செவ்வாய், 23 ஜூன், 2015

கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா? விழிப்புணர்வு பதிவு 1



யோகா நல்லது தானே! அது ஒரு உடற்பயிற்சி தானே! அதை செய்வதில் என்ன தவறு? மக்களுக்கு எவ்வகையிலாவது நன்மை பயக்குமாயின்,மன நிம்மதி தருமாயின் அந்த உடற்பயிற்சியை எல்லோரும் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?மதங்களை இதில் இணைக்கலாமா என்றெல்லாம் மேலோட்டமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். யோகா என்பது இந்து மதத்தின் மிக தீர்க்கமான தியான முறை.அதில் சொல்லப்படும் ஆசனங்கள் ஒவ்வொன்றும் இந்து மத கடவுள்களை வழிபடும் வழிமுறைகளே என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.சூரிய நமஸ்காரம் தொடங்கி...
யோகா உருவான கதையை வாழும் கலை ரவிஷங்கரின் இணைய தளத்தில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
யோகாவின் குருவாகிய பதஞ்சலி என்னும் ஆதிசேஷன் யார் என்றால்,ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பு தான் ஆதிசேஷன் என்கிறார்கள். ஆக யோகா உருவான கதையில் இருந்தே அது கிறிஸ்தவத்துக்கு முரணானது என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
சுமார் கி.மு. 150 இல் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம், நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு.
ஆனால் பின்னாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.
மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும்,அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து.
ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.
எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு, வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என்கிறார்கள் சிலர்.அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.
அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது.
இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.
சில நட்சத்திர கிறிஸ்தவ ஊழியர்களும், சில அருட்தந்தையர் களும்,சில பாதிரியார்களும்,கொஞ்சம் கிறிஸ்தவர்களும் கூட யோகாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாமே?
அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, புத்தகங்களில் தேடி உண்மை எது என்பதைக் கண்டுபிடிக்க ஆர்வமில்லை. கால்டுவெல்லும், ரேனியஸும், ஏமி கார்மைக்கேலும், வில்லியம் கேரியும் வற்புறுத்தாததை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற உணர்வுகூட இல்லை. சிலர் விழிப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?
எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும் என்பதை வேதத்தை ஆதாரமாகக் கொண்டே கிறிஸ்தவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
எரேமியா 10-ஐ முழுமையாக வாசிக்கலாம்.
எரேமியா 10:2 இப்படியாக சொல்கிறது. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்.
கிறிஸ்தவர்களே! இந்த யோகா மாய்மாலங்களில் விழுந்து விடாதீர்கள். மிகவும் எச்சரிக்கை.
**நன்றி டாக்டர் பேதுரு மற்றும் சகோதரர் பெஞ்சமின் தாமஸ்.
**கிறிஸ்தவ நண்பகளுக்கான பதிவு**

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக