செவ்வாய், 20 ஜனவரி, 2015

கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா?


**(கிறிஸ்தவ நண்பர்களுக்கான பதிவு)***
மதங்களை எல்லாம் கடந்து தமிழர்களாக அனைத்து மக்களும் பொங்கல் கொண்டாடி வரும் மகிழ்ச்சியான தருணத்தில், கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா என்றொரு கேள்வியையும் பரவலாகப் பார்க்க முடிகிறது.
பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகை அல்ல மாறாக அது ஒட்டு மொத்த தமிழர்களுக்கான பண்டிகை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து பொங்கல் கொண்டாடலாம் என்று வேதாகமத்தில் சொல்லி இருக்கிறாரா?என்று வேதாகமத்தின் பக்கங்களை புரட்டி புரட்டி வசனங்கள் தேட வேண்டியதில்லை.இயேசு கிறிஸ்து, தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் வேட்டி, சட்டை, சேலை தான் அணிய வேண்டும் என்று வேதாகமத்தில் எங்காவது சொல்லி இருக்கிறாரா?
**தேசத்தில் பயிரிடப்பட்ட அறுவடை செய்யும் போது, அறுப்பின் முதற் பலனாகிய ஒரு கதிர்க்கட்டை தேவாலயத்திற்குக் கொண்டு வந்து கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்" (லேவியராகமம் 23:10,11)**
மதங்களைத் தாண்டி இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு அனைத்திற்கும் உடபட்டவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது. காரணம் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் எவரும் அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர்.
மேற்கத்திய கலாச்சாரம் என்று சொல்லப்படும் எத்தனையோ விடயங்களை, உடைகளை,பழக்க வழக்கங்களை கேள்விகளே கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள்,தன் மண் சார்ந்த பாரம்பரிய பண்டிகைகளுக்குள் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
நீங்கள் பொங்கல் கொண்டாடுவீர்களா?ஆம் நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம்.என் பண்பாட்டு,கலாச்சாரத்தில் எந்த முரண்பட்ட கேள்விகளும் எனக்குள் இல்லை.
ஆனால் எங்கள் பொங்கல் கொண்டாட்ட முறை என்பது வேறு. அது என்ன முறை?
பொதுவாக இங்கே பல கிறிஸ்தவர்கள் சாப்பிடும் போது,ஒரு சிறிய ஜெபம் செய்யும் பழக்கம் உண்டு.ஆண்டவரே இந்த உணவை எங்களுக்குத் தந்ததற்காய் உமக்கு நன்றி, இந்த உணவை சமைத்த கரங்களை நீர் ஆசிர்வதியும் என்று ஓரிரு வரிகளாய் இருக்கும் ஜெபங்கள்.
சமைத்த கரங்களை ஆசிர்வதியும் என்பதைப் போலவே அறுவடைப் பண்டிகையான் எங்கள் பொங்கல் விழாவின் போது, ஆண்டு முழுவதும் எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியை எண்ணிப் பார்த்து,ஆண்டவரே நீர் அவர்களை ஆசிர்வதியும், அவர்களுக்கு நல்ல மழையைக் கொடும், அவர்கள் விவசாயத்துக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலைகளை உருவாக்கிக் கொடும், அவர்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையைக் கொடும், அவர்கள் பொருளாதார தேவைகளை எல்லாம் நீர் ஆசிர்வதியும்,நல்ல சுக பெலன் ஆரோக்கியம் கொடும், அழிந்து வரும் விவசாயத்தை நீர் பாதுகாத்துக் கொள்ளும் என்றும், கடந்த ஆண்டு நீர் அவர்களின் விவசாயத்தை ஆசிர்வதித்தற்காய் நன்றி என்றும்,படைப்பின் காரண கர்த்தாவான இறைவனிடம் உள்ளத்தில் வேண்டிக் கொள்ளுவோமே ஒழிய ஒரு போதும் இயற்கையை வழி பட மாட்டோம்.
நம் விவசாயிகள்,அவர்களின் விவசாயத்துக்கு நன்றி சொல்லும் விதமாக சூரியனையோ, மழையையோ,இயற்கையையோ என்று எதற்கு வேண்டுமானாலும் நன்றி சொல்லிக் கொள்ளட்டும்.
ஆனால் நம்மைப் பொறுத்த வரைக்கும் படைப்பையோ, இயற்கையையோ அல்ல,மாறாக படைத்தவன் ஒருவனே ஆராதனைக்கும், போற்றுதலுக்கும், வழிபடுவதற்கும் உரியவன் என்ற எண்ணமும்,தெளிவும் என் மனதில் இருக்கும் வரை,பொங்கல் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
எத்தனையோ இந்து மதத்தை சார்ந்த நண்பர்கள் வீடுகளில் திருவிழா காலங்களில் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் அங்கே சாப்பிடுவதற்கு முன், நீங்கள் உங்கள் கடவுளுக்கு படைக்காத உணவு என்றால் சாப்பிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று வெளிப்படையாக சொல்லி,அவர்கள் கடவுளுக்கு படைக்காத உணவை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.படைக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது என்ற கிறித்துவ போதனையின் தெளிவு உண்டு.அதற்காக உங்கள் வீடுகளில் சாப்பிட மாட்டேன் என்று அடுத்தவர் மனதை புண்படுத்தும் எண்ணம் ஒருபோதும் இல்லை. பண்டிகை நாளில் நம் வீட்டுக்கு வந்த ஒருவர் நம் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் நமக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்? அதைப் போலத் தானே மற்ற மனிதர்களும். உடன்படாத விடயங்களை வெளிப்படையாக சொல்லி விட்டால் சிக்கல் இல்லை.படைக்கப்பட்ட உணவை சாப்பிட மாட்டேன் என்று சொல்லி விட்டால் சிக்கல் தீர்ந்தது.
தன்னை நேசிப்பது போல சக மனிதனை நேசிப்பதும், ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பதும்,அடுத்தவர் மனங்களை காயப்படுத்தாத வகையில் நடந்து கொள்வதையும் விட பெரிய கிறித்துவ போதனை வேறெதுவும் இருக்க முடியாது.
கிறிஸ்தவம் என்பது வேதாகமத்தில் இருக்கும் வெறும் போதனைகள் மட்டுமே அல்ல.அது நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய வாழ்வியல் என்ற புரிதல் வேண்டும்.
வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை உள்ள அனைத்துப் பகுதிகளையும் மனப்பாடமாக வைத்திருப்பவர்கள், எந்த கேள்வி கேட்டாலும் வேதாகம வசனத்தோடு சரியான விளக்கம் அளிக்கும் நபர்களில் எத்தனை பேர், தங்கள் ஆண் மகன்களுக்கு திருமணம் செய்யும் போது,பெண்ணைப் பெற்ற தகப்பன்மார்களை கஷ்டப்படுத்தி,கொடுமைப் படுத்தி, அழ வெச்சு வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துள்ளீர்கள்?
எத்தனை கிறித்துவ ஆண் மக்கள்,தன் பெற்றோர் கேட்கும் வரதட்சணை என்பது தவறு,இப்படி அடுத்த குடும்பத்தை அழ வைப்பது மிகப் பெரிய பாவம் என்பதை உங்கள் பெற்றோருக்கு சொல்லி புரிய வைத்து இருக்கிறீர்கள்? அது தான் நடைமுறை வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய மிகப்பெரிய போதனை.
நியாயப் பிரமாணத்தையும்,அதன் சட்டங்களையும் மட்டுமே பிடித்துக் கொண்டு,அதை மட்டுமே வைத்தே அடுத்தவரை குற்றம் கண்டுபிடித்து, அன்பை மறந்து அலைந்த பரிசேயர்கள் என்னும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல அல்லாமல், கிறிஸ்துவின் அன்பை நிலை நிறுத்துவோம்.
வெளிப்புற அடையாளங்களில் அல்ல,.மாற்றம் உங்கள் உள்ளான(ஆத்மா) மனுஷனுக்குள் வர வேண்டும்.
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக