சனி, 21 பிப்ரவரி, 2015

மனைவியை நேசிப்போம்.


மனைவியோடு பேசுங்கள்,அவர்களின் ஏக்கங்களையும், விருப்பங்களையும் அறிந்து கொள்ள முயலுங்கள்.அவர்களின் நியாயமான விருப்பங்களை அங்கீகரியுங்கள்.உணர்வுகளை மதியுங்கள்.
மனைவி பேசுவதெல்லாம் பிடிக்குதோ, பிடிக்கலையோ, குறைந்த பட்சம் மொதல்ல அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்பதை,காது கொடுத்துக் கேட்கும் பொறுமையைக் கற்றுக் கொள்ளுங்கள், அவர்களுக்காக பிரத்தியேக நேரம் ஒதுக்குங்கள்.

அப்பாடா நம்ம சொல்றதையெல்லாம் நம்ம வீட்டுக்காரர் செய்கிறாரோ,இல்லையோ அது ரெண்டாம் பட்சம். ஆனால் குறைந்த பட்சம் நம்ம சொல்றத,பொறுமையா காது கொடுத்து கேட்க ஒரு ஆள் இருக்கு என்ற நம்பிக்கைக்காகவாவது சந்தோஷப்படுவார்கள்.
மனைவியை கணக்கில் கூட எடுத்துக் கொள்ளாமல்,திருமணத்துக்கு முன்பு இருந்ததைப் போன்றே,ஆண்கள் தன் பெற்றோர், உடன் பிறப்புகள்,நண்பர்களிடம் மட்டுமே கருத்து கேட்பதும்,முடிவுகள் எடுப்பதும் நியாயம் அற்றவை.
திருமணத்துக்கு பிறகு ஒரேடியாய் பொண்டாட்டியின் முந்தானையை மட்டுமே பிடித்துக் கொள்வதும் தவறு,அதைப் போலவே,அம்மாவின் முந்தானையை,திருமணத்துக்கு பிறகும் கூட விடாமல்,இறுக்கமாய்
பிடித்துக் கொண்டே நகர்வதும் தவறு.சம நிலைக்கு வருவதே சாலச் சிறந்தது.
அம்மா,அப்பா,உடன் பிறப்புகள் எல்லோரும் முக்கியம் தான்,அதே வேளையில் நம்மை மட்டுமே நம்பி வந்த மனைவிக்கு,உரிய அங்கீகாரமும், அவர்கள் உணர்வுகளை மதிக்கும் தன்மையும் சேர்த்தே பேணப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனைவியை விட்டுக் கொடுக்க கூடாத இடங்களில் மனைவியையும்,பெற்றோரை விட்டுக் கொடுக்க கூடாத இடங்களில், பெற்றோரையும் விட்டுக் கொடுக்காமல் சமாளிப்பதென்பது கொஞ்சம் இல்ல,ரொம்பவே சிரமம் தான்.ஆனால் இனிமையான இல்லறத்துக்கு,அனைத்தையும் சமாளிக்கும் தாரக மந்திரம் கட்டாயம் வேண்டும்.
இந்த வித்தையில் பிஹெச்டி வாங்குன புண்ணியவாளர்கள் பலர் இங்கே இருக்கலாம். நமக்கு அனுபவம் ரொம்ப குறைவு தான்:) ஆனாலும் சொல்லணும் என்று தோன்றியது.
பேச வேண்டிய இடங்களில்,பேச வேண்டிய தருணங்களில்,பேச வேண்டிய வார்த்தைகளை பேசாமல் போனால்,அந்த வார்த்தைககளுக்கான அர்த்தமோ,பயனோ எதுவும் இல்லை.
மனசு விட்டுப் பேசினா நாட்டுல இருக்குற, பாதி குடும்ப பிரச்சினை தீர்த்து போய்டும்! தனி மனித ஈகோக்களை உடைத்து,செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க தெரிந்தால்,முக்கால்வாசி சிக்கல் தீர்ந்து போகும்!
மனைவியை நேசிப்போம்!
**விதி விலக்குகள் எல்லா விதிகளுக்கும் உண்டு:)
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக