வியாழன், 15 ஜனவரி, 2015

சகிப்புத் தன்மை

சகிப்புத் தன்மை:

இயேசு நாதருக்கு திருமணம் ஆனது என்றும்,மகதலேன் மரியாளை திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டார் என்றும் டான் பிரவுன் என்பவர் ஒரு ஆங்கில திரைப்படத்தையே உருவாக்கி உலகம் முழுவதும் வெளியிட்டார்.அது உண்மை தான் என்பது போல சில ஆராய்ச்சியாளர்களின் குரலையும் கேட்க முடிந்தது.


இதற்காக டான் பிரவுனையோ, அல்லது ஆராய்ச்சி செய்ததாக சொல்லும் ஆராய்ச்சியாளனையோ,கொல்வதை விட மிகப் பெரிய வன்முறை எதுவாக இருக்க முடியும்?

உண்மையில் சொல்லப் போனால்,இயேசு நாதருக்கு திருமணம் ஆனது என்று ஒருவர் சொல்வதென்பது கிறித்துவர்களின் அடிப்படை நம்பிக்கையையே கேலிக்குள்ளாக்கும் விடயம் என்பதை மறுக்க இயலாது.

ஆனால் எது உண்மை,எது பொய்,எதை ஏற்க வேண்டும்,எதை மறுக்க வேண்டும் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மாறாக வன்முறையில் இறங்க கூடாது.

கிறித்துவத்தை உண்மையாக ஏற்பவன் இதற்காக கோபம் கொள்ள வேண்டியதில்லை. கிறித்துவர்கள் எல்லோரும் அப்படி சகிப்புத் தன்மையோடு தான் இருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் அப்படித் தான் இருக்க வேண்டும் என்பது தான் நியதி.

ஒருவேளை அதையும் மீறி புரிதல் இல்லாத ஒரு சிலர் வன்முறை செய்தால் அதை ஒருபோதும் ஏற்க இயலாது.அப்படிப் பட்டவர்கள் கிறித்துவம் புரியாதவர்கள் அல்லது கிறித்துவர்களே அல்லர்.

அதைப் போலவே அன்பை போதிக்கும் மதங்கள், தங்கள் மத நம்பிக்கைகளை யாரோ விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக, வன்முறை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

இறை மறுப்பாளர்கள் கூட செய்யாத அல்லது செய்யத் துணியாத ஒரு வன்முறையை, ஒரு ஆத்திகன் தன் மதத்தின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும் செய்வான் என்றால்,கட்டாயம் அவனது ஆத்திகம்/நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப் பட வேண்டிய ஒன்று..

எல்லா மதங்களும் போதிப்பது அன்பையும், மனித நேயத்தையும், சகிப்புத் தன்மையையும் தான்.

எந்த மதம் என்பது முக்கியம் அல்ல.உங்கள் மதம் அன்பைப் போதிக்கும் என்றால்,மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் தவிர்க்கப் பட வேண்டியவை, கண்டிக்கப் பட வேண்டியவை.

இறைவன் மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால்,தனி மனித அவதூறுகளால், விமர்சனங்களால் இறைவனின் புகழுக்கு களங்கம் வராது என்பதை நம்ப வேண்டும்.

சகிப்புத் தன்மை வளர்த்துக் கொள்ளபட வேண்டிய ஒன்று.

அடுத்த கேள்வி எப்படி வரும் என்பது தெரியும்.ஆனால் **மத நம்பிக்கை வேறு. குடும்பம்/உறுப்பினர்கள் என்பது வேறு***

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக