வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஸ்வர்ணலதா!


ஸ்வர்ணலதா!

மிகவும் ஒரு தனித்துவமான தன் வசீகரிக்கும் குரலால், தமிழ் இசை ரசிகர்களை கட்டிப் போட்ட பெருமை பாடகி ஸ்வர்ணலாதாவுக்கு உண்டு!

எத்தனையோ பாடல்கள், இவரது குரலால் உயிர் பெற்று நிற்பதுண்டு.கிட்டத்தட்ட ஏழாயிரம் பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியவர்.

'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்காக தேசிய விருது வாங்கிய பெருமைக்கு உரியவர். நூறுமுறைகள் கேட்டாலும் சலிக்காத'மாலையில் யாரோ மனதோடு பேச' என்ற சத்ரியன் படப்பாடலை பாடியவரும் இவர் தான்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' என்ற அலைபாயுதே படப் பாடலில் மனதை உருக வைக்கும் குரலுக்கு சொந்தமானவர். 'முக்காலா முக்காபுலா' என்று காதலன் படப் பாடலின் மூலம் குழந்தைகள், இளைஞர்கள் பலரை ஆட்டம் போட வைத்தவர்.

இப்படியாக எண்ணற்ற பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். திரை இசை தாண்டி பல்வேறு பக்திப் பாடல்களையும் பாடியவர்.

'நீயே நிரந்தரம்' என்ற மனதை நெகிழ வைக்கும் கிறித்துவப் பாடலைப் பாடி, அனேக கிறித்துவ மக்கள் மனதிலும் இடம் பிடித்தவர்.

அவர் இந்த உலகை விட்டு, தன் முப்பத்தேழு வயதில் பிரிந்தாலும் கூட, அவரது பல்வேறு பாடல்கள் மூலம் இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று, வள்ளி திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ஸ்வர்ணலதா பாடிய 'என்னுள்ளே என்னுள்ளே' என்ற பாடல். பாடல் காட்சிகளை தள்ளிவிட்டு, கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், எதோ ஒரு தியான நிலையில் இருப்பதைப்போன்ற உணர்வைத் தரும் இந்த பாடலை, சில நூறு முறைகள் முன்பே கேட்டு இருந்தாலும் கூட, இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு!

நீங்களும் கேட்டுப் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக