வியாழன், 15 ஜனவரி, 2015

கருத்து சுதந்திரம்:



கருத்து சுதந்திரம்:

சக படைப்பாளியின் கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்களில் எத்தனை பேருக்கு,உண்மையான கருத்து சுதந்திரம் இருக்கிறது? 

கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக ஒரு மதமோ,குறிப்பிட்ட சாதியினரோ, அவர்களின் தூண்டுதலின் பேரில் இயங்கும் மக்களோ மட்டுமே இருப்பதாக ஊடக வெளியில் பொங்கும்/இயங்கும் எத்தனை பேருக்கு நீங்கள் பணியாற்றும் ஊடக நிறுவனங்களில் கருத்து சுதந்திரம் இருக்கிறது?

சன் தொலைக்காட்சியில் பணியாற்றும் நெல்சன் என்றைக்காவது அலைக்கற்றை ஊழல் பற்றி பேசியது உண்டா? அல்லது அவருக்கு அதைப் பற்றி சமூக தளங்களில் எழுதும் கருத்து சுதந்திரம் இருக்கிறதா? அவர் பணியாற்றும் சன் தொலைக்காட்சி ஊடகத்தில் அது குறித்து பேச இயலாது.

ஆனால் இங்கே முகநூலில் என்னென்னவோ விடயங்களை விவாதிக்கும் அவர்,என்றைக்காவது அலைக்கற்றை ஊழல் தவறு அல்லது அதில் என் நிலைப்பாடு இது தான் என்று பதிந்ததுண்டா? யார் என்ன பேச வேண்டும் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க இயலாது தான். ஆனால் இவர்களுக்கே அந்த எழுத்து சுதந்திரம் இல்லை என்பதே நமது வாதம்.

ஒரு ஊடகத்தில் பணியாற்றுவது என்றால்,அவர்கள் நடத்தும் கட்சியின் உறுப்பினர் அல்லவே! பிறகென்ன? அவர்கள் செய்யும் அநியாயங்களை பேசக் கூடாது என்று எந்த விதியும் அல்லவே!
சிக்கல் என்னன்னா இங்கே ஊடகவியலாளர்கள் என்று சொல்லும் பலர் அந்தந்த கட்சிக்காரர்கள் போலத் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகிறோம் என்பதற்காக தங்களின் அடிப்படை கருத்து சுதந்திரத்தை அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒருவேளை அந்த ஊடக நிறுவனங்கள் அப்படி கட்டாயப் படுத்தினால் அதற்கு எதிராக எத்தனை முறை போராடி இருக்கிறார்கள்? என் கருத்து சுதந்திரத்தை அடமானம் வைக்க முடியாது என்று வெளியே வந்து இருக்கிறார்கள்?

செந்தில், மகா தமிழ் பிரபாகரன் போன்ற நபர்கள் எல்லாம் நியூஸ் செவன் என்ற தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்கள். ஊரையே கொள்ளையடிச்சு தின்னுற ஒருத்தன் “பொறுப்பும் பொதுநலனும்” என்ற கொள்கையோடு அந்த தொலைக்காட்சியை நடத்துகிறான் என்ற வேடிக்கை தனி.

ஆனால் தென் மாவட்ட தாது மணல் கொள்ளை குறித்தோ, கிரானைட் மலை முழுங்கல் குறித்தோ இந்த ஊடகத்தில் பணியாற்றும் செந்திலால் கருத்து சொல்ல முடியுமா? அல்லது எழுத முடியுமா? அப்புறம் என்ன சமூக பொறுப்பு, கருத்து சுதந்திரம் ?

“விடிந்தகரை” என்று புதிய தரிசனம் இதழில் தென் மாவட்ட கடலோரம் பற்றி தொடர் எழுதி வந்த மகா தமிழ் பிரபாகரன்,நியூஸ் செவன் தொலைக்காட்சியில் சேரும் போது,விடிந்தகரை என்ற தொடரை இனி எழுத மாட்டேன், மணல் கொள்ளை குறித்து பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து எழுதிக் கொடுத்த பிறகே பணியமர்த்தப் பட்டார்.அந்த அளவுக்கு கொள்கை பிடிப்பு.அதே நிலை தான் செந்திலுக்கும்.ஆனால் பேசுவது என்னவோ கம்யூனிசம் தான்.

இன்னொரு நகைச்சுவை என்னன்னா இந்த தம்பி மகா தமிழ் இருக்குறாரே இவர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் மீது அதீத காதல் கொண்டதாக, “புலித்தடம் தேடி” என்ற புத்தகம் எல்லாம் எழுதியதெல்லாம் ஒரு புறம்.இனி புலிகள் பற்றி பேசக் கூடாது, ஏற்கனவே எழுதிய புத்தகத்தை திரும்ப பெறு அப்போது தான் அதிக சம்பளத்தில் வேலை தருவேன் என்று இன்னொரு ஊடகக்ககாரன் சொன்னால் அதையும் செய்வார்கள்.

ஆக நாம சொல்ல வர்றது என்னன்னா,ஈழத்துக்கு எல்லாம் போக வேண்டாம். இங்க உள்ளூரில் கண்ணுக்கு முன்னாடி நடக்குற பிரச்சினை குறித்து தைரியமா பேசுங்க. எழுதுங்க. ஆனால் அதை செய்ய இயலாத சூரப் புலிகள்,இன்றைக்கு அசாமில் நடக்கும் கலவரம் குறித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதப் போகிறார்களாம். ஐயோ ஐயோ.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் வெங்கட், குணசேகரன் போன்றவர்கள் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் நடக்கும் கல்விக் கொள்ளை குறித்தோ,அவர்கள் செய்யும் வரி ஏய்ப்பு குறித்தோ பதிவு செய்வார்களா?

புதிய தலைமுறை ஊடகம் என்பது வேறு, அவர்களின் கல்வி நிறுவனம் என்பது வேறு.இந்த ஊடகங்களில் பணியாற்றும் இவர்கள் பொதுத் தளத்தில் இது போன்ற சிக்கல்களில் தங்களின் கருத்துக்களை என்றாவது வைத்ததுண்டா?

கடந்த ஆண்டு எஸ்.ஆர்.எம் குழுமம்,அதன் திரைப்படக் குழுமமான வேந்தர் மூவிஸ் பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக, கணக்கில் வராத பல கோடி சொத்துக்கள் முடக்கப் பட்டதாக பத்திரிக்கைகளில் வெளியானது.

அது குறித்து இவர்கள் இயங்கும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டதுண்டா?
பச்சமுத்துவின் கல்விக் கொள்ளை குறித்து எப்போது உங்கள் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிப்பீர்கள் என்று கேட்டதுக்காக,புதிய தலைமுறை முக நூல் பக்கத்தில் இருந்து நம்மை கடந்த ஆண்டே தடை செய்து விட்டார்கள் என்பது வேறு.

ஆனால் பாருங்க, நம்ம சிக்கல் என்னன்னா பிரான்சில் கருத்து சுதந்திரம் இல்லை, தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை, இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை,அரசாங்கம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது என்று பயங்கரமா பேசும் நபர்கள் தனக்கே கருத்து சுதந்திரம் இல்லை என்பதை உணரமாட்டார்கள்.

அரசாங்கம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராய் நிற்கக் கூடாது என்பதை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை.

ஆனால் மொதல்ல நீங்க பணியாற்றும் நிறுவனங்களில் உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறதா? அதற்கு எதிராய் போராடி உங்கள் கருத்து சுதந்திரத்தை மீட்டதுண்டா?

ஜெயா தொலைக்காட்சி மற்றும் அந்த குழுமத்தில் பணியாற்றும் நபர்களை எல்லாம், நான் ஒருபோதும் ஊடகவியலாளராக பார்ப்பதில்லை.காரணம் அவர்கள் அனைவரும் அடிமைகள்.சுய சிந்தனை அற்ற இன்னும் சரியான வார்த்தையில் சொல்வதென்றால் எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க “தெம்மாடிகள்” என்று. அப்படிப்பட்ட தெம்மாடிகள்.

காட்சி ஊடகங்களில் மட்டுமா இந்த நிலை?பத்திரிக்கை ஊடகங்களிலும் இதே நிலை தான். தந்தி, இந்து, என்று எல்லாப் பத்திரிக்கையிலும் இதே நிலை தான் என்பதை மறுக்க இயலுமா?

பல ஊடகங்களில்,குறிப்பிட்ட சில பொதுப் பிரச்சினைகள் பற்றி அந்த பத்திரிக்கையும் பேசாது,அங்கே வேலை செய்பவனுக்கும் பேச அனுமதி கிடையாது.

ஆக இங்கே பேசுறதுல பல பேரு ஏற்கனவே தங்கள் கருத்து சுதந்திரத்தை எவன்கிட்டயோ அடமானம் வைத்து விட்டு, அடுத்தவனின் கருத்து சுதந்திரத்துக்கு போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

முதலில் அவனவன் தன் கருத்து சுதந்திரத்தை,தான் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து, சுயமாய் போராடி மீட்டெடுக்க முயற்சிக்கட்டும்! கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பதிவு அல்ல. சுய பரிசோதனைக்கான பதிவு.

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக