சனி, 21 பிப்ரவரி, 2015

சூப்பர் சிங்கர்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்து மக்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்காங்க போலேயே!
விடைகொடு எங்கள் நாடே என்ற பாடலை, ஜெசிக்கா பாடக் கேட்டதும் உணர்ச்சிப் பிளம்பால்,உங்கள் உள்ளங்களில் எழுந்த உணர்ச்சி குவியலை மட்டும் அப்படியே தேக்கி வையுங்கள். தேவைப்படும் நேரங்களிளெல்லாம் அந்த வலியையும், உணர்ச்சியையும் களத்துக்கு கொண்டு வாருங்கள்.

ஈழ விடுதலை எனக்கான விடுதலை, என் இனத்துக்கான விடுதலை என்ற ஒற்றை செய்தியை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்!புலம் பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் ஜெசிக்கா குடும்பம்,முதல் பரிசான வீட்டை கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்ற பொருளாதார சூழலில் இல்லை.
நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம்,திறமையான பலரை இசை உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதும்,பின்னணி பாடகர்களாக உருவெடுக்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதும் தானே.ஜெசிக்காவுக்கு அந்த வாய்ப்பு கட்டாயம் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகவே வெற்றி தான்.எனவே கடுமையான விவாதங்கள் தேவையற்றவை!
வாழ்த்துகள் ஜெசிக்கா!
தமிழர் மட்டும் தான் பாடணுமா, ஏன் வேறு மாநிலத்தவர் பாடக் கூடாதா, திறமை இருக்கும் யார் வேண்டுமென்றாலும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் உங்களுக்கு என்ன சிக்கல் என்றெல்லாம் பல கேள்விகளை நியாயவான்கள் பலர் எழுப்புவார்கள்.நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இது “தமிழகத்தின்” செல்லக் குரலுக்கான தேடல் அல்ல,மாறாக வெறுமனே “செல்லக் குரலுக்கான தேடல்” மட்டுமே என்று.விஜய் தொலைக்காட்சி தங்களின் கவர்ச்சியான வியாபாரத்துக்காக “தமிழகத்தின்” என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டு நம்மை மடையனாக்குவார்கள். அவ்வளவே!
தனியார் தொலைக்காட்சிகளைப் பொறுத்த வரையில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து மட்டுமே சிந்திக்க கூடியவர்கள், அங்கே எல்லோரும் விரும்பும் நியாயம், தர்மம், தமிழ் உணர்வு எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது!
தமிழன்/தமிழச்சி வெல்ல வேண்டும் என்று,இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாய்,ஒரு இசை நிகழ்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,கொஞ்சம் மாற்று அரசியல்,நல்ல அரசியல் தலைவர்கள்,மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்பு, நல்ல திட்டங்களுக்கு ஆதரவு என்று சிந்திப்பதிலும், ஆதரவளிப்பதிலும், வாக்களிப்பதிலும் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!
அரசியல் வெற்றி இல்லாமல்,சரியான அரசியல் தலைமைகள் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியம் இல்லை!
ஈழமே ஒரு மாபெரும் அரசியல் தானே!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக