செவ்வாய், 23 ஜூன், 2015

யோகா கிறிஸ்தவத்துக்கு முரணானது.விழிப்புணர்வு பதிவு 2


**எரேமியா 10: 2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்***
யோகாவை கிறிஸ்தவர்கள் செய்யலாமா என்ற நம்முடைய முந்தைய பதிவில், யோகாவுக்கும் இந்து மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்று ஒரு சாராரும்,அட இது வெறும் உடற்பயிற்சி தானே இதில் மதத்தை கலக்கலாமா என்றும், சிலர் திரும்ப திரும்ப பின்னூட்டம் இட்டுக் கொண்டே இருந்தார்கள்.
நகைச்சுவை என்னன்னா, சில கிறிஸ்தவ பெயர் அடையாளங்களைக் கொண்டவர்களும் கூட,வரிந்து கட்டிக் கொண்டு இந்து மதத்திற்கும், யோகாவிற்கும் சம்மந்தம் இல்லை என்று நம்மோடு வாதிட்டார்கள்.
திரும்ப திரும்ப இது வெறும் உடற்பயிற்சி என்றே பலர் சொன்னாலும் கூட,உண்மையில் அது இந்து மதத்தின் முக்கியமான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதையும்,இந்து மதத்தில் கடவுளை அடையும் ஒரு வழியாகவும், யோகாவுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் கட்டாயம் நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது என்பதையும்,யோகா குறித்து நாம் பல தளங்களில் வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து என்ன சொல்கின்றன என்பதும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது..
யோகா குறித்து, ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் இங்கே பதிகிறேன்.முழுக் கட்டுரையும் படிக்க வேண்டுமானால் அவரது தளத்தில் படித்துக் கொள்ளலாம்.
அவரது கட்டுரைக்கு ஆதாரமாக இந்து மதம், ரிக் வேதம் ,சுவாமி விவேகானந்தர் எழுதிய ராஜயோகா இன்னும் பல புத்தகங்களை ஆதாரமாக சொல்லி இருக்கிறார்.சந்தேகம் இருப்பவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
*****ஸ்ரீதர் சுப்ரமணியன்:
யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.
பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.
யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.*******
ஒருவேளை ஸ்ரீதர் சொல்வது போல பகவத் கீதையும்,இந்திய வேதங்களும் யோகா குறித்து எதுவும் பேசவில்லை என்றோ,அல்லது யோகா கடவுளை அடைவதற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சி என்று சொல்லவே இல்லை என்றும்,நீங்கள் வாதிட விரும்பினால், ஸ்ரீதர் சுப்பிரமணியம் அவர்களது வலைப்பூவில் வாதிடுங்கள்.
யோகா நல்லதா,கெட்டதா என்பதல்ல என் வாதம்.
என்னுடைய பதிவின் நோக்கமே பிற மதங்கள் செய்யும்/பின்பற்றும் ஆன்மீகப் பயிற்சியை,கிறிஸ்தவர்கள், பின்பற்றலாமா, கூடாதா என்பதே!
வேதாகமத்தின் படி கட்டாயம் இந்த பயிற்சியை செய்யக் கூடாது என்பதே நமது தீர்க்கமான முடிவு.
தேவன் கொடுத்த அற்புதமான உடலை, உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கடமை.ஆனால் அதே வேளையில் கிறிஸ்தவர்களின் ஆன்மீகப் பயிற்சிக்கு,கல்வாரி சிலுவையை மிஞ்சியது எதுவும் இல்லை.
உன் ஆயுசு நாட்கள் கர்த்தர் கரத்தில் இருக்கிறது.அன்றாடம் அரை மணி நேரமாவது கல்வாரி சிலுவையின் தியாகத்தை,வேதத்தை வாசித்து தியானிப்பதை விட,பெரிய ஆன்மீகப் பயிற்சி எதுவும் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுமா என்ன?
**உடற்பயிற்சி வேறு, ஆன்மீகப் பயிற்சி என்பது வேறு**
இந்த எல்லாக் கடவுளும் ஒண்ணு தான், இயேசுநாதர் தான் கடவுள் என்று எங்கே சொன்னார், இயேசுநாதர் ஒரு போராளி போன்ற வாதங்களைக் கொண்டு,கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் நம்மிடம் வாதிட வராதீர்கள்.
**கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக