வியாழன், 20 பிப்ரவரி, 2014

"த்ரிஷ்யம்" மலையாளத் திரைப்படம்!


"த்ரிஷ்யம்" மலையாளத் திரைப்படம்!

முந்தைய கால கட்டங்களில்,நாம் பார்த்த மலையாளப் படங்களில் உள்ள,எதார்த்தமான கதைக் களம் மற்றும் எதார்த்தமான மனிதர்களால் ஆன கதாபாத்திரங்கள்! படம் முழுக்க ஒரு சின்ன கிராமமும், வீடும் தான் என்றே சொல்ல வேண்டும்!

ஆதரவற்ற ஜார்ஜ் குட்டி நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.விவசாயம்செய்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அந்த கிராமத்தில் கேபிள் டிவி நடத்துகிறார்.அன்பான மனைவி, அழகான இரண்டு பெண் குழந்தைகள் என்று மகிழ்வான வாழ்க்கை. அவரது மூத்த மகள் குளிக்கும் காட்சியை மறைந்திருந்து தனது செல்போன் காமெராவில் பதிந்து விட்டு அதையே காட்டி அந்த பெண்ணை மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.பாலியல் இச்சைக்கு உடன்பட அவன் அழைக்க,இந்த பெண் மறுக்க தள்ளு,முள்ளு நடந்ததில்,மிரட்டியவனின் மண்டையில் கட்டையை வைத்து ஓங்கி ஒரு அடி அடிக்க அவன் இறந்து போய் விடுகிறான்.

இறந்து போனவன் தவறானவன் தான் என்றாலும் அவன் காவல்துறை உயர் அதிகாரியின் ஒரே மகன். எதிர்பாராத இந்த கொலையில், சட்டத்தின் பிடியில் சிக்காமல்,தடயங்கள் எதுவும் இல்லாமல்,எப்படி ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஜார்ஜ் குட்டி மீட்டெடுக்கிறார் என்பதே கதை. படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பானவை.

கதைப்படி ஜார்ஜ் குட்டி ஒரு சினிமா பைத்தியம். எந்நேரமும் சினிமாவே கதி என்று இருக்கும் நபர். கேபிள் தொலைகாட்சி நடத்துபவர் அப்படி இருப்பது இயல்பு தானே என்று சொன்னாலும் கூட, தொழில் என்பதைத் தாண்டி, சினிமாவே உலகம், அதுவே தனக்கான பாடசாலை,
தன்னுடைய பிரச்சினைகள் அது சார்ந்த முடிவுகள், அனைத்தையும் தான் பார்த்த சினிமா காட்சிகளை ஒப்பிட்டு அவற்றில் எப்படி முடிவெடுத்தார்களோ அதைப் போலவே தன் வாழ்க்கை முடிவுகளையும் எடுக்கும் அளவுக்கு சினிமாவோடு பின்னிப் பிணைகிறார். மோகன்லால் இந்த கதாபாத்திரத்தை ஏற்கும் போது ரசிக்கும் படியாகவே இருக்கிறது. 

ஜார்ஜ் குட்டி கதா பாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்று மோகன்லாலை புதிதாகவா பாராட்ட வேண்டும்? ஆனாலும் மிக அற்புதமாக செய்திருக்கிறார்.சூப்பர் ஹீரோ போன்று எவ்வித அலட்டல்களும் இல்லை.

எதிர்பாராமல் நடந்த இந்த கொலையில் இருந்து எப்படி தப்புவது என்று முடிவெடுக்க ஜார்ஜ் குட்டி தான் இதுவரை பார்த்த அத்தனை படங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
அப்படி தான் ஏற்கனவே பார்த்த திரைப் படங்களில் நடந்த கொலைகளில், அது சார்ந்த விசாரணைகள், நீதிமன்றங்கள், காவல்துறை கேட்கும் கேள்விகள் அனைத்தையும் உள்வாங்குகிறார்,தான் பார்த்த சினிமாக்களின் படியே, தற்போது நடந்த கொலையை அதன் தடயங்களை மறைக்கும் வேலையை செய்கிறார் என்று சினிமாவோடு பின்னிப் பிணைந்த ஒரு கதாபாத்திரம். 

ஒவ்வொரு காசையும் கணக்கு பார்த்து செலவு செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மனிதன் ஜார்ஜ் குட்டி.ஆனால் மனைவியோ மற்றவர்களைப் போல அப்படி இருக்க வேண்டும்,தன் பிள்ளைகள் உயர்ந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று வேறு மன நிலை கொண்டவர். பள்ளி மற்றும் கலவித்தரம் குறித்து இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் மிக அருமை.

தன் பிள்ளைகளை பெரிய பள்ளி ஒன்றில், ஆங்கில வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஜார்ஜ் குட்டியின் மனைவி சொல்கிறார். காரணம் அப்போது தான் அவர்கள் பெரிய அறிவாளிகளாக வருவார்கள் என்பது அவரது வாதம்.

ஜார்ஜ் குட்டி நம்மைப் போன்ற கதாபாத்திரம், பெரிய பெரிய கட்டிடமும், நுனி நாக்கு ஆங்கிலமும், லட்ச ரூபாய் கல்விக் கட்டணமும், நூறு சதவிகிதம் தேர்ச்சி விகிதமும் வாங்கினால் தான் சிறந்த பள்ளி என்று யார் சொன்னது? நன்றாக படிக்க கூடிய பிள்ளைகள்,
மாநில அளவில் கல்வியில் சிறந்த குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் ஏன் அரசு பள்ளிகளிலும் தான் இருக்கின்றன என்பது ஜார்ஜ் குட்டியின் வாதம். 

கல்வியில் மட்டும் அல்ல..மாறிவரும் நுகர்வு கலாச்சார மோகம்,நம் குடும்பங்களில், பயன்படுத்தும் பொருட்களில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை எல்லாம் கேலியாகவும்,அதே நேரத்தில் சிந்திக்கும் விதமாகவும் சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஒரு நடுத்தர வர்க்க மனநிலை கொண்ட குடும்பஸ்தனுக்கும், மாறி வரும் போட்டி கலாச்சாரத்துக்கு ஏற்ப,நாலு பேர் நம்மை பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமக்கு தேவையான பொருளா அல்லது தேவையில்லாத பொருளா , தற்போது அதை வாங்கும் சூழல்/திறன் நமக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப் படமால்(அந்த பொருள் கார்-ஆக இருக்கலாம்,
துவைக்கும் எந்திரமாக இருக்கலாம்,குளிர்சாதனப் பெட்டியாக இருக்கலாம்) கடனை வாங்கியாவது அந்த பொருளை உடனடியாக வாங்கி குடும்ப கவுரவத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்யும் குடும்ப பெண்ணாக ஜார்ஜ் குட்டியின் மனைவி (ராணி) கதாபாத்திரத்தில் மீனா நன்றாக நடித்திருக்கிறார்.குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் அருமை.

இறந்து போனவன் காவல்துறை அதிகாரியின் ஒரே மகன். சும்மா விடுவாங்களா? மோகன்லால் காவல்துறை அதிகாரிகளால் மிதிக்கப்படுகிறார், அடிக்கப்படுகிறார்..ஆனாலும் பாய்ந்து சண்டைகள் எதுவும் போடவில்லை:)காவல்துறையினரை பந்தாடவில்லை!ஒட்டுமொத்த குடும்பத்தையும், தன், மனைவி, சிறு குழந்தைகளை கன்னா பின்னாவென்று தாக்கியபோதும் கண்கள் சிவக்கவில்லை:) திருப்பி அடிக்கவில்லை. மாறாக இயலாத சாதாரண மனிதனின் கண்களில் வரும் கண்ணீர் என்ற எதார்த்தம் மட்டுமே:)

இப்படி படம் முழுக்கவே ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் எதாரத்தாமான நிகழ்வுகள்!

படத்துக்கான மொத்த செலவும் ஐந்து கோடியைத் தாண்டவில்லை.கேரளா அரசின் பல்வேறு விருதுகளையும், மிகப்பெரிய அளவில் பொருளாதார வெற்றிகளையும் குவித்து நிற்கிறதுபடத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் பாராட்டுக்கு உரியவர்!

கடந்த வாரத்தில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இது ஒரு குடும்ப சித்திரம் என்று முந்தைய காலங்களில் திரைப்பட சுவரொட்டிகளில் எழுதி இருப்பார்களே,அப்படி இதுவும் எல்லோரும் பார்க்க கூடிய அளவிலான நல்லதொரு குடும்ப சித்திரம் தான்!

பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக