சனி, 21 பிப்ரவரி, 2015

எது பாசிசம்?


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.என்னுடைய முகநூல் பக்கத்தில் இது குறித்த பல செய்திகளை, விமர்சனங்களை, பாராட்டுகளை எல்லாம் பல ஆண்டுகளாக பதிவு செய்து இருக்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள்.
“தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்” என்று தலைப்பு வைத்துக் கொண்டு, இங்கே பாடுபவர்களில் பெரும்பான்மை அந்நிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்,தமிழ் தெரியாதவர்கள் என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு.
தலைப்பை மாத்தி வைங்கடா என்றால் அதையும் செய்ய மாட்டேங்குறானுங்க! “தமிழகத்தின்” என்ற உங்க மாயாஜால வார்த்தை வியாபாரத்தை விட்டுடுங்க என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குறானுங்க!
கேரளா,ஆந்திரா,கர்நாடகா என்று தென் இந்திய மாநிலங்களில் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகள் இல்லாமல் இல்லை.
இங்கே நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் பலர்,ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் இது போன்ற போட்டிகளில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொண்டு,சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்ற பிறகும் கூட,இங்கே வந்து பாடுகிறார்கள்.இதற்கு ஆதாரங்கள் பல உண்டு.
தங்கள் பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் தங்கி இருப்பவர்கள் கூட இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்ளட்டும், வேறு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து,நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் கலந்து கொள்வதில் கூட எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே,வேறு மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் மக்களை தடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. காரணம் இங்குள்ள குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன.
இறுதிப் போட்டியில் ஐந்து பேர் ஆறு பேர் என்று வரும் போது, தமிழ்நாட்டு பிள்ளைகள் ஐம்பது விழுக்காடு இருந்தாலே அபூர்வம் தான்.
உடனே இங்கே சிலர் சொல்லுவார்கள்,திறமை இருக்கிறவர்கள் வெற்றி பெறப் போகிறார்கள், அதில் உங்களுக்கென்ன சிக்கல்? அதற்காக எப்படி தடை செய்ய இயலும்? அது நியாயம் கிடையாது என்பார்கள்.
ஏண்டா! உன் நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளனா தமிழன் இருக்கணும். நீ போட்டி நடத்துவது சென்னையில், பாடும் பாடல்கள் தமிழ் பாடல்கள். உன் நிகழ்ச்சியின் வியாபாரம்,விளம்பரம் முழுக்க தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர்களிடமும்.
போட்டி இறுதியில் ஒரு குறுந்செய்திக்கு ஐந்து ரூபாய் என்று கோடிக்கணக்காக ரூபாயை வசூல் செய்வது தமிழர்களிடம் இருந்து. இரண்டு கோடி பேர் குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்றால் அதில் ஒன்றரை கோடிக்கு மேல் தமிழர்களின் குறுஞ்செய்தி!
ஆக உன் நிகழ்ச்சிக்கு பணத்தை தருபவன்,ஆதரவு தருபவன் தமிழன் எனும் போது,வெளி மாநில மக்கள் இங்கே வந்து பாடுவதை தடுக்க வழி செய் என்று கேட்டால்,இது பாசிசம் என்றால் அதெப்படி நியாயம்?என் மண்ணில், நான் மட்டும் ஏமாளியாகவும், இளிச்சவாப் பயலாகவும் தொடர்ந்து இருக்கணுமா?
இதுல பெரிய நகைச்சுவை என்னன்னா, நம்ம ஊர்க் காரனே நம்மைப் பார்த்து கேட்பான், நீங்க கேட்குறதெல்லாம் நியாயமாங்க, திறமையை மட்டும் பாருங்கன்னு!
இல்ல நான் தெரியாம கேட்கிறேன்,தமிழ்நாட்டு அரசு, அரசு உதவி பெரும் மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில் திறமை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு,மற்றபடி மாநில எல்லைகள் எல்லாம் எங்களுக்கு ஒரு தடையே இல்லை, இந்தியாவில் இருக்கும் திறமை உள்ளவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் வந்து படிக்கலாம் என்று சொன்னால், இங்கிருக்கும் தமிழன் பலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்பதை ஏற்கிறீர்களா?
அப்புறம் எதுக்கு வெச்சிருக்கோம்,இந்த மாநில எல்லை விதிகள்?உடனே வருவான் அதுவும் இதுவும் ஒன்றா? ஒரு சாதாரண இசை நிகழ்ச்சியை இப்படி எல்லாம் எடுக்க வேண்டுமா? இதற்கு பெயர் பாசிச வெறி என்று நீ எண்ணினால் அப்படியே வைத்துக் கொள்.
நான் சொல்வதை பாசிச வெறி என்று சொல்பவன் மற்ற மாநிலங்களில் போய் வாழ்ந்து பார். யார் பாசிச வெறி பிடித்தவன் என்று! தமிழனைப் போன்று சகிப்புத் தன்மை வேறு எவனுக்கும் கிடையாது!
இன்னொரு கேள்வி கேட்பான் பாருங்க! ஆமா மற்ற மாநிலத்தவர்கள் வந்து பாடுவதற்கு தடை விதிக்கணும் என்று சொல்கிறாயே, அப்புறம் எப்படி கனடா, பிரான்ஸ் நாடுகளில் இருந்து மட்டும் ஈழத் தமிழர்கள் வந்து இங்கு பாடலாமா, அது மட்டும் எப்படி சரியாகும்?கேள்வி நியாயம் தான்.
நான் கேக்குறேன்,தமிழன் தமிழ்பாட்டை கனடாவிலும், பிரான்சிலுமா போய் பாடுவான்? அந்த நாட்டு மக்களிடமா போய் நிரூபிப்பான்,தன் தமிழ் இசை ஞானத்தை?
தமிழ் பாட்டு,பாடும் களம் அவனுக்கு எங்கே இருக்கிறது? இங்கே தமிழ்நாட்டில் தாண்டா இருக்கிறது.ஆனால் மற்ற மாநில மக்களுக்கு அப்படியா? தங்கள் மாநிலங்களில் பாடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் இல்லையே!
அகதிகளாய்,நாட்டையும் வீட்டையும் இழந்து,வலிகளையும் ரணத்தையும் சுமந்து நிற்கும் என் சொந்த சகோதரர்களுக்கு, நான் என்ன செய்ய வேண்டும், எது அவர்களின் உரிமை என்பதை எனக்கு எவனும் சொல்லித் தர வேண்டியதில்லை. உன் வேலைகளை மட்டும் பார்!
கடுப்புகள கெளப்பிகிட்டு.
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக