வெள்ளி, 30 ஜனவரி, 2015

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் அடுத்து?


கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் அடுத்து?
கடந்த மூன்று ஆண்டுகளாக,மிகப் பெரிய அளவில் கடுமையான தொடர் போராட்டம் மற்றும் எண்ணற்ற புதிய போராட்ட வழிமுறைகள் பின்பற்றப் பட்டாயிற்று.
லட்சக் கணக்கான வழக்குகளை அந்த மக்கள் சந்தித்து ஆயிற்று. கடந்த மூன்று ஆண்டுகள் கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயிற்று. ஆயிரக்கணக்கான மக்களின் பாஸ்போர்ட் இன்று வரை முடங்கிப் போய் கிடக்கிறது.
மிகப்பெரிய அளவில்,ஊடகங்களில் இந்த அணு உலை போராட்டம் குறித்து விவாதிக்கப் பட்டாயிற்று, எழுதப் பட்டாயிற்று..உச்ச நீதிமன்றங்களில், உயர் நீதி மன்றங்களில் அணு உலைக்கு எதிரான வலுவான வழக்குகளையும் நடத்திப் பார்த்தாயிற்று.
அரசு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கொடுத்தாயிற்று. அணு உலையின் தீமைகள் குறித்து மக்களுக்கு பலதரப்பட்ட விழிப்புணர்வு முறைகளை ஏற்படுத்தி ஆயிற்று.
மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என்று அனைத்து கட்சித் தலைமைகளையும், மூத்த அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்து, விளக்கம் கொடுத்தாயிற்று.
நாடு தழுவிய அணு உலை எதிர்ப்பு பிரச்சாரமும் செய்தாயிற்று. அண்டை மாநில முதல்வர்களையும், கட்சிகளையும் கூட சந்தித்து இதற்காக பேசியாயிற்று.
இன்று வரை அணு உலை வேலையே செய்யவில்லை என்பதை நாடே அறியும். அணு உலை நிர்வாகம் சொல்வதெல்லாம் பொய் என்பதையும் நிரூபித்து ஆயிற்று.
டீசலுக்காக பல கோடிகள் செலவு செய்து,அந்த டீசலை வைத்து தான் மின்சாரம் தயாரித்து கோல்மால் செய்கிறார்கள் என்பது வரை விவாதித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தாயிற்று.
தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு மின்சார வாரியம் கூறிய தகவல்கள் அடிப்படியில் கூடங்குளம் அணு உலை மின்சாரம் என்ற ஒன்று வரவே இல்லை என்று ஊர்ஜிதம் செய்தாயிற்று.
அணு உலைக்கான பொருட்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்தாயிற்று. கூடங்குளம் அணு உலைக்கு பொருட்கள் வழங்கிய பொடாஸ்கி என்ற ரஷ்ய நிறுவனம் ஊழல் செய்ததால் ரஷ்ய நாட்டு சிறையில் களி தின்கிறார்கள் என்பது வரை நிரூபித்தாயிற்று.
சந்தர்ப்பவாத அப்துல் கலாம் சொன்னது, ஆண்டிபட்டியார் சொன்னதெல்லாம் டுபாக்கூர் என்பதும் நிரூபிக்கப் பட்டாயிற்று.
சட்டமோ, நீதி மன்றங்களோ,ஆட்சியாளர்களோ, அரசு அதிகாரிகளோ, திட்டங்களை தீர்மானிக்கிறவர்களோ, கீழ்த் தரமான அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளோ, அதன் தலைமைகளோ, பெரும்பான்மை மக்களோ, வியாபார ஊடகங்களோ இதற்கும் மேல் இது குறித்து எதுவும் பேசுவதாய் இல்லை.
செய்ய வேண்டிய அனைத்து வழி முறைகளையும்,போராட்ட உத்திகளையும் செய்து பார்த்தாயிற்று. ஆனால் இன்னமும் அணு உலை நிர்வாகம் முன்பு சொன்ன அதே பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதாய் இல்லை.இந்த நாடும் தன் அணுக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதாய் உத்தேசம் இல்லை.மாறாக இன்னும் அதிக அணு ஒப்பந்தங்களில் தான் முனைப்பு காட்டுகிறது.நீதி மன்றங்களும் வாய் திறக்கப் போவதில்லை.
அடுத்து என்ன தான் செய்வது?
யாரை நொந்து கொள்ள? இந்த தேசத்தையும்,ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும்,மக்களையும் சபிப்பதை தவிர?
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக