வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஐடி ஊழியர்களின் தார்மீக சமூக கடமை.



ஐடி ஊழியர்களின் தார்மீக சமூக கடமை.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து இருபத்தைந்தாயிரம் மூத்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்,சென்னை நோக்கியா நிறுவனத்தை மூடுகிறார்கள் என்றதும் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சிகள் என்று பல தரப்பட்ட எதிர் குரல்களை பார்க்க முடிகிறது.
உங்களுக்கென்று ஒரு தொழிலாளர் நல சங்கத்தை உருவாக்குங்கள் என்ற ஆலோசனைகள் வருகின்றன. அரசுகள் இந்த சிக்கலை கையிலெடுக்க வேண்டும் என்ற குரல்களை கேட்க முடிகிறது. தொலைக்காட்சி விவாதங்களை பார்க்க முடிகிறது. சமூக ஆர்வலர்கள் பலரது கருத்துக்களை படிக்க முடிகிறது.

ஐடி ஊழியர்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள், சமூகம் குறித்து எந்த கவலையும் அக்கறையும் அவர்களுக்கு கிடையாது என்று பரவலான ஒரு பேச்சு உண்டு,அது ஓரளவுக்கு உண்மையும் கூட.
அதற்காக ஐடி ஊழியர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் சமூகத்தை கண்டும் காணாமல் அவர்கள் கடந்து செல்வதைப் போன்று சமூகம் அப்படி கடந்து சென்று விடுவதில்லை என்பதை நினைவு படுத்திக் கொள்வது நல்லது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களே கூட, இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களில்,கலந்து கொள்கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க,மற்ற அமைப்புகள் தான் தீவிரமாக இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுகிறார்கள்.
இந்த சமூகத்தில் எது நடந்தால் எனக்கென்ன,சமூகம் குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை, என்று சமூக அநீதிகளை கண்டும் காணாமல் புறம் தள்ளி செல்வதை தவிர்த்து விட்டு,அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதும், போராட்டங்களில் பங்கெடுப்பதும்,தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் கடமை என்பதை இந்த நேரத்திலாவது உணர்ந்து கொள்வது உத்தமம்.
நாம் எல்லோரும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம், நமக்கென்று சில தார்மீக கடமைகள் இருக்கின்றன என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தால் நலம்..
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக