புதன், 15 ஜனவரி, 2014

போற்றுதற்குரிய கர்நாடக போக்குவரத்து துறை!
































கர்நாடக போக்குவரத்து துறையிடம் இருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:

பெங்களூரில் இருந்து சரியான தொடர் வண்டி வசதிகள் தென் தமிழ்நாட்டுக்கு கிடையாது. தினசரி ஒன்றோ,இரண்டோ ரயில்கள் மட்டுமே. ஆதலால் ரயிலில் பயணசீட்டு பெறுவது என்பது குதிரை கொம்பு கதை தான். இரண்டு மாதங்களுக்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.

ஒரு மாதம், அல்லது இரண்டு வாரங்களுக்குள் திட்டமிடப்படும் பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது கிட்டத்தட்ட சாத்தியப்படாத ஒன்று. ரயில் பயணம் தான் கட்டாயம் என்றால், தத்கல் என்னும் அவசர பிரிவில் பயணசீட்டு பெறுவதற்கு காலை ஐந்து மணிக்கே ரயில் நிலையங்களில் போய் படுத்து தூங்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே,இணையத்தில் கூட தத்கல் பயணசீட்டை பதிவு செய்ய முடியும்.ஆனால் உறுதியான பயணமா இல்லையா என்பதை சொல்ல இயலாது. காரணம் தத்கல் முறையில் முன் பதிவு செய்யும் பல நேரங்களில் இந்திய ரயில்வேயின் இணையதளம் காலை பத்து மணி முதல் பத்தரை மணி வரை கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு செயலிழந்து போய் விடும்.

இந்த அளவுக்கு சிரமப்பட்டு, சவுகரியமான ரயில் பயணம் செய்து தான் ஆக வேண்டுமா என்று எண்ணி, பலர் பேருந்து பயணமே போதும் என்று விலகி கொள்கிறார்கள்.

வேறு வழியில்லை.அடுத்து பேருந்து பயணம் தான் என்று முடிவானதும்,தனியார் பேருந்துகளின் கட்டணத்தை பார்த்தால் தலை சுற்ற வைக்கும். பயணக்கட்டணம் இருமடங்காக இருந்தாலும் கூட தனியார் பேருந்துகளை தான் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். காரணம் அரசு பேருந்துகளின் நிலை அப்படி.

அரசு பேருந்துகள் என்றவுடன் கர்நாடக அரசு பேருந்து தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அவர்களின் சேவை மதுரையோடு முடிந்து விடுவதால், தென் தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த சேவைகளை பயன்படுத்தும் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது.

கர்நாடக பேருந்துகளை பயன்படுத்தும் நண்பர்களுக்கு தெரியும், அந்த பேருந்துகளும்,அதன் சேவையும் என்ன தரத்தில் இருக்கிறது என்று.

சமீபத்தில் நண்பரை பார்க்க திருச்சி வரை சென்று இருந்தேன். வேறு வழி இல்லாமல் தமிழ்நாடு அரசு விரைவு(??) பேருந்தில் இரவு பயணம்.கொஞ்சம் நிம்மதியாக தூங்கி கொண்டே செல்லலாம் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.

இரவு முழுவதுமே பேருந்து ஜன்னல்களில் இருந்து வரும் டக டக என்னும் சப்தம் காதில் ரீங்காரமாக ஒலித்து கொண்டே இருந்தது. தூங்குபவர்களை தொந்தரவு செய்யாத வண்ணம், வெளியில் இருந்து வரும் வெளிச்சத்திற்கு திரை ஏதாவது இருக்குமா என்றால் கிடையாது.

ஜன்னல் கண்ணாடியிலாவது வெளிச்சம் ஊடுரவ இயலாத தாள்களை ஒட்டி இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது, ஊர்பட்ட கொசுக்கள் குடியிருக்கும் என்பதால் தூங்க முடியாத அளவுக்கு கொசு கடி, மூட்டை பூச்சு கடி.

நீண்ட தூர பயணம் என்றாலும்,சிறு சிறு கிராமங்களிலும் கூட நிறுத்தி இரவு முழுவதும் ஆள் ஏற்றுகிறார்கள், ஓட்டுநர் தூங்க கூடாது என்பதற்காக அவர்கள் வைத்திருக்கும் ஒலி பெருக்கியினால் நம் தூக்கம் தொலைந்து போனது.

அரை மணி நேரத்துக்கொரு பேருந்து நிறுத்தம் என்பதால் நம் பொருட்கள் மீதான பாதுகாப்பு கேள்வி குறி.நம் பொருட்களை பாதுகாக்கவே தூக்கம் கெடுக்க வேண்டி இருக்கிறது.

சாப்பாட்டுக்காகவோ, தேநீருக்காகவோ பேருந்தை நிறுத்தும் இடங்கள் கொடூரம், சரியான கழிப்பிடமோ, தரமான உணவகமோ இல்லாத எதோ ஒரு காட்டுக்குள் தான் அரசு பேருந்துகளை நிறுத்துகிறார்கள்.

பேருந்து இருக்கைகளின் சுத்தம், பல இருக்கைகளில் சாய்ந்து அமர இயலாத அளவுக்கு சாய்வு குறைபாட்டு சிக்கல்கள், கை வைப்பதற்கான இடங்களில் உள்ள கட்டைகளில் மென்மையான பஞ்சு இருக்காது,இன்னும் பாதி இருக்கைகளில் அந்த கட்டையே இருக்காது, மழை பெய்தால் தண்ணீர் உள்ள வரும் அளவுக்கு ஜன்னல்களில் உள்ள இடைவெளி,கண்ணாடிகளில் உள்ள கீறல்கள்.

பயணத்திற்கான நீண்ட நெடிய நேரமும் பெரும் கொடுமை.தனியார் பேருந்தின் மரண வேகம் வேண்டாம், ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய பல நிறுத்தங்கள், இரவு முழுக்க பயணிகளை ஏற்றுதல் போன்றவற்றை குறைத்தாலே குறிப்பிடத்தக்க அளவுக்கு பயண நேரத்தை குறைக்கலாம்.

கர்நாடக அரசு பேருந்து முன்பதிவுக்கான இணையதளத்தையும்,தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து முன் பதிவுக்காக இணையதளத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்னும் ஆதீத மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய நிலையில் தான் நம் தமிழ்நாடு அரசு பேருந்து இணையதளம் இருக்கிறது.

நீண்ட தூர பயணத்துக்கான(குறைந்த பட்சம் எட்டு மணி நேரம்) பேருந்துகளை பார்த்தால் அவை எல்லாம் ஒரு பதினைந்து,இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பேருந்தாகவே இருக்கும். சரி பேருந்தின் வயது எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும், அதை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்கிறார்களா என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி.

பல நேரங்களில் நீங்கள் கவனித்து இருக்க கூடும். நாம் பயணிக்கும் பேருந்துகள் ஏதாவது சிக்கலுக்கு உள்ளாகி, அரசு பணி மனைகளுக்கு சென்றால் அங்கே சரி உதிரிபாகங்கள் இருக்காது. பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வேறு எதாவது ஒரு பேருந்தில் இருந்து சில பாகங்களை எடுத்து வந்து சரி செய்வார்கள்.

குளிர் சாதன பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் நிலைமை இன்னும் கொடுமை. பல நேரங்களில் குளிர்சாதனங்கள் ஒழுங்காக வேலை செய்யாது. குளிர் சாதன பேருந்துகளில் ஜன்னல்கள் கிடையாது என்பதால் கிட்ட தட்ட மூச்சு முட்டும் நிலைமை தான்.

காற்றோட்டத்திற்காக எங்காவது ஒரு இடத்தில நிறுத்தி, கதவை திறந்து வைத்தால் ஊரில் உள்ள அத்தனை கொசுக்களும் உள்ளே வந்து விடும். கூடவே மூட்டை பூச்சி கடி. பின்பு என்ன,இரவு முழுவதும் காற்றும் இருக்காது,கூடவே இலவச இணைப்பாக கொசுக்கடியும்,மூட்டைபூச்சு கடியும் தான்.

நடத்துனரிடம் ஏன் சார் இது பேருந்தை ஒழுங்கா பராமரிக்கிறது இல்லையான்னு கேட்டு பாருங்க. அவ்ளோ தான்..அரசு பணி மனைகள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் அடுத்த அரை மணி நேரத்துக்கு புலம்புவார்.கூடவே குளிர் சாதனத்திற்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை வேண்டுமானால் திரும்ப வாங்கி கொள்ளுங்கள் என்று பதிலளிப்பார்.

தமிழ்நாட்டு பேருந்தின் லட்சணம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி தான் இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.
மாறாக பேருந்துகளுக்கு எப்படி வள்ளுவன் பெயரை மட்டும் வைக்கலாம், என் பெயரையும் நான் வைப்பேன் என்று சிலர் அடம் பிடிக்க, கடைசியில் பாவம், வள்ளுவன் பெயருக்கு தான் பங்கம் வந்ததே தவிர,இன்று வரை பேருந்தின் தரத்திலோ, பயணத்திலோ எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை,இரண்டு கொள்ளைக்கார ஆட்சிகளுமே(சென்னை போன்ற பெரு நகர பேருந்துகளை தவிர).

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு என்ற சாக்குபோக்கை இனி சொல்ல இயலாது. பேருந்து கட்டணத்தை இருமடங்காக அதிகரித்து விட்டீர்கள். இந்த போக்குவரத்து துறையை கவனிக்கும் ஐ.எ. எஸ் அதிகாரி என்ன செய்து கொண்டு இருப்பார் என்று எனக்கு புரியவில்லை.

அமைச்சர் அதிகாரிகளையும், அதிகாரிகள் அமைச்சரையும் மாறி மாறி குறை சொல்லுவதை தவிர வேறெந்த உருப்படியான நிகழ்வுகளும் நடக்க போவதில்லை.

பக்கத்து மாநிலமான கர்நாடக போக்குவரத்து துறையை பாருங்கள். சென்னைக்கு அவர்கள் விடும் பேருந்தையே பார்த்த பிறகாவது பாடம் படிக்க மாட்டார்களா தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்?

கர்நாடக போக்குவரத்து துறையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்:

1. முன் பதிவு செய்ய மிக சிறந்த இணைய தள சேவை.

2. இணைய தளத்தில் மிக சரியான, தெளிவான, எல்லோரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் அனைத்து தகவல்களும் இடம் பெறுகின்றன.

3. அனைத்து பேருந்துகளிலும் எலக்ட்ரானிக் பயணசீட்டு மிக நீண்ட காலமாக கர்நாடகாவில் இருந்து வருகிறது.

4. பேருந்துகளை மிக சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.

5. ஜன்னல்கள் மற்றும் இருக்கைகள் எந்த பிரச்சினையும் இன்றி பராமரிக்கிறார்கள்.

6. இருக்கை உறைகள் துவைக்கப்பட்டு சுத்தமாக இருக்கின்றன.

7. கை, கால் வைப்பதற்கென சிறப்பான வசதிகள் செய்யப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்படுகின்றன.

8. காலம் தவறாமை. புறப்படும் இடங்களில் இருந்து சரியான நேரத்திற்கு பேருந்தை நகர்த்தி விடுகிறார்கள். கூடுமான வரையில் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்வதில்லை.

9. வழி நெடுக பேருந்தை நிறுத்தி ஆள் ஏற்றுவதில்லை (கூடுமான வரையில்).

10. வெளியில் உள்ள வெளிச்சம், பயணிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் ஜன்னகளில் திரைகள் தொங்க விடப்பட்டு இருக்கின்றன.

11. கொசு தொல்லை,மூட்டை பூச்சு தொல்லை பெரும்பாலும் இருந்ததில்லை.

12. ஒலி பெருக்கி தொந்தரவுகள் பயணிகளுக்கு இல்லை.

13. பேருந்துகளில் பலதரங்கள், அதற்கேற்ப பயண கட்டணங்களில் வித்தியாசம்.

14. குளிர் சாதன பேருந்துகளில் அளவான குளிர்,முக்கியமான விடயம் குளிர்சாதனங்கள் முறையாக வேலை செய்வதை உறுதி படுத்துகிறார்கள்.

15. தனியார் பேருந்துகளின் தரத்தை விட, எந்த வகையிலும் குறைவில்லாத அளவுக்கு பேருந்தும், அதன் பராமரிப்பும். கூடுமான வரையில் நீண்ட தூர பயணத்திற்கு புதிய பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள்.

*(தனியார் பேருந்துகளுக்கு சமமாக மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ போன்ற உயர்தர பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பினும் அந்த வாய்ப்பி அவர்கள் பயணிகளுக்கு கொடுத்து இருக்கிறார்கள்)

16. சாப்பாட்டுக்காகவோ, தேநீருக்காகவோ அவர்கள் பேருந்தை இருந்தும் இடங்கள், பயணிகளுக்கான நல்ல உணவகம், கழிவறை போன்ற வசதிகள் நிறைந்த இடத்திலேயே நிறுத்துகிறார்கள்.

17. திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் பலவற்றை இயக்குகிறார்கள், அந்த தகவலை முறையாக இணைய தளத்தில் வெளியிட்டு எளிதாக முன்பதிவு செய்திடும் அளவுக்கு சவுகரியத்தை பயணிகளுக்கு தருகிறார்கள். மொத்தத்தில் பயணத்தை எளிதாக்குகிறார்கள்.

திருவிழா நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியில் இருபது சதவிகிதத்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை எடுத்தால் அதீத லாபம் ஈட்டலாம்.

தமிழ்நாடு அரசும் கூட கர்நாடக அரசை போல உயர்தர மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ பேருந்துகளை நீண்ட தூர பயணங்களுக்கு இயக்கலாம்.

குறைந்த பட்சம் பெங்களூரில் இருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு,உயர்தர பேருந்துகளை இயக்கினால் பெருமளவு வருமானத்தை ஈட்ட இயலும் என்பது, வார கடைசிகளில் தனியார் பேருந்துகளில் பயணசீட்டு கிடைக்காமல் அல்லல்படும் பயணிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே புரியும்.

பெங்களூர் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும், Fast track போன்ற தனியார் Taxi service ஐ போலவே, கர்நாடக அரசின் KSTDC என்ற போக்குவரத்து சேவை நீண்டகாலமாகே கர்நாடகத்தில் இருந்து வருகிறது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் பலவற்றில் இந்த வாகன சேவையை நீங்கள் பார்க்க இயலும். மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பேருந்து என்ற போக்குவரத்து சேவையை தாண்டி, Taxi service போன்று பயணிகளுக்கு பயனுள்ள பல சேவைகளை தமிழ்நாடு அரசும் விரிவு படுத்தலாம்.

போக்குவரத்து துறையை லாபம் கொழிக்கும் துறையாக மாற்ற ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் செய்வதற்கு சரியான நபர்கள் வேண்டுமே. அமைச்சர் சரியானவராக இருக்க வேண்டும், அதிகாரிகள் சரியானவர்களாக இருக்கும்.
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் இவற்றை எல்லாம் எளிதாக செய்து விட இயலும்.

இன்றைக்கு சிறப்பான சேவை என்பதால் தானே, கர்நாடக போக்குவரத்து துறை மிகவும் லாபகரமான நிறுவனமாக இருக்கின்றது.

மேலை நாட்டை போலவே பேருந்துகளில் கழிப்பறை வசதி, சிற்றுண்டி நிலையம் என்று அடுத்தடுத்த நகர்வுகளில் கர்நாடக போக்குவரத்து துறை முன்னேறி கொண்டு இருக்கிறது. ஆனால் நாம்?

இன்ப சுற்றுலாவுக்காக கர்நாடக அரசு பேருந்தை விரும்பி பயன்படுத்தும் பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு கர்நாடக பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன.ஆனால்தமிழ்நாட்டு அரசு பேருந்துகளின் நிலை?

பெங்களூரில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள், தினம் தோறும் தங்கள் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைத்து வருவதற்கு, கர்நாடக அரசு பேருந்துகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.இதன் மூலம் எந்த அளவுக்கு கர்நாடக போக்குவரத்து துறை வருவாய் ஈட்டுகிறார்கள் என்று பெங்களூர் மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டின் நிலை?

கர்நாடக போக்குவரத்தின் வெற்றிக்கு அங்குள்ள சிறப்பான அமைச்சரும், சரியான அதிகாரிகளும் வித்திட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு போக்குவரத்து துறைக்கான அமைச்சரும், துறையை நிர்வகிக்கும் ஐ.எ.எஸ் அதிகாரியும், மற்ற போக்குவரத்து ஊழியர்களும் என்ன செய்கிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அரசு போக்குவரத்து துறையை,தனியாருக்கு போட்டியாக மாற்றி விட்டால், தனியார் பேருந்து முதலாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கி எப்படி குடும்பம் வளர்க்க முடியும்?


-ஆன்டனி வளன்

1 கருத்து: