புதன், 15 ஜனவரி, 2014

இ(எ)டைத் தேர்தல்!























இடைத் தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கிறது எனவே இடைத் தேர்தலே வேண்டாம். மாறாக கடந்த முறை வெற்றி பெற்ற கட்சிக்கோ அல்லது பல்வேறு சாராம்சங்களை கணக்கில் கொண்டு, கடந்த தேர்தலில் நின்ற மற்றுமொரு வேட்பாளருக்கு கொடுத்து விடுவது உத்தமம் என்கிறார்கள் நண்பர்கள் பலர்.என்ன காரணம் என்றால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது என்கிறார்கள்.

இடைத் தேர்தல் என்பது ஒரு எடைத் தேர்தல், நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்களின் லட்சணத்தை எடை போட்டு, மக்கள் அளிக்கும் வாக்கில் இருந்து மக்கள் மனதறிந்து ஆட்சியின் குறைகளை சீர்படுத்திக் கொள்வதற்கான ஒரு பரீட்சை!

ஆனால் இங்கு இடைத் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் என்பது ஒழுங்காக தேர்தல் நடத்த தெரியாத தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத தனம்.மாநில அரசும் அதன் காவல்துறையும் செய்யும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் கேடு கேட்ட நிர்வாகம்.தேர்தல் விதி மீறல்களை சரி வர கண்காணிக்கவும்,முறைபப்டி தேர்தலை நடத்தவும் துணை ராணுவத்தை,துணைக்கு அழைக்காத தேர்தல் அதிகாரிகளின் அயோக்கியத்தனம்.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஊழலும், நேர்மையற்ற அதிகாரிகளும் தான்!

மக்களின் வாக்குகளை விலை பேசும் கேவலமான தேர்தல் கட்சிகள் மற்றும் பணத்துக்காக தங்கள் வாக்குகளை விற்கும் மானம் கெட்ட மக்களால் ஏற்படும் அவலம் இது.

தேர்தல் கட்சிகள் கொடுக்கும் பணம் தங்களுக்கு வேண்டாம் என்று நேர்மையாக சொல்லும் எத்தனை மக்கள் இந்த தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்?

படித்த இளைஞர்கள் எத்தனை பேர் வாக்குக்காக பணம் வாங்க கூடாது என்று தங்கள் குடுமபத்தினரை கண்டித்து இருக்கிறீர்கள்? அரசு வழங்கும் இலவசத் திட்டங்களை வேண்டாம் என்று புறக்கணிக்க சொல்லி இருக்கிறீர்கள்?

அரசு செய்வது அயோக்கியத் தனம் என்றால், மக்கள் செய்வது அதை விட பெரிய அயோக்கியத்தனம்!

அரசு தரும் அனைத்து இலவசங்களையும் வாங்குவதற்கான உரிமை என் குடும்பத்துக்கு இருந்தாலும்,அரசு தரும் எந்த இலவசங்களையும் வாங்க கூடாது, வாக்குகளைவிற்க கூடாது என்பதை என் பெற்றோரிடம் சொல்லியதோடு, இத்தனை காலமும் நான் கடை பிடித்தும் வருகிறேன்.மக்கள் மாறாமல் ஆட்சி எப்படி மாறும்? தனி மனிதர்களின் சிந்தனைகளும், 
ஒழுக்கமும் மாறாமல் ஆட்சியாளர்களை மட்டும் குறை கூறுவது எப்படி?

சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் எங்கள் வீட்டுக்கு இலவச மின்விசிறி கிடைக்கவில்லை என்று ஒரு இளைஞர் ரொம்ப பொங்கினார். நன்கு படித்து இருக்கிறார்.கை நிறைய சம்பளம் வாங்குகிறார்.ஆனால் இலவச திட்டங்கள் தன்னை வந்து சேரவில்லை என்று அத்தனை ஆதங்கம் அவருக்கு. யார் காசு?நீயும் நானும் அரசுக்கு கொடுக்கும் வரிப்பணம் தான் விரயமாகிறது. பொருளாதாரத்தில் ஓரளவு வலுவான மக்கள் சொல்லட்டுமே எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம் என்று.கேட்டால் இன்னொரு காரணம் சொல்வார்கள்.நாங்கள் வாங்கவில்லை என்றால் அதை வேறு யாரோ வாங்குவார்கள் என்று. வாங்கிட்டு போகட்டுமே! அதனால் உனக்கு என்ன நஷ்டம்?

அதைப் போலவே வாக்குக்கு பணம் செலுத்து கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்,சம்மந்தப்பட்ட வேட்பாளரை உடனடியாக தேர்தலில் இருந்து தடை செய்யவேண்டும் போன்றதீர்வுகளையும் நோக்கி நகர வேண்டும்.அதற்கு தேர்தல் ஆணையம் ஆண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இங்கே தனி மனிதர்கள் மாற வேண்டும்! அப்பொழுது தான் சமூகம் மாறும்!சமூகம் என்பது நீங்களும் நானும் தான்!

சரி! இடைத்தேர்தல் நடந்தால் மட்டும் தான் மக்கள் வரிப்பணம் வீணாகிறதா என்ன? பொதுத் தேர்தல் எல்லாம் சரியாக நடக்கிறதா? பணம் பட்டுவாடா எதுவும் இல்லையா?இடைத் தேர்தலோ, பொதுத் தேர்தலோ ஆட்சிக்கு வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் யோக்கியனாகி விடுகிறார்களா?முறைகேடும் ஊழல்களும் செய்வதில்லையா? தேர்தல் நேரத்தில் செலவு செய்த பணம் அனைத்தையும் சுரண்டி கொழுக்கும் எண்ணம் இல்லாமல் போய் விடுவானா?

பொதுத் தேர்தல் என்றாலும், இடைத் தேர்தல் என்றாலும் ஊழலும் முறைகேடும் மக்கள் வரிப்பணமும் விரயம் தான். பல கோடிகள் செலவு செய்து, ஆட்சிக்கு வரத் துடிக்கும் கேடு கேட்ட அரசியல்வாதிகள், இங்கு வந்து மக்கள் நலத் திட்டம் நிறைவேற்றவா ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்? கூடுதல் பணம் சம்பாதிக்க, பேர் புகழ் சம்பாதிப்பதற்காக, தன குடும்பம் வளர்ப்பதற்காக மட்டுமே!

இடைத் தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் வழமை போல அட்டூழியங்களும்,

முறைகேடுகளும் ஊழல்களும் குறையப் போவதில்லை. ஆட்சிக்கு வந்தவன் தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை சம்பாதிக்காமல் ஓயப்போவதில்லை!

இடைத் தேர்தலின் நோக்கம் ஆட்சியாளர்களைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எடை போடுவதற்கான நோக்கத்துக்காகவே!

நோக்கம் திசைமாறி போகிறது என்பதற்காக, நோக்கத்தை மாற்றி விடலாம் என்பதல்ல தீர்வு!அதை எப்படி சரி படுத்துவது என்பது குறித்து தான் சிந்திக்க வேண்டுமே ஒழிய இடைத் தேர்தலையே ஒழித்து விடலாம் என்பது சரியான தீர்வு அல்ல.

இது எப்படி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் குடிகாரர்களாக இருக்கிறார்கள், அதனால் மதுக்கடைகள் வேண்டாம் என்பதற்கு பதிலாக அதை விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசே வியாபாரம் செய்யலாம் என்ற தீர்வைப் போலவோ,

அல்லது காவல்துறையால் கற்பழிக்கபப்டும் அனைத்து பெண்களையும் காப்பாற்ற இயலாது அல்லது கற்பழிப்பை சட்டத்தால் கட்டுப் படுத்த முடியாது எனவே பெண்கள் கற்பழிப்பை சந்தோசமாக அனுபவியுங்கள் என்ற உலக மகா விளக்கத்தை சொன்ன நீதிபதியின் தீர்வைப் போலவும்,

இந்த தேசத்தில் விபச்சாரத்தையும்,கற்பழிப்பையும் ஒழிக்க முடியாது, எனவே அரசே அதை சட்டத்துக்கு உட்பட்டு ஆங்காங்கே விபச்சார விடுதிகள் தொடங்கி பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற தீர்வைப் போலவும்,

மணமான ஒருவனுக்கு காதலி இருந்தால், அதனால் சிக்கல் வந்தால், வீட்டில் மூன்றாவதை அறை ஒன்றை கட்டிக் கொண்டு இருவரோடும் குடும்பம் நடத்தலாம் என்று தீர்ப்பு சொன்ன புண்ணியவானின் தீர்ப்பு போலவும் அல்லவா இருக்கிறது!

குற்றங்களை தடுத்து,நியாயத்தை நிலைநாட்டுவதற்காக தான் நாம் பேச வேண்டுமே ஒழிய, மாறாக அரசாங்கமும்,நீதிபதிகளும் சொல்லும் கேவலமான தீர்வுகளை எல்லாம்,மக்கள் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளாக நாம் வைக்க முடியாது.

இடைத் தேர்தல் முறைப்படி நடத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே சிந்திக்க வேண்டும். மாற்றம் நம்மில் இருந்து வர வேண்டும்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக