புதன், 18 பிப்ரவரி, 2015

இயல்பான மனிதர்கள்!


இயல்பான மனிதர்கள்!
ஒபாமாவே ஓட்டுப் பட வந்தாலும், ராசா ஓட்டுப் போடுறதுக்கு முன்னால,ஒங்க அடையாள அட்டையைக் காண்பியுங்கள் என்று இயல்பாக கேட்கும் தேர்தல் அதிகாரிகள்.நீ எப்படி என்னைப் பார்த்து அடையாள அட்டை கேட்கலாம் என்று முறைக்காமல், அங்கயும் ஒரு காமெடியை குடுத்து சிரிக்க வைக்கும் ஒபமா என்று பார்க்கவே இயல்பா இருக்கு.ஏற்ற தாழ்வுகள் ஏதும் இன்றி எல்லாதரப்பு மக்களோடும் இயல்பாய் பேசும் ஒரு தன்மை. காரணம் இவன் என் நாட்டின் குடிமகன் என்ற மரியாதை.
ஜெர்மனியில் காவல்துறை அதிகாரிகளை நக்கல் நையாண்டி செய்யும் இளைஞர்கள் பலரைப் பார்க்க முடிந்தது.இவிங்க நக்கல் பண்ணுறானுங்க என்று தெரிந்தாலும், அவிங்களும் சிரிச்சுகிட்டே எதிர் நக்கல் பண்ணுற சுவராஸ்யம் சொல்லி மாளாது. கடமையில் இருந்தாலும் மக்களோடு இயல்பாய் பேசுகிறார்கள்.
விசா குறித்த விசாரணைகளுக்கோ, அல்லது நாம் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிவிக்கவோ அரசு அலுவலகங்களுக்கு போனால், எந்த வித விதிமுறைகள்,நடைமுறைகளும் இல்லாமல் உயர் அதிகாரிகள் வரை எளிதாய் சந்திக்கலாம்,இயல்பாய் பேசலாம். ஏய் யாரைக் கேட்டு உள்ளே வந்தாய் போன்ற முறைப்புகள் இருக்காது. அய்யா இருக்காங்களா என்று வெளியே நிற்கும் பியூனிடம் எல்லாம் கேட்க வேண்டியதோ பம்ம வேண்டியதோ இல்லை.
மொத்தத்தில் வெள்ளைக்காரர்கள் வெளி இடங்களில் இயல்பாய் இருக்கிறார்கள். நான்கு யூரோ டிக்கட்டுக்கு, சில்லறை இல்லாமல் நூறு யூரோவை கையில் வைத்துக் கொண்டு, ஜெர்மானிய பாஷையும் தெரியாமல், மியூனிக் விமான நிலையத்தில் இருந்து, மியூனிக் நகரத்துக்கு உள்ளே போக ரயில் டிக்கட் எடுக்க நின்று கொண்டிருந்தேன்.
சில்லறை இல்லை என்று டிக்கட் கொடுப்பவர் சொல்ல, என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போது, சில்லரையும் மாத்தி, டிக்கட்டும் எடுத்து தந்து, கூடவே மியூனிக் ரயில் வரும் தண்டவாளம் வரை நம்மோடு வந்து, இறங்கும் நிறுத்தம் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி வழியனுப்பி வைத்த,ஜெர்மானிய அம்மையாரை வாழ்நாளில் மறக்க முடியாது. அந்தம்மாவுக்கு பத்து நிமிடம் நம்மால் வீண். அம்புட்டு நல்லவங்களா இருக்காய்ங்க:)
மக்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என்று பெரும்பான்மை இயல்பாய் இருக்கிறார்கள். விதி விலக்குகள் இருக்கலாம்.
இங்கே ஒரு காவலரிடம் கேலியாகப் பேசினால்,ஈகோ தலைக்கேறி, என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.கேலி பேசுறத விடுங்க, இயல்பாய் பேசுவதே இங்கு இயலாத காரியம். காவல் நிலையம் சென்றால் உட்கார கூட இடம் தர மாட்டார்கள், மரியாதையா பேச மாட்டார்கள். தெனாவட்டு தலைக்கேறி நிற்கும்.
மோடியிடமோ, ஜெயலலிதாவிடமோ(மோடி,ஜெயலலிதாவை விடுங்க, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கூட)ஓட்டுப் போட உங்கள் அடையாள அட்டையைக் காண்பியுங்கள் என்று கேட்க அதிகாரிகளுக்கும் துணிச்சல் இருக்காது. அதையும் மீறி கேட்டால், ஆளை விட்டு தூக்கும் அளவுக்கு வெறி கொண்ட ஆட்சியாளர்கள்.
இந்த ரசிக மனப்பான்மையில் இருந்தும்,வாழ்க வாழ்க கோஷத்தில் இருந்தும்,அதிகார போதை மற்றும் தெனாவட்டில் இருந்தும் இயல்பான நிலைக்கு என்று மாறும் இந்தியாவும், தமிழ்நாடும்?
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக