சனி, 18 ஜனவரி, 2014

அரசியல் தலைவர்களின் படுகொலைகள்!


அரசியல் தலைவர்களின் படுகொலைகள்!

எந்த கொலையிலும், கொலை நடந்த உடனேயே அவரவர் யூகங்களில் இப்படி தான் என்று யூகித்து, பதட்டத்தை உருவாக்குவது தேவையற்ற ஒன்று. 

படுகொலை குறித்து, தனி மனிதர்கள் சிலர் இதை யூகித்து எழுதுகிறார்களோ இல்லையா என்பது வேறு. ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வரை, கட்டாயம் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பொறுப்பற்ற தன்மையுடன்,வாய்க்கு வந்தபடி பேசாமல் இருப்பது நல்லது. 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் கொலையா, உடனே நான்கு இஸ்லாமியரை கைது செய்வது, மசூதிகள் மீது குண்டு வீசுவது,இஸ்லாமியர்கள் தான் இதை செய்தார்கள் என்று பேசுவது போன்ற செயல்கள் தேவையற்றது. அரைகுறையாக புரிந்து கொள்பவன் இதை மத கலவரமாக எண்ண நினைப்பான். தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும்.

கொல்லப்பட்ட நபர் மதம் சார்ந்த தலைவராகவோ, அல்லது மதவாத கட்சியை சேர்ந்தவராகவே இருக்கட்டும். ஆனால் படு கொலைக்கான காரணம் அவர் மதவாத தலைவர் என்பதலா அல்லது மதத்தை தாண்டி அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளாலா என்பதையும் சற்று பொறுமையோடு சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிலும் மதத்தை முன்னிறுத்த முயலக்கூடாது.

பொதுவாக இது போன்ற கொலைகளில், உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று அரசை, அரசின் காவல்துறையை நிர்பந்திக்க வேண்டும்.அதற்காக தான் கட்சிகள் போராட வேண்டுமே ஒழிய, தங்கள் கேவல அரசியலை இதில் திணித்து மக்களை பிளவு படுத்த கூடாது. ஆனால் இதை தான் எல்லா கட்சிகளும் செய்கின்றன.

பாதிக்கப்பட்டவனும் இதை தான் செய்கிறான். எதிர் அரசியல் செய்பவனும் தனக்கேற்ப இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் உண்மை குற்றவாளிகளை கண்டிபிடிக்க வேண்டும் என்று யாரும் முயற்சி எடுப்பதில்லை.

கட்சி தலைவர்களின் சாவுக்கு,அரசியலை தாண்டி ரியல் எஸ்டேட் வியாபார போட்டி, ஒழுக்க கேடான விடயங்கள், கட்ட பஞ்சயாத்து மற்றும் அடாவடிகள் போன்ற பல பிரச்சினைகள் இருப்பதாக சொல்லப்படும் போது, அதை எல்லாம் காவல்துறை விசாரித்து,உண்மையான குற்றவாளி யார், ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணங்களை கண்டு பிடித்து தெரிவிக்கும் வரை எல்லோருமே பொறுமை காப்பது நல்லது.

இதில் ஊடகங்கள் கொஞ்சம் நிதானமாக பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ஊடகங்களில் பல, காட்சி சார்ந்தவர்களின் கரங்களில் தான் இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஊடகங்களிடம் நியாயம்,நேர்மை, பொறுப்பான தன்மை போன்ற விடயங்களை எதிர்பார்க்க இயலாது. குறைந்த பட்சம் கட்சி சாராத ஊடகங்களாவது கொஞ்சம் பொறுப்போடும், பொறுமையோடும்,நிதானத்தோடும் நடந்து கொள்ளுங்கள்.

கொலையை, மத சார்பாகவும், மத சார்பற்ற தனமாகவும் பிரித்து பார்க்க வேண்டியதில்லை. மொத்தத்தில் அரசியலை கலக்காமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.

-ஆன்டனி வளன்

ஜூலை 23,2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக