வியாழன், 15 ஜனவரி, 2015

**“முன்னாள்”** எழுத்தாளர்கள்




**“முன்னாள்”** எழுத்தாளர்கள்.

இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், சண்டைகள்,கை கால் உடைப்புகள்,அதிக பட்சமாக மரணம் கூட தன்னை வந்து சேரலாம் என்று முன்னறிந்து ஏற்கும் அர்பணிப்பு கொண்டவர்கள் மட்டுமே இராணுவத்தில் இருக்கலாம். இயலாதவர்கள் வேறு பணி செய்யலாம்.இதில் எவரையும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.ஆனால் உண்மையான ராணுவ வீரர்களுக்கென்று ஒரு மரியாதை எப்போதும் உண்டு.

ராணுவப் பணியில் சேர்வதும்,சேராததும் அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று அதைப் போல ராணுவப் பணி வேண்டாம் என்று திரும்பி வருபவனை,நீ அப்படியெல்லாம் வரக் கூடாது என்று நிர்பந்திக்கவும் முடியாது.

அதற்காக வளர்ந்த நாடுகளின் ராணுவத்தில் இருப்பதைப் போன்ற அதி நவீன தொழில் நுட்பங்கள்,.ஆயுதங்கள்,களங்கள் இருந்தால் மட்டுமே இந்திய இராணுவத்தில் நான் சேருவேன், அப்போது தான் எதிரிகளின் தாக்குதலை தடுத்து என் உயிருக்கான பாதுகாப்பை அதிகரிக்க முடியும் போன்ற எவ்வித நிபந்தனைகளையும் முன் வைத்து, இந்திய ராணுவத்தில் எவரும் சேர்வது போல தெரியவில்லை.

இராணுவத்தில் சென்று பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு வித்தியாசமான போர்க் களங்கள், உயிராபத்துக்கள் மற்றும் ஏனைய சிக்கல்கள் குறித்து அதீத கவலை இருப்பதில்லை.காரணம் இவற்றையெல்லாம் முன்னறிந்து,தன்னை தயார் படுத்திக் கொண்ட பிறகே,அந்த பணிக்கு அவன் தன்னை ஒப்புக் கொள்கிறான்.

***உண்மையான*** எழுத்தாளனும்,படைப்பாளியும்,போராளியும் அப்படித் தான் இருக்க வேண்டும்.ஆயுதங்கள் தான் வேறே தவிர,பணி ஒன்று தான்.ராணுவ வீரனுக்கு ஆயுதம் துப்பாக்கி.எழுத்தாளனுக்கு ஆயுதம் பேனா.களத்தைப் பார்த்து,அதன் ஆபத்துகள், சூழ்ச்சிகளையெல்லாம் பார்த்த பிறகு இயலாதவர்கள் வெளியேறுவது அவரவர் விருப்பம்.

அதற்காக வளர்ந்த நாடுகளைப் போன்ற கருத்து சுதந்திரம் இங்கே இல்லை,அதனால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்றால் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு விதம்.சூழல்கள் வெவ்வேறு தான்.இந்த களம் இன்னும் பக்குவப்பட வேண்டி இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.அதற்காக அமெரிக்காவைப் போல, பிரான்சைப் போல கருத்து சுதந்திரத்துக்கான சூழல் மாறும் வரை எழுத மாட்டேன் என்பவர்களை ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்?

படைப்பாளி தன் படைப்புகளை உருவாக்கிக் கொண்டே,படைப்பு சுதந்திரத்துக்காக போராடுவது தான் சரியான வழிமுறை என்று எண்ணுகிறேன்.இரண்டும் ஒரே வேளையில் நடக்க வேண்டிய விடயங்கள்.

அப்படியெல்லாம் இல்லை,வளர்ந்த நாடுகளைப் போன்ற கருத்து சுதந்திரம் இந்தியாவில்/தமிழ்நாட்டில்/கிராமத்தில் வரும் வரை காத்திருப்போம் அதுவரை எழுத மாட்டோம் என்று காத்திருப்பவர்கள் காத்திருக்கட்டும். அவர்கள் தங்கள் பேனாவை மௌனிக்கட்டுமே!

இன்றைய அதி நவீன தொழில் நுட்ப மற்றும் கருத்து சுதந்திர வளர்ச்சிக்கு பின்,கருத்து சுதந்திரம் குறித்து அதீத கவலைப் படும் நாம்,இந்த அளவிற்கு கூட கருத்து சுதந்திரம் இல்லாத முந்தைய காலங்களில்,உண்மைகளை எழுதி,துணிந்து நின்று அதற்காகவே உயிரை விட்ட எத்தனையோ எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. அவர்களும் அவர்கள் எதிர்பார்த்த கருத்து சுதந்திரம் வரும் வரை காத்து இருந்திருந்தால்,பல உண்மைகள் வெளி உலகுக்கு தெரியாமல் போய் இருக்கும். கருத்து சுதந்திர முன்னேற்றங்களும் நடந்தேறாமல் இருந்திருக்கும்.

அதற்காக எழுத்தாளர்கள் என்றால் உயிரை விட வேண்டும் என்றோ, இன்றைய கருத்து சுதந்திரம் போதும் என்றோ சொல்ல வரவில்லை. கருத்து சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது ஒரு தொடர் நிகழ்வு.

உண்மைக்காக துணிந்து எதிர்த்து நிற்பவன்,உயிரை விடுபவன் தான் எழுத்தாளனா, போராளியா அவனுக்கு குடும்பம் இல்லையா? ஏன் மிரட்டலுக்காக, பணத்துக்காக, பதவிக்காக உண்மைகளை திரித்து எழுதுபவர்கள்,பேச வேண்டிய நேரங்களில் மௌனம் காப்பவர்கள்,புற முதுகு காட்டுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா என்றால் பதிலை நீங்களே முடிவு செய்யுங்கள்.

கருத்து சுதந்திரத்துக்காக தான் போராட வேண்டுமே ஒழிய எழுத்தாளனை குறை சொல்லக் கூடாது என்றால்,எழுத்தாளனை நாம் குறை சொல்லவில்லை.எழுத வேண்டும் என்று துணிந்து விட்டால் எதிர்ப்புகளை சமாளிக்க தைரியம் வேண்டும்.தைரியம் இல்லாதவர்கள் எழுதாமல் இருப்பதே நல்லது.

எப்படி ராணுவத்தில் இருந்து ஓடி வந்த பிறகு அவன் ராணுவ வீரன் இல்லையோ,அப்படியே மிரட்டலுக்கு பயந்து ஓடுபவன் எழுத்தாளன் அல்ல,மாறாக "முன்னாள்" எழுத்தாளன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.எழுத்தாளன் என்ற அடைமொழி மட்டும் இனி வேண்டியதில்லை.மற்றபடி தனிநபர்களின் முடிவுகளை விமர்சிக்க இங்கே ஒன்றும் இல்லை. முடிவுகள் அவரவர் விருப்பம் மற்றும் தனி நபர் தைரியம் சார்ந்த ஒன்று.

மற்றபடி கருத்து சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டியது சமூகத்தின் கடமை.

**இராணுவத்துக்கு பதிலாக உண்மையான போராளிகள் என்று எடுத்துக் கொண்டாலும் பொருந்தும்**

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக