திங்கள், 27 ஜனவரி, 2014

அரசியல் தரகராகிப் போன, ஒரு போலி காந்தியவாதி!


விகடனில் ஆம் ஆத்மி குறித்தும்,கேஜ்ரிவால் குறித்தும் கடுமையாக விமர்சனம்(??) வைத்திருக்கிறார் மணியன் அவர்கள்! அதை விமர்சனம் என்று சொல்வதை விட,மணியனின் வயிற்று எரிச்சலும்,கடுப்பும் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்!அந்த அளவுக்கு ஆம் ஆத்மி மீது கொலை வெறி!

அய்யா மணியன் அவர்கள் நல்ல பேச்சாளர். மிகச்சிறந்த சொற்பொழிவாளர்! இது எல்லோருமே அறிந்த ஒன்று தான்! அவர் காவிகளுக்கு காவடி தூக்கி,கொலை வெறிப்பாதையில் மாறும் வரை அவரது பேச்சுக்கள் ஓரளவுக்கு நமக்கும் உவப்பே!ஆனால் பொதுவாக நல்ல சொற்பொழிவாளர்கள் பலர்,தாங்கள் வாய் கிழிய பேசும் பேச்சுக்கும்,அவர்களின் செயலுக்கும் சற்றும் சம்மந்தம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள் என்பது தான் எதார்த்தம்! நடைமுறையில் தமிழ்நாட்டு அரசியலில் நல்ல உதாரணங்கள் அய்யா மணியனும், வைகோவும்!

நாஞ்சில் சம்பத் நன்றாக பேசக் கூடியவர். அவரது இன்றைய அம்மா அடிவருடி பேச்சுக்கள் நமக்கு ஒவ்வாதவை!ஆனால் முந்தைய கால கட்டங்களில் அவரது மேடை பேச்சுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.

சென்னையில் முதுநிலை பொறியியல் படித்த கால கட்டம் அது. சுமார் பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு! செமஸ்டர் தேர்வுக்கு முந்தின நாள்,மாலையில் தேர்வுக்கு தேவையான பேனா பென்சில் போன்ற பொருட்களை வாங்குவதற்காக ஆதம்பாக்கத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு அரை மணி நேரத்தில் வந்து விடலாம் என்று போய்க் கொண்டு இருந்தேன். மாலை ஏழு மணி இருக்கும். போகிற வழியில் பார்த்தால் நாஞ்சில் சம்பத் ஒரு மேடையில் அரசியல் பேசிக் கொண்டு இருக்கிறார். பேச்சைக் கேட்டதும் நான் நகரவே இல்லை.அப்படியே அந்த இடத்தில் ஒன்பதரை மணி வரைக்கும் நின்று அவரது பேச்சைக் கேட்டு விட்டே நகர்ந்த ஞாபகம். தேர்வுக்கு முந்தின நாள் இரண்டரை மணி நேரம் நாஞ்சில் சம்பத் பேச்சுக்காக செலவழித்ததும்,அவர் அந்த மேடையில் ஜெயலலிதா குறித்து என்னவெல்லாம் பேசினார் என்பதும் இன்று வரை ஞாபகம் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களைக் கவரும் பேச்சு.

தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த பேச்சாளர்களில் அய்யா வைகோவும்,மணியன் அவர்களும் எப்போதும் உண்டு.அய்யா வைகோ அவர்கள் மிகுந்த உணர்சிகரமாக பேசக் கூடியவர்.ஆனால் மணியன் அவர்களின் பேச்சு வேறு வகை. அதீத உணர்ச்சி பெருக்கோடு எல்லாம் பேச மாட்டார். ஆனால் மற்றவர்களை கவரும் விதமாக பேசக் கூடியவர்.

அவரது பேச்சில் உள்ள உண்மை,பொய்களை அல்லது காலத்துக்கேற்ப  அவர் கையில் எடுக்கும் சந்தர்ப்பாவாத உதாரணங்களை எல்லாம் நான் புறம் தள்ளி விடுவதுண்டு.அய்யா வைகோ அவர்கள் உகாண்டா,எத்தியோப்பியா கியூபா சூடான் அமேரிக்கா ஐரோப்பா என்று கடைசியில் தமிழ் ஈழம் என்று முடிப்பார். மணியன் அவர்களோ காந்தியம் காந்தியம் காந்தியம் என்று பேசி,ஆங்கில பழமொழிகள்,சில மேற்கோள்கள் என்று சொல்லி முடிப்பார்.

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராளிகளை ஒருபோதும் ஏற்காதவர் மணியன்.ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் வைகோ. நிறைய முரண்கள் இருந்த இவர்கள் ஒன்றுபட்டு நிற்கும் இடம் மோடி என்ற இனப்படுகொலையாளனை பிரதமர் ஆக்கியே தீர வேண்டும் என்ற புள்ளியில்!

அய்யா மணியன் அவர்கள் சமீப காலமாக பேசும் பேச்சுக்கள் அனைத்தும் நியாயம் தானா,அவரது பேச்சில் உண்மை இருக்கிறதா அல்லது வெறும் சந்தர்ப்பவாத பேச்சுக்களா,காந்தியத்துக்கு ஒவ்வும் கருத்துக்களா என்பதை எல்லாம் அவரது சமீபத்திய மோடி நிலைப்பாடுகளில் இருந்தே விளங்கி கொள்ளலாம்!

ஒரு தேர்ந்த அரசியல்வாதி, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் அய்யா மணியன் அவர்கள்.
ஆனால் ஒரு புதிய ஆட்சியை விமர்சிக்க,குறைந்த பட்சம் ஒரு ஆறுமாத காலமாவது வேண்டும் என்று சொன்னார் அய்யா காமராசர். ஆனால் மணியன் அவர்கள் அவசர குடுக்கைத் தனமாக விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்.

காங்கிரசை படுதோல்வி அடைய செய்து விட்டு, திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற போது, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போது,அய்யா காமராசர் சொன்ன வார்த்தைகள் தான் "ஒரு ஆறுமாத காலத்துக்கு நான் அவர்களை விமர்சனம் செய்ய மாட்டேன்".

ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை காமராசர் காமராசர் என்று பேசும் அய்யா மணியன் அவர்களால், எப்படி வெறும் மூன்று வார காலம் மட்டுமே டெல்லியில் ஆட்சி நடத்தும் கேஜ்ரிவால் கட்சி மீது,இத்தனை கடுமையான விமர்சனங்களை வைக்க முடிகிறது அல்லது ஏன் எதிர் கட்சிகள் கூட வைக்காத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை மணியன் வைக்கிறார் என்பதற்கு,அவரது சமீபத்திய பாரதிய ஜனதா/மோடி ஆதரவையும் சேர்த்தே கணக்கிட வேண்டி இருக்கிறது!

அய்யா வைகோ தான் அரசியல் கட்சி நடத்துகிறார். அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தேர்தல் கூட்டணி மட்டும் தான், கொள்கை கூட்டணி இல்லை என்று அவர் என்னென்ன சொன்னாலும், கூட்டணி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி விடும் இயல்பு அவருடையது. அது அவரது கட்சிக்கு ஏதாவது ஒரு பலனைத் தரும் என்பது அவரது எண்ணம். ஆனால் அரசியல் கட்சியாக இல்லாமல்,வெறும் இயக்கம் நடத்தும் மணியன் அவர்களும் மோடியின் கொள்கை பரப்பு செயலாளராக மாற வேண்டிய அவசியம் என்ன? அய்யா வைகோவிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பாரோ!

எப்போது பார்த்தாலும் காந்தியம், கொள்கை அது இதுவென்று மூச்சு முட்ட பேசும் அய்யா மணியனுக்கு, காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரிப்பதும், குஜராத் மண்ணில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற இனப்படுகொலையாளன் மோடி என்ற மோசமானவனை ஆதரிப்பதும் தான் காந்தியம் கற்றுக் கொடுத்ததா? குஜராத்தில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பாதுகாப்பாக வாழ மோடி தான் காரணம் என்று பேசுகிறார்.ஏற்கனவே நடந்த படுகொலை கணக்கை விட்டு விட்டார் போலும்!

மணியன் அவர்களுக்கு இந்த மறதி எல்லாம் இருப்பது இயல்பு தானே! காலம் காலமாக இதைத் தானே அவர் செய்கிறார்! ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?

எண்பதுகளில் இந்திய அமைதிப்படை,தமிழீழ மண்ணில் செய்த அட்டூழியங்களை எல்லாம் வாய் திறந்து பேசி இருக்கிறாரா? இந்திய இராணுவத்தையோ அல்லது, அதை அனுப்பிய ராஜீவ் காந்தியையோ கண்டித்ததுண்டா? தவறு என்று பேசியதுண்டா? ஆனால் விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்ப்பார்.ராஜீவ் படுகொலைக்காக புலிகளை கடுமையாக விமர்சிக்கும் மணியனுக்கு ஏன் ராஜீவ் அனுப்பிய ராணுவம் ஈழ மண்ணில் செய்த பாலியல் வன்முறைகள் படுகொலைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் போனது? பிரதம வேட்பாளர் உயிர் மட்டும் தான் உயிரா? தமிழீழ மண்ணில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான உயிர்கள் எல்லாம் மயிருக்கு சமமா?

2009 இல் நடந்த இனப்படுகொலை காலம் வரை காங்கிரசின் அத்தனை செயல்பாடுகளையும் ஆதரித்த ஒரு மனிதன்,எப்படி ஒரு நியாயமான மனிதனாக இருப்பான்? ஏன் இனப்படுகொலை நடந்த போது மட்டும் தான் காங்கிரஸ் மோசமாக நடந்து கொண்டதா? 2009 இல் நடந்த இனப்படுகொலையின் ஆரம்பம் என்பது 2004 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து உடனேயே ஆரம்பித்து விட்டது என்பதை சிறு குழந்தை கூட அறியும்.

ராணுவப் பயிற்சி, ராடார், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் இலங்கைக்கு கொடுத்தது இந்திய ராணுவம் என்பதை அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள். இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்பே வைகோ அவர்கள் பலமுறை கண்டித்து பேசி இருக்கிறார்.

அப்போதெல்லாம் மணியன் அவர்களுக்கு தெரியவில்லையா காங்கிரஸ் தவறு செய்கிறதென்று? அமைதிப் படை அட்டூழியங்களையே சகித்துக் கொண்டிருந்த மனிதன் என்ன நியாயம் பேசி விடப் போகிறார்?

வாழ்க்கை முழுவதையும் காங்கிரசில் கழித்து விட்டு, இன்று கடைசி காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இல் சேர்ந்து விட்டார் போலும்! இன்றுவரை விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர், ராஜீவ் கொலை குறித்து காங்கிரஸ்காரர்கள் பேசுவது போலவே இன்றுவரை பேசுபவர்! நோய் நாடி நோய் முதல் நாடி என்று காரணத்தை தேடி போய் பார்க்க மணியன் அவர்களுக்கு துணிவு இருக்கிறதா?

ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்று சொல்லத் தெரிந்த அய்யா மணியனுக்கு மோடி மட்டும் எப்படி இந்தியாவை மீட்க வந்த மீட்பனாக தெரிகிறார்? சிறுபான்மை என்ற ஒரே காரணத்துக்காக இங்கே ஆயிரக்கணக்கான உயிர்களை கொல்லத் துணிந்த மோடி, மணியனுக்கும் வைகோவுக்கும் மீட்பனாக தெரியும் போது, இலங்கையில் ராஜபக்சே சிங்களனுக்கும் மீட்பனாக தானே தெரிவான்! இதைக் கேட்டால் இந்த ஒப்பீடு எப்படி சரியாகும் என்று வித விதமான கேள்விகளை முன் வைப்பார் அய்யா மணியன். பதில் சொல்ல இயலாத கேள்விகள்!

காந்தியம் இதைத் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஹிட்லரை ஆதரிக்கலாம், முசோலினியை ஆதரிக்கலாம், ராஜபக்சேவை ஆதரிக்கலாம், கூடவே மோடியை ஆதரிக்கலாம்!

கொலைகாரனையும், கொள்ளைகாரனையும் ஆதரிக்க துணிந்த அய்யா மணியன் அவர்களிடம், இதற்கான விளக்கம் கேட்டால்,பத்து மணி நேரம் பேசிப் பேசி விளக்கம் சொல்வார். ஆனால் அது ஏற்கும் விதமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் முடிவு செய்வது? நாம் தான் முடிவு செய்ய வேண்டும்! கட்டாயம் மனசாட்சி உள்ளவன் ஏற்க மாட்டான்!

மோடியை ஆதரிக்க போலியான வளர்ச்சி, மோடி அலை, காங்கிரஸ் எதிர்ப்பு, ஈழப் படுகொலை என்று என்னென்ன காரணங்களை தன்னுடைய வசீகர வார்த்தைகளால் அய்யா மணியன் வைத்தாலும், காந்தியம் பேசும் ஒரு மனிதர் கொலைகாரன் மோடியை ஆதரிப்பதை விட அயோக்கியத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

கேட்டால் இது கொள்கை கூட்டணி இல்லை, தேர்தல் கூட்டணி என்பார்கள். வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமே என்று நீங்கள் விளக்கம் சொல்வீர்கள் என்றால், மோடியின் குற்றங்களை மற்றவர்கள் குறை சொல்லும் போது நீங்கள் மூடிகிட்டு இருக்கணும்! வக்கலாத்து வாங்கக் கூடாது! தேர்தல் கூட்டணி தான் என்றால்,ஒரு கொலைகாரனின் தனி மனித குற்றங்களை கேள்வி கேட்கும் போது, நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே! வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.

மாற்றம் குறித்து பேசும் ஒரு மனிதன் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் அயோக்கியர்கள் என்று பேச வேண்டுமே ஒழிய, மாறாக மோடி நல்லவர் என்று பேசும் ஒரு மனிதனின் வார்த்தைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை வேறு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

பாரதிய ஜனதாவை கடுமையாக ஆதரிக்கும் அய்யா மணியன் அவர்கள்,காங்கிரஸின் தற்போதைய எந்த கொள்கைகளில் பாரதிய ஜனதா மாறுபட்டு நிற்கிறது என்று சொல்ல முடியுமா என்றால் கட்டாயம் முடியாது. காரணம் பொருளாதார கொள்கை, வெளியுறவு கொள்கை, தமிழர் நலன்,ஊழல் எல்லாவற்றிலும் இரண்டு கட்சிகளுமே தராசில் வைத்தால் சரி சமமாக நிற்பார்கள். பிறகெப்படி மேடைக்கு மேடை மோடி புராணம் பாடுகிறார் என்பது அந்த காந்திக்கு தான் வெளிச்சம்:)

ஒரு பக்கம் கேஜ்ரிவால் கட்சியில் இத்தனை மோசமான மனிதர்களா என்று கேட்கிறார்! எல்லோருமே பதவி வெறி பிடித்தவர்கள் போலவும் பிதற்றுகிறார். கேஜ்ரிவால் அறிஞர் அண்ணாவைப் போல இருக்கட்டும், ஆனால் அவரது கட்சிக்காரர்கள் தற்போதைய திமுக வினரைப் போல இருப்பதாக குறைபட்டுக் கொள்கிறார் மணியன் அய்யா!

முதலில் மணியன் அய்யா எங்கு பேசினாலும்,தேர்தல் பாதை திருடர் பாதை என்று பெரியார் சொன்னதையும் சேர்த்தே சொல்லுகிறாரே! அப்படியானால் வைகோவும் அந்த திருடர் பாதையில் தான் வந்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கிறாரா? அல்லது அய்யா மணியன் அவர்கள் அவர்களும்,காங்கிரஸ் என்ற திருடர் பாதையில் தான் வெகு காலம் குப்பை கொட்டினார் என்பதையும் சேர்த்தே ஒப்புக் கொள்வாரா?  காந்திய மக்கள் இயக்கம் அடுத்து ஒரு தேர்தல் அரசியல் இயக்கமாக மலரப் போவதாக சொல்கிறார்களே! அப்படியானால் நீங்களும் திருடர் பாதைக்கு தான் திரும்புகிறீர்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா?

எதற்கு இந்த தேவை இல்லாத திருடர்பாதை வாக்கியங்கள்?

சரி! அய்யா வைகோவை நீங்கள் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்களே! கேஜ்ரிவால் கட்சி ஆட்கள் எல்லாம் மோசமானவர்களாக சித்தரிக்க முயலும் உங்களிடம் ஒரு கேள்வி! (ம)ற்றுமொரு திமுக குறித்தும், அந்த கட்சியில் உள்ளவர்கள் குறித்தும் உங்கள் பார்வை என்ன? கட்சியில் இருக்கும் எவருக்கும் ஆட்சி அதிகார ஆசை இல்லையென்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மக்கள் சேவை ஒன்றுக்காக மட்டுமே மிக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்று புனைய வருகிறீர்களா?  

(ம)ற்றுமொரு திமுக வில் பலர் தாங்கள் திமுக வில் இருந்திருக்கலாமோ என்று இன்று வரை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். தன்னைப் போன்று கட்சியில் இருந்தவர்கள் எல்லாம்,திமுக வில் பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு இந்த கட்சியினால் எந்த பலனும் கிட்டவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் பலரை மணியன் அறியமாட்டார் போலும். வேட்டைக்கு காத்து நிற்கும் ஓநாய்களைப் போல பதவிக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் திமுக தொண்டர்கள் மீதும், அந்த கட்சி மீதும் வைக்கும் அதே விமர்சனங்கள் (ம)ற்றுமொரு திமுக மீதும் உண்டு என்பதை மணியன் அய்யா அறிவாரா? கடந்த காலங்களில் (ம)ற்றுமொரு திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறியாதவரா நீங்கள்? மிகவும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்களா என்பதை எல்லாம் மணியன் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்!

கட்சி தலைமையகமான தாயகமே எங்களுக்கு தான், கட்சி பெயரும் எங்களுக்குத் தான் என்று கொடி பிடித்த, கேவலமாக சண்டையிட்ட (ம)ற்றுமொரு திமுக மூத்த தலைவர்களை எல்லாம் மணியன் அறிந்திருக்க மாட்டார் போலும். மாவட்ட செயலாளர்களின்/ஒட்டு மொத்த கட்சிக்குள் இருக்கும் ஜாதிய அரசியல், அதிகார அரசியல், கட்டப் பஞ்சாயத்து அரசியல், ஆட்டம் பாட்டம் எல்லாம் மணியனுக்கு யாராவது சொன்னால் உத்தமம்!

வைகோ ஒருவர் மட்டுமே ஊழலுக்கு எதிரானவராக இருக்கலாம்.ஆனால் ஒட்டு மொத்த கட்சியும் அப்படி இல்லை.இன்றும் கூட கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்யும் எத்தனையோ மாவட்ட செயலாளர்கள் (ம)ற்றுமொரு திமுக வில் உண்டு.

அதிலும் குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக வருகின்ற தேர்தலில் களமிறங்க போகும்,மாவட்ட செயலாளர் ஜோயலின் முழு நேர வேலையே கட்டப் பஞ்சாயத்து அரசியல் தான் என்பதை,யாராவது மணியனுக்கு சொல்லுங்களேன். ஜோயலின் வக்கீல் தொழில் என்பது கட்டப் பஞ்சாயத்து அரசியலுக்கான கவசம்.இப்படி எண்ணற்ற உதாரணங்கள் சொல்ல இயலும்.

கடந்த மூன்று வாரங்களில் கேஜ்ரிவால் செய்த நல்ல விடயம் எதையாவது மணியன் அய்யா சொல்லி இருக்கிறாரா? கிடையாது..சொல்லவும் மாட்டார். காரணம் வரது நோக்கம் என்ன என்பதை நாங்கள் அறியாமல் இல்லை.

இருந்தாலும் சொல்கிறேன். மின்கட்டணத்தை பாதியாக குறைத்து இருக்கிறார். டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஆய்வு செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். அதிலிருக்கும் ஊழல்களை எல்லாம் வெளிக்கொணர நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.மாதம் இருபதாயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக தர வேண்டியது அரசின் தலையாய கடமை என்பதை தெளிவாக சொன்னதோடு,அதை நடைமுறைப் படுத்தி இருக்கிறார். இன்னும் சில நாட்களில் காமன்வெல்த் ஊழல், ஷீலாதீட்சித் மீதான ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொணர இருப்பதாக சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் உறுதி அளித்திருக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை டெல்லியில் அனுமதிக்க முடியாது என்று தடை விதித்து இருக்கிறார்.

குறிப்பாக மாநில முதல்வர் வருகிறார் என்றால் நூறு கார்கள் அணி வகுக்க வேண்டும்,அதீத பாதுகாப்பு வேண்டும், சிவப்பு விளக்கு கார்களில் தான் வலம் வர வேண்டும். அமைச்சர் வருகிறார் என்பதற்காக போக்குவரத்து சிக்னல்களில் மக்களை காத்திருக்க வைக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளை மாற்றியதோடு அதை செய்தும் காட்டி இருக்கிறார். ஆட்சியாளர்களின் பாதுகாப்பு செலவை கடுமையாக குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி இருக்கிறார்.

மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது! ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அதீத மக்கள் கூட்டம் வந்ததால், அதுவும் முதல் தடவை என்பதால் சில
குறைபாடுகள் இருக்க வாய்ப்புண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது.ஆனால் மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என்ற அவரது நோக்கம் நல்ல நோக்கம். இனி வரும் காலங்களில் அந்த குறை சரி செய்யப்பட்டு மக்கள் குறை கேட்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்.

வெறும் மூன்று வார ஆட்சியில் வேறென்ன செய்து விட முடியும் சொல்லுங்கள்?

கேஜ்ரிவால் ஆட்சியில் இருக்கும்,சின்ன சின்ன குறைகளை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்து பெரிது படுத்தி மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன மணியனுக்கு?

 முதல்வர்கள் என்றால் எளிமையாக இருக்க வேண்டியதில்லை,மக்களை விட்டு விலகி தான் இருக்க வேண்டும்,மக்கள் எளிதாக அணுக கூடாத வகையில் தான் முதல்வர் இருக்க வேண்டும் என்று மணியன் அய்யா சொன்னாலும் சொல்வார் போலவே!

கேஜ்ரிவாலின் எளிமை என்பதெல்லாம் நாடகம் என்றும் சொல்லும் மணியன் அய்யாவின் எளிமையும் நாடகமாக தான் இருக்குமோ:)

ஊழல் இல்லாத ஆட்சியை விரும்பும் விஜயகாந்த் மோடியைத் தான் ஏற்பார் என்று அரசியல் ப்ரோக்கர் வேலை வேறு!.சொல்வதில் கொஞ்சமாவது உண்மை வேண்டுமே! பாரதிய ஜனதாவின் ஊழல் பட்டியலை கீழே இணைத்துள்ளேன். அதைப் பார்த்து விட்டு பாரதிய ஜனதா ஒரு ஊழலற்ற பரிசுத்தமான கட்சி தானா என்பதை மணியன் அவர்கள் உறுதி செய்து கொள்ளட்டும்!

சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லையாம், அரைகுறையாக எழுதுகிறார்களாம். ஹ..ஹா..மணியன் அவர்களுக்கு பெரும் சிக்கல் என்னவென்றால்,அவர் மோடி குறித்தும் ,பாரதிய ஜனதா குறித்தும் சொல்லும் செய்திகளை எல்லாம் மக்கள் அப்படியே விமர்சனம் இன்றி ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். ஆனால் இங்கே அதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் கடுப்பில் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறார்!

ஈழத்தின் இனப்படுகொலை காலம் வரை தீவிர காங்கிரஸ்காரராக இருந்து மௌனம் காத்தவர், ஈழத்துக்கு ஆதரவாக அது வரை பேசாத காங்கிரஸ்காரர்:)
ஈழ விடுதலைக்கு பல தியாகங்களை செய்து, ஈழ விடுதலைப் போரை வலுவாக செய்த விடுதலைப் புலிகளை இன்று வரை ஏற்காதவர் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளை இன்றுவரை கடுமையாக விமர்சிப்பவர்!
காந்தியம் பேசிக் கொண்டே மோடியை ஆதரிப்பவர்!

இபப்டிப்பட்ட ஒருவர் கேஜ்ரிவால் குறித்து சொன்னால் சரியாகத் தான் இருக்கும்!

மோடி ஆதரவாளர்கள் கூட இத்தனை விமர்சனங்களை கேஜ்ரிவால் மீது வைத்திருக்கமாட்டார்கள்!

அரைவேக்காட்டு மோடியை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்கும் மணியனுக்கு,கேஜ்ரிவால் மீது இந்த அளவுக்கு கடுப்பு இருப்பதென்பது இயல்பு தானே! மோடியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி என்று ஏற்றுக் கொண்ட பிறகு இதை எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆக வேண்டும்! தமிழ்நாட்டில் தற்போது பலர் நாய் வேஷம் போட்டு இருக்கிறார்கள்! தேர்தல் வரை குரைக்கட்டும்!

சேர்க்கை சரி இல்லை. வேறென்ன சொல்ல!

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்!

வாழ்த்துக்கள் அய்யா மணியன்:)


-ஆன்டனி வளன் 

1 கருத்து: