வியாழன், 3 ஏப்ரல், 2014

முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ்!


அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த,முன்னாள் டிஜிபி அய்யா நடராஜ் அவர்களின் பணி சிறப்பாகவே இருந்தது!

தமிழக முன்னாள் டி.ஜி.பி அடிமைகள் திமுக வில் சேர்ந்தாரோ அல்லது வேறு எந்த கட்சியில் சேர்ந்தாரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.

டிஜிபி நடராஜ் அவர்களின் காவல்துறை பணி ஓய்வுக்கு பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது!

ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின்னரும்,அவருக்கு அரசுப் பணியில் நீடிக்க வாய்ப்புண்டா என்றால் கட்டாயம் உண்டு. இந்தியாவிலும் சரி, இந்திய மாநிலங்களிலும் சரி, பணி ஓய்வு வயதைத் தாண்டிய பின்பும் கூட, பத்து பதினைந்து ஆண்டுகள் அரசுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றும் பலரை நாம் அறிவோம்.

அரசாங்கத்தில் அதற்கான சிறப்பு வழிமுறைகள் இருக்கிறது!

உதாரணமாக மாநில அரசில் பணி மூப்பு வயது 58 என்றும், மத்திய அரசில் பணி மூப்பு வயது 60 என்றும் இருக்கின்ற இந்த நேரத்திலும்,அரசின் அனுமதி பெற்று அல்லது ஒப்புதலோடு. எழுபது வயது வரை அரசுப் பணியில், நம் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆக நடராஜ் அவர்களின் பணி ஓய்வுக்கு பின்னர்,அவருக்கு வழங்கப்பட்ட அரசு பணியாளர் தேர்வு மையத்தின் தலைவர் பதவி என்பது விசித்திரமான அல்லது இது வரை எவருமே வகிக்காத பதவி ஒன்றும் அல்ல.

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறதா? அப்படி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் ஏன் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது,அதில் இருக்கும் அரசியல் என்ன என்பதெல்லாம் கட்டாயம் விவாதத்துக்கு உட்பட்டது என்பதை மறுக்க இயலாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் இருந்த, நடராஜ் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது, சிறப்பாக செயல்பட்டாரா என்றெல்லாம் விவாதித்தால்,
கட்டாயம் அவரது பணி மிக சிறப்பாகவே இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது.

அவர் தலைவராக வந்த பின்பு தான், தேர்வு முடிவுகள் ஒரு சில வாரங்களிலும்,அதற்கான விடைகள் இணையத்திலும்,தேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு சில வாரங்களிலேயே நேர்காணல் நடத்தி,பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. இந்த பணிகள் எல்லாம் மிக மிக வேகமாக நடை பெற்றன என்பதை அரசு தேர்வுகள் எழுதும் பலரும் அறிவார்கள்.மிக முக்கியமாக அவர் கால கட்டத்தில், அனைத்து தேர்வு முறைகளிலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.

அரசு தேர்வில் உள்ள பல விடயங்களை, சிக்கல்களை எளிதாக்கினார், உண்மையில் சொல்லப்போனால்,அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் பலருக்கு, நடராஜ் அவர்கள் மீது கடுமையான கோபமும்,கடுப்பும் உண்டு என்பதை மறுக்க இயலாது. காரணம் தூங்கி வழியும் பல அரசு அதிகாரிகளை துரிதப் படுத்தி வேலை வாங்கினார்! அந்த வகையில் அவருக்கு எதிராக ஒரு குழுவே உருவாகியது என்பதை பலர் அறிவார்கள்.

ஒன்றும் வேண்டாம்.

நடராஜ் அவர்கள் தலைவராக இருந்த போது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டுக்கும், தற்போது புதிதாய் தலைவாராக் நியமிக்கப்பட்டு இருக்கும்,
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற, தமிழ்நாடு அரசு வழக்குரைஞராகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடையாணை வாங்க கடுமையாக முயற்சித்த வருமான,நகைச்சுவை நாயகன் வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் அவர்களின் செயல்பாட்டுக்கும்,உள்ள வித்தியாசத்தையும், கடந்த சில வருடங்களாக அரசு தேர்வு எழுதி வரும் மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.அவர்கள் சொல்வார்கள் நடராஜ் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு துரிதமாகவும், அருமையாகவும் இருந்ததென்று.

இன்னும் சொல்லப் போனால் நடராஜ் அவர்கள் வந்த பிறகு தான் அரசுப் பணியாளர் தேர்வு முறையாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை.
தேர்வுகள் எழுதும் நம் நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்.

அவர் அடிமைகள் திமுகவில் சேர்ந்து விட்டார் என்றால் அதை விமர்சியுங்கள். அதற்காக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக அவர் இருந்த போது,அவரது செயல்பாடு சரி இல்லை என்று சிலர் பொத்தாம் பொதுவாக குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் சொல்வதை நம்மால் ஏற்க இயலாது. கடந்து நான்கு ஐந்து ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஓரளவுக்கு தகவல்கள் தெரியும் என்பதால் தேர்வு எழுதுபவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கருத்தை வலுவாக பதிவு செய்கிறேன்.

நன்றி!

ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக