செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மி தமிழ்நாட்டில் வெற்றி பெற இயலுமா?


ஆம் ஆத்மி தமிழ்நாட்டில் வெற்றி பெற இயலுமா? வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய ஆம் ஆத்மி தமிழ்நாட்டு அமைப்புக்குள் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்று சுப.உதயகுமார் போன்ற ஆம்ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் சொன்னால்,அதில் இருக்கும் நியாயமான விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!
அதெப்படி அவர் விமர்சனம் செய்யலாம்,கட்சித் தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததை அவர் மறந்து விட்டார், நன்றி இல்லாமல் போய் விட்டார்,உதயகுமார் ஒரு ராசியில்லாதவர் என்றெல்லாம் பலர் சொல்லுவது தான் மிகப் பெரிய காமெடி.
என்னவோ ஆம் ஆத்மி கட்சிக்கென்று,தமிழ்நாட்டில் மிகப் பெரிய வாக்கு வங்கி இருந்ததைப் போன்றும்,அல்லது அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்களெல்லாம் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்கியது போலவும்,எதுக்கு இந்த தேவை இல்லாத பில்டப். அடிப்படை கட்டமைப்புகள் எதுவும் இன்றி,அதை ஸ்திரப்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றி,அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தலை ஆம்ஆத்மி சந்தித்தது என்பது தானே உண்மை.
சுப.உதயகுமார் ஆம் ஆத்மி தலைமையோடும், அதில் இருக்கும் பலரோடும் பல ஆண்டு காலமாக ஒரு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.கட்சிக்குள் நடக்கும் அதன் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். டெல்லி செல்லும் போதெல்லாம் அவர்களை சந்தித்து மணிக்கணக்காக விவாதம் செய்பவர்.
அவர் சொல்வதில் உள்ள முக்கியமான விடயமே,டெல்லியில் உள்ள வெற்றியை மட்டுமே வைத்து,அதே சூத்திரம் மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகும் என்று நம்பாதீர்கள்.அது கைகூடாது.சூத்திர வடிவங்களை மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றி அமையுங்கள்.
பிராந்திய சிக்கல்களிலோ அல்லது முடிவுகளிலோ டெல்லி தலைமைகள் கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் தனிப்பட்ட முடிவுகளை திணிக்காமல், மாநில தலைமைகள் சொல்லுவதை பொறுமையோடு காது கொடுத்துக் கேட்டு அங்கீகரிக்கும் அளவுக்கு அந்த கட்சி செயல்பட வேண்டும்.
பல மாநிலங்களில் தேசிய கட்சிகள், புதிதாக அதுவும் முதல் முறையாக ஆட்சியையே பிடிக்கின்றன.ஆனாலும் அவர்கள் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகுவதில்லை. 1967 இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மத்தியில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போதிலும் கூட,தமிழ்நாட்டுக்குள் மீண்டும் வர இயலவில்லை.
ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட வேறு சில தேசிய கட்சிகள் கூட, இங்கே தமிழ்நாட்டுக்குள் காலடி வைப்பது சாதாரண காரியம் அல்ல.
எதை செய்தால் இங்கே ஆட்சியைப் பிடிக்க முடியும்,எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று,கண்விழி எல்லாம் பிதுங்கி தான் நிற்கிறார்கள் தேசிய கட்சிக்காரர்கள்.ஆனால் சூத்திரம் அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.காரணம் இந்த மண்ணின் மகத்துவம் அப்படி.
மற்ற மாநிலங்களில் செய்யும் தேர்தல் உத்திகளைப் போன்று சும்மா மதத்தைக் காட்டி, கலவரங்களைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காண்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்,அவர்களின் கேவலமான பழைய சூத்திரத்தை வைத்துக் கொண்டு,தமிழ்நாட்டில் ஆட்சியை அல்ல,ஆச்சியைக் கூட பிடிக்க முடியாதென்று.
மிகக் குறிப்பிட்டு சொல்வதென்றால் மீனவர் சிக்கல்,ஈழ சிக்கல்,நதி நீர் சிக்கல், மாநில எல்லைகளில் புதிய அணைகள் கட்டுவதில் சிக்கல், வளர்ச்சி என்ற பெயரில் அழிவுக்கென்று தமிழ்நாட்டில் புகுத்தப்படும் பலதரப் பட்ட புதிய திட்டங்களான அணு உலை,மீத்தேன், நியூட்ரினோ என்று ஒவ்வொன்றிலும்,தேசிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும், பிராந்தியக் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இவற்றிலெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் ஆம் ஆத்மி தலைமை நியாயமான முடிவெடுக்கும் அளவுக்கு,சரியான ஆட்களை, டெல்லி தேசிய தலைமை நியமிக்க வேண்டும், அதைப் போலவே மாநிலத் தலைமைகள் சொல்வதை,தேசிய தலைமை ஏற்கும் அளவுக்கு அதிகாரம் வழங்கப் பட வேண்டும்.
ஊழல் என்பதை மட்டுமே ஆம் ஆத்மி முன்னிறுத்தி பேசினாலும் கூட,மக்களின் அழிவுக்கான தமிழ்நாட்டின் முக்கிய சிக்கல்களில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்று கருத்து கேட்கும் போது,மாநில மக்கள் நலனுக்கு ஏற்ப தெளிவான முடிவுகளை எடுக்காவிட்டால் அதீத சிக்கல் தான். பதில் சொல்லாமல் நழுவி செல்லவும் இயலாது.
தேசிய நலனை மட்டுமே கணக்கில் கொண்டு முடிவுகள் இல்லாமல், மாநில மக்கள் நலன் சார்ந்த முடிவுகளே முதன்மையாக இருக்க வேண்டும்,அதுவே தமிழ்நாட்டு அரசியலுக்கு சரியாக இருக்க முடியும் என்பதே அடிப்படையான விடயம்.
உதாரணமாக கேரளா இந்த விடயத்தில் மிகச் சரியாக இருக்கிறது. அங்கே தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று எது வந்தாலும், தேசிய நலன் என்றெல்லாம் பார்க்காமல் அல்லது பார்க்க இயலாமல், கேரள நலன் சார்ந்து மட்டுமே இயங்கும். அப்படி இயங்கினால் மட்டுமே அங்கே அவர்களால் அரசியல் செய்ய முடியும்,நிலைக்க முடியும். அதே நிலையைத் தான் தமிழ்நாட்டிலும் மாற்றம் விரும்பும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..
அப்படி வரும் கட்சிகள் தான் இங்கே அரசியல் செய்ய இயலும். சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற நேர்மையான மனிதர்களை சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மியை வளர்த்து விடுவோம் என்று பலர் சொன்னாலும் கூட,சகாயம் போன்றவர்கள் மாநில நலன் போன்ற விடயங்களில் ஒருபோதும் சமரசம் செய்யாத மனிதர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அவரது சிந்தனையும் சித்தாந்தமும், தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று இன்னும் தீவிரமாகத் தான் இருக்குமே ஒழிய, டெல்லி சொல்வதைக் கேட்டு, தேசிய நலன் என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டும் மனிதராக இருக்க மாட்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் அவரது அனைத்து பேட்டிகளையும், அவர் குறித்த செய்திகள் பலவற்றையும் படித்தவர்களுக்கு தெரியும்,அவர் எந்த அளவுக்கு தமிழர் நலன் மீது அக்கறை கொண்டவர் என்று.
ஆக தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் விரும்பும் எல்லோருடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருக்கிறது.ஊழல், லஞ்சம் என்பதையும் தாண்டி,மாநில நலன் சார்ந்து,இயங்கினால் ஒழிய தமிழ் நாட்டில் புதிய கட்சிகள் பிரகாசிக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தியை உள்வாங்கிக் கொண்டு,தீவிர செயல்பாட்டுடன் கட்சியை வளர்ப்பது நல்லது.
அதை விட்டு விட்டு, அவர் எப்படி எங்கள் கட்சியை விமர்சிக்கலாம், அவருக்கு நன்றி இல்லையா போன்ற விடயங்களை பேசுவது புதிதாக வளர ஆரம்பிக்கும் ஒரு கட்சிக்கு ஆரோக்கியமானது அல்ல.டெல்லி தேர்தல் முடிவை மட்டுமே பார்த்ததும், இங்கே பலருக்கு வரும் அதீத தெனாவட்டு உடம்புக்கு ஆபத்து.
அதுமட்டும் அல்ல, ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, தமிழ்நாட்டு மாநில,தேசிய கட்சிகளுக்குள் பல கோஷ்டிகள் இருப்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் மாற்றம் விரும்பும் கட்சி என்று சொல்லி, புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகளாவது வித விதமான கோஷ்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புரியும் என்று எண்ணுகிறேன்.
நன்றி!
அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக