்
ஆதரவு இல்லை என்றால் போராட்டம் என்பது கேள்விக் குறி! உலகில் யாரை வேண்டுமானாலும்
பேசி புரியவைத்து சமாளித்து விடலாம். ஆனால் சொந்த குடும்பத்துக்கு பேசி புரியவைத்து
சமாளிப்பது சாம்ன்யப் பட்ட வேலை கிடையாது!
தங்கள்
குடும்பங்களை தற்காலிகமாக பிரிந்து நிற்கும் போராளி குடும்பங்களின் வலி எப்படி
இருக்கும் என்பதையும் உணர இயலாமல் இல்லை. வார்த்தைகளால் சிலாகிக்க இயலாத உணர்வுகள்
அவை.
கெபிஸ்டனின்
கடைக்கு தீவைத்து விட்ட செய்தி கேள்விப்பட்டு நேற்று அலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசினேன். பேசுவதற்கு முன்பு இருந்த என் மனநிலை, அவரோடு பேசிய பின்பு இன்னும் அதீத
கவலைக்குள்ளானது.
பிறக்கும்
போதே நாம் ஒன்றும் பெரிய பணக்காரர்களாக பிறக்கவில்லை.குருவி சேர்த்தது போல கொஞ்சம்
கொஞ்சமாக சேர்த்து சேர்த்து தான் இந்த கடையை நடத்துகிறேன். ஆனால் இப்போது அதற்கும்
வேட்டு வைத்து இருக்கிறார்கள். அணு உலை போராட்ட எதிர்ப்பை தவிர வேறு எந்த
மனிதர்களோடும் எனக்கு தனிப்பட்ட பகை கிடையாது. என்ன செய்வது? எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்ள பழக வேண்டும்! மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்
என்று சொன்ன போது, என்ன பதிலை அவருக்கு சொல்வதென்றே தெரியவில்லை.ஆறுதல் சொல்லி
ஆசுவாசப் படுத்த எந்த வார்த்தைகளும் என்னிடம் இல்லை.
கடைக்கு
ஏதாவது காப்பீடு எடுத்து இருக்கிறீர்களா என்று மட்டும் கேட்டேன். கடைக்கு(கட்டடம்)
காப்பீடு இருக்கிறது. ஆனால் கடையில் உள்ள
பொருட்களுக்கு காப்பீடு எதுவும் எடுக்கவில்லை என்றார். எரிந்த பொருட்களில் அதிகம்
அரைகுறையாக எரிந்து கிடக்கின்றன.அதை பயன்படுத்தவோ/ விற்கவோ முடியாது. இன்னொரு
கொடுமை என்னன்னா,கடையில் ஐம்பத்து மூவாயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தேன்.அதுவும்
நான் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணம்.கடை எரிவதற்கு முந்தின நாள் காலையில் வந்து
என்னிடம் அந்த பணத்தை வாங்கி செல்வதாக சொன்னவர், அன்று வராததால் அதை அப்படியே
கடையில் வைத்து விட்டேன். அவர் அன்று காலையிலேயே வந்து வாங்கி இருந்தால், அதுவாவது
மிஞ்சி இருக்கும்! என்ன சொல்ல?
நடு இரவில்
கடையை தீவைக்க,கடைக்கு மேலே தான் அவரது வீடு.தூக்கத்தில் இருந்த அவர்கள்,அந்த புகை
மூட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓட, இத்தனைக்கும் இரவில்
மின்சாரமும் கிடையாது.சின்னஞ்சிறு குழந்தைகள் மூவர்.அவர்கள் அனைவரின் மன
உளைச்சலும் பதட்டமும் எப்படி இருந்திருக்கும் எண்ணிப் பாருங்கள்?உயிர் தப்ப
வேண்டும் என்பதைத் தவிர!இதில் அதீதமாக பயந்து போனது அவரது குழந்தைகள் தான்!
இடிந்தகரை
கிராமத்தில் இருக்கும் பெரியகடை கெபிஸ்டனுடையது.எப்போதும் ஒரு ஐந்து லட்ச ரூபாய்
சரக்கு கடையில் இருக்கும்.இது தான் அவருடைய வாழ்வாதாரமே!நியாமான மக்கள்
போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றதைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத மனிதன்.
காவல்துறை
கண்ணியவான்களிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக சென்ற அவரது மனைவியிடம், வழக்கு
பதிவு செய்ய இயலாது என்று சொன்னவர்கள்,பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு
வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். எரிந்து போன பொருட்கள் பட்டியலை இவர்கள்
சொல்லுவதற்கு முன்பே காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்களாம். அதிலும் முக்கியமாக
மடிக்கணினி எரிந்து போய்விட்டதாமே என்று காவல்துறை அதிகாரி சொல்ல, இல்ல நாங்க
அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று அவரது மனைவி சொல்ல, இல்ல எங்களுக்கு
தெரியும் அவரது மடிக்கணினியும் எரிந்து போய் விட்டது என்று காவல்துறை அதிகாரிகள்
சொல்கிறார்களாம்! என்ன ஒரு அழகான காவல்துறை. எங்க என்ன நடக்குதுன்னு முன் கூட்டியே
எல்லாம் தெரிந்தும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை. மக்களை காக்க
காவல்துறையா?அல்லது மக்களை துன்புறுத்தவும், மிரட்டவும், அழிக்கவும் காவல்துறையா?
வழக்கு
சம்மந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் வேண்டும் என்று கேட்டதற்கு, வீட்டு
தொலைபேசி எண்ணைக் கொடுத்து இருக்கிறார்கள்.இல்ல அலைபேசி எண் தான் வேண்டும்
என்றாராம் காவல்துறை அதிகாரி. அதாவது கெபிஸ்டன் என்ற தீவிரவாதி(??) அலைபேசி எண்ணை
மடக்கி மடக்கி கேட்கிறார்களாம்! ஐயோ இறைவா! அதற்கு இன்னொரு காவல்துறை அதிகாரி!
அய்யா! கெபிஸ்டன் அலை பேசி எண்ணை இன்னும் மாற்றவில்லை. அதே பழைய எண் தான்
வைத்திருக்கிறார். அது ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது என்று சொன்னாராம்.
இந்த
கொடுமையை எல்லாம் எங்க போய் சொல்ல?
ஏற்கனவே
தீவிரவாதி அளவுக்கு அணு உலைப் போராளிகள் மீது போடப்பட்டு இருக்கும் நூற்றுக்
கணக்கான வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள்! இது போதாதென்று அவர்கள் அனைவரும்
தொலைபேசிகளும் அன்றாடம் ஒட்டு கேட்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அவர்கள்
வழக்கு பதிவு வர்றதுக்கு முன்பு வரைக்கும் கெபிஸ்டனின் அலைபேசி அழைப்புகளையும்
ஒட்டு கேட்டு இருப்பார்கள் காவல்துறை அதிகாரிகள். பிறகெதற்கு அவரது அலைபேசி எண்?
காவல்துறை பெரிய காமெடி துறையால்ல இருக்கு!
அன்பார்ந்த
தோழர்களே!
இந்த
நேரத்தில் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த மாபெரும் பொருள் இழப்பு என்பது நமக்கு
ஏற்பட்டு இருக்கும் இழப்பு! அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நிகழும் இந்த துன்பத்தில்
கட்டாயம் நமக்கும் பங்கு உண்டு. வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டால் போராட்டத்தை
விட்டு ஓடி விடுவார்கள் என்று ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக
செயல்படும் அனைத்து மனிதர்களும் (நாய்களும்) எலும்புத்துண்டுகளுக்காக வாலை ஆட்டி
கொண்டு கனவு காண்கின்றன!
கெபிஸ்டனைப்
பொறுத்தவரையில் அவர் போராட்டத்தில் இன்னும் வலுவாகவே செயல்படுவார்.
இப்படியான
மிரட்டல்களில் இருந்து அவர் பின்வாங்கப் போவதில்லை. ஆயினும் ஒரு சாமானியனின்
வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்படும் போது, மனதின் ஓரத்தில் கவலைகள இல்லாமல்
இருக்காது. காரணம் எல்லோரும் மனிதர்களே! இதே இடத்தில நம்மை பொருத்திப் பாருங்கள்.
நம் பொருளாதாரம் சிதைக்கப்பட்டால் நம் மனம் என்ன வேதனைப் படும் என்று. வெளியில் அவர்
காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, அவரது வலி நாம் உணராமல் இல்லை.
கெபிஸ்டனைப்
பற்றிய இன்னொரு செய்தியையும் சொல்லி ஆக வேண்டும். தாது மணல் கொள்ளைக்கு எதிராக
போராடியதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறை அவர் மீது பொய் வழக்கு பதிவு
செய்து இருக்கிறது.அது மட்டுமல்ல மூன்று லட்சம் மதிப்புள்ள அவரது டிரக்கர் வாகனம்
உவரி காவல்நிலையத்தாரால் சிறைபிடிக்கப்பட்டு ஆண்டுகள் ஏழெட்டு ஆகிவிட்டன.
இன்றும் கூட உவரி காவல்நிலையத்தின் முன்பு அவரது வாகனம் பாழடைந்து நிற்கிறது. இனி அந்த வாகனம் ஒருபோதும் இவரது கைக்கி வந்து சேராது!
இன்றும் கூட உவரி காவல்நிலையத்தின் முன்பு அவரது வாகனம் பாழடைந்து நிற்கிறது. இனி அந்த வாகனம் ஒருபோதும் இவரது கைக்கி வந்து சேராது!
இப்படியாக
மக்கள் போராட்டத்துக்காக பல்வேறு பொருள் இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
அணு உலைக்கு
எதிரான எண்ணம் கொண்ட அனைத்து அன்பான தோழர்களும்,(ஆயிரக்கணக்கான
தோழர்கள் கூடங்குளம் செய்திகள், மற்றும் அணு உலைக்கு எதிரான பல முகநூல்
பக்கங்களில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இந்த செய்தியை கொண்டு
சேர்ப்போம்) நம்மாலான பொருளுதவியை செய்து, துவண்டு போய் நிற்கும் கெபிஸ்டனுக்கு
ஆதரவாக நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.இது களத்தில் நின்று போராடும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய சமூக கடமையும் கூட!
அணுஉலைக்கு
ஆதரவாக அரசின் எலும்புத்துண்டுகளுக்கு வாலை ஆட்டும் அத்தனை ஜந்துக்களுக்கும் நாம்
சொல்ல வேண்டியது,அணு உலை எதிர்ப்பு போராளிகள் ஒன்றும் தனி நபர்கள் அல்ல. அவர்கள்
எங்கள் சொந்த அண்ணன் தம்பிகள். அவர்களுக்கோ அவர்கள் பொருட்களுக்கோ சேதம் விளைவித்தால்,
எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்துவிட்டு அமைதியாக இருப்போம் என்று எண்ணிவிட
வேண்டாம்.அவர்களோடு அனைத்து வகையிலும் உறுதுணையாய் நாங்கள் இருக்கிறோம் என்பதையும்
சேர்த்தே பதிவு செய்வோம்.
ஒடுக்கப்பட்ட
மக்களின் குரலாக இடிந்தகரை மண்ணில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை வலுவாக செய்து
வரும் அத்தனை அண்ணன்மார்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தின் இருந்து சொல்லும் ஆத்மார்த்த
நன்றிகளோடு, உங்களுக்கு உறுதுணையாய் எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில்
வலுவாக பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்!
அணு உலைக்கு
எதிரான மக்கள் போராட்டத்தில் நிற்கும் அனைவருக்கும், நல்ல உடல் சுக ஆரோக்கியத்தையும்,இன்னும்
அதீத மன உறுதியையும் தர வேண்டும் என்றும்,எவ்வித அசம்பாவிதங்களோ,உயிரிழப்புகளோ மீண்டும் ஒருமுறை,அந்த மண்ணில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும்,இறை நம்பிக்கை
உள்ளவர்கள் தங்கள் பிரார்த்தனைகளில் வேண்டிக் கொள்வோம்!
குறிப்பு:
கெபிஸ்டனுக்கான
பொருளதவிகளை அண்ணன் உதயகுமார்/அண்ணன் சுந்தரராஜன்/அணு உலை போராட்ட குழுவில் உள்ள
யாராகிலும் ஒருவர் ஒருங்கிணைத்தால் நலமாக இருக்கும்!
அன்பின்
ஆழத்தில்
ஆன்டனி வளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக