செவ்வாய், 23 ஜூன், 2015

அனைத்துக்கும் தடை சரி தானா?


அனைத்துக்கும் தடை என்று போய்க் கொண்டே இருந்தால் இங்கே சாப்பிட எதுவும் கிடைக்காது! பரவா இல்லையா?
மாகியில் கலப்படம் அல்லது உடலுக்கு கெடுதலான ரசாயனம் என்று தடை பண்ணிட்டீங்க(அதற்குள் எவ்வளவு அரசியல் என்பது யார் கண்டார்) சரி தான்.
உணவுகளில் இருக்கும் தவறான விடயங்களை,சரியான நேரங்களில் கண்டு பிடிப்பதையும்,அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் விட்டு விட்டு, தடை என்று இப்படியே தடை பண்ணிட்டு போனால், நமக்கு சாப்பிட என்ன தான் மிஞ்சும்?
விளைய வைக்கும் நெல்லுக்கு மருந்து மற்றும் ரசாயன உரங்கள். சாப்பிடும் காய் கறிகள், பழங்கள் அனைத்தும் மருந்துகளாலும், ரசாயன உரங்களாலும், கார்பைடுகளாலும் கையாளப்பட்டே நமக்கு வந்து சேருகின்றன.தடை பண்ணலாமா?
தர்பூசணி போன்ற பல பழங்களுக்கு நிறத்திற்காக நேரடியாக ஊசி மருந்துகள் என்று பல புகார்கள்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கடுகு, மிளகு, பருப்பு வகைகளும் கலப்படமே.மசாலா மற்றும் மஞ்சள் தூள் என்று அனைத்து தூள்களும் அப்படியே.
நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி மற்றும் இறைச்சிகள் ஊசி மருந்துகளாலே வளர்க்கப்படுகின்றன.
கடல் உணவுகளை சாப்பிடலாமா என்றால்,தொழிற்சாலை கழிவுகள் முதற்கொண்டு,அணு உலை கதிர்வீச்சு,மற்றும் தடை செய்யப்பட்ட பல பொருட்களை கரைக்கும் இடமாக தான் கடல் இருக்கிறது. மீன்களில் நச்சு?
பாலில் கலப்படம் மட்டுமா? அதிக பால் கறக்க வேண்டும் என்பதற்காகவே மாடுகளுக்கு பல வித ஊசிகள், மருந்துகள் என்று செயற்கையான பல வைத்தியங்கள்.மாடுகள் சாப்பிடும் செடிகள், கொடிகள் அனைத்துக்கும் ஏற்கனவே பூச்சுக் கொல்லி மருந்துகள் அடிச்சாச்சு.
நாம் குடிக்கும் குடிநீர் சுத்தமானதா? வெளியே உணவகங்களில் நாம் உண்ணும் உணவுகள் தரமானதா?
எந்த கலப்படமும் இல்லை என்று உறுதியாகக் கூற இயலுமா? பல வியாதிகளை உருவாக்கும், நிறமூட்டிகள் மற்றும் மணமூட்டிகளை பயன்படுத்தாமல் இருக்கிறார்களா? உணவகங்களின் சமையலறைகள் சுத்தமாக இருக்கின்றனவா?பார்த்தால் சாப்பிடவே முடியாது என்கிறார்கள்.
ஆக எல்லாவற்றுக்கும் தடை என்றால் இங்கே என்ன தான் மிஞ்சும்?
குளிர்பானங்கள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் உடலுக்கு கெடுதி, மாகி போன்ற துரித உணவுகள் உடலுக்கு கெடுதி.எங்க பாட்டி கால சமையல் முறை தான் சிறந்தது,அது போலவே நாமும் மாறுவோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால் அது நடைமுறை சாத்தியமா?
காலங்கள் வெவ்வேறு.பாட்டி காலம் என்பது கூட்டு குடும்ப காலம். அதெல்லாம் மலையேறி போயாச்சு.இன்றோ கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் சூழல், இரண்டு மூன்று குழந்தைகள், உதவிக்கு எவரும் இல்லாத பெரு நகரத்து சூழல்,இங்கே பாட்டி சமையல் எல்லாம் சாத்தியமா?
வெளிநாடுகளிலும் அனைத்து குளிர்பானங்களைப் பயன் படுத்து கிறார்கள். வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே உண்கிறார்கள்.துரித உணவகங்கள் ஏராளம் அங்கு உண்டு.வார இறுதியில் வணிக வளாகங்களுக்கு சென்று பார்த்தால், அவர்கள் வாங்கும் பொருட்கள் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தான்.
எந்திரமயமான உலக சூழலில், உதவிக்கு எவரும் இல்லாத தனிக் குடும்ப வாழ்வியல் முறைகளில், இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலில்,நேரமின்மை சிக்கல்களில் துரித உணவுகளை தடை செய்வது சரியா? சாத்தியமா?
என்னங்க பொறுப்பில்லாமல் பேசுறீங்க? துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் தான் அனைத்து உடல் உபாதைகளும் என்றால்,வெள்ளைக்காரன் அம்புட்டு பயலும் அம்பது வயசுக்குள்ள போய் சேரணும். ஆனால் வெளிநாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கிச் செல்லும் எண்பது வயது தாத்தா பாட்டிமார் களை அதிகம் பார்த்ததுண்டு.
மாகி இல்லாவிட்டால் மோடி என்ற பெயரில் ஏதாவது நூடுல்ஸ் வரலாம், அதானி என்ற பெயரில் நூடுல்ஸ் வரலாம் என்பது தான் எதார்த்தம். அவ்வளவு தான்.
சரி என்ன தான் தீர்வு?
நம் உணவுக் கட்டுப்பாட்டு துறை,இங்குள்ள உணவுப் பொருட்களின் தரத்தை சரி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குறைந்தால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்குமானால் கடுமையான அபராதம்( வெளி நாடுகளைப் போல)விதிக்க வேண்டும். எதற்கும் ஒத்து வரவில்லையென்றால் வேண்டுமானால் கடைசியாக மூடுவிழா நடத்தலாம்.
வெளிநாடுகளில் உணவுக் கட்டுப்பாட்டு துறை மிக மிக சரியாக செயல்படுகின்றன.உணவு விடயத்தில் மிகக் கவனமாக இருக்கும் உலக பல நாடுகள்,உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் உணவில்/ குளிர்பானங்களில் இருக்குமென்றால், குளிர்பானங்களை அந்தந்த நாடுகளில் அனுமதிக்குமா? கட்டாயம் இல்லை.அப்படியானால் நாம் விளங்கிக் கொள்வது அங்குள்ள குளிர்பானத்தின் தரம் வேறு. இங்குள்ள தரம் வேறு.
உணவின் தரத்துக்கு அவர்கள் வைத்திருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அபராதங்கள் கடுமையானவை.ஆகவே அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது.
நாமும் கூட விதிகளையும்,கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் கடுமையாக்காமல்,உணவில் கூட அரசியல் லாப நட்டங்களை மட்டுமே கணக்குப் பார்ப்பதால் தான் இங்கே சிக்கல்கள்.
வெளிநாடுகளில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுத்துறை,அங்குள்ள உணவகங்களை அடிக்கடி ஆய்வு செய்யும் பல நிகழ்வுகளை நான் நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். அப்படியான அடிக்கடி நிகழ்வுகளை நம்மூரில் நீங்கள் பார்த்ததுண்டா? அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நீங்கள் கேள்விப்பட்டு இருக்க சின்னதா ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். அவ்வளவு தான்.
கோக் குளிர்பானம் கழிவறைகள் கழுவத் தான் என்று பலர் பகிர்கிறார்கள். மேற்கத்தியர்களும் கழிவறை கழுவும் கோக்கைத் தான் எவ்வித புரிதலும் இன்று குடிக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?
பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் நேரம் நெருக்கடியான வாழ்க்கை சூழலில் துரித உணவகங்கள் மற்றும் உணவுகள் தவிர்க்க முடியாதவை.பாட்டி சமையல் முறைகளுக்கு வாய்ப்பே இல்லை. ஆகவே தீர்வு எதுவாக இருக்க முடியும் என்றால், கூடுமானவரை தரத்தை சரி செய்வது தான்.
அட நாங்க சொல்வது போல பாட்டி சமையல் முறைகளை காது கொடுத்து கேட்காவிட்டால்,துரித உணவுகளை சாப்பிட்டு வியாதிகளை இலவசமாய் வாங்கிக் கொண்டு,மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்பது சரியான பதிலாக இருக்க முடியாது.
அனைத்தும் தரமாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கான அரிசியை நாம் தான் விளைய வைக்க வேண்டும், நமக்கான காய்கறிகளை நம் வீட்டு தோட்டத்தில் தான் விளைய வைக்க வேண்டும், நம் வீட்டு கிணற்றில் தான் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கான இறைச்சிக்கான கோழிகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.நமக்கான பால் தேவைக்கு நாம் தான் மாடு வளர்க்க வேண்டும். நமக்கான தானியங்களை நாம் தான் விளைய வைக்க வேண்டும்.
அது சாத்தியம் இல்லாத இல்லாத பட்சத்தில், வெளியே இருந்து நாம் வாங்கும் உணவு பொருட்கள் ஓரளவுக்கு தரமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றால்,அதற்கு காரணம் நம் உணவுக் கட்டுப் பாட்டு துறை அல்லது அரசு மீதான மிகக் சிறிய நம்பிக்கை தான்.ஆக சரி செய்ய வேண்டிய முக்கிய இடம் இந்த தரக்கட்டுப்பாட்டு துறை தான்.
கட்டாயம் குளிர்பானங்களுக்கும்,பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், துரித உணவுகளுக்கும்ஆதரவான பதிவோ, அல்லது பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் தான் சரியான தீர்வோ என்பதல்ல பதிவின் நோக்கம்.உணவுத் தர கட்டுப்பாட்டு துறை சரியாக செயல்பட வேண்டும். மட்டுமல்ல தற்போதைய சூழலில் இது தான் எதார்த்தம், சாத்தியம் என்பதற்காக எழுதப்பட்ட பதிவு. மாற்றுக் கருத்துகள் தாராளமாய் வரவேற்கப்படுகின்றன.
**நாம் எதிர்க்கும் அணு உலை போன்ற மற்ற விடயங்களோடு இந்த பதிவை ஒப்பிடுவது சரியாக இருக்க முடியாது.**
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக