சனி, 21 பிப்ரவரி, 2015

வாழ்வியல் கணக்கீடு


இந்த வாழ்வியல் கணக்கீடு ஓரளவுக்கு சரியா வருமா?
கல்யாணத்துக்கு பிறகு, மனைவியின் எதிர்பார்ப்புகளையும் சரி,தாய் தந்தையரின் எதிர்பார்ப்புகளையும் சரி, நூறு சதவிகிதம் பூர்த்தி செய்வதென்பது இயலாத ஒன்று.
காரணம் சூழல் வேறு, புரிதல்கள் வெவ்வேறு,கூடுதல் பொறுப்புகள்.
சிக்கல் எங்க வருகிறதென்றால்,அம்மாகிட்டயும் நூறு மார்க் வாங்கணும், பொண்டாட்டி கிட்டயும் நூறு மார்க் வாங்க வேண்டும் என்று சிலர் மல்லுக் கட்டி,முடியாத பட்சத்தில் மன உளைச்சல்.
இரு தரப்பிடமும் நூறு, நூறு மார்க் என்பது அரிதிலும் அரிது.சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம்.விதி விலக்குகள் இருக்கலாம்.
சில ஆட்கள் அம்மா பக்கம் மட்டும் நூறு மார்க் வாங்குனா போதும், மனைவியிடம் மார்க்கே வாங்கலைன்னாலும் பரவாயில்லை என்று தவறா எண்ணிக் கொண்டு, கல்யாணத்துக்கு பிறகும் அம்மா பக்கம் மட்டுமே நிற்க நினைக்கிறான்.அது வேலைக்கே ஆகாது!அதுக்கு கல்யாணமே பண்ணாம இருந்திருக்கணும்:)
இன்னும் சிலர், மனைவி வந்த பிறகு,படிக்க வெச்சு ஆளாக்கின பெத்த,அப்பன் ஆத்தாளை மறந்து பொண்டாட்டி தாசர்களாக மாறி விடுகிறார்கள்.மனைவி என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டிகிட்டு, அப்பன் ஆத்தாளை மறப்பதைப் போன்ற நன்றி கெட்ட தனம் உலகத்துல வேற எதுவும் இருக்க முடியாது. அது பெரிய சாபம்.
சரி, அப்ப என்ன தான் செய்யலாம்?
அம்மா,மனைவி இந்த இரண்டு பேரிடம் இருந்தும், ஒரு அறுபதுல இருந்து எழுபது மார்க் மட்டுமே இலக்காக வெச்சுகிட்டா போதும். இருநூறு மார்க்குக்கு, நூற்று இருபது அல்லது நூற்று நாற்பது மதிப்பெண் கணக்கு தான்.போதும். முதல் வகுப்பில் பாஸ்:)
என்னாகும்? சும்மா விடுவாங்களா?
நூறு சதவித திருப்தி இல்லாத இவிங்க,ரெண்டு பேருமே நம்மளை கண்டபடி அப்பப்போ நாலு திட்டு திட்டுவாங்க.வாங்கிக்க வேண்டியது தான்.திட்டு வாங்காத திருமண தம்பதிகளா:)
அம்மாமார் சொல்லுவாங்க,இந்த பய முன்னாடி மாதிரி இல்லை, மனைவி வந்ததுல இருந்து தான்,இந்த பய இப்படி ஆயிட்டான். மனைவியோ, உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு. ஹ..ஹா..ரெண்டு பேரோட திட்டுற ஆசையை நம்ம ஏன் கெடுப்பானேன்:)
இவிங்களோட வசவுகளுக்கு பயந்து,இவிங்க ரெண்டு பேர்கிட்டயும் நூறு மார்க் வாங்கணும்னு நெனச்சா,நம்மளோட தனி மனித சுதந்திரங்களை பறி கொடுத்து விட்டு,மனைவி மற்றும் பெற்றோரின் சந்தோசத்துக்காக மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
நமக்கான தனி மனித சுதந்திரத்தை,நமக்கு பிடித்த பொழுது போக்குகளை,நமக்கு பிடித்த நண்பர்களை சந்திப்பதை போன்றவற்றை எல்லாம் எப்ப தான் செய்வது?மனைவியைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் நாம் அவர்களோடு செலவிடுகிறோம் என்பது ஒரு முக்கிய கணக்கீடு.
நம்மை நாம் மகிழ்வாய் வைத்துக் கொள்ள,நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்கும் போது,அதற்காக சில வசுவுகளையும் மனைவியிடம் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்.வசவுகள் இல்லாத வாழ்க்கையா:)
ஆக மனைவி,குழந்தைகள்,பெற்றோர் மற்றும் நம் தனி மனித சந்தோஷங்கள் எல்லாவற்றையும்,ஓரளவுக்கு சமன் செய்யும் வாழ்க்கை முறையே சரியானதாக இருக்கும்.
எல்லாவற்றிலும் சரியாக இருந்து,எல்லோரையும் நூறு சதவிகிதம் திருப்தி படுத்த வேண்டுமென்றால், இந்த ஒரு வாழ்க்கை போதாது என்றே தோன்றுகிறது:) முடிந்த வரை முயற்சிக்கலாம்!
வாழ்க்கையின் வெற்றிக்கும்,மகிழ்ச்சிக்கும் இது தான் சூத்திரம் என்று அறுதி இட்டு சொல்ல முடியாது.ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் அவ்வளவு தான்.
***எனவே மூத்தவர்கள் ஆலோசனைகள் சொல்லலாம்:)
**உறவுகளின் சமநிலை என்ற ஒற்றை விடயத்தை மட்டும் முக்கிய தலைப்பாக எடுத்துக் கொண்டதால்,இறைத் தேடலுக்கான நேரம் பற்றியெல்லாம் இங்கே பேசவில்லை.
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக