செவ்வாய், 20 ஜனவரி, 2015

எந்த கொள்கையையும் கற்றுத் தராத கல்வி


பட்டம் படித்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஒரு வாதமும், விவாதமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை பட்டப்படிப்பு அரசியலுக்கு தகுதி என்று கட்டாயம் ஆகும் பட்சத்தில், பள்ளிக்கூடமே போகாத பலர் கல்லூரி சான்றிதழோடு தேர்தலில் வந்து நிற்கலாம். காரணம் சான்றிதழ் பெறுவதில் பல கோளாறுகள்,குளறுபடிகள் கட்டாயம் உண்டு.
ஏன் நமது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸமிரிதி இராணி மீதே அப்படியான குற்றச்சாட்டுகள் உண்டு.ஆக இப்படியான பித்தலாட்டங்கள் ஏராளம் நடக்கும்.
சரி. குளறுபடிகள் நடந்தால் அதைத் தானே தடுக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக அப்படியான திட்டமே வேண்டாம் என்பது எப்படி சரியாகும் என்று நீங்கள் கேட்பது சரி தான்.ஆமா படித்தவன் வந்து விட்டால் மட்டும்?
நேற்று வரை பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும்,மோடிக்கு எதிராகவும், காங்கிரசுக்கு எதிராகவும்,ஊழலுக்கு எதிராகவும் பேசியதாக நாடகமாடிய கிரண்கேடி (மன்னிக்க) கிரண்பேடி இன்றைக்கு உலகமகா தலைவர் மோடி பின்னால் சரணாகதி அடைந்து விட்டார்.
ஜன் லோக்பால், அப்படியாக்கும்,ஊழலற்ற ஆட்சியை அமைக்க போறோமாக்கும் என்றெல்லாம் முந்தா நாள் வரைக்கும் வீர வசனம் பேசியதும் இந்த அம்மணி தான்.
நாட்டில் மிகவும் கடினமான தேர்வு என்று சொல்லப்படும் ஐபிஸ் தேர்வெல்லாம் எழுதிய புத்திக்கூர்மையான அம்மணி தான். ஆனால் என்ன கொள்கை இருக்கிறது?கொள்ளையடிப்பவன், கொலை செய்பவனோடு கொஞ்சிக் குலாவி,சமரசம் செய்து தான் பட்டம் படித்தவன்,புத்தி உள்ளவன் அரசியல் நடத்த வேண்டும் என்றால் அந்த மானம் கெட்ட பொழப்பு என்னத்துக்கு?
கொள்கையில் என்ன சமரசம் வேண்டி இருக்கு? சில நேரங்களில் சமரசம் வேண்டும் தான். ஆனால் கட்டாயம் அது தனி நபர்களின் கொள்கை சமரசம் இல்லை. பொது மக்களுக்கு ஒரு மிகப் பெரும் சிக்கல் வரும் என்றால் சில நேரங்களில், சிறிய சமரசங்கள் தவிர்க்க முடியாதது.
வேறு வழியே இல்லாமல் காந்தியின் பிடிவாதத்துக்கு,அண்ணல் அம்பேத்கர் இறங்கி வந்த சின்ன சமரசத்துக்கு காரணம் அந்த சமரசம் இல்லாத பட்சத்தில் காந்தியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், தான் எந்த மக்களின் உரிமைக்காக போராடினாரோ,அந்த மக்களுக்கே ஆதிக்க சாதியினரால் உயிர் சேதம் ஏற்படலாம் எனும் போது,அவர் செய்து கொண்ட சின்ன சமரசம். ஆனால் அப்படிப்பட்ட சமரசங்களை இங்கே பேசுவதற்கு கூட பலருக்கு தகுதி கிடையாது.
இங்கே நடக்கும் சமரசங்கள் என்பது தனி மனிதர்கள் தங்கள் பதவிக்காக, அதிகாரங்களுக்காக,பணத்துக்காக, புகழுக்காக செய்து கொள்ளும் சுயநல சமரசங்கள்.பொது மக்கள் நலன் காக்கும் சமரசம் எதுவும் இல்லை.
உண்மையில் பார்த்தால் எந்த கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் இவர்களில் பெரும்பாலானோர் நாடகமாடும் கூத்தாடிகளாகத் தான் ஜந்தர மந்தரில் இருந்திருக்கிறார்கள் என்பது காலம் நமக்கு உணர்த்தும் பாடம்.
ஜந்தர் மந்தர் என்று மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த நாடகக் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்கள் தான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டும். எவன் உண்மை எவன் போலி என்று கண்டறிவதில்.
அதெப்படி ஒரே ஒரு கிரண்பேடியின் உதாரணத்தை வைத்து இப்படி முடிவெடுக்க முடியுமா?பட்டம் படித்த எவனுமே நல்ல அரசியல்வாதியா இல்லையா? விதி விலக்குகளாய் ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் விதி விலக்குகளை வைத்து ஒரு போதும் வாதிட முடியாது.
கிரண் பேடி இன்றைய சூடான விவாதம் என்பதால் அவரை உதாரணமாய் எடுக்க வேண்டி இருக்கிறது. மற்றபடி பழைய காங்கிரஸ் ஆட்சியிலாக இருக்கட்டும், இன்றைய பாஜக ஆட்சியில் ஆகட்டும்.
உலக மகா படிப்புகள் படித்த, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எல்லாம் போய் படித்த,பாடம் எடுக்குற உலக அறிவாளிகள் மட்டும் என்ன செய்து கிழித்து விட்டார்கள்? பெரும் முதலாளிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு நாட்டை கொள்ளை அடிக்கவில்லையா? ஊழல் செய்யவில்லையா?
ஒரு பட்டம் படிக்காத காமராசர் செய்த நலத் திட்டங்களை,இங்கே உலக மகா பட்டம் வாங்கிய எவனாவது செய்வானா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே! இன்னும் சொல்லப் போனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம்.
மக்களை நேசிப்பவன், மக்களோடு மக்களாக இயங்குபவன், எளிமையை விரும்புபவன்,மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடிய அடிப்படை அறிவுள்ளவன்,ஊர்க்காசை கொள்ளையடித்து குடும்பம் வளர்ப்பது தவறு என்ற அடிப்படை அறக் கோட்பாட்டை கடை பிடிப்பவன், தனி மனித ஈகோக்களை மக்களுக்காக விட்டுக் கொடுப்பவன், விமர்சனங்களை சகிக்கக் கற்றுக் கொண்டவன், மக்களுக்கு எது நன்மை தீமை என்பதை உணரத் தெரிந்தவன், கார்ப்பரேட் களவாணிகளையும், முதலைகளையும் எதிர்க்கத் தைரியமும் துணிச்சலும் உள்ளவன், மண்ணையும் மக்களையும் நேசிப்பவன்,இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன், விவசாயத்தை நேசிப்பவன், உழைப்பவனுக்கு சரியான கூலி போய் சேர வேண்டும் என்ற கோட்பாடு கொண்டவன், மக்களின் போராட்டங்களை முதலில் காது கொடுத்துக் கேட்பவன், பின்பு முடிந்தவரை சாதுர்யமான தீர்வுகளை முன் வைத்து சிக்கல்களை சரி செய்பவன், சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன், அனைத்து மக்களையும் அவர்களின் நமபிக்கைகளையும் மதிப்பவன்.
இப்படியான பல தகுதிகள் தான் அரசியலுக்கு வர விரும்பும் ஒருவனுக்கு இருக்க வேண்டும்.இவை எதுவும் இல்லாமல் பட்டபடிப்பை முதல் தகுதியாக முன்னிறுத்துவதோ, அது குறித்து விவாதிப்போ தேவை அற்றது.
ஆமா நீங்க சொல்ற கற்பனையான நபர் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுங்கி ரொம்ப காலம் ஆச்சு. இனி அப்படிப்பட்ட கற்பனையான நபர்கள் எல்லாம் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
அப்புறம் எதுக்கு அந்த மானம் கெட்ட பொழப்பு?
ஒரு தனி மனிதனா கூடுமானவரைக்கும் நல்லவனா, நம்மாலான உதவிகளை நாலு பேருக்கு செஞ்சுட்டு, சமூகத்துக்கு எந்த கெடுதலும் செய்யாமல், நம்ம பொழப்பை பார்த்துட்டு போகலாம் அப்டிங்கிறேன்:) அதுவே சமூகத்துக்கு செய்யற பெரிய சேவை தான்:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக