சனி, 31 ஜனவரி, 2015

பாரம்பரிய கிறிஸ்தவர்கள் சிந்திக்க!





பாரம்பரிய கிறிஸ்தவர்கள் சிந்திக்க!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மீது வைக்கப்படும்,பல தரப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி,பிறப்பால் ஒரு கிறிஸ்தவனான எனக்குள் ஏற்படும் சிந்தனை என்னவென்றால்,

கடந்த ஐந்து ஆண்டுகளாய் மட்டுமே இயேசுவை ஏற்றுக் கொண்ட உமாசங்கர் அவர்கள்,இந்த அளவுக்கு ஆழமாய் வேதாகமத்தை வாசித்து,வேதம் சொல்லும் சத்தியங்களை தெளிவாய் புரிந்து கொண்டு,இயேசுவுக்காய் அவரது சித்தம் செய்ய,அவரது பரலோக ராஜ்ஜியத்துக்காய் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு,அதற்கு எதிரான அனைத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்வேன் என்று செயல்படும் அவரது தீவிரம், உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சர்யத்தையும்,மெய் சிலிர்ப்பையும் நமக்குள் ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

உமாசங்கர் அவர்கள் எந்த அளவுக்கு,எத்தனை முறை வேதாகமத்தை முழுமையாக வாசித்து அதில் தெளிவுற்று இருந்திருந்தால்,இந்த அளவுக்கு அவரால் வேதாகமத்தின் ஒவ்வொரு அதிகாரத்தையும், வசனத்தையும் போதிக்க முடியும் என்பதை கிறிஸ்தவ நண்பர்கள் மிக உன்னிப்பாக சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

பிறப்பால் பாரம்பரிய கிறிஸ்தவர்களாக,சமூகம் சொல்கின்ற மிகப் பெரிய படிப்பெல்லாம் படித்தவர்களாக,பதவிகளில் இருப்பவர்களாக, மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவர்களாக,உலக விடயங்கள் எல்லாம் அறிந்தவர்களாக,உலக செய்திகளையும், தகவல்களையும் நுனி விரலில் வைத்திருப்பவர்களாக,உலக விடயங்கள் குறித்து எத்தனையோ புத்தகங்களை வாசிக்கும் புத்தக விரும்பிகளாக இருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு,உமா ஷங்கரைப் போன்ற வேதாகம அறிவு இருக்கிறது?

முப்பது ஆண்டுகளாக, நாற்பது ஆண்டுகளாக நான் கிறிஸ்தவன் என்று சொல்லும் நாம்,நம் வாழ்வில் எத்தனை முறை இந்த வேதாகமத்தை முழுமையாக படித்து தியானித்து இருக்கிறோம். அதற்கான விளக்கங்களைத் தேடித் தேடி படித்து இருக்கிறோம்? அனுதின வேத வாசிப்பும் அது குறித்த தியானிப்பும் நமக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியே!

உமாசங்கர் கத்தோலிக்க கிறிஸ்தவரா, சி.எஸ்.ஐ கிறிஸ்தவரா, பெந்தெகொஸ்தே சபை கிறிஸ்தவரா என்ற ஆராய்ச்சிகள் தேவை அற்றவை.

இந்த கத்தோலிக்கம், சி.எஸ்.ஐ, பெந்தெகொஸ்தே என்று தனித் தனியான கிறிஸ்தவ பிரிவுகளை கட்டிக் கொண்டு அழுவதோ, வக்காலத்து வாங்குவதோ,அதைக் குறித்து பெருமை பேசுவதோ நமது வேலையும் அல்ல,அதில் நமக்கு எந்த உடன்பாடும் இல்லை.

கிறிஸ்துவை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்வதற்கான வழிகளைத் தவிர,இந்த மத அடையாளங்கள் மீது நமக்கு எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை.

வேதாகமம் சொல்லும் அளவீட்டின் படி,எது சரி, எது தவறு, எது சத்தியம், எந்த வழிபாட்டு முறை சரி, எதை ஏற்க வேண்டும், எதை மறுக்க வேண்டும், வேதாகமம் சொல்லும் முறைகளுக்கு முரணான விடயங்கள் எவை என்பனவற்றைக் கற்றுக் கொள்வது தான்,நமக்கான சரியான வழிமுறைகளையும்,வழிபாட்டு முறைகளையும் தீர்மானிக்கின்றன.

மற்றபடி நீ கத்தோலிக்க கிறிஸ்தவனா,பெந்தெகொஸ்தே கிறிஸ்தவனா, அல்லது சி.எஸ்.ஐ கிறிஸ்தவனா என்றால் “ கிறிஸ்தவன்” என்பது மட்டுமே நமது பதில்.

உமாசங்கர் அவர்களின் வேதாகம அறிவைப் பார்த்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது நமது கடமை.

மிகப் பெரிய அரசனும்,சங்கீதக்காரனுமான தாவீது இப்படியாக சொல்கிறார்.

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.( சங்கீதம் 119:72)

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு இப்படியாக எழுதுகிறார்.

I கொரிந்தியர் 9:16:

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

கிறிஸ்தவம் என்பது வேதாகம அறிவு மட்டும் அல்ல.மாறாக வாசிக்கும் வேதாகமத்தின் படி நாம் வாழும் வாழ்வியல் என்பதை மறந்து விடக் கூடாது.

**(கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு)**

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

1 கருத்து: