சனி, 14 பிப்ரவரி, 2015

எதுக்கு சார் இந்த மேற்கத்திய கலாச்சாரம்?


எதுக்கு சார் இந்த மேற்கத்திய கலாச்சாரம்?
அன்னையர் தினம், தந்தையர் தினம், பெற்றோர் தினம்,மகளிர் தினம், காதலர் தினம்,குழந்தைகள் தினம் என்று,வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
ஏதோ பதினெட்டு வயதுக்கு மேல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிக சம்மந்தமோ,உறவுகளோ,சந்திப்புகளோ இல்லாத மேற்கத்தியர்கள்,தங்கள் தாயை சந்திக்க,தந்தையை சந்திக்க வருடத்தில் ஒருநாளை தேர்ந்தெடுத்து அன்னையர் தினம் தந்தையர் தினம் என்று கொண்டாடுகிறார்கள் என்றால் அது நியாயம்.
ஆனால் நாம் அப்படியா? பெற்றோர்களை நாம் அன்றாடம் மதிக்கிறோம், சந்திக்கிறோம், அடிக்கடி பேசிக் கொள்கிறோம்,கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்( அப்டியா?) நமக்கெல்லாம் ஆண்டு முழுவதுமே அன்னையர் தினமும், தந்தையர் தினமும் தானே! என்கிறார்கள் பலர்.
இப்படியே பெருமை பேசி பேசியே,நமக்கே தெரியாமல் வீணாப் போய்கிட்டு இருக்கிறோம் என்பதையும் ஏற்றுத் தானே ஆக வேண்டும். மறுக்க முடியுமா?
மேற்கத்தியர்கள் என்று மட்டுமல்ல, இன்றைக்கு நாம் எந்த அளவுக்கு பெற்றோர்களை அன்றாடம் மதிக்கிறோம்,அல்லது அந்த அன்பின் அளவு குறைந்து இருக்கிறது என்பதற்கு நம் ஊர்களில்,சிறு நகரங்களில், பெருநகரங்களில் இருக்கும் முதியோர் இல்லங்களே சாட்சி.
தூத்துக்குடியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று இருந்த போது, அந்த இல்லத்தை கவனித்துக் கொள்ளும் அருட் கன்னியரிடம் கேட்டேன், இங்கே இருக்கும் முதியவர்கள் எல்லோருமே ஆதரவற்றவர்களா,வசதி அற்றவர்களா என்று.
அவர்கள் சொன்னார்கள் இங்கே பல தரப்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். நல்ல வசதியான வீட்டுப் பெற்றோர்களும் இருக்கிறார்கள். மருமகளுக்கும், மாமியார், மாமனாருக்கும் ஒத்துப் போவதில்லை, அல்லது இவர்களை தங்களால் கவனிக்க இயலாது என்கிறார்கள்.ஆக பிள்ளைகள் அந்த பெற்றோர்களை இங்கே கொண்டு வந்து விடுகிறார்கள்,அவர்களைக் கவனித்துக் கொள்ள நாங்கள் மாதா மாதம் பணம் தந்து விடுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பெற்றோர்களின் மனம் படும் வேதனை அவர்களுக்கு புரிவதில்லை.
பிறந்த நாள்,திருமண நாள் போன்ற முக்கியமான சில தருணங்களில் அந்த வயதான தாத்தா பாட்டியிடம் நாங்கள் பேசும்போது, உங்கள் பிள்ளைகளை பார்க்க விரும்புகிறீர்களா, வர சொல்லட்டுமா என்று கேட்டால், சாகும் வரை நான் அவர்களை பார்க்க விரும்பவில்லை, செத்தாலும் நீங்கள் நீங்கள் அவர்களுக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார்கள், அப்படியானால் எந்த அளவுக்கு மனம் உடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்பதாக சொன்னார்.
ஆக அன்னையர் தினம்,தந்தையர் தினம், காதலர் தினமெல்லாம் மேற்கத்தியம் அது நமக்கு தேவை இல்லை என்றெல்லாம் இன்றைக்கு பேச இயலாது.காரணம் மேற்கத்தியம் பின்பற்றுகிற பெரும்பாலான விடயங்கள் இங்கேயும் வந்தாயிற்று.என்ன ஒன்று விகிதாச்சாரம் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம்.
ஆக தமிழனுக்கு எல்லா நாளும் அன்னையர் தினம் தான்,எல்லா நாளும் காதலர் தினம் தான்,உலகத்துக்கே அன்பை சொன்னவர்கள் தமிழர்கள் தான் போன்ற வியாக்கியானங்களை விட,இந்த மானுடத்தின் சிறப்பே அன்பைப் பகிர்வதும்,கொண்டாடுவதும்,அந்த மகிழ்வான தருணங்களை அசை போடுவதும் தானே.
எதோ ஒன்றை காரணம் காட்டி,இந்த விழாக்களை கொண்டாடிட்டு தான் போகட்டுமே!இந்த மானுடமும்,ஒட்டு மொத்த உலகமும் ஏங்குவதும், இயங்குவதும் இந்த அன்புக்காகவும்,அன்பாலும் தானே!
இது போன்ற விழாக்களை வருடத்தில் குறிப்பட்ட சில நாட்களை தேர்ந்தெடுத்து கொண்டாடுவதால்,சமூகத்துக்கு எந்த கேடும் ஏற்படப் போவதில்லையே! எந்த கலாச்சாரமாக இருந்தால் என்ன, அன்பை வெளிப்படுத்த,கொண்டாட இது போன்ற நல்ல தருணங்களை உருவாக்கும்,புதிய சூழல் விழாக்கள் எங்கிருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று தானே!
செல்லும் இடமெல்லாம் அன்பை விதைப்போம்!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக