வியாழன், 16 ஜனவரி, 2014

டெல்லி என்றால் நாடே கொந்தளிக்கும்! தமிழச்சிகளுக்கு நிகழ்ந்தால் ?


டெல்லி பெண்ணுக்கு நிகழ்ந்தால் நாடே கொந்தளிக்கும், ஆனால் தமிழச்சிகளுக்கு நிகழ்ந்தால் ?

டெல்லியில் நிர்பயா என்று பெண்,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட போது, நாடே கொந்தளித்தது! திரும்பும் திசை எல்லாம் இந்த செய்தி தான். கிட்டத்தட்ட அந்த பெண்ணின் மரணத்துக்கு பிறகும் கூட,அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் தொடர்ந்தன. வட இந்திய தொலைக்காட்சிகள் தான் இப்படியா என்றால், இல்லை தென் இந்திய தொலைக்காட்சிகளும் இதே செய்தியை தான் தொடர்ந்து சில வாரங்கள் ஒளி பரப்பின. அந்த அளவுக்கு பெரும் பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பெண்ணின் பெயரை இந்திய ஏவுகணைக்கு வைத்தார்கள். அந்த பெண்ணை இந்தியாவின் மகள் என்றார்கள்.

ஆனால் இங்கே தமிழ்நாட்டு பெண்களுக்கு அது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தால்,கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என்பது ஒரு பேஷன் ஆகி விட்டது.

நிர்பயாவுக்கு குரல் கொடுக்க எத்தனையோ புரட்சி பெண்கள் கூட்டமும், சினிமாவை சேர்ந்த முற்போக்கு பெண்களும் கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு என்னென்னவோ செய்து செய்திகளில் இடம் பிடித்தார்கள். ஆனால் அதே கால கட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதா என்ற பதின்மூன்று வயது பள்ளி மாணவி,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் இங்கே பெரும்பான்மை ஊடகங்கள் மௌனம் காத்தன. அல்லது அதை ஒற்றை வரி செய்தியாக சொல்லிவிட்டு அமைதியாகின. எந்த பெண்கள் அமைப்புகளும் அதற்காக போராடியதாக தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் டெல்லி சம்பவத்துக்காக போராடிய பெண்கள் அமைப்புகளை எல்லாம்,ஏன் காண இயலுவதில்லை என்பது தான் சந்தேகமாக இருக்கிறது.

வெறும் பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் தான் இந்த பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு பெண்களும் போராடுவார்களோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.அல்லது ஆள் யார் குலம் என்ன கோத்திரம் என்ன, பொருளாதார நிலை போன்ற விடயங்களும் காரணமா என்பதும் தெரியவில்லை.

இதோ இரண்டு நாளுக்கு முன்பு காரைக்காலில் ஒரு இருபது வயது இளம்பெண் இரண்டு குழுமங்களால் கொடூரமாக கற்பழிக்க பட்டு இருக்கிறார்.கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொடுமையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

எத்தனை செய்தி சானல்கள் இந்த செய்தியை பகிர்ந்தன? இதை ஒரு கொடூர நிகழ்வாக எண்ணி விவாதம் செய்தன?இன்னும் சொல்லப் போனால் பல பத்திரிக்கைகள் கூட இந்த செய்தியை வலுவாக எழுதியது போல தெரியவில்லை.

ஏன் என்ன காரணம்? அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன! அதற்கு வலு சேர்ப்பது போல, காவல்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, இரு காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து இருக்கிறார் காவல்துறை உயர் அதிகாரியான மோனிகா பரத்வாஜ்.

அதுவும் அவர் பெண்ணாக இருந்ததால்(பெண்ணாக இருப்பவர்கள் எல்லாம் நேர்மையாக இருப்பார்களா என்று சொல்ல இயலாது), அத்தோடு நெஞ்சில் கொஞ்சம் ஈரம் இருந்ததால் மட்டுமே இந்த நடவடிக்கையை தைரியமாய் மோனிகா எடுத்து இருப்பாரோ,இல்லாவிட்டால் இப்படிப்பட்ட வழக்குகளும், நடவடிக்கைகளும் இல்லாமல் போய் இருக்குமோ என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது!

இது போன்ற கொடுமைகள் நாட்டில் எந்த மூலையில் நடந்தாலும் கண்டிக்க வேண்டியது அனைவரின் கடமை. டெல்லியில் நடந்தால் அல்லது உயர் சமூகத்துக்கு பெண்களுக்கு நேர்ந்தால் மட்டுமே கொடி பிடிப்போம் என்ற நிலை மாற வேண்டும். சாமானிய மக்களுக்கு இது போன்ற கொடுமைகள் நிகழும் போதும் இந்த சமூகம் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களின் மனசாட்சிகளும் உயிரோட்டமாய் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் தலையீடுகள் எதுவும் இல்லாத வகையில், இந்த வழக்கை முறையாக விசாரித்து, , கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்!

இந்த பாலியல் கொடூரங்களை செய்த குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக