வெள்ளி, 30 ஜனவரி, 2015

குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்!



குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்!
ஒரு குறிப்பிட்ட மாணவனுடன் அதிக நேரத்தை செலவிடுவதாக, தலைமை ஆசிரியை,பதினைந்து வயது மாணவியை பள்ளியில் வைத்து பலமுறை கண்டித்து இருக்கிறார்.ஆனால் அந்த மாணவி கேட்ட பாடில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு,அந்த மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து,உங்கள் மகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்லி இருக்கிறார் தலைமை ஆசிரியை.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து, தனது மகளிடம் அது குறித்து விசாரித்து இருக்கிறார் அந்த பெண்ணின் தாய்..தாய்க்கும் மகளுக்கும் வாய் தகராறு வர, அடுக்கு மாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் அந்த மாணவி.பெங்களூரில் நேற்றைய செய்தி.
ஒரே மகள். தகப்பனார் பெங்களூரின் பிரபல மருத்துவமனையில் புகழ்பெற்ற இதய மருத்துவராகவும், தாயார் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகவும் பணியாற்றுகிறார்களாம்.
அப்படியே அடுத்த பக்கத்தை திருப்பினால்,பதினாறு வயது மாணவன் பள்ளியில் தேர்வுசரியாக எழுதவில்லை என்பதற்காக கைத்துப்பாக்கியால் சுட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்டான் என்ற செய்தி.தகப்பானர் முன்னாள் ராணுவ அதிகாரி.தாய் தந்தை இருவருமே பணிக்கு சென்ற பிறகு வீட்டில் நடந்த சம்பவம். இதுவும் பெங்களூரில் தான்.
பள்ளியில் குழந்தைகளை கண்டிக்க கூடாது என்று ஒரு கூட்ட மக்கள் சொல்வார்கள்.தேர்வு முறை மிகக் கடினம் அதை மாற்ற வேண்டும் என்றும் இன்னொரு கூட்ட மக்கள் சொல்வார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக,குழந்தைகளுக்கு சரியான அன்பு கிடைக்க வேண்டும். அவர்களோடு மனம் விட்டுப் பேச வேண்டும். பருவ கோளாறுகளை எப்படி கையாளுவது,அவர்களோடு எப்படி பொறுமையாக உரையாடுவது போன்றவற்றை பெற்றோர்கள் உணர வேண்டும்.
அந்தப் பருவம்,உளவியல் ரீதியான, பாலியல் ரீதியான சிக்கல்களை கடந்து வரும் மிகவும் சிக்கலான கால கட்டம் என்பதை எல்லாப் பெற்றோரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அந்த விடலைப் பருவத்தில் நாம் கோபம் கொண்டால்,தவறு என்று கடுமையாக கண்டித்தால், விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அல்ல அதீத பக்குவமாய் தான் பேச வேண்டி இருக்கிறது.
வெற்றி தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை நாம் தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். போட்டியான எண்ணங்களை தவிர்க்கும் விதமாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.
அலைபேசி வாங்கித் தரவில்லை, இரு சக்கர வாகனம் வாங்கித் தரவில்லை, கார் வாங்கித் தரவில்லை என்று சின்ன சின்ன சிக்கல்களுக்கெல்லாம் தவறான முடிவை எடுக்கும் எத்தனையோ செய்திகளை பார்க்கிறோம்.
ஆக இந்த காலத்து குழந்தைகளை மிகவும் கவனத்தோடு, கையாள வேண்டிய கட்டாயம் பெற்றோரிடம் இருக்கிறது.அவர்களோடு அதிக நேரம் செலவிடுவது,உரையாடுவது மிக முக்கியம்.
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக