செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெருமாள் முருகனுக்கு செய்ய வேண்டிய கடமை


மாதொருபாகன் நாவலின் மின்னூல் இணைப்பு, இணையங்களில் இலவசமாக கிடைப்பதாக பெரும்பாலானோர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். வாசிக்க விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து கட்டாயம் இதை வாசியுங்கள்,பயமின்றி பகிருங்கள் என்றெல்லாம் செய்தி வருகிறது.
ஆனால் பெருமாள் முருகன் என்ற மனிதனின் உழைப்புக்கான சன்மானம்?
புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூபாய் இருநூற்று ஐம்பது இருக்கும் என்பது என்அனுமானம்.
பெருமாள் முருகன் அவர்கள் மன அழுத்தத்தில் வெறுப்பில்,
கோபத்தில்,நெருக்கடியில் என் புத்தகங்கள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன்,நட்டம் இருந்தால் பதிப்பாளருக்கு அதைத் தந்து விடுகிறேன் என்று சொல்வது கடுமையான விரக்தியில்.
ஆனால் தரவிறக்கம் செய்யும் நாமோ, குறைந்த பட்ச மனசாட்சியோடு புத்தகத்துக்கான முழுத்தொகை கொடுக்க வேண்டாம்,ஆனால் குறைந்த பட்சம் அவரவரால் எவ்வளவு கொடுக்க இயலுமோ அதை அவருக்கு கொடுத்து படித்தால்,கொஞ்சம் மன நிம்மதியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு படைப்பாளிக்கு உறுதுணையாய் நிற்க நாம் செய்யும் கடமையாக,பேருதவியாக,நம்பிக்கையாக அது இருக்கும்.
பெருமாள் முருகன் கல்லூரிப் பேராசிரியர் தானே, அவருக்கு இதனால் பெரிய நட்டம் இல்லை,இப்படிப் பணம் கொடுப்பதை வாங்கும் நிலையில் அவரும் இல்லை,மட்டுமல்ல அவரே அதை இலவசமா தருகிறேன் என்று சொல்லும் போது எதற்கு பணம்? இந்த புத்தகத்தை எல்லோரும் படிப்பதே அவருக்கு செய்யும் பெரிய உதவி தான் என்றெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் இந்த சர்ச்சைக்கு முன் அவர் இந்த புத்தகத்தை இலவசமாக தருவதாக எங்கும் சொல்லவில்லை. ஒரு நெருக்கடியில், வேறு வழியில்லாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் நமக்கு ஒரு மனசாட்சி வேணும்ல:)
அடுத்தவர் உழைப்பு,அதற்கான ஒரு விலை.
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக