திங்கள், 23 பிப்ரவரி, 2015

சீக்கிரம் வாருங்கள் சகாயம் சார்!


சீக்கிரம் வாருங்கள் சகாயம் சார்!
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களால் நடத்தப்படும்,கிரானைட் ஊழல் அதிரடி விசாரணை செய்திகளை பார்க்கும் போது,மனதுக்கு ரொம்ப மகிழ்வா இருக்கு.
மனசாட்சியுள்ள மனிதர்களும்,அதிகாரிகளும் இந்த மண்ணில் இன்னும் மிச்சம் இருக்கிறார்களே என்று.

கிரானைட் ஊழலை,வெறும் பொருளாதார இழப்பு என்று மட்டுமே பார்க்காமல்,இயற்கை அழிப்பு,மலைக் குன்றுகள்,ஆறு, குளம், கண்மாய்கள் சிதைப்பு, குவாரிகளுக்குள் நடந்த கொடூர படுகொலைகள் என்று ஒரு மர்ம நாவல் போலவே விசாரணையை முன்னெடுத்து செல்வது சிறப்பு.
சகாயம் அவர்களுக்கு பெரிய காவல்துறை பாதுகாப்புகள் இருந்தது போல தெரியவில்லை.வெட்டி ஆபீசர் சுப்ரமணியசாமிக்கு கூட,கருப்புபூனை படை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் பல லட்சம் கோடி முறைகேடுகளை விசாரிக்கிறார்,பெரும் பெரும் பண முதலைகளின் அட்டூழியங்களை சந்தி சிரிக்க வைக்கப் போகிறார், எனும் போது,என்னென்ன மிரட்டல்கள்,உயிர் ஆபத்துகள் எல்லாம் அவருக்கு இருக்கும் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு,அவருக்கு அதீத பாதுகாப்பை அரசு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் இங்கே அரசும்,அரசு அதிகாரிகளுமே திருடர்களுக்கு உடந்தை மற்றும் திருட்டு/ஊழல் பணத்தில் பங்கு எனும் போது,இவர்களிடம் என்ன பெரிய பாதுகாப்பை எதிர்பார்த்து விட முடியும்?.
ஒற்றை மனிதனாக களத்தை கலக்கும்,இயற்கையின் எதிரிகளுக்கு கிலி ஏற்படுத்தும் சகாயம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை சகாயம் சார் !
கிரானைட் வேட்டையை சீக்கிரம் முடிச்சுட்டு,அப்படியே எங்கள் தென்மாவட்ட கடற்கரைகளை,நீண்ட காலமாக கற்பழித்து,களேபரம் செய்யும் காமுகர்களையும்,அயோக்கியர்களையும் களை எடுக்க சீக்கிரம் வாருங்கள்.
தாது மணல் கொள்ளை என்ற பெயரில்,கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக,எங்கள் கடற்தாயின் மீது நடத்தப்படும் வன்புணர்வை தடுத்து நிறுத்த,உங்களைப் போன்ற வேட்டைக்காரர்களால் தான் முடியும்.
என்னைப் போன்ற ஒரு அதிகாரியால் இதைத் தடுக்க முடியும் என்று நம்பும் நீங்கள் ஏன்,ஒட்டு மொத்த நெய்தல் மக்களால் இதை செய்திருக்க முடியாது என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம்.நியாயம் தான்.நெய்தல் மக்களால் கூட இந்த வன்புணர்வை தடுத்திருக்க முடியும்.ஆனால் நெய்தலின் குழந்தையாய் இருந்து கொண்டே,கடல் தாய்க்கு துரோகம் செய்யும் துரோகிகளாலும்,காசுக்கு விலையாய் போன அடிமாடுகளாலும், உழைக்காமல் அடுத்தவனின் ஊழல் காசில் கறி வளர்க்கும் மானம் கெட்ட சில ஜென்மங்களாலும், ஒற்றுமையின்மையாலும் தான் அது இயலாமல் போனது என்பதை வருத்தத்துடன் பதிவு பண்ண வேண்டி இருக்கு சகாயம் சார்.
நெய்தல் நிலத்தை காத்திட சீக்கிரம் வாருங்கள்.
ஆவலாய் காத்து நிற்கிறோம் சகாயம் சார்!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக