வியாழன், 6 பிப்ரவரி, 2014

சாமி படங்களுக்கு பணிந்த மாமனிதர்கள்!


சாமி படங்களுக்கு பணிந்த மாமனிதர்கள்!

பெங்களூர் அழகிய பூங்கா நகரம் என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.பணி ஓய்வு பெற்ற முதியவர்களுக்கு ஏற்ற நகரம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பெங்களூரை பலர் விரும்புவதற்கு முக்கிய காரணம் தட்ப வெப்ப நிலை.அதிக வெயில் கிடையாது.எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் என்று பல அம்சங்கள் உண்டு. ஆனால் சமீப காலங்களில் நகரத்தின் அமைப்பே மாறி போய் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி கட்டிடங்கள், வாகன நெரிசல், குப்பைகள் என்று எல்லா வகையிலும் பெங்களூர் சிதைந்து போய் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த தட்ப வெப்ப நிலை இப்போது இல்லை. தட்ப வெப்ப நிலையில் ஒரு அதீத மாற்றம் என்றே சொல்லலாம். அனேக இடங்களில் குப்பைக் கூளங்களை பார்க்க முடிகிறது. சுத்தமற்ற நகரமாக மாறிக் கொண்டே இருக்கிறது.பூங்கா நகரம் குப்பை நகரமாக மாறி வருவதாக பெங்களூர் மக்கள் அலுத்துக் கொள்வதுண்டு!ஆனாலும் கூட இவை எல்லாவற்றையும் தாண்டி, எங்களைப் போன்றோர்களுக்கு பெங்களூர் இன்னும் அழகாகவே இருக்கிறது:) அது வேறு:)

பெங்களூரில் நாங்கள் வசிக்கும் பகுதியில்,இரண்டு மூன்று அழகிய பூங்காக்கள் உண்டு. ரொம்ப பெரிய பூங்கா இல்லை. ஒரு நானூறு மீட்டர் அல்லது ஐநூறு மீட்டர் நீளம் கொண்ட பூங்காக்கள். மக்கள் தங்கள் நடைப் பயிற்சி செய்ய, மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாட என்று இந்த பூங்காக்கள் ஓரளவுக்கு சுறு சுறுப்பாகவே இருக்கும்.பூங்காக்களை சுற்றி பெரிய பெரிய வீடுகள். பெரிய அரசியல்வாதிகள் பலர் குடி இருக்கிறார்கள், தொழிலதிபர்கள் என்று, வீடுகளையும், அவற்றில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகைகளையும் பார்த்தால் புரியும்.

நம் வீட்டுக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு பூங்காக்களின் ஓரத்தில்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வந்த வண்ணமே இருந்தார்கள்.நானும் தொடர்ந்து இதை கவனித்து வந்ததுண்டு. பல நேரங்களில் இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று அறிவிப்பு பலகைகள் இருக்கும்.ஆனால் நம்ம மக்கள் தான் சிக்கலானவங்க ஆச்சே....அறிவிப்பு பலகைக்கு மேலேயே குப்பையை கொட்டி தன்னுடைய அகங்காரத்தை பதிவு செய்வான்.

சில நேரங்களில் அறிவுப்போடு கூடிய எச்சரிக்கையும் இருக்கும். ஆனால் நம்மாளு என்ன செய்வான். அந்த அறிவிப்பு பலகையையே தூக்கி எறிவான்.இப்படியாக இந்த நகைச்சுவை காட்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அரசு துறையில் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களின் வீடுகள் எல்லாம் பூங்காவை சுற்றி இருந்தும் கூட சரியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யாரோ ஒரு புண்ணியவாளன் அருமையான செயல் ஒன்றை செய்து இருக்கிறார். மக்களின் மன நிலையை சரியாக அறிந்தவன் அவன். அவனுக்கு தெரிந்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பு பலகைக்கோ எச்சரிக்கை அல்லது நடவடிக்கை என்ற எதற்குமே அஞ்சாதவர்கள்.எனவே குப்பைகளைக் கொட்டும் இடங்களில் இரண்டு மூன்று சாமி படங்களை வைத்து விட்டு போய் விட்டான். வேறு எந்த அறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லை.அந்த மூன்று சாமிப் படங்களில் இரண்டு நாட்காட்டியில் உள்ள படங்கள். ஒன்று மட்டும் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும் சாமி படம்.

ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த பத்து நாட்களாக எந்த குப்பைகளும் அங்கே கொட்டப்படுவதில்லை. மிக சுத்தமாக மாறிவிட்டது பூங்கா பகுதி!

சுற்று புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற சுய புத்தியோ அக்கறையோ இல்லை. சரி அதையும் தாண்டி இங்கே குப்பை கொட்ட வேண்டாம் என்று அறிவிப்பு வைத்தாலும் கேட்கவில்லை.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தாலும் கண்டுகொள்வதில்லை.

இப்படி சக மனிதர்களின் எந்த ஆலோசனையையும் கேட்காத மதிக்காத மனிதர்கள் சாமிப் படத்தை பார்த்ததும் பம்முகிறார்கள்:)நம்ம மக்களுக்கு சில நேரங்களில் இந்த வைத்தியம் தான் சரியாக இருக்கிறது:)

சிறு குழந்தைகள், அவர்கள் வயதில்,பல விடயங்களை புரிந்து கொள்ள இயலாது என்பதால், எதையாவது செய்யாமல் அடம் பிடிக்கும் போது,பெரியவர்களின் பேச்சை கேட்காத போது, சாமி படங்களைக் காட்டி பயமுறுத்துவார்கள். ஆனால் எல்லாம் புரியும் ஏழு கழுதை வயசான பிறகும் கூட, நம்ம பெரியவர்களுக்கு சாமி படத்தை காட்டி தான் பயமுறுத்த வேண்டி இருக்கு:)

எப்படியோ, இரண்டு வருடத்துக்கும் மேலான சிக்கல் அம்பது ரூபாயில் முடிந்தது:)

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது,நம் ஒவ்வொருவரின் கடமை!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக