செவ்வாய், 20 ஜனவரி, 2015

கட்ஜு அப்படி என்ன தான் சொன்னார்?


மார்க்கண்டேய கட்ஜு காத்ரீனா கைப்- ஐ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிறார்.நடிகைகளை அரசியல் பதவிகளில் உட்கார வைப்பது நாட்டுக்கு நல்லது என்று சொல்லி இருக்கிறார்.இவரெல்லாம் மனுஷன் தானா, இவர் வயசுக்கும் பொறுப்புக்கும் இப்படி பேசலாமா, இந்த வயசுலயும் இவர் போடுற ஆட்டத்தைப் பார்த்தியா என்றெல்லாம் கோஷங்களைப் பார்க்க முடிகிறது.
ஆனால் கட்ஜு சொன்ன கேலியான விடயத்தின் முதல் பகுதியை விட்டு விட்டார்கள்.தங்களுக்கு தேவையான இரண்டாம் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு போட்டுத் தாக்குகிறார்கள்.
அதாவது இந்த நாட்டின் அரசியல்வாதிகளெல்லாம் வானத்தை இங்கே கொண்டு வந்து இறக்கிடுவேன்,நிலாவைப் பிடிச்சு பூமிக்கு கொண்டு வருவேன், உங்க வீட்டு குழாய்களில் எல்லாம் பாயாசம் வர வைப்பேன்,எல்லாருக்கும் வேலை தந்திடுவேன்,நாங்க மட்டும் ஆட்சிக்கு வந்தா சோறை சமைச்சு உங்க வீட்டுக்கே எடுத்து வந்து, உங்களுக்கு ஊட்டி விட ஆளையும் சேர்த்தே அனுப்பி வைப்போம் என்று வாயிலே வடை மட்டுமே சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட புழுகுணிகளால் நாட்டு நலனுக்கோ மக்களுக்கோ எந்த நலனும் இருக்கப் போவதில்லை. மக்கள் வெறுமனே ஏமார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆக வெறும் வடை சுடும் வேலையை மட்டுமே செய்யும் அரசியல்வாதிகளுக்கு பதிலாக,நடிகர் நடிகைகளை அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுத்தால்,குறைந்த பட்சம் அந்த அழகான நடிகைகளின் முகத்தைப் பார்த்தாவது மக்கள் சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்,அதுவாவது மிஞ்சுமே என்று மிக கேலியாக சொல்லி இருக்கிறார்.
கட்ஜு சொன்ன இந்த நகைச்சுவையில் எதுவுமே செய்யாத வெட்டி அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டை அடி இருக்கிறது,அதைப் போலவே மக்கள்(கட்ஜுவை சேர்ப்பதும்,சேர்க்காததும் அவரவர் விருப்பம்)இன்னமும் நடிகர்/நடிகைகளைப் பார்த்தால் ஆ என்று வாய் பிளந்து உயிரை விடும் அளவுக்கு சினிமாக்காரர்களோடு நெருங்கி இருக்கும் மடத்தனத்தையும் கேலி செய்கிறது.அப்படித் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
சரி அதற்காக ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர், இப்படியெல்லாம் பேசலாமா என்றால்,எப்போதுமே இறுக்கமாகவே பேச வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?
அது மட்டுமல்ல இந்த பதிவு நான் மிகவும் கேலியாக சொன்னவிடயம் தான், ஆனாலும் சிலர் அதை தவறாக எண்ணி,விமர்சிக்கப்படும் அளவுக்கு சென்றதால்,அந்தப் பதிவுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என்றும் எழுதி இருக்கிறார்.
***எந்த ஒரு விடயத்தையும் அது சொல்லப்ப்ட்டதற்கான சூழல்,அதற்கு முந்தைய,பிந்தைய விடயங்களை எல்லாம் சேர்த்தே பார்ப்பது தான் சரியாக இருக்க முடியும்.நடுவுல சொன்ன நமக்கு சாதகமான ஏதாவது ஒரு வார்த்தையையோ, வாக்கியத்தையோ, கருத்தையோப் பிடித்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக கூச்சலிடுவது தவறு.
மாறாக முழுமையாய் படித்து புரிந்து கொண்ட பின்னர் விவாதிப்பதே சரியாக இருக்க முடியும் என்பதே நாம் சொல்ல வரும் செய்தி! ***
***குறிப்பு: பெருமாள் முருகனின் கதைக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.***
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக