புதன், 15 ஜனவரி, 2014

அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ் !





























புதிய தகவல்கள் கேள்விப்பட கேள்விப்பட,அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ் மீதான மரியாதை இன்னும் கூடுகிறது!

ஊழல், லஞ்சம்,மது ஒழிப்பு போன்றவற்றிற்கு எதிராக செயல்பட, அது குறித்து புகார் அளிக்க, சட்டப்பஞ்சாயத்த்து இயக்கம் ஒன்று இளைஞர்கள் பலரால் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க அலை பேசி எண்((7667-100-100) ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

தற்போது காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை புகார் தெரிவிக்கலாம். இதை இருபத்து நான்கு மணி நேர சேவையாக மாற்றவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.சட்டப் பஞ்சாயத்து இயக்கத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய அய்யா சகாயம் அவர்களின் உரை உண்மையில் மிக வீரியமான ஒரு உரை!

இதற்கு முன்பும் அவரது பல்வேறு பேச்சுக்களை கேட்டு இருக்கிறேன். நேற்று கூடுதலாக பல தகவல்களை சொன்னார்கள்.நெஞ்சம் நெகிழ்ந்து போய் விட்டது!

அரசு துறையில் பணியாற்றிக் கொண்டே மிக நேர்மையாக செயல்படுவது எப்படி, என்னென்ன இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் அய்யா சகாயம்.

*பெப்சி நிறுவனத்தை முடக்கிய செய்தி குறித்து ஏற்கனவே பலர் படித்திருக்க கூடும்.
*கோஆப் டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்றியதும் படித்திருப்பீர்கள்.
*மதுரை கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்த செய்தியும் படித்திருப்பீர்கள்.
*இருபத்தொரு ஆண்டு கால சேவையில், இருபத்தொரு முறை பணி மாற்றம் செய்யப்பட்டதும் பலர் அறிந்திருக்க கூடும்.
*அரசு பள்ளிகளுக்கு சென்று அவர்களை ஊக்கப்படுத்துவதும், அரசு பள்ளி மாணவர்கள் மீது அதீத அக்கறை செலுத்துவதும் படித்திருப்பீர்கள்.
*நெசவாளர்களுக்கு வேண்டிய ஊதியத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்கிறார் என்றும், விவசாயிகள் வாழ்க்கை மேம்பட என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் பலர் அறிந்திருக்க கூடும்!

சட்டப் பஞ்சாயத்து நிகழ்வில் பேசியபோது, கள்ள சாராயம் காய்ச்சி விற்கும் ஒரு கூட்டத்தை கையும் களவுமாக தன்னுடைய குழுவினர் பிடித்த போது,உடன் வந்தத கிராம நிர்வாக அலுவலர்கள் எப்படி தப்ப விட்டார்கள் என்றும், சாராய வியாபாரிகளிடம் இருந்து மாதம் மாதம் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள்மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மீது எப்படி வழக்கு தொடுத்தார்கள்,முதல் தகவல் அறிக்கை எழுதினார்கள், அதை தான் எவ்வாறு முறியடித்தேன் என்று அவர் சொன்ன போது, உண்மையிலேயே வாய்ப்பே இல்லை இப்படி ஒரு மனிதன் நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்படுவதற்கு என்று சொல்லத் தோன்றியது!

ஒரு மனிதன் நேர்மையாக நடப்பதென்பது அத்தனை எளிதான விடயம் அல்ல என்பதை மிகத் தெளிவாக தன வாழ்வில் நடந்த சம்பவங்களோடு விளக்கினார்!

மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் ஓன்று கொடுக்க வேண்டும். ஆனால் வழக்கமான முறைப்படி போனால் இரண்டு மாதம் கால தாமதம் ஆகும்.காரணம் அவரது குடும்ப சரித்திரம், வருமானம், போன்ற பல்வேறு தகவல்களை திரட்டி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு அலுவலர்களைத் தாண்டி கோப்புகள் வந்து சேர இரண்டு மாதம் ஆகி விடும் என்பதால், தன்னிடம் மூன்று சக்கர மிதி வண்டி கேட்ட மாற்று திறனாளிக்கு உடனடியாக தான் மூன்று சக்கர வாகனம் அளிக்க என்ன செய்தார் என்றும், அதை அந்த முதியவரின் ஊருக்கு உடனே எடுத்து செல்ல என்ன செய்தார் என்று விவரிக்கும் போது, நெஜமாவே கை தட்ட வேண்டும் என்றே தோன்றியது!

இப்படியும் நல்ல அதிகாரிகள் இந்த மண்ணில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை!எல்லாவற்றுக்கும் மேலாக மிக சிறந்த எளிய நடையில்,ஆங்கிலக் கலப்பின்றி அவர் பேசும் தமிழுக்கு கூடுதல் மரியாதை!கூடவே எந்த பகட்டும் இல்லாத எளிய மனிதன்!

இப்போது லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து வாசகத்தை தன் அலுவலகத்தில் எழுதி வைத்திருப்பதைப் போல, முன்பெல்லாம் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவுங்கள் என்ற வாசகம் இடம் பெற்று இருந்ததாம்.

விழாவில் பேசியபோது அவர் சொன்ன முத்தாய்ப்பான விடயம் என்னவென்றால், அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மட்டுமே நேர்மையாக மாறினால் போதாது. தனி மனிதர்களும் ஒட்டுமொத்த சமூகமும் நேர்மையானவர்களாக மாற வேண்டும். அது தான் இலக்கு!

தன்னால் இயன்றவரை அதிகாரிகளின் நேர்மைக்கு உதாரணமாகவும், மற்றவர்களும் அவ்வாறு மாறுவதற்கு பாடுபடுவதாகவும் மிக எளிமையாக சொல்லி முடித்தார்.

வாழ்த்துக்கள் சார்! எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நீடிய ஆயுளையும்,மகிழ்வான வாழ்வையும் தர வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறோம்!

காணொளியை காண இணைப்பு இதோ!

http://www.youtube.com/watch?v=Ebr4wZVTXVM&feature=share&t=1h33m42s

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக