வியாழன், 15 ஜனவரி, 2015

அறுபது வயது வந்துட்டா வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா!




அறுபது வயது வந்துட்டா வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா!

அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு எதற்கு அரசின் உயர் பதவிகள்? பணிக்கான கால அவகாச நீட்டிப்புகள்? 

மத்திய அரசின், குறிப்பாக பிரதமரின் நேரடி பார்வையில் இயங்கும், மத்திய அரசு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில், பணி ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? 

அறுபது வயதில் வீட்டுக்கு செல்ல வேண்டிய பலர், பல்வேறு அரசியல் பின்புலங்களைப் பயன்படுத்தி அறுபத்து நாலு, அறுபத்தாறு, எழுபது வயது வரை பணி நீட்டிப்பில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?அதாவது அந்தப் பதவிகளை வகிக்க திறமையான,தகுதியான வேறு நபர்கள் இப்படியான நிறுவனங்களில் இல்லை என்று அர்த்தமா?

அது மட்டும் அல்ல, இப்படி பணி நீட்டிப்பு செய்வதன் மூலம், தகுதியான மற்றும் அரசியல் செல்வாக்கு இல்லாத, பலரது உயர் பதவி வாய்ப்புகள் மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

இஸ்ரோவின் தலைவராக கடந்த மாதம் பணி ஓய்வு பெற்ற அய்யா ராதா கிருஷ்ணனுக்கு வயது அறுபத்து ஐந்து. சரியாக ஐந்து ஆண்டுகள் கூடுதலாக பணி நீட்டிப்பு செய்து இருக்கிறார்கள். அவரது இந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,ஐம்பத்து ஐந்து வயதை ஒட்டிய பலர் இதே தலைவர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்திருப்பார்கள்.

துரதிஷ்டவசமாக அவர்களுக்கு அந்த உயர் பதவி வாய்ப்பு மறுக்கப்பெற்று பணி ஓய்வு பெற்று இருப்பார்கள். இப்படியே வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் தொடர்வது எந்த வகையில் நியாயம்?
தற்போது கிரண் குமார் என்பவரை இஸ்ரோவின் தலைவராக அறிவித்து இருக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே வயது அறுபத்து இரண்டு.அய்யா ராதாகிருஷ்ணனைப் போல இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராக நீடிப்பார் என்றால் அறுபத்தேழு வயது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த பதவிக்கு வர வேண்டிய எத்தனையோ தகுதியான ஐம்பத்து ஐந்து வயதை ஒட்டிய பலருக்கான வாய்ப்பு மறுக்கப் படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

சந்திராயன், மங்கள்யான் போன்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான அய்யா மயில்சாமி அண்ணா துரை, சுப்பையா அருணன், சிவன் போன்றவர்களுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்பது தெரியவில்லை.

இஸ்ரோ என்று மட்டும் அல்ல. மத்திய அரசின் டிஆர்டிஓ ஒன்ற பல நிறுவனங்களில் இந்த சூழல் தான் நிலவுகிறது. முந்தைய அரசாங்கங்களும் இதையே தான் செய்தன.ஆனால் மோடி இளைஞர்களைத் தான் நம்புகிறார், அவர்கள் தான் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார் என்று ஊடகங்கள் சொல்லும் பொய்யான அந்த, இள வயது என்பதன் வரையறை அய்யா கிரண் குமாரைப் போல “அறுபத்து இரண்டு” வயது தானா?

இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? அறுபது வயது என்றால் வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா! வேறு தகுதியான பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கட்டும். அப்படி இல்லையா, அவர்களின் அறிவு கட்டாயம் இந்த நாட்டுக்கு தேவை இன்னும் தேவை என்னும் பட்சத்தில், ஆலோசகர் போன்ற பதவிகளில் மட்டும் உட்கார வையுங்கள்.அதற்காக தகுதியான பலரது வாய்ப்புகளை தட்டிப் பறிக்காதீர்கள்.

சரி! தலைவர் பதவிக்கு பொருத்தமான பலர் ஒத்த வயதுள்ளவர்களாய் இருப்பதாக வைத்துக் கொண்டால்,ஒருவருக்கு மட்டுமே பதவி கிடைக்கும். தகுதி வாய்ந்த மற்றவர்களை அங்கீகரிக்காமலேயே வீட்டுக்கு அனுப்பி விடலாமா என்று நீங்கள் கேட்கலாம்.ஆம் அப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,வயதின் அடிப்படையில் மூத்தவர்களை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தலைவராக வைக்கலாம். அவரது பதவி முடிந்ததும் அடுத்தவருக்கு பதவி கொடுக்கலாம்.சரி ஒரே வயது உடையவர்களாக இருந்தால் என்ன செய்வது? எப்படிப் பார்த்தாலும் எல்லோரையும் மிகிழ்ச்சிப் படுத்த முடியாது. ஒரு சிலரை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பின்னாடி வரும் தகுதியான பலருக்கு இந்த வாய்ப்புகள் மறுக்கப் படும் என்பதை யார் உணர்வது?

மத்திய அரசு மட்டுமா? நம் மாநில அரசில் கூட , பணி மூப்பு அடைந்த பலர் “மக்களின் தலைமை செயலாளர்”, “மக்களின் காவல் துறை ஆணையர்” என்ற பல பதவிகள் இருக்கிறதே:)

இதுவரை எந்த சரித்திரத்திலும் நாம் படிக்காத,கேள்விப் படாத "மக்களின் முதல்வர்" என்ற அசிங்கமான,அருவருக்கத்தக்க, கேலிக்குரிய புது பதவி தமிழ்நாட்டில் இருக்கும் போது "மக்களின் தலைமை செயலாளர்" எல்லாம் அவ்ளோ பெரிய காமெடியா?

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக