சனி, 18 ஜனவரி, 2014

அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!


இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!

இறைவனின் பெரிதான தயவால்,உலகில் வளர்ந்த ஒரு பத்து நாடுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்.குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி என்னை மலைக்க வைத்தது.வாழ்வில் முதன் முதலாக, நான் பார்த்த வெளிநாடு நாடு ஜெர்மனி.

அந்த தேசத்தை பார்த்த போது, மனதில் அப்படி ஒரு பிரமிப்பு.நான் பார்த்த வெளிநாடுகளில்,

எல்லாவகையிலும் ஜெர்மனியை முதலிடத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு,அநேக விடயங்களை அந்த தேசம் எனக்கு கற்று கொடுத்தது.

வெறுமனே தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களை தாண்டி,

மக்களின் ஒழுக்கம், எளிமை, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு ,சக மனிதனுக்கான மரியாதை, பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதம்,அவர்களின் நேர்மை என்று பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

நடு நிசியில் இரண்டு மணி,மூன்று மணி என்று எந்நேரம் வேண்டுமானாலும் தனியாக பயணித்து, வீடு வந்து சேர்ந்த நாட்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட, உள்ளத்தில் எவ்வித பயமும் இருந்தது கிடையாது.

இந்த நடு ராத்திரியில் திருடர்களின் தொல்லை இருக்குமோ, அல்லது வெளிநாட்டவர் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமோ,ஒருவேளை நம்மை தாக்கினாலும் தாக்குவார்களோ என்று ஒருநாள் கூட சிந்தித்து பார்க்கும் அளவுக்கு எந்த சூழலும் அங்கு இல்லை.

ஐரோப்பிய நாடுகளில்,பொது வெளிகளில் சுத்தம்,ஆரோக்கியம் என்றால் அதில் ஜெர்மனியை மிஞ்ச இயலாது. சுவிட்சர்லாந்தையும் பொது வெளி சுத்தத்தில் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி பார்த்தாலும் சுவிட்சர்லாந்தில் பெரும்பான்மை மக்கள் ஜெர்மானியர்களே!

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால்,தொழில் நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் ஜெர்மனி தான் முதலிடம் என்றே சொல்லும் அளவுக்கு, அனைத்து விடயங்களிலும் உயர்ந்து நிற்கிறது.

நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்பது உண்டு. நீங்கள் பார்த்த வெளிநாடுகளிலேயே சிறந்த நாடு எது என்று? சந்தேகம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜெர்மனி தானென்று  ஒரே ஒரு சிக்கல் எதுவென்றால் மொழி மட்டுமே:) அங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்கு அவர்களின் தாய்மொழி தெரியாது:)

மேற்கத்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, கல்வி,பொருளாதாரம்,

மருத்துவம்,தொழில் வளர்சிகள்,அடிப்படை பாதுகாப்பு போன்ற பல விடயங்களை பற்றி சிலாகித்து பேசும் போது, நண்பர் ஒருவர் சொன்னார், மேற்கத்திய நாடுகளை நான் பார்த்தது இல்லை. ஆனால் பலமுறை சீனாவை பார்த்து விட்டேன். சீனாவின் வளர்ச்சி மிகவும் அபரிவிதமானது என்றார்.

பீஜிங்,ஷாங்காய் போன்ற நகரங்களை எல்லாம் பார்த்தால், மிரண்டு போவீர்கள் என்று சொன்னார். மேற்கத்திய நாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சீனாவின் வளர்ச்சி இருக்கிறது என்று, பயிற்சிக்காக சீனா வந்த, எங்கள் நிறுவனத்தின் மேற்கத்திய நண்பர்களே சிலாகித்து பேசினார்கள் என்று சொன்னார். அவர்களே விரும்பி விரும்பி நகரத்தின் பல பகுதிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்றார்.

நான் சீனாவுக்கு போனதில்லை. அதனால் அப்படியா என்று கேட்டுக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை மிஞ்சி, ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்கும் என்றால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, சொர்க்க பூமியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் அதே நண்பர், அமெரிக்காவுக்கும் சென்று வந்தார். வந்த பிறகு சொன்னார், அமெரிக்காவை விட சீனா தான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

காரணம் சீனா தான், புதுசு கண்ணா புதுசு மாதிரி இருக்கிறது. பிரமாண்டத்தில் சீனா, அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது என்று சொன்னார். அவர் பார்த்த இடங்கள் நியூயார்க் அல்லது கலிபோர்னியா போன்ற நகரங்களாக இல்லாமல் இருந்ததால், ஒருவேளை சரியான ஒப்பீடாக இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் நேற்று வேறொரு நண்பரை, அவரது வீட்டில் சந்தித்த பொழுது, மடிக்கணினியில் சில புகைப்படங்களை காட்டினார். தற்போது, வேலை விடயமாக,அடிக்கடி சீனா செல்ல வேண்டி இருக்கிறது.சீனாவை பாருங்கள் என்று சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.பார்த்தால் அப்படி ஒரு ஆச்சர்யம்.

மேற்கத்திய நாடுகளின் கட்டமைப்பு வசதிகளில்,எந்த வித்தியாசத்தையும் பார்க்க இயலாத அளவுக்கு சாலைகள், கட்டடங்கள், ரயில் பயணங்கள், துறை முகங்கள், விமான நிலையங்கள் என்று மிக பிரமாண்டமாய் இருக்கிறது சீனா.மேற்கத்திய நாடுகளில் பார்த்த அத்தனை வசதிகளையும்,அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள் சீனர்கள்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது.

தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், மக்களுக்கான அடிப்படை குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் பொதுவான அடிப்படை இலவச கல்வி, எல்லோருக்கும் பொதுவான சட்டமும் ,நியாயமான தண்டனைகளும் அனைத்து விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது,விதி மீறல்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கி மக்களை சரி படுத்துவது, பொது இடங்களில் சுத்தம், திருட்டு வன்முறை போன்ற கொடுஞ்செயல்கள் நிகழாத வகையில் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது,ஊழல்,லஞ்சம் போன்ற கேடுகெட்ட சம்பங்கள் கூடுமானவரையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது, நீதியும் நியாயமும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் காவல்துறை மற்றும் நீதி துறை செயல்படுவது போன்றவற்றை சொல்லலாம்.

இந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை பார்த்தால் பிரமிக்க தக்க வளர்ச்சியாகவே தோன்றுகிறது.சீனாவின் அதிவேக ரயில்களில் பயணித்த நண்பர்கள் இருவரும் சொல்கிறார்கள்.

இப்படி ஒரு பயணம்,வேறு எங்கும் வாய்ப்பே இல்லை... சீன ரயில்களின் வேகம் மணிக்கு முன்னூறு கிலோமீட்டர்,நானூறு கிலோமீட்டர் என்று மின்னல் வேகத்தில் இருக்கிறது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து, நகரத்தின் மையப்பகுதி முப்பது கிலோமீட்டர்.ஆனால் இந்த முப்பது கிலோமீட்டார் தூரத்தை வெறும் எட்டு நிமிடங்களில் இந்த அதிவேக ரயில்களில் மூலம் நீங்கள் கடந்து விட முடியும்.

பீஜிங்கில் இருந்து ஷாங்காய் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தூரம். ஆனால் அதிவேக ரயில்கள் மூலம் இந்த தூரத்தை வெறும் நான்கு மணி நேரத்தில் நீங்கள் அடைந்து விட முடியும்.

ஐநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து,அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பெரும்பான்மை மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் வேலைக்கு செல்லும் பயண நேரம் என்பது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே.

சிந்தித்து பாருங்கள். இந்தியாவில் இப்படியான அதிவேக ரயில்கள் வந்தால், காலையில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவுக்கு நிலைமை மாறி விடும்..

கற்பனையாக இருந்தாலும் கூட சிந்தித்து பார்க்கும் போது எத்தனை மகிழ்வாய் இருக்கிறது பாருங்கள்.

இந்த அதிவேக ரயில்கள் அனைத்தும் சீனர்களே வடிவமைத்து அவர்களே தயாரித்தது. வெளிநாடுகளின் உதவி என்பது சற்றும் கிடையாது.

இந்தியாவில் அதிவேக ரயிலின் வேகம் என்பது நூறு கிலோமீட்டர் என்கிறார்கள். ஆனால் சராசரி வேகம் என்பது எண்பது கிலோமீட்டர் தான்.

2020 க்குள் சீனாவின் முக்கிய வழித்தடங்கள் அனைத்தையும், இந்த அதிவேக ரயில்கள் மூலமே சமாளிக்க போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கிட்டதட்ட இருபதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, இது போன்ற அதி வேக ரயில்கள் மூலம் இணைக்க போவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த பத்தாண்டுகள் திட்டத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும் போல் இருக்கிறது.

சீனாவை போல, தரமான சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்று தேடி பார்த்தாலும் கிடைக்காது.

ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று, கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்கை கூட இந்தியா செலவு செய்யவில்லை. அதற்கான திட்டுமிடுதல்கள் இல்லை. 2011 இல் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அவர்கள் செலவிட்ட தொகை நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நாம் ஒரு பத்து பில்லியன் டாலர்கள், செலவழிப்பதே மிக அதிகம்.

இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு அனைத்து தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும் சீனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

குண்டூசி முதல் ஏவுகணை வரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்புகள்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும், அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சீன தயாரிப்புகளே.

நாம் குடிசை தொழிலாக ஊறுகாய் அல்லது பொறி உருண்டை செய்வது வழக்கம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்வதும், செல்போன்கள் செய்வதுமாய் இருக்கிறார்கள்.

அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆடைகள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மடிக்கணினி முதற்கொண்டு அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு பொருட்கள், அனைத்தும் சீனா தயாரிப்புகள் என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அல்லது இந்திய தயாரிப்புகள் என்னவென்று பார்த்தால் பெரிய கேள்விகுறி?

கொஞ்சம் உணவு பொருட்கள், கொஞ்சம் ஆடைகள் இதை தாண்டி உலக அரங்கில் இந்தியாவின் தயாரிப்புகள் என்னென்ன?

உலகநாடுகள் பலவற்றில், சீன பொருட்களுக்கென்று பல பெரிய பெரிய அங்காடிகளை திறந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவில் கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் சீன தயாரிப்புகள்.

அது கைபேசியாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு முதற்கொண்டு அனைத்தும் சீன தயாரிப்புகளாய் தான் இன்று இந்தியாவில் வலம் வருகிறது.

இந்தியாவின் அடிப்படை விவசாயத்தை செய்யவோ, அதை ஊக்குவிக்கவோ இந்த தேசமும், ஆட்சியாளர்களும் தாயாராக இல்லை. உணவுக்கும் கூட நாம் இனி அடுத்தவன் கையை ஏந்த வேண்டிய காலம் சீக்கிரமே வரும்.

தொழில்களை,விவசாயத்தை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முயல்வதற்கு பதிலாக, சிறு விவசாயிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அமைதியாக வேறு வேலைகள் பார்த்து விட்டு போங்கள் என்று சொல்லும், ஒரு ரோபோ பிரதமரை தான் நாம் வைத்திருக்கிறோம்,மிகப்பெரிய பொருளாதார மேதை என்று பெருமை பீத்திக் கொண்டு.

உலக அரங்கில், சீன ராணுவம் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம். ராணுவ தளவாடங்கள், அனைத்திலும் உலகில் எந்த நாட்டோடும் போட்டி போட்டு கொண்டு நிற்கிறார்கள். அனைத்தும் சொந்த தயாரிப்புகள்.

விண்வெளி ஆராய்ச்சியா, ராக்கெட் தயாரிப்பா, செயற்கை கோள்களா, ஏவுகணைகளா எதுவாக இருந்தாலும் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள்.

அமெரிக்கர்கள், ரஷ்யர்களுக்கு போட்டியாக, இன்னும் பல இடங்களில் அவர்களை முந்திக் கொண்டு நிற்கிறார்கள்.

சமீபத்தில் செய்தி தாள் ஒன்றில் படித்தேன். குறி பார்த்து தாக்கும் அதி வேக ஏவுகணைகள் பலவற்றை சீனர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.இதுவரை அமெரிக்கர்கள் வைத்திருந்த அதிவேக ஏவுகணைகளின் வேகத்தை விட,சீனர்களின் தயாரிப்பு பல மடங்கு என்று, அமெரிக்கர்களே கவலைப்பட்டதாய், செய்திகளில் படித்தேன்.

இந்தியாவின் அனைத்து விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை, அணு தொழில் நுட்பம் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியதாகவோ, அல்லது கூட்டு முயற்சியாக தான் இன்று வரை இருக்கிறதேயன்றி, சீனாவை போல தன்னிச்சையாக இயங்க கூடியதாக இல்லை.

உலகின் அனைத்து தயாரிப்புகளும் இன்று சீனாவில் தான் தயாராகிறது என்ற அளவில் சீனா இருக்கிறது.

உலக வர்த்தகத்துக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம் என்று உணர்ந்த சீனர்கள் இன்று அதி வேகமாக ஆங்கிலத்தை விரும்பி படிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில், சீனாவில் அதிக அளவில் விற்ற புத்தங்களின் பட்டியலில், ஆங்கில டிக்சனரி தான் முதலிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலத்தை தீவிரமாக படித்து வருகிறார்கள்.

இந்திய தாயாரிப்புகள் எதுவும் உலக சந்தையில் இல்லாதிருக்க,அப்படி ஒரு உற்பத்தி வருமானம் வராமல், வெளிநாடுகளின் மென்பொருள் துறையை மட்டுமே நம்பிக் கொண்டும்,பொருட்களின் உற்பத்திக்கு பதிலாக, அந்நிய முதலீடுகளை நேரடியாக இந்தியாவில் வரவைத்துக் கொண்டு,இதோ பார் நாங்கள் வளர்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால், கூடிய விரைவில் நம் பொருளாதாரம் சிதைந்து போகும். சீனாவை போல ஒரு வலுவான பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாம் பொருட்களை தயாரிக்க வேண்டும்.உலக சந்தையில் இந்திய பொருட்கள் விலை போக வேண்டும்.

சீனாவில் மின்தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் தயாரிக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் இயற்கை மற்றும் சூரிய மின்சாரம் மூலம் நாட்டின் மொத்த மின்சார தேவையில் முப்பது சதவிகிதத்தை எட்டிபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

இன்று வரை அறுபது விழுக்காடு அனல் மற்றும் புனல் மின்சாரம் தான். உலக நாடுகள் எல்லாம் இயற்கை மின்சாரம் என்று சிந்திக்கும் போது, இந்தியா மட்டும் அணு மின்சாரம் தான் சிறந்தது என்று இறுமாப்போடு திரிகிறது.இத்தனைக்கும் இந்திய அணு உலைகள் இந்தியாவின் சொந்த தயாரிப்பு இல்லை. அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறது.

சொந்தமாக அணு உலைகளை தயாரித்தாலும்,கூட மாற்று மின்சாரத்தில் அதிக அக்கறை எடுக்கிறார்கள் சீனர்கள்.

நடப்பு ஆண்டு கணக்கின் படி,இந்தியாவில் இன்னும் நாற்பது விழுக்காடு கிராமங்களுக்கு மின்சாரம் போய் சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சீனா போன்ற சர்வாதிகார(கிட்டத்தட்ட) நாட்டில் மக்கள் நலன் சார்ந்து, மக்களுக்கு எது நன்மை என்று சிந்தித்து மக்களுக்காக செயல்படுகிறார்கள்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டே,மக்கள் விரோத நடவடிக்கைகளில், மக்கள் விரும்பாத செயல்களை, திட்டங்களை மக்களிடம் புகுத்துவது தான் இந்தியாவின் அழகே!

மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் போட்டிகளை, சீனாவில் சில ஆண்டகளுக்கு முன்பு நடத்தினார்கள். உலக நாடுகள் பலவும் வியந்து போகும் அளவுக்கு, மிக நேர்த்தியாக நடத்திக் காட்டினார்கள். போட்டி நடத்தியதோடு மட்டுமல்ல, உலக அரங்கில் அதிக பதக்கங்களை வென்றும் காட்டினார்கள் சீனர்கள். ஆனால் ஒரு தங்க பதக்கம் வாங்கவே இந்தியா முக்கு முக்கென்று முக்குகிறது.

இத்தனைக்கும் மக்கள் தொகையில் சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் விளையாட்டில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, நகை கடையில் காசு கொடுத்து வாங்கினால் தான் உண்டு என்னும் அவல நிலை தான் இன்னும் இந்தியாவில்.

காரணம் இந்தியாவில் எந்த விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில்லை, பணம் செலவு செய்வதில்லை, கிரிக்கெட் என்னும் வீணா போன விளையாட்டை தவிர.

கிரிக்கெட் விளையாண்டால் மட்டும் தான், இந்தியாவில் தினம் தோறும் கோடீஸ்வரன், மற்ற விளையாட்டு வீரர்களை எல்லாம் எவரும் கண்டு கொள்ள கூட தயாராக இல்லை. எப்படி விளங்கும் இந்த தேசம்?

காமன்வெல்த் விளையாட்டு என்ற பெயரில் உலக அரங்கில் இந்தியா கேவலப்பட்டு ,அசிங்கப்பட்டு நின்றதை போன்ற சொதப்பல் வேலைகளை, ஒலிம்பிக் விளையாட்டு நடத்தும் போது சீனர்கள் செய்யவில்லை.

வெள்கைக்காரன் கொடுத்த காசையே அவனுக்கு தெரியாம ஆட்டைய போடுற திருட்டு பயலுகளை வச்சுக்கிட்டு இந்தியா எப்படி வளரும்?காமன்வெல்த் புகழ் கல்மாடி, எந்த சிக்கலும் இன்றி சந்தோசமா சுத்திகிட்டு இருக்கின்றார்.

ராணுவ வீரர்களுக்கு வீடுகள் வாங்கியதில் ஊழல், உடைகள் வாங்கியதில் ஊழல், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நிலக்கரி வாங்கியதில் ஊழல், அணு உலையில் ஊழல், அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டு ஊழல், கால்நடை தீவன ஊழல், மருந்து வாங்கியதில் ஊழல் இப்படி ஊழல் இல்லாத எந்த துறையும் இந்தியாவில் இல்லை என்று நாம் ஊழல் குறித்து காலம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஊழல்.

கடந்த வாரம், சீனாவின் முந்தைய ஆட்சியின், போக்குவரத்து அமைச்சர் ஒருவருக்கு, மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் சீனாவின் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் கொண்டு வந்த,அதிவேக ரயில்கள் வர காரணமாய் இருந்தவர்.

அவருடைய இருபது ஆண்டு கால அரசியலில், இருபது கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.இருபது கோடி ஊழலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிற்கிறார்.அந்த அளவுக்கு கடுமையான சட்டங்களும், தண்டனைகளும்.

இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், அவர் சார்ந்த கட்சியே, அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். நடக்குமா இந்தியாவில்?

இருபது வருடத்திற்கு மேலாக, டான்சி நிலம் மற்றும் அதிக பொருள் சேர்ந்த வழக்கு ஜெயலலிதாவின் பெயரில். ஆனால் இந்த வழக்கு இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கருணாநிதி குடும்ப புகழ் அலைக்கற்றை ஊழல், முடிய இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் ஆகலாம். குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர். இதெல்லாம் விளங்கவா?

சீனா வளர்ச்சியில் தொட முடியாத உயரத்தை தொட்டுக்கொண்டே இருக்கட்டும்.

நாமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான், சீனாவை விட நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்க தான் தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசு என்று.

முதலில் சீனாவில் இருப்பதை போன்ற ஒரு மாதிரி நகரத்தை,இந்தியாவில் உருவாக்கி காட்டுங்கள். பிறகு பேசலாம் யார் வல்லரசு என்று.

சீனாவில் குறைகளே இல்லையா? குறைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய, அடிப்படை வசதிகளை எல்லாம் தரமாக செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் அடிப்படை சாலைகள்,சுத்தமான குடி தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றவை இன்னும் சாதாரண மக்களுக்கு கூட முழுமையாய் போய் சேரவில்லை.

இதை எல்லாம் செய்த பிறகு வல்லரசு ஆகுங்கள், சீனாவோடு போட்டி போடுங்கள். அதுவரை மக்கள் தொகையில் வேண்டுமானால் இந்தியா, சீனாவோடு போட்டி போட்டு கொள்ளட்டும்:)

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக