புதன், 15 ஜனவரி, 2014

கரன் தாப்பர்- டெவில் அட்வோகேட்


பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை செய்தியாளர்களின் தைரியத்துக்கு முன்னுதாரணம் !

மிகச் சிறந்த நேர்காணல்கள்.எண்ணற்ற விருதுகள்.பத்திரிக்கையாளன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பல வகையில் முன்னுதாரணம்.நேர்காணல் தரும் நபர்,அரசின் அல்லது சமூகத்தின் எந்த உயர் பதவிகளை/அந்தஸ்துகளை வகித்தாலும்,துளியும் பயமில்லாமல்,எந்த சலனமும் இல்லாமல், அவர்களிடம் சாதுர்யமான அதிரடி கேள்வியை முன்வைக்கும் துணிச்சல்போன்ற பல விடயங்கள் பாராட்டத் தக்கது.எவ்வித பூசி மெழுகலுக்கும் வாய்ப்பே இல்லை.நேருக்கு நேராக, சிங்கத்தை அதன் கோட்டையில் சந்திப்பது என்பார்களே,அப்படியான சந்திப்பும் நேர்காணல்களும்!

ஆம் நான் பார்த்து வியந்த பத்திரிக்கையாளர் வேறு யாரும் அல்ல அது ‘டெவில் அட்வோகேட்’ நிகழ்ச்சி நாயகன் கரன் தாப்பர் தான்.

நான் பார்த்து வியந்த பல நேர்காணல்களில்,முதல்வர் ஜெயலலிதாவுடனான நேர்காணல்,

நாட்டின் புகழ்பெற்ற வழக்குரைஞர் அய்யா ராம்ஜெத் மலானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, குஜராத் புகழ் நரேந்திரமோடி, ம.தி.மு.க பொது செயலாளர் அய்யா வைகோ இன்னும் பல அரசியல் தலைவர்கள் உண்டு!

நரேந்திர மோடியின் நேர்காணல் தான் அட்டகாசம். ஒரு தேசத்தை நடத்தி செல்லும் தகுதி தனக்கு இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் ஒரு அரசியல்வாதி, ஜனநாயகத்தின் நாலாவது தூண்களான பத்திரிக்கை துறையின்,நியாயமான கேள்விகளை எதிர் கொள்ள இயலாமல் ஓடுவது என்பது அழகல்ல. அதுவும் கரன் முதல் கேள்விக்கே, ஓட்டம் பிடிப்பது அசிங்கமானது. மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு என்பார்கள். அரசியல்வாதிகளுக்கு மடியில் கனம் இல்லையென்றால், பத்திரிக்கையாளர்களையும் அவர்களின் நியாயமான கேள்விகளையும் எதிர் கொள்வதில் பயம் ஏன்?

ஜெயலலிதாவுடனான நேர்காணல் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஜெயலலிதா எத்தனை சிறுபிள்ளைத் தனமாய் நடந்து கொள்வார், எத்தனை அதிகமாய் கோபத்தை கொப்பளிப்பார், எத்தனை ஆணவமாய் பதில் சொல்வார், எத்தனை அகங்காரமாய் நடந்து கொள்வார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த நேர்காணல். எதிராளி என்ன விதமான முகபாவங்களைக் காட்டினாலும், துளியும் சலனமே இல்லாமல்,எதைப் பற்றியும் கவலைப் படாமல், அடுத்தடுத்து கேள்விக் கணைகளால் தொடுத்து எடுக்கும் பாங்கு உண்மையிலே பாராட்டுதற்குரியது. தொலைக்காட்சி நேர்காணல் என்றால் சாதாரண வேலை கிடையாது. வெறும் விளையாட்டாக, விருந்தினருக்கு ஏற்ப,அவரை குளிர்விக்க வேண்டும் என்பதற்காகவே,நியாயமான எந்த கேள்விகளையும் கேட்காமல்,சப்பையான கேள்விகளை கேட்கும் தொகுப்பாளர்களை எல்லாம் பார்த்தால் கடுப்பும் கோபமும் தான் மிஞ்சும்.

ஒரு நேர்காணலுக்கு வருவதற்கு முன்பாக, சிறப்பு விருந்தினரின் தகவல் அனைத்தையும்,ஆதாரப் பூர்வமாக திரட்டி இருக்க வேண்டும்.அவர்கள் மாற்றி மாற்றி பேசினால், ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், தலையை ஆட்டிக் கொண்டு போவதற்கு பதிலாக, நேர்மையான பதில்கள் வரும் வரை உங்கள் ஆதாரப் பூர்வமான கேள்விகள் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கரன்தாப்பர் ஜெயலலிதாவிடம் கேட்டதைப் போன்ற கேள்விகளில், பதில் ஒரு பங்கை தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்கள் ஜெயலலிதாவிடம் கேட்பார்களா? அப்படி கேட்டால் அதனால் வரும் பின் விளைவுகளை சந்திக்க, ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் துணை நிற்பார்களா?

ஜெயா தொலைக்காட்சியில் பணி புரியும் ரபி பெர்னார்டு என்ற மானஸ்தன், ஜெயலலிதாவை சந்திக்கும் நேர்காணல்களில், நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டீர்கள் அம்மா, இட்லி உங்களுக்கு பிடிக்காதா அம்மா,உங்கள் அரசியல் பாதை எவ்வளவு கடினமானதம்மா என்ற வகையான கேள்விகளை எல்லாம் கேட்டு,தன்னை ஒரு பத்திரிக்கையாளனாக/ஊடகவியலாளனாக அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, வேறு வேலை பார்க்கலாம்.ரபி பெர்னாடு என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். பல ரபி பெர்னாடுகள், மாலன்களாகவும் வேறு பல பெயர்களிலும் இருப்பார்கள்..

பத்திரிக்கை மற்றும் ஊடக துறைக்கு வர வேண்டும் என்றால்,கட்டாயம் முதுகெலும்பு எல்லாம் சரியாக இருக்கிறதா, நேராக இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு வருவது நல்லது. இது ஜெயா தொலைக்காட்சி என்று மட்டும் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் அனைத்து தொலைக்காட்சிகளும் இந்த லட்சணம் தான். என்ன இதில் ஜெயா தொலைக்காட்சி ரொம்ப ரொம்ப ஓவர். ஒப்பீட்டு அளவில் மற்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் கொஞ்சம் பரவாயில்லை.

இந்தியாவின் மிக சிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். எத்தனை சிக்கல் நிறைந்த வழக்கு என்றாலும் நீதிமன்றத்தில் இவர் வாதாடுகிறார் என்றால், அந்த வழக்கு வெற்றி தான் எனும் அளவுக்கு நம்பிக்கை.எதிர்தரப்பு வழக்குரைஞர்களை ஆட்டம் காண செய்வார் என்பதெல்லாம் பெருமை. ஆனால் யாருக்காக வாதாடுகிறார், எந்த வழக்கை கையில் எடுக்கிறார், அறம் சார்ந்து நல்ல மனிதர்களின் நியாயத்துக்காக நிற்கிறாரா,அல்லது குண்டு வெடிப்புகளை நடத்தி சாமன்ய மக்களைக் கொல்லும் நபர்களுக்காக வாதாடுகிறாரா,பணம் யார் கொடுத்தாலும் நியாயம் தர்மம் எல்லாம் பார்க்காமல்,ஜெயித்து கொடுக்கும் வழக்குரைஞரா போன்ற எதார்த்தமான கேள்விகளை எல்லாம் கரன் தாப்பர் வைத்தால், உயர் ரத்த அழுத்தம் வந்து வீட்டை விட்டு வெளியே போ என்பதை சொல்லாமல் சொல்லி அனுப்பினார் மிக சிறந்த வழக்குரைஞர் அய்யா ராம்ஜெத் மலானி. காரணம் கரன் தாப்பரின் கேள்விகளில் உள்ள நியாயம்.

அதைப் போலவே பால் தாக்கரே உடனான நேர்காணலும் அப்படித் தான் ஆரம்பமானது. தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா என்று ஆரம்பித்து, இதை எல்லாம் ஏன் செய்யவில்லை என்று குடைந்தெடுக்கும் கேள்விகளுக்கு, தேர்தல் என்றால் நாங்கள் அப்படித் தான் வாக்குறுதிகள் கொடுப்போம், அதை எல்லாம் இப்படி வந்து கேள்வி எழுப்ப கூடாது என்பது போல தாக்கரே பதில் சொல்வதும், அப்படியானால் மக்களை ஏமாற்றத் தான் தேர்தல் வாக்குறுதிகளா, தேர்தல் நேரத்தில் அறிவிக்க பட்ட திட்டங்களை இந்த ஆட்சி முடியும் வரை நீங்கள் செய்து முடிக்க மாட்டீர்கள் என்று சுழற்றி சுழற்றி அடித்தால், என்ன சொல்வார் பால் தாக்ரே!

அய்யா வைகோவுடனான நேர்காணலில் முதல் பகுதி முழுவதும், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு குறித்த கேள்விகள். ஆனால் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சிகளோடு கூட்டணி வைக்கிறீர்கள், புலிகளை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யும் காங்கிரசோடு, ஜெயலலிதாவோடு கூட்டணி வைக்கிறீர்கள். எத்தகைய முரண்பாடு என்ற கேள்விகளை எல்லாம் சரிவர சமாளிக்க இயலவில்லை. அவர்கள் செய்யவில்லையா, இந்த கட்சி செய்யவில்லையா என்று அய்யா எதிர் கேள்வி வைத்தது தான் தாமதம்,ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கு இது அழகல்ல, மற்ற கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் போலத் தான் வைகோவுமா, மற்றவர்களில் இருந்து எந்த வித்திசாயமும் இல்லாத அரசியல்வாதி தான் வைகோவா என்று அதிரடி கேள்வியை கரன் தாப்பர் வைத்ததும், ஆம் நானும் மற்ற அரசியல்வாதிகளைப் போலத் தான் என்ற வைகோவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த கரன்தாப்பர்,அடுத்தடுத்தும் பல்வேறு கேள்வி கணைகளை வைக்கும் போது,நான் எடுக்கும் கட்சி சார்ந்த முடிவுகள் எல்லாம்,என் முடிவு மட்டுமே அல்ல,என் கட்சி குழு எடுக்கும் முடிவு, அவர்களை நான் மதிக்கிறேன் என்று எதோ நியாயம் சொல்ல முயல்கிறார் அய்யா வைகோ.

அப்படியானால் உங்கள் கட்சிகாரர்கள் எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா, ஒரு அரசியல் கட்சி தலைவர் நான் முடிவு எடுப்பதில்லை, என் சகாக்கள் தான் முடிவெடுக்கிறார்கள் என்று சொல்வது அபத்தமாகவும், தப்பிக்கும் வழியாகவும் தெரியவில்லையா என்று கொலைவெறித் தாக்குதல் கேள்விகளை கரன் தப்பார் வைக்கும் போது, அய்யா வைகோவால் ஒன்றும் சொல்ல இயலுவதில்லை. சரியோ தப்போ எதுவென்றாலும்,தனிப்பட்ட அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி கடும் கோபம் வரவைக்கும் கேள்விகள் என்றாலும் கூட, ஜெயலலிதா, நரேந்திரமோடி, ராம் ஜெத் மலானி அளவுக்கு அநாகரீகமாக நடந்துகொள்ளவில்லை அய்யா வைகோ. அதே நேரம் கரன் தாப்பரின் கேள்விகளுக்கான சரியான பதிலையோ,வெகுஜன மக்கள் நம்பும் அளவுக்கு திருப்தியான பதில்களையோ தரவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.

எப்படி கரன் தாப்பருக்கு இந்த அளவுக்கு தைரியம், துணிச்சல், மிகத் தெளிவான கேள்விகள், சரியான வாதிடும் திறமை, நல்லதொரு ஆங்கில மொழிப்புலமை, மிக நிதானமாக கேள்விகளை கையாளும் உத்தி, யாரையும் எதிர்கொள்ளும் பாங்கு என்பதை எல்லாம் தேடித் பார்த்தால், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே தொடங்கி இருக்கிறது இந்த பத்திரிக்கை மற்றும் ஊடக ஆசை. டூன் ஸ்கூல் மாணவன், காம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் அரசியல் குறித்து பல்வேறு படிப்புகள், வெளி நாட்டில் அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாட்டின் பல்வேறு ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.

ஒன்று மட்டும் உண்மை. இதைப் போன்ற கல்வித்தகுதி, உலக அனுபவம் எல்லாம் இருந்தாலும் கூட, இந்தியாவில் பணி புரியும் பல பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு இந்த துணிச்சல் கிடையாது. துணிச்சல் கிடையாது என்பதை விட ஏதாவது ஒரு கட்சி சார்பு நிலையிலோ அல்லது வேறு சில காரணங்களை சொல்லியோ காலத்தை கழித்து விடுகிறார்கள்.

எல்லா பத்திரிக்கையாளர்களும் கரன்தாப்பர் போன்று இருக்க வேண்டும் என்பதல்ல என் விருப்பம். ஒருவேளை அப்படி இருந்திருந்தால், இங்கே பல அரசியல்வாதிகள் கொஞ்சம் பயப்பட்டு இருந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.ஜன நாயகத்தின் நாலாவது தூண், நேர்மையாகவும் தைரியமாகவும் நடந்து, ஆட்சியாளர்களின்,தேசத்தின் பெரும்பணக்காரர்களின் எலும்புத் துண்டுகளுக்கு வாலை ஆட்டாமல் இருந்திருந்தால்,மத்திய மாநில அரசுகளின் ஆட்சிகளும் கொஞ்சம் மாறி இருக்குமோ என்ற ஐயப்பாடு வருகிறது!

தலைவர்கள் பலரின் நேர்காணல் காணொளிகள் யூ ட்யூபில் காணக் கிடைக்கிறது!பார்த்து மகிழுங்கள்!

வாழ்த்துக்கள் கரன்தாப்பர்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக