செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஊழியத்தின் மீதான தொடர் குறைபாடுகளும், நம் இலக்கும்!




ஊழியத்தின் மீதான தொடர் குறைபாடுகளும், நம் இலக்கும்!
கிறிஸ்தவ ஊழியங்களில் அல்லது பிரபல ஊழியக்காரர்களின் மீதான குறைபாடுகளை தொடர்ந்து பலர் சொல்வதுண்டு.அதில் பெரும்பான்மை பொருளாதாரம் சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.பல விடயங்கள் மறுக்க இயலாதவை என்பதை அறிவேன்.ஆனால் அது குறித்து விவாதித்து, அவர்களுக்கு ஆதரவு,எதிர்ப்பு என்று வாதாடுவதில் நமக்கு எந்த நாட்டமும் இல்லை.
ஊழியத்தில் விழுந்து போகும் பலரை உதாரணமாக வைத்து பார்த்து,பேசிக் கொண்டிருந்தால்,நம் தனி மனித கிறிஸ்தவ ஓட்டம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகி விடும்.
ஆத்மீக ஜீவியத்தில் நம் இலக்கு என்ன, நம் உதாரண புருஷன் யார் என்பது தெளிவாகி விட்டால், சில்வண்டுகளைப் பார்த்து சிணுங்கிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை.
எவ்வளவு பெரிய சபை, எவ்வளவு பேர் கூடுகிறார்கள், மிக பிரமாண்டமான பாடல் குழு,அப்படி இப்படி என்று பிரமாண்டத்தின் மீது அப்படி ஒரு விதமான ஈர்ப்புள்ள மக்கள் இருக்கிறார்கள்.ஆனால் அடிப்படையில் தேவையானது ஒன்றே! அது ஒவ்வொரு மனிதனின் சுத்தமான இருதயமும்,அதில் கிறிஸ்துவினால் ஏற்படும் நல்ல மாற்றமும், அன்பும், சமாதானமும், தேவனுக்கான வைராக்கியமான வாழ்வும் தான்.
மாதம் பத்து லட்சம் சம்பளம்,கம்பனி கார், வீடு என்று சகல வசதிகளோடு வாழ்ந்த,ஒரு மிகப்பெரிய வெளிநாட்டு கார் உதிரிபாக நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த மனிதர் நமக்கு நல்ல நண்பர்.
காலையில் அலைபேசியில் அழைத்தால்,சென்னையில் என்பார், மதியம் அழைத்தால் டெல்லி என்பார்,மாலை அழைத்தால், பெங்களூர் விமான நிலையம் என்பார். ஆம் மிக பரபரப்பான மனிதர்.அவரது சிறந்த பணிக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.உள்ளூர் மட்டுமல்ல,அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள்.
அப்படி ஒருநாளில் அவரோடு உரையாடிய போது அவர் சொன்ன சீன நாட்டு அனுபவங்கள் தான்,நான் ஏற்கனவே எழுதி முப்பதாயிரம் பேருக்கு மேல் முகநூலிலும்,பல இணைய தளங்களில் படித்தும் பகிர்ந்ததுமான “வல்லரசு சீனா” கட்டுரை.
திடீரென்று ஒருநாள் என்னிடம் சொன்னார்,சகோதரன் நான் என்னுடைய வேலையை ராஜினமா செய்யப் போகிறேன்.அப்படியா? ஏன் என்னாச்சு சகோதரன்?இல்ல ஆண்டவருக்காய் முழு நேர ஊழியம் செய்யப்போறேன் என்றார். பக்குன்னு இருந்துச்சு எனக்கு.வயது நாற்பத்து ஐந்து தான்.
இயல்பான மனித மூளை கணக்கீட்டின் படி,இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் அவர் உழைத்தால்,குறைந்த பட்சம் இன்னும் பத்து கோடி ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்க முடியும்.ஆனால் வேண்டாம் என்கிறார்.
அவர் இந்த நிறுவனத்தில் ராஜினமா செய்கிறார் என்றதும்,சென்னை முருகப்பா குழுமம்,மாதம் பதினைந்து லட்சம் சம்பளம் தருவதற்கு தயாராய் இருந்தது, இன்று வரை அழைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வேண்டாம் என்று இருக்கிறார். வேலையை விட்டு ஆறுமாதம் ஆகிறது.
என்ன எதுவும் சபை நடத்தப் போகிறீர்களா?இல்லை சகோதரன். இளைஞர்களுக்கு கிறிஸ்தவ ஊழிய பயிற்சி வகுப்பு நடத்தும், ஊழியத்தை செய்யப் போகிறேன்.மற்றபடி சபை கட்டும் ஊழியம் ஆண்டவர் எனக்கு தரவில்லை என்றார்.
இவர் இப்படி என்றால் இவரது சகோதரர், எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அவரோ ஊழியம் செய்தால்,நான் வட மாநிலங்களில் மிஷனரி ஊழியம் தான் செய்வேன் என்று,பீகாரில் கடினமான ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறார்.பீகார் போன்ற வட மாநில மிஷனரி ஊழியம் என்பது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இருவரும் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல.மாறாக ஒரு பாரம்பரிய இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,பின்பு இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்.
அதைப் போலவே, நான் செல்லும் சபைக்கு வரும் ஒரு சகோதரன், மாதம் ஐந்தாறு லட்சத்துக்கு குறையாமல் சம்பளம் வாங்குவார், பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் நல்லதொரு பொறுப்பில் பணியாற்றுகிறார். எம்.டெக் பட்டதாரி,நாற்பத்து ஐந்து வயதுக்காரர். அவரும் இரண்டு மாதங்களுக்கு முன்,விரும்பியே தன வேலையை ராஜினமா செய்து விட்டு முழு நேர ஊழியம் செய்ய கிளம்பிட்டார்.
இவர்களின் ஊழியங்களும், இப்படிப்பட்ட எனக்கு நெருக்கமான சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் தான் கிறிஸ்தவத்தில் எனக்கான ஊக்கமருந்துகள்.கிறிஸ்துவின் மீதான இவர்களின் வைராக்கியம்,என்னை இன்னும் அதிகமாய் சிந்திக்க வைக்கின்றன.
கிறிஸ்தவ ஊழியத்தைப் பொறுத்தவரையில்,தனி மனிதர்களின் நல்ல விடயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்.அதற்காக அவர்களின் தவறுகளை ஏற்பதாக அர்த்தம் இல்லை.
தவறானவர்களையும், அதுபோலவே பலரது தவறான போதனைகளையும் பகுத்தறிந்து புறக்கணிப்பு செய்கிறேன். அவர்களிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவதும் இல்லை.
அவர்களோடு அக்கப்போர் நடத்துவதை விட,அந்த நேரத்தில் கிறிஸ்துவின் மேலான அன்பை இன்னும்,அதிகமாய் நாடுவதற்கான வழிமுறைகளை கற்றுக் கொள்வதும்,சரியான ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதும், முன்னேறுவதுமே நமது ஆர்வம்.
தனிமனிதர்களைப் பார்த்து விழுந்து போகாதீர்கள்.எல்லாவற்றிலும் இன்னும் இயேசுவை அதிகமாய் பற்றிக் கொள்வதற்கான, வழிமுறைகளை நோக்கியே நமது தாகம் இருக்கட்டும்!
எது சரி எது தவறு என்று வாதிட வரவில்லை.ஆனால் நம் தனிப்பட்ட கிறிஸ்தவ ஜீவியத்தின் முன்னேற்றத்திற்கு,எது முக்கியம் என்பதே நான் சொல்ல வரும் செய்தி! நம் இலக்கும், ஓட்டமும்,சரியான ஒப்பீடுகளும் தான் மிக முக்கியம்!
***கிறிஸ்தவர்களுக்கான பதிவு***
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக