செவ்வாய், 14 ஜனவரி, 2014

இயற்கை தாயின் தவப்புதல்வன் அய்யா நம்மாழ்வார்!


பார்ப்பதற்கு மிக மிக எளிமையான மனிதர்.அவரைப் பற்றிய தகவல்கள் தெரியாமல், அவரது நடை உடை பாவனையை பார்ப்பவர்கள் எதோ கிராமத்தான் போலவும்,ஒன்றும் தெரியாதவர் போலவும் எண்ணிக் கொள்ள கூடும் ஆனால் அவை எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான். எதுவரை யென்றால் அவர் பேசும் வரை. 

அவர் பேச ஆரம்பித்தால் அனைவரும் வாயடைத்து போக வேண்டியது தான்.அத்தனை ஞானமான பேச்சு. விவசாய பட்டதாரிகளாக இருக்கட்டும்,விவசாய பல்கலை கழக பெருமக்களாக இருக்கட்டும்,அல்லது விவசாயப் புரட்சி என்று சொல்லிக் கொண்டு பெரிய பெரிய மரபணு மாற்ற காய்கறி/விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்கட்டும்!அவர் பேச்சுக்கு மறுப்பே பேச முடியாத அளவுக்கு வாயடைத்துப் போவார்கள்.அந்த அளவுக்கு ஒரு வலுவான,எளிமையான,ஆதாரப் பூர்வமான,நியாயமான மற்றும் எதார்த்தமான பேச்சு அய்யா அவர்களின் பேச்சு!

சிந்தித்து பார்க்க வேண்டும்!விவசாய கல்லூரிகளில் இளங்கலை பட்டம் படிக்க இடம் கிடைப்பதென்பது இன்று வரை பெரும் சிரமமான ஒன்றாகத் தான் இருக்கிறது.அந்த அளவுக்கு கடுமையான போட்டி.ஆனால் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் அய்யா. அரசு பணியில் சேர்ந்து, மிக விரைவிலேயே அது வேண்டாம் என்று ஒதுங்கியவர்! காரணம் அவரது லட்சியமும்,நோக்கமும் பெரிது!

பெரும் செல்வம் எனக்கு வேண்டாம்.எப்படியாவது நான் கற்ற கல்வி, இந்த சமூகத்துக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணுவது எத்தனை பேர்?அப்படி தன் வாழ்வை மிக மிக அர்த்தமுள்ளதாக வாழ்ந்து காட்டிய மனிதன்!

பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பேசுவதை ரசித்துக் கேட்டதுண்டு,வியந்ததுண்டு! சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக் காட்சியின் விவசாயம் குறித்த விவாதத்தில் பங்கு கொண்டார்.அப்போதே ஆள் ஓரளவுக்கு தளர்ந்து போய் தான் இருந்தார்.

விவாதத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வந்திருந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை என்றவுடன் அவர்கள் நோக்கமும், செயல்பாடும் எப்படிப் பட்டது என்பது எல்லோரும் அறிந்திருப்பர். அவர்கள் விவசாயப் புரட்சி என்று சொல்லிக்கொண்டு மரபணு மாற்ற பயிர்,பல்வேறு உரங்கள்,
பூச்சிக் கொல்லிகள்,பன்னாட்டு விதைகள் என்று வேறு ரகத்தை சேர்ந்தவர்கள்.அய்யாவோ இயற்கை விவசாயம்,இயற்கை உரம், என்று எதிர்முனையில் இருப்பவர்.கடுமையான விவாதம். சாமிநாதன் அறக்கட்டளையை சேர்ந்த நபருக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இவரது வாதங்களை எவருமே மறுக்க முடியாது எனும் போது அவர் மட்டும் என்ன பேசி விடப் போகிறார், அரங்கம் முழுவதும் அய்யாவின் எளிமையான அறிவுப் பூர்வமான பேச்சுக்கு கைதட்டல்கள்!

அந்த அளவுக்கு இந்த மண்ணின் மீதும், விவசாயத்தின் மீதும்,விவசாயிகள் மீதும்,மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர். இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தமாக சொல்பவர்.

இயற்கை சுழற்சி முறை குறித்து பல நேரங்களில் அவர் பேசக் கேட்டு இருக்கிறேன்.அதாவது மண்ணில் ஆரம்பித்து மீண்டும் மண்ணுக்கே!மண்புழுவின் பயன்பாடுகளில் பேச ஆரம்பித்து, விவசாய விளை நிலத்தில் கிடைக்கும் இலை,தழைகளை,நம் கால்நடைகளுக்கு கொடுத்து,அவற்றின் கழிவுகளை மிக சிறந்த உரங்களாக மீண்டும் மண்ணுக்கே கொண்டு சேர்க்க வேண்டும்! அதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்று விளக்கி சொல்வார்.

செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுப்பார்.அவற்றுக்கு எதிராக வலுவாக குரல் கொடுப்பார். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும்,உண்ணா நிலை போராட்டங்களையும் முன்னெடுத்தவர்.இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு பயிற்சி வகுப்புகள்,புத்தகங்கள்,நேர்காணல்கள் மற்றும் தொடர்களை தந்தவர்.



  • மீத்தேன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்.
  • அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • கெயில் குழாய் பதிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தார்.
  • சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக அரும்பாடு பட்டார்.
  • பூச்சி கொல்லி/செயற்கை உரங்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்தார்.
  • மரபணு விவசாய/காய் கறிகளுக்கு எதிராக, பி.டி கத்திரிக்காய்க்கு எதிராக போராடினார்
  • விவசாய விளை நிலங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று கடுமையாக போராடியவர்.
  • பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தியவர்.

உலகம் முழுவதும் பல்வேறு சுற்று பயணங்கள், படிப்பினைகள் மற்றும் அனுபவப் பாடங்களின் பகிர்வு என்று சுறு சுறுப்பாகவே இயங்கிய ஒரு மனிதர்.சுருங்க சொன்னால், இந்த மண்ணையும், மக்களையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று தன் இறுதி மூச்சு வரை களமாடிய மாமனிதன்!மாபெரும் போராளி!போற்றுதற்குரிய பெருமகனார் அய்யா நம்மாழ்வார்!

இந்த மண்ணை நேசித்த மகத்தான மனிதனுக்கு,டாக்டர் பட்டம் வழங்கி, திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக் கழகம் பெருமை தேடிக் கொண்டது என்பது தான் உண்மை!

இயற்கை தாயின் புதல்வனாம் அய்யா நம்மாழ்வார் அவர்களின் லட்சியங்களை, கனவுகளை,ஆசைகளை நிறைவேற்றுவதும், அதையே நாம் பின்பற்றுவதும் தான் அவருக்கான மிகச் சிறந்த மரியாதையாக இருக்க முடியும்!

முதலில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, நியாயமான விலை கிடைக்க செய்வோம்!

விவசாயிகளை போற்றுவோம்! இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்போம்! நாம் வாழும் இந்த மானுட வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்!

அய்யாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

பொருத்தமான வரிகள்: இருந்தாலும்,மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக