வெள்ளி, 17 ஜனவரி, 2014

சிறந்த இசை எது? நீடித்து நிற்கும் பாடல்கள் எவை?


கொலை வெறி பாடல் எல்லாம் ஒரு பாடலா? ராக்கம்மா கைய தட்டு பாடல் போல வருமா? இளையராஜா பாடல்கள் தான் சிறந்தது என்று சொன்னவருக்கு!

அனிருத் இசையமைத்த, கொலை வெறிப்பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. தமிழ் பாடல்கள் ஏன் இப்படி மொழி கலப்பில் சிக்கி சின்னாபின்னமாகிறது என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினோம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் மொழிக்கலப்பை தாண்டி, அந்த பாடலின் இசையில் ஒரு துள்ளலும், ஆட்டமும் பாட்டமும் இருந்தது என்பதை மறுக்க இயலுமா?

பாடலின் இசை அருமையாக இருந்தது. அது அந்த பாடலை விட உசத்தியா இந்த பாடலை விட உசத்தியா என்ற விவாதத்தை தாண்டி எல்லோரும் ரசிக்கும் அளவுக்கு கொலைவெறிப் பாடல் இருந்தது என்பது உண்மை.

நண்பர் ராக்கம்மா கைய தட்டு பாட்டை போல இல்லை என்று மட்டம் தட்ட முயல்கிறார். இசையில் யார் சிறந்தவர் எ.ஆர். ரகுமானா அல்லது இளையராஜாவா என்ற விவாதம் போலவே இது ஒரு முற்று பெறாத விவாதம். வழக்கமாக சிலர் ரஹ்மான் மீது குறையாக சொல்வார்கள். அவர் பாடல் நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்காது. இளையராஜாவின் பாடல் தான் நிற்கும் என்று.

ஆனால் அப்படி அல்ல. மெலடி மெட்டுக்கள் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்கும். ரெஹ்மான் இசையமைக்கும் படங்களில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மெலடி மெட்டுக்களாக அமைந்து விடுகிறது.

சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே போன்ற ரெஹ்மானின் முதல் பட பாடல்கள் இருபது ஆண்டுகளாய் நிலைத்து நிற்காமல் இல்லை. இன்றும் கூட எல்லோரும் விரும்பி கேட்கும் பாடலும் கூட.

மெலடி அல்லாத ராப் பாடல்கள்,மற்ற ரகத்தை சேர்ந்த பாடல்கள் எல்லாம் எல்லோராலும் எளிதாக கவரப்பட்டு, அதிகம் அடிபட்டு சீக்கிரம் காணாமலும் போய்விடும்.அது அந்த பாடலுக்கான தன்மை.

எத்தனையோ ஆங்கில பாடல்கள் கேட்டிருந்தாலும் டைட்டானிக் பாடலை விரும்பாதவர் உண்டா? காரணம் மொழியையும் தாண்டி அப்படி ஒரு மெலடி.

இசைக்கு மொழியேது? எவர் இசை அமைத்தாலும் மெலடி மெட்டுக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும்.

இசையில் சிறந்தவர் ரெஹ்மானா, ராஜாவா என்ற விதண்டா வாதம், நம்மை போன்ற சாதாரண இசை ரசிகர்களுக்கு தேவையற்றது.

ஒரு பாடலை கேட்டு நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை தாண்டி, இசையை விமர்சிக்கும் ஆற்றில் நம்மில் பலருக்கு இல்லை எனும் போது எதற்கு இந்த ஒப்பீடுகள்?

இசையை ரசிப்போம், நேசிப்போம்!

ஆயிரம் தான் சொன்னாலும், வெற்றியின் பல சிகரங்களை தொட்ட பின்பும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை தன் இரு கரங்களால் வாங்கிய பின்பும் கூட,இன்று வரை வெற்றியின் மமதையும், அகந்தையும் தலைக்கேறாத ரெஹ்மான் என்ற பண்பாளனை,அவரின் இசையையும் தாண்டி அதிகம் நேசிப்பவன் நான்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக